Saturday, July 15, 2017

மாற்றம் ஒன்றே மாறாதது

மாற்றம் ஒன்றே மாறாதது
அன்று:
அப்பா திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வார். படம் பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும் பொழுதே படம் பற்றிய நினைப்பை, பேச்சை நிறுத்தி விட வேண்டும். வீட்டிற்கு வந்து அதைப் பற்றி பேசுவதோ , ஆராய்ச்சி செய்வதோ கூடாது. மீறி பேசினால் “படம் என்பது பொழுது போக்கிற்கு பார்ப்பது. படம் பார்த்தோமா மறந்தோமானு இருக்கனும். வீட்டிற்கு வந்து அதைப்பற்றி பேசினால் இனி படம் பார்க்க அழைத்து செல்ல மாட்டேன்” என்பதுடன் சேர்ந்து சில பல அர்ச்சனைகள் விழும். அர்ச்சனைக்கு பயந்து வீட்டில் படம் பற்றி பேசாமல் இருந்து விடுவோம் . பள்ளி சென்று படம் பற்றி பேசும் அளவிற்கு ஞானம் இல்லை.படம் நன்றாக இருந்தது அல்லது படம் நன்றாக இல்லை என்பதை தவிர வேறு விவாதம் நடந்ததாக ஞயாபகம் இல்லை. ரேடியோவில் பாட்டு கேட்பது உண்டு--அதுவும் காதை ஸ்பீக்கரில் அமுக்கி வைத்துக்கொண்டு. அதைப் பார்க்கும் அப்பா,” ரேடியோகுள்ளவே போயிடு இந்த ரேடியோவை தூக்கி போட்டு உடச்சாதான் சரிபடுவ.” என்று கோபிப்பார். அப்பா வீட்டில் இல்லாத நேரம் பசை போட்டு ஒட்டியது போல ரேடியோ கேட்பது உண்டு. அதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது.
இன்று:
பேத்தியுடன் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறார். பிடிக்கவில்லை என்றாலும் நிகழ்ச்சி பற்றி பேத்தி கூறும் கருத்துக்களை, விமர்சனங்களை அமைதியாக கேட்கிறார். மகளை அர்ச்சித்தது போல் பேத்தியை அர்ச்சிப்பது இல்லை.பேத்தியை கண்டிக்க மகள் இருக்கிறாள் என்ற நினைப்போ என்று தெரியவில்லை. அவருக்கு தெரியாது நாங்கள் படம் பார்த்துவிட்டு வரும் போது காரிலேயே படத்தைப்பற்றி குடும்பமே சேர்ந்து ஆராய்ந்து பீராய்ந்து விடுவோம் என்று. கதை எப்படி, இசை எப்படி , நடிப்பு எப்படி என்று பிஹெச்டி பட்டம் வாங்கும் அளவிற்கு ஆராய்ச்சி நடக்கும். எல்லோருமே சுப்புடு ஆகிவிடுவோம். வீட்டிற்கு வந்தவுடன் சமூக வளைதளங்களில் படத்தை பற்றிய மற்றவர்களின் கண்ணோட்டத்தையும் பார்ப்போம். அன்று நான் ரேடியோ ஸ்பீக்கரில் பசைபோட்டு ஒட்டியது போல் பாட்டு கேட்டேன் இன்று என் பிள்ளைகள் ஹெட்போனுடனேயே பிறந்தது போன்று அலைகிறார்கள். என் அப்பாவிற்கு வந்த அதே கோபம் எனக்கும் வருகிறது ஆனால் அப்பா எப்படி ரேடியோவை கடைசிவரை போட்டு உடைக்கவில்லையோ அதே போல் நானும் ஹெட்போனை தண்ணீரில் தூக்கி போடுவேன் என்று சொல்கிறேனே தவிர செய்வதில்லை. காசு போட்டு நாம் அல்லவா வாங்கி கொடுத்து இருக்கிறோம்.

Wednesday, May 3, 2017

அன்புள்ள ஆட்சியாளர்களே!

அன்புள்ள ஆட்சியாளர்களே,
தாய்நாடாம் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து இப்பொழுது வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தாய் எழுதி கொள்வது. தமிழ் நாட்டின் தற்போதைய நிலவரம் என் மனதிற்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்பதே எனக்கு தெரியவில்லை. டிவி,செய்தித்தாள், சமூக ஊடகங்கள், தொலைபேசி உரையாடல்கள் எல்லாமே சுற்றிச் சுற்றி என் தமிழ்நாடு எப்படி அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதையே பறைசாற்றுகிறது. இது மனதிற்கு மிகுந்த கவலையயும், மன உளச்சலையுமே தருகிறது. என்ன இல்லை என் திருநாட்டில்? அறிவாளிகளுக்கு பஞ்சமா, விளைநிலங்களுக்கு பஞ்சமா, இயற்கை வளத்திற்கு பஞ்சமா? எல்லாம் இருந்தும் ஏன் இந்த அவல நிலை? ஒரு குடும்பத்தில் தந்தை சரி இல்லை என்றால் அந்த குடும்பமே சிதைந்து போய்விடும். ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் சரியில்லை எனில் அந்த நாடே சின்னாபின்னமாகி விடும் என்பதற்கு இப்பொழுது நாம் எடுத்துக்காட்டாய் போய்விட்டோம். பக்கத்து மாநிலங்கள் எல்லாம் செழித்து சீர்பெற்று வளர்கையில் நாம் ஏன் அழிவை நோக்கி ஒவ்வொரு நாளும் அடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறோம்?


