அந்த ஒரு நிமிடம்
காலையில் வீடே நிசப்தம். நான் மட்டும் வழக்கம் போல் கருமமே கண்ணாயினார் என்று எழுந்து விட்டேன். அடுக்களைக்குள் நுழைந்து வழக்கம் போல் வேலையை துவங்கினேன். அப்பொழுது தான் அந்த நிகழ்வு நடந்தது. அந்த ஒரு நிமிடம் என்னுடைய அந்த காலை பொழுதை தலை கீழாக புரட்டிப்போட்டது. என்ன செய்வது என்று ஒரு நிமிடம் தெரியாமல் பதறி போனேன். கை , கால் நடுக்க மெடுக்க ஆரம்பித்து விட்டது. அழுகை அழுகையாக வந்தது. ஆனாலும் அழக்கூடாது . எப்பேர்பட்ட சூழ்நிலையானாலும் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும் என்ற மனதிடத்துடன் செயல் பட துவங்கினேன்.
தூங்கி கொண்டு இருப்பவர்களை எழுப்பி சொல்வதா அல்லது எழுந்து வந்ததும் சொல்லலாமா என்று ஒரு வித தயக்கம். உடனே எழுப்பி சொன்னாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆபீஸ், பள்ளிக்கூடம் என்று அவர்கள் நேரத்திற்கு செல்ல வேண்டும். எது எப்படி ஆனாலும் நானே தான் சமாளித்தாக வேண்டும். ச்ச்ச, இப்படி ஆகிவிட்டதே! அந்த ஒரு நொடி நடவாமல் இருந்திருந்தால் இன்றைய பொழுது எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை. யாரை நொந்து கொள்வது என்று தெரியாமல் என்னை நானே நொந்து கொண்டேன்.
நடந்தது நடந்தாகி விட்டது அடுத்தது என்ன என்று முடிவு செய்து, அடுக்களையின் பின் பக்கம் சென்று அங்கு காய்ந்து கொண்டிருந்த கைப்பிடித் துணியை எடுத்து வந்து நனைத்து பிழிந்து, ரத்தக்களரியாய் காட்சி அளித்த மிக்ஸியை துடைக்க ஆரம்பித்தேன். ஆமாம், காலையில், தக்காளி சட்டினி அரைக்கும் அவசரத்தில் கொள் அளவிற்கு மேல் மிக்ஸி jarல் தக்காளியையும் வெங்காயத்தையும், போதாத குறைக்கு நல்ல காரமான காய்ந்த மிளகாயையும் போட்டு ஒரு சுத்து சுத்தினேன் பாருங்க.....
. என் கட்டுப்பாட்டில் இருந்து மிக்ஸி மூடி திறந்து உள்ளிருந்த கலவை என் அடுக்களை முழுதும் ஆரத்தி கரைத்து ஊற்றியது போல் தெளித்து தள்ளியது. அப்புறம் என்ன என் மிக்ஸி , சுவர், cupboard , அடுக்களை மேடை, தரை, அருகில் இருந்த microwave oven, fridge, என்று சகலமும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு ரணகளமாக ஆகிப்போனது. பட்ட காலிலே படும், சுட்ட இடத்திலேயே சுடும் என்பது போல, இதனை சமாளிக்கும் முன் அடுப்பில் இருந்த பால் பொங்கி அடுப்பு முழுதும் பாலாபிஷேகம் ஆனது. அட ராமா! நல்லா தானே எழுந்து வந்தேன். என்ன ஆச்சு எனக்கு? பரீட்சை மகன் ரிஷிக்கு தானே, நான் ஏன் இப்படி பதற்றமானேன்? அவன் இழுத்து மூடி தூங்கி கொண்டிருக்கிறானே! பரீட்சைக்கு போகுமுன் நேரத்திற்கு சாப்பாடு செய்து முடிக்க வேண்டும் என்ற அவசரமா? அந்த ஒரு நிமிடம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால்? அளவு கம்மியாக மிக்ஸியில் போட்டு இருந்தால், மூடியை அழுத்தி பிடித்திருந்தால், பால் பொங்குவதை பார்த்து இருந்தால், இப்படி பல ”இருந்தால்” மனதில் தோன்றி மறைந்தது.
இப்படித்தான் வாழ்க்கையில் பல நிமிடங்கள் ஏன் நிகழ்ந்தன என்ற எண்ணம் தோன்றுகிறது. அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், இப்படி மட்டும் நான் செய்யாமல் இருந்திருந்தால், அப்படி அவர் சொல்லாமல் இருந்திருந்தால், ..... இப்படி எத்தனையோ நிகழ்வுகளை நாம் மாற்றி அமைக்க கனவு கண்டு கொண்டிருக்கிறோம். மனதிற்கு பிடிக்காத, மனதிற்கு வலியை கொடுக்கக் கூடிய எத்தனை எத்தனையோ நிகழ்வுகளை நம் வாழ்க்கை ஏட்டிலிருந்து கிழித்தெரிய பார்க்கிறோம். அப்படி வாழ்க்கையை திருப்பிப் போடும் சக்தி மட்டும் நமக்கிருந்தால், எந்த ஒரு நிமிடமும் “அந்த ஒரு நிமிடமாய்” தழும்பை விட்டுச்செல்லாது........
இப்படி கலை பொழுது ஒரு யுத்த களமாய் காட்சி அளிக்க , எழுந்து வந்த கணவரிடமும், மகனிடமும் என் “அந்த ஒரு நிமிட” நிகழ்வை வாய் வலிக்க வர்ணித்து முடித்தேன். போகிற போக்கில் கதையை கேட்டு முடித்து விட்டு கணவர்,”Oh, you need to be careful," என்று மட்டும் சொல்லிவிட்டு, எங்கே அங்கேயே நின்று கொண்டிருந்தால் அவர் கையில் பிடிதுணியை கொடுத்து துடைக்க சொல்லிவிடுவேனோ என்று நழுவி விட்டார்.. மகனோ கொஞ்சம் கூட சலனமில்லாமல், ஒரு "Oh ok" என்று சொல்லி விட்டு அவன் வேலையை பார்க்க கிளம்பிவிட்டான். நானோ பிடிதுணியை கசக்கியபடி, அடுத்து என்ன சட்டினி அவசரமாக அரைப்பது என்று யோசித்து கொண்டே தண்ணீரில் கையை கழுவினேன்
No comments:
Post a Comment