நினைத்து பாருங்கள்! யார் ஆட்சியை பிடிப்பது என்பதையே மாதக்கணக்கில் சரி செய்ய இயலாமல் தவிக்கிறீர்கள். உங்களுக்கு எங்கே மக்களின் ஆதங்கமும், தேவையும் தெரியப்போகிறது. எங்கும், எதற்கும், எப்பொழுதும் போராட்டமே இன்றைய சூழ்நிலை. சரி போராட்டம் தான் செய்கிறார்களே ஏதேனும் நல்ல தீர்வு கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. போராடுகிறவன் போக்கத்தவன் போல் போராடிக்கொண்டே இருக்கிறான்! நீங்களோ உங்களின் நாற்காலி சண்டையிலேயே மூழ்கி கிடக்கிறீர்கள். தண்ணீர் பிரட்ச்சனை இப்படி பட்டி தொட்டி எங்கும் தலை விரித்து ஆடிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கூட எந்த ஆறோ குளமோ , ஏரியோ தூர் வாரப்பட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலவசம் கொடுப்பதிலும், நலத்திட்டங்கள் வாய் அளவில் கொடுப்பதிலுமே காலம் விரையமாகிறது.

நினைத்துப்பாருங்கள்! இன்றளவும் சோழனும், பாண்டியனும், சேரனும் நம் மனதில் நிற்கிறார்கள் என்றால் அவர்களின் நல்லாட்சியினால் தான். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய தொண்டினால் தான். ஆறு, குளம் குட்டையை தூர் வாரிய அரசர்களும், அணை கட்டியவர்களும், நீர் நிலைகளை காப்பாற்றியவர்களுமே காலம் காலமாய் போற்றப்படுகிறார்கள். இது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது? உங்கள் குடும்பத்தினருக்கும் தண்ணீர் தேவை தானே? மக்களுக்கு வேண்டியது எல்லாம், சுத்தமான சுகாதாரமான வாழ்வதற்கான சூழ்நிலை, நல்ல மருத்துவ வசதி, நல்ல குடிநீர், சீரான சாலை வசதிகள், தரமான பள்ளி  கல்லூரிகள்,பாதுகாப்பான வாழ்வு ! இவை யாவும் அடிப்படை உரிமைகள். இதனையே நீங்கள் செய்து தர மறுத்தால் என்ன செய்வது? உங்களின் சொத்தை விற்றா இந்த வசதிகளை செய்யச் சொல்கிறார்கள்?

நினைத்துப்பாருங்கள்! நீங்கள்  மட்டும் இப்படி சுரண்டுவதில் கவனம் செலுத்தாமல் மக்களுக்கு நல்லது செய்வதில் கவனத்தை திசை திருப்பினால் உங்கள் காலத்திற்கு பிறகும் போற்றப்படுவீர்கள். மக்களின் வெறுப்பை சம்பாதித்து என்ன பயன்? உங்கள் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்தால் பரவாயில்லை. இல்லை ஒரு படி மேலே சென்று உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு சேர்க்கலாம் . ஆனால் நீங்கள் எல்லோரும் உங்களின் பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளுக்கும், நீங்கள் பார்க்கவே முடியாத உங்களுக்கு பின் வரப்போகும் , இல்லை வராமலே போகக்கூடிய சந்ததியருக்கு அல்லவா சொத்து சேர்க்கிறீர்கள். இப்பொழுது உங்களுடன் வாழும் சக மனிதனின் நன்மைக்கு நீங்கள் உழையுங்கள். அந்த புண்ணியமே உங்களின் பல சந்ததியரை வாழ வைக்கும். பாவ மூட்டையை சேர்க்காதீர்கள்!பாவ மூட்டைகளை சேர்த்தவர்களின் நிலை நீங்கள் அறிவீர்கள்.

நினைத்துப்பாருங்கள்! என் தமிழ்நாட்டின் நிலை எதிர் காலத்தில் என்ன ஆகுமோ என்ற கவலை என்னைப்போன்ற பலரை வாட்டி வதைக்கிறது. . என் சொந்தங்களும், பந்தங்களும் எப்படி எல்லாம் துன்பப்படுகிறார்கள் அன்றாட வாழ்விற்கு என்று நினைக்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது. என் கையாளாக தனத்தை எண்ணி வருந்துகிறேன். ஒரு வகையில் நானும் சுய நலமாக வாழ்கிறேனோ என்ற எண்ணம் தோன்றுகிறது.நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு நல்லாட்சியை வழங்கினால் அந்த நாளை எண்ணிப்பாருங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்று நீங்கள் செய்யும் பாவங்களின் பயனை உங்களின் சந்ததியரின் மேல் ஏற்றாதீர்கள்.

நினைத்துப்பாருங்கள்! நீங்கள் மக்களுக்காக உண்மையாக தொண்டாற்ற துவங்கினால் அதன் பின் வரும் காட்சிகளை கற்பனை செய்து பாருங்கள். இப்பொழுது உங்களை போற்றுவது உங்களை சுற்றி இருக்கும் ஓநாய் கூட்டமும், கழுகு கூட்டமுமே! நீங்கள் நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உண்மையாக பாடு பட துவங்கினால் நினைத்துப்பாருங்கள் நீங்கள் எவ்வாறு மக்களால் போற்றப்படுவீர்கள் , கொண்டாடப்படுவீர்கள் என்று. உங்கள் குடும்பம் பெருமையாக நடமாடலாம். நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கலாம். சொத்து சேர்ப்பதில் போட்டி போடுவதை விட்டு விட்டு யார் தன் தொகுதிக்கு வேண்டிய நல்லதை செய்ய முடியும் என்று போட்டி போட்டு செய்யுங்கள். அதனால் வரும் சந்தோஷத்தை ஓர் முறையாவது உணர்ந்து பாருங்கள் . அப்படி உணர்ந்து விட்டீர்களானால் அந்த வழியில் உங்கள் மனம் உங்களை தானாகவே இழுத்துச் செல்லும்.


நினைத்துப்பாருங்கள்!இந்த வாழ்க்கை யாருக்கும் நிரந்தரம் அல்ல. வாழும் வரை நல்லதை செய்து விட்டு போகலாமே! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும் பொழுது நீங்கள் சேர்க்கும் இந்த சொத்தும் சுகமும்  மட்டும் என்ன விதிவிலக்கா? விதியை யாராலும் வெல்ல முடியாது. பக்கத்து மாநிலங்களை பார்த்தாவது இனியாவது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுங்கள். தமிழன் முதுகெலும்பு இல்லாதவன் ஆகிவிடுவான் என்ற பயம் வருகிறது. இப்படியே போனால் தமிழினம் அழிந்து விடும். அடுத்த சந்ததியர் யாரும் அங்கு வாழ நினைக்க மாட்டார்கள். உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டுமானால் என்னைபோன்ற பலருக்கு சில வருடங்களுக்கு பிறகு  தமிழ் நாட்டிற்கு வந்து செட்டில் ஆகிவிடுவோம் என்ற எண்ணம் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் நடப்பவற்றை பார்த்தால் எங்கள் முடிவு சரியானதாக இருக்குமா என்ற சந்தேகமே எழுகிறது. செல்வச் செழிப்பு மிகுந்து இருந்த எம் தமிழ்நாட்டை பாலை வனமாக ஆக்கி பார்ப்பதில் உங்களுக்கு என்ன மகிழ்ச்சி?


நினைத்துப்பாருங்கள்!அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பது எல்லாம் பழைய மொழி. தெய்வமும், அரசனும் அன்றே கொன்று விடுகிறார்கள். கைமீறி போனால் மக்களே கொன்று விடும் நாள் தூரத்தில் இல்லை. போனது போகட்டும் இனியாவது பதவிக்கும், சொத்துக்கும், புகழுக்கும் போட்டி போடாமல் நம் தமிழ்நாட்டின் நலனுக்காக உண்மையாக உழையுங்கள்.


வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். நல்லதை விதையுங்கள் ,மக்கள் உங்களை வாழ்த்துவார்கள்.தலைமை ஒன்று இல்லை என்றாலும் எங்களால் நல்லாட்சியை கொடுக்க முடியும் என்று நிரூபியுங்கள். இன்னும் நான்கு வருடங்கள் என் மக்களின் தலை எழுத்தை எழுதப்போவது நீங்கள் என்றாகி விட்ட நிலையில் அது நல் எழுத்தாக இருக்கட்டும்.


தமிழனின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் இன்றைய நிலையை நினைத்தால் மனம் கனமாக இருக்கிறது. ஒரு வித பய உணர்வு மனதை கவ்வுகிறது.. நமக்கு இருப்பது ஒரு ஜான் வயிறு தான் .அதன் கொள்ளளவு மீறி அதில் வைத்து எதையும் திணிக்க முடியாது.  எவ்வளவு தான் ஸ்விஸ் வங்கியிலும் , பினாமி பேரிலும் சேர்த்து வைத்து இருந்தாலும் கடைசியில் மிஞ்சுவது ஒரு பிடி சாம்பலே பிற்கால சந்ததியருக்கு !இவ்வளவு சொத்து சேர்த்து வைக்கும் உங்களின் சாம்பலை எத்துனை தலைமுறை சொத்தாக வைத்துக்கொள்ளும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் ஆத்மா சாந்தி அடைய அதை தண்ணீரில் கரைத்து விட்டு தான் அமைதி ஆவார்கள். இல்லையேல் உங்கள் ஆவி அவர்களை சுற்றும் என்ற பயம் ! எனவே எடுத்துக்காட்டாய் வாழுங்கள் எட்டிக்காயாய் கசக்காதீர்கள்

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பதனை உண்மையாக்குங்கள்.


Rishi and Mom

Night before the Math exam!
Rishi: Ma , make sure you give me some brain food for my breakfast tomorrow.
Mom: Oh do you mean you want almonds?
Rishi: No ma. real brain food
Mom: What do you want Rishi? I thought I will make dosa for you for breakfast tomorrow.
Rishi: No ma not dosa.
Mom: Then tell me what you want.
Rishi: Make either waffle or pancake
Mom : You asked for brain food right. Who said waffle and pancakes are brain food. The maida in them only make your brain go blunt.
Rishi: MMMMMaaaaaaa not really. By brain food I mean food that makes me and my brain feel happy,So that I can do my exam well.
Mom: I have heard that lady's finger kind of veggies make you do better math.
Rishi: May be it works for some Ma. Not me. Just make pancake or waffle.
When Rishi decides it is an order for Mom. So the next day will definetely bloom with pancakes on the dining table for Rishi.

Saturday, April 29, 2017

Rishi n me

Rishi: Ma are you sure Rahul Gandhi and you share the same date of birth?
Mom: Yes Rishi
Rishi: But you are smarter than him ma.
Mom: So what do you mean?
Rishi: you have a degree and he is a Harvard drop out
Mom: Ok . So?
Rishi: Look where he is and where you are?
Mom: He is in Delhi and I am in the kitchen in Singapore
Rishi: Ma if a man of limited intelligence can try to be so famous why can't you do something?
Mom: What do you want me to do Rishi?
Rishi: Why dont you become a full time author?
Mom: Rishi its time for you to go and sleep. Good night.

Tuesday, April 25, 2017

கானல் நீர்

காணும் இடமெல்லாம்
கானல் நீர் தெரியுதே!
சுட்டெரிக்கும் வெயிலிலே
கானல் நீரும்
ஆவியாய் போகுதே!

கானல் நீர் மட்டும்
காணும் நீர் ஆகுமானால்
தார் ஒட்டிய
கரும்பாதத்திற்கு
ஓடை நீராய் ஆகாதோ?
பள பளக்கும் கண்ணாடியாம்
கானல் நீர் கண்டு
முகம் பார்ப்போர் யாருமுண்டோ?
உயர பறக்கும் பறவை கூட
தாகம் தனிக்க
ஓர் நிமிடம் கீழே வந்து
ஏமாந்து போனதை பார்த்தது யார்?
நாக்கு தொங்கி எச்சில் ஊற்றி
மூச்சு இரைக்க ஓடிவந்த
நாய் கூட நக்கி பார்த்து
சுட்டுக் கொண்டது தன் நாக்கை!
எடுத்து வைக்கும் அடுத்த அடி
சறுக்கும் என
பயந்து பயந்து
அடி வைப்பார் சிலர் இங்கே!
வாகனத்தில் போனாலும்
வேகமாய் போனால்
நடப்போர் மீது
அள்ளித் தெளிக்கும்
தண்ணீர் என
மெதுவாய் போவோரும் இங்குண்டு!
கானல் நீர் மீது
காதல் கொண்டு
கவி பாடும் கவிஞரும் சிலர் உண்டு!
கானல் நீர் மட்டும்
காவிரி நீர் ஆனால்
காட்சி பிழை மறையுமே
சிவ கடாட்சம் கிட்டுமே!!!

Thursday, April 20, 2017

எலும்பொன்று இருந்திருந்தால்

இந்த நாக்கிற்கு
எலும்பொன்று இருந்திருந்தால்
மொழி என்று ஒன்று
பிறந்து இருக்குமா?
இத்தனை பிரளுமா?
இவ்வளவு
குட்டிக்கரணம் அடிக்குமா?
முப்பத்திரண்டு அசுரர்கள்
காவல் இருக்கையிலும்
தன் போக்கிற்கு
உலா வருமா?
அறுசுவையை தான்
சுவைக்க முடியுமா?
மூக்கின் நுனியை
தொட முயற்சிக்குமா?
வறண்டு போன
உதட்டு சுவர்களுக்கு
தண்ணீர் தான் பாய்ச்சுமா?
தெரிந்துத்தான் படைத்தானோ
நரம்பில்லா எலும்பில்லா
நாக்கை!
எளிதாய் போனது
கொடுத்த வாக்கை
பறக்கவிட .............

Wednesday, April 12, 2017

Nature's gift

My dear friend,
Yes ! I did see the showers
that wet your garden!
I could smell and feel
the essence of rain
pass through my nostrils
and fill my air bags!
Longing to hold it
for ever and ever
half heartedly
I am letting it escape !
The wetness of the grass
soothes and tickles
my feet!
The sight of the two elephant dolls
drenched and dancing in the rain
captures my eyes and heart!
Makes me feel a child again
to get wet with them and dance in the rain!
How can I close my lids
from the sight of those
lovely water laden petals
of the white flowers
hanging their heads
as if to lick the water drops
dripping from their face!
The lonely swing
swinging all alone
in the breeze
calls me loud to swing with her!
My heart slips at the
The shiny red floor
that reflects the sky
and who ever passes by!
For a short span of time
Did I travel heart and soul
to your abode to
live the life of
nature's gift!!!!

Tuesday, April 11, 2017

மழையாமே உன் வீட்டில்

மழையாமே உன் வீட்டில்?
உன் வீட்டு
மண்வாசனை
என் நாசி
உள் நுழைந்து 
நுரைஈரல்
முழுதும் நிரப்பி
பின் மெதுவாய்
வெளி வருகிறது!
உன் வீட்டு
நனைந்த புல்லின்
ஈரம் தான்
என் பாதம்
நனைக்கிறது!
உன் வீட்டு
மண் யானை
ஜோடியாய்
மழை நீரில்
குளிப்பது கண்டு
என் மனம்
இங்கே ரசிக்கிறது!
கொடியிலே
ஈரம் சொட்டச் சொட்ட
தலை கவிழ்ந்த
வெள்ளைப் பூக்கள்
என் கண் கவர்கிறது!
உன் வீட்டு
ஊஞ்சல் தனிமையில்
தான் ஆடி
எனை அங்கே
அழைக்கிறது!
கண்ணாடி
செந்தரையில்
என் மனம் வழுக்கியது!
மனக் கண்ணில்
நானும் தான்
அங்கே சில
நொடி வாழ்ந்து
முடித்தேனடி
தோழியே!!!

Friday, April 7, 2017

மக்கித்தான் போனோம்!

நேற்று ஒரு படம் பார்த்தேன். அதில் வந்த ஒரு டயலாக்--”அளவு சாப்பாடு 50 காசு, முழு சாப்பாடு ஒரு ரூபாய்.” இதை கேட்டவுடன் காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது. அப்புறம் தான் தெரிந்தது காதில் தேன் பாய்ந்தால் அது பிசு பிசுப்பாக அல்லவா இருக்கும். காதில் எளிதாக எறும்பு போய் கடித்து விடாதா ? ஆனாலும் கேட்டவுடன் மனதில் ஒரு சந்தோஷம் ,ஆஹா அந்த காலம் தான் மீண்டும் வந்து விடாதா? என்று. அப்பொழுது என் தந்தை தொலைபேசியில் அழைத்திருந்தார். எதை எதையோ பற்றி பேசிக்கொண்டிருந்த அவர் கூறினார்,” என்னமா ஆஸ்பத்திரியில் ஒரு வெஜிடபிள் பிரியாணி எழுபது ரூபாய்க்கு விற்கிறார்கள். ரொம்ப காஸ்ட்டிலிமா,”என்றார். கேட்டவுடன் நான் சிரித்து விட்டேன். அவர் வடிவேல் ஸ்டைலில் ஷாக் ஆகிவிட்டார். எழுபதுகளில் இருக்கும் அவர் உணரவில்லை , போகிற போக்கை பார்த்தால் எழுபது ரூபாய் கொடுத்தால் சாப்பாடாச்சும் இப்பொழுது கிடைக்கிறதே, இன்னும் சிறிது காலத்தில் அவரின் பேரப்பிள்ளைகளுக்கு அது கிடைக்குமா என்பது சந்தேகமே என்ற உண்மையை! அரிசி முதல், காய்-கறி வரை பிளாஸ்டிக் ஆகி போய்கொண்டிருக்கும் காலத்தில் நாம் உழண்று கொண்டு இருக்கிறோம் என்ற உண்மையும் அதில் அடக்கம் !!
அதே படத்தில் வேறு ஒரு டயலாக்-”இந்த நாட்டில் இல்லை என்பதே இல்லாமல் போக வேண்டும்” என்று. கேட்டவுடன் சிரிப்பாகத்தான் வந்தது. இந்த நாட்டில் சில விஷயங்கள் இல்லாமலே போய் வருடங்கள் பல ஆகிவிட்டது. சுயநலம் இல்லா தலைவர்களும் பொதுநலம் பேணும் மக்களும் இல்லாமல் போய்விட்டார்கள். இப்பொழுது இதில் பல விஷயங்கள் சேர்ந்து விட்டது--மாசு இல்லா காற்று, சுத்தமான தண்ணீர், சத்தான உணவு(உண்மையான உணவு என்று கூட கூறலாம்). என் தங்கை கூறினாள்,”அக்கா முட்டை வாங்க கூட பயமா இருக்கு. பிளாஸ்டிக் முட்டைனு சொல்றாங்க.எதை தான் வாங்கி சாப்பிடுவது. பயமில்லாமல் எதை தான் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது என்று தெரியவில்லை,”என்று கூறினாள். நான் சொன்னேன்,”வெந்ததை திண்றுவிட்டு வேங்கடா என்று கூறவேண்டியது தான், வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?”
பழம் பெருமை பேசி காலத்தை வீணாக்காதீர்கள் என்று கூறுகிறார்களே, ஆனால் பழம் காலத்தை நினைக்கையில் வயிறு நிறையாவிட்டாலும் மனதாவது நிறைகிறதே!!நிகழ் காலத்தில் நம் மனமும் வயிறும் நிரம்பித்தான் வழிகிறது --எல்லா வித கழிவுகளாலும்........சுத்தமான உடலோடும் மனதோடும் வாழ நாம் வேறு கிரகத்தில் பிறந்து இருக்கலாம் என்று அஞ்சலி பாப்பா மாதிரி ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நம்மை புடுச்ச கிரகம் இங்க வந்து பிறந்துட்டோம்.... எத்துனை நம்மாழ்வார்கள் பிறந்து மடிந்தால் என்ன? இந்த பூமி மக்கித்தான் போகப்போகிறது நம் உடலையும், மனதையும் போல........

Friday, March 17, 2017

Hope

Wanting to
hold the reins,
knowing that
not a thing is
under my hold!
Wishing to
turn the time
backwards,
knowing that
not a hand
goes anticlockwise!
Wishing the
mind to stop thinking
knowing that
it will happen
only when the
heart stops its beating!
The sun can
rise and set
as and when
it wishes!
Not a gift
for me
I know, but
I wish and I will wish
for hope is
my strength!!!

Saturday, March 11, 2017

தண்ணீர் தண்ணீர்!!

தண்ணீர் வேண்டி
அகதியாய் அலையுது
ஒர் இனம் !
இல்லை அவருக்கு
ஒர் புகலிடம்!

சாமானியனின் உயிர்க் காற்றை
உறிஞ்சி உயிர் வாழ்ந்து
பழகிப்போன ஒரு கூட்டம்,
காற்றை உறிஞ்சி
வாழப்  பழகிக்கொள் என்கிறது!!

கடல் மீன்கள் இல்லை இவர்கள்
உப்பு நீர் பருகி வாழ
புழு பூச்சியும் இல்லை இவர்கள்
சாக்கடை நீர் குடித்து உழல!
கிருமியும் இல்லை இவர்கள்
விஷத் தண்ணீரில் தாகம் தீர்த்துக்கொள்ள!


மனிதனடா! இவனும் உன் சக மனிதனடா,
இதை உணர்வாயா அதிகார வர்க்கமே!
இன்று இவன் தண்ணீர் இன்றி மடிந்தால்
நாளை நீயும் மடிவாய்!
இது யாவர்க்கும் பொதுவே!
நீ பணத்தை கரைத்து
குடிக்க நினைத்தாலும்
அதற்கும் உனக்கு வேண்டும் தண்ணீர்!


இவன் வயலும் , வயிறும்
வறண்டு போனது!
வாழ்வும்,  நிலையும் தான்
தாழ்ந்து போனது!
வற்றாத ஜீவநதியும்
வற்றிப்போனது!
இவனின் ஜீவனும்
உடல் விட்டுப் பிரிந்தது!
பூமித்தாயை விட்டு
ஏனடா கடல் தாய்க்கு
தண்ணீரை தாரை வார்க்கிறாய்?

ஐந்து அறிவு கொண்ட
ஒட்டகமே தனக்குள்ளே
தண்ணீர் சேமிக்க அறிந்து இருக்கையில்
ஆறறிவு கொண்ட மனிதனே
நீ மட்டும் ஏன் இந்த
சூட்சுமத்தை கற்க மறுக்கிறாய்?
அடுத்த பிறவியில் ஒட்டகமாய்
பிறக்க நினைக்கிறாயா?
இல்லை இப்பிறவியிலேயே
கூடு விட்டு கூடு பாய விழைகிறாயா?

தண்ணீர்ப் பந்தல் வைத்து
தாகம் தீர்த்த இனம் வழி வந்தவர்
இன்று தண்ணீர் பாக்கெட்டில்
தாகம் தீர்த்துக் கொள்கிறார்!

இளநீரும் இங்கு
முதுமை அடைந்தது!
பசுவின் மடியும்
காய்ந்து போனது!
தாய்ப்பாலும்
வற்றிப் போனது!


தண்ணீர் வேண்டி
யாகம் ஒரு புறம்,
மணல் மீது
மோகம் மறுபுறம்!
வாழும் பூமியில் இல்லா நீரை
வேற்று கிரகத்தில் தேடுகிறான்!

தனி ஒருவனுக்கு
உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திட
கூறினான் முண்டாசு கவி!
தனி ஒருவனுக்கு
தண்ணீர் இல்லை என்றால்
யாரை அழிப்பது ?
புறட்சி ஒன்று வெடித்தால் மட்டுமே
மறையும் இங்கு இந்த  வறட்சி!Friday, March 10, 2017

நெடுந்தூர பயணம்!

நெடுந்தூர பயணம்!
நெடுவாசல் பயணம்!
தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை இங்கே!
எரிவாய்வு எங்கே என்று ஒரு கூட்டம் அலையுது இங்கே!
தண்ணீர் இன்றி சாகும் நேரம் இதோ கண் முன் தெரியுது இங்கே!
செத்த பின் எரிக்க உதவுமாம் இந்த எரிவாய்வு அங்கே!
எரிந்த பின் நாங்களும் ஆவோம் ஒரு நாள் கரித்துண்டாய்!
மங்கையாய், மடந்தையாய்,அரிவையாய், கொழித்து செழித்த எம் நில மங்கை
இன்று வறண்ட சருமத்துடன் வரிகோடுகளுடன் பேரிளமங்கையாய் சுருண்டு உறங்குகிறாள்!
தவித்த வாய்க்கு எங்களுக்கு தண்ணீர் போதும்
பழரசம் வேண்டவில்லை நாங்கள்!
மரக் கறி வேண்டி பந்தியில் அமர்ந்த எங்களுக்கு
வேண்டாம் இந்த கரித்துண்டு!!
ஊன் இருக்க எம் நில மங்கையின் உயிரை உரிஞ்சாதீர்!
மக்கள் இன்றி மாநிலம் தான் செழிக்குமா?
சுடுகாடுகளில் மனிதன் தான் வாழமுடியுமா???

Wednesday, March 8, 2017

மகளிர் தினம்!!
இது ஒரு நாள் கூத்து
இல்லை எனக்கு!
ஒவ்வொரு நாளையும்
தனதாக்கி கொள்ள
நித்தம் போராடுகிறாள் அவள்!
இந்நாளை பெண்களுக்கென
அங்கீகரிக்க,பெண்மையை போற்ற
இன்று மட்டுமே
வாழ்த்துக்களும், கவிதைகளும்,
பாடல்களும், பூங்கொத்துக்களும்
ஒருவருக்கொருவர்
பரிமாறிகொள்கின்றனர்!
கருவறை முதல் கல்லறைவரை
பெண்களை அன்போடு,
அக்கறையோடு, மரியாதையோடு
நடத்துவோம் என்று
இந்த உலகமே
ஒன்றுகூடி
இன்று ஒரு நாள் மட்டும் கூவுகிறது!
சத்தியபிரமாணமும் எடுக்கிறது!
ஆம், சாத்தான்களும்
வேதம் ஓதுகின்றன!
அவர்கள் மறந்து போனார்கள்,
வாங்கவோ, விற்கவோ
ஒரு பொருள் அல்ல அவள்!
உங்கள் வசப்படுத்தி ஆட்டுவிக்க
உங்களின் செல்லப்பிராணியும் அல்ல அவள்!
கோலெடுத்து ஆடவைக்க
குரங்குமல்ல அவள்!
மென்று துப்ப
உங்கள் வாய்க்குள் சிறைப்பட்ட
வெற்றிலை பாக்கும் அல்ல அவள்!
உங்கள் ஆசைக்கும், கோபத்திற்கும்,
அதிகாரத்திற்கும் ஆன
வடிகால் அல்ல அவள்!
மூச்சில்லா, மனமில்லா,
சுய அறிவில்லா
X கிரோமோசோம்களால் ஆன
வெத்து பொட்டலம் அல்ல அவள்!
அவளுக்கென்று
தனித்துவம் உண்டு,
அவளின் மனதிற்கும், உடலுக்கும்
அவளுக்கு மட்டுமே உரிமையுண்டு!
அவளை கடவுளென
கொண்டாடவும் வேண்டாம்,
தேவதையென போற்றவும் வேண்டாம்!
அவளை அவளாக சிந்திக்க விடுங்கள்,
சிந்தித்ததை பேச வாய் திறக்கையில்
வாய்ப்பூட்டு கொண்டு பூட்டாதீர்!
அவளுக்கு தேவை
பயமில்லாமல் நடமாட
ஒரு உலகம்,
அதுமட்டும் வாய்த்துவிட்டால்
அவளே சிங்கம்!
இப்பொழுது இல்லாவிட்டாலும்
கூடியவிரைவில் அவள்
கனவு நினைவாகுமா???
வாய்க்கும் அந்நாளே
இனிய மகளிர் தினமாகும்!!

Woman's day

Woman's day
Is it just a day's event?
No , not for me!
In this world
she strives everyday 
to get a day
to celebrate as her own!
Wishes , poems, songs
bouquets passed from
person to person
to acknowledge this day,
and praise womanhood!
The only day
the whole world crows that
Women are to be treated
with care, love and respect
from womb to grave!
She is not a commodity
to be bought or sold!
Nor a pet to be trained
as you wish!
Not a vent for your lust, power or anger
Neither is she a breathless, heartless, mindless
bundle of X chromosomes!
She is an entity by herself,
and holds entitlement of herself
both physical and mental!
Celebrate her not like a goddess
treat her not like an angel!
Just let her live like a human!
Let her think on her own,
Let her speak what she thinks!
All she wants is a world
to walk around sans fear !
Will her dream come true
though not now
but sometime soon!!

Wednesday, February 15, 2017

நானே நானா? யாரோ தானா??

டிசம்பர் ஐந்து ஆரம்பித்தது எனது தொலைகாட்சி பித்து! ஆம் ஜெயலலிதா மாண்டது முதல், வர்தா புயல், பின் ஜல்லிக்கட்டு அதன் பின் கடந்த இரண்டு வாரங்களாக தமிழ் நாட்டு அரசியல் நாடக மேடையில் நடக்கும் நாடகம் என்று, என்னை தொலைகாட்சி கட்டிப்போட்டு விட்டது. இந்த பதினைந்து நாட்களாக நான் நானாகவே இல்லை. என் வீட்டு சோபா வாய் இருந்தால் அழுதுவிடும் . அந்த அளவிற்கு உட்கார்ந்தே தேய்த்திருக்கிறேன். இருபத்தி நாண்கு மணி நேரமும் தொலைக்காட்சி முன் தான். தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே அலைபேசியில் வாட்ஸ் ஆப் செய்திகளை வேறு பார்த்துக்கொண்டிருந்தேன். முகநூலையும் விடவில்லை. என்னவோ என் வீட்டில் முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறி கொண்டிருப்பதை போன்று உற்று கவனித்துக்கொண்டிருந்தேன்.


மனதில் எப்பொழுதும் ஒரு படபடப்பு . என்ன ஆகுமோ? ஏது ஆகுமோ என்ற தவிப்பு. வீட்டில் ஒரு வேலையும் நடக்கவில்லை. காலையில் சாப்பாடு என்று எதையாவது கிண்டி வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்து விடுவேன். இந்த இரண்டு வாரங்களில் நான் செய்த உப்புமா போல் வேறு எப்பொழுதும் நான் செய்தது கிடையாது. அவசரத்திற்கு கை கொடுக்கும் மா உப்புமா என்பது உண்மையாகி போனது.. பள்ளி செல்லும் மகன் மாலை வருவதால் இன்னும் வசதியாக போனது. கணவரும் இரவு தான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவார். . சாயங்காலம் அவர்கள் வீடு திரும்பியபோது கூட தொலைகாட்சி பார்ப்பதை நிறுத்தவில்லை. அது ஏதாவது பிதற்றிக்கொண்டேதான் இருந்தது. நல்ல வேலை நான் தமிழ் நாட்டில் இல்லை. இருந்திருந்தால் மாற்றி மாற்றி சேனல் மாற்ற வேண்டி இருந்திருக்கும். அந்த குறை தெரியாமல் இருக்க என் அன்பு தோழிகள் என்னை தொலைபேசியில் அழைத்து நடப்பவை பற்றி அப்டேட் செய்து வந்தார்கள். வீட்டு வேலை தங்கிப்போனது, குளியல் தள்ளிப்போனது. மகனின் படிப்பு பற்றிய கவனிப்பு பின் வாங்கியது. அவன் படித்தானா அல்லது அவனது கைபேசியில் நேரத்தை செலவிட்டானா என்று வாட்ச்வுமன் வேலையை செய்யவில்லை. அவனும் இது தான் சந்தர்ப்பம் என்று சந்தோஷமாக இருந்தான்.  கோவிலுக்குப் போவது தடைப்பட்டது.

தொலைபேசியில் ஊருக்கு அழைத்து பேசினாலும் நலம் விசாரிப்புகள் மறைந்து  அரசியல் பற்றிய பேச்சுத்தான். வெளிநாட்டில் இருக்கும் என் மகளிடம் கூட பேசுவது குறைந்தது. பொதுவாக வீட்டில் யாவரும் வெளியில் சென்றப்பின் நான் உணரும் தனிமையை நான் உணர மறந்தேன். அது தான் எந்நேரமும் தொலைகாட்சியில் ஒரு பத்து பேர் கூவிக்கொண்டே இருக்கிறார்களே.  நான்  என்னவோ பெரிய அரசியல் விமர்சகர்  மாதிரி என்னை நம்பி என் அன்பு தோழிகள் வேறு எனக்கு போன் செய்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டார்கள். இந்த நாடகத்திற்கு முன்பு அமெரிக்க ட்ரம்பின் நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த நான் தாய் மொழி நாடகம் இருக்கும் பொழுது இது எதற்கு  வேற்று மொழி நாடகம் என்று அதை பார்ப்பதையும் நிறுத்திவிட்டேன். வீட்டில் கிண்டல், கேலிகள் குறைந்தது. தோழிகளுடன் ஆன ஆரோக்கியமான, மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பேச்சுக்கள் காணாமற் போயின. அன்பர் தினத்தன்று கூட வாழ்த்துக்கள் பறிமாறிக்கொள்ள மறந்தேன். அன்பர் தினத்தன்று வழக்கமாக குடும்பத்தாருக்கு பிடித்தவை சமைத்து சேர்ந்து உண்ணுவது வழக்கம். ஆனால் இம்முறை சிகப்பாக ஏதாவது செய்து வைத்தால் போதும் என்று பீட்ரூட் பொரியல் செய்து வைத்தேன். அதை பார்த்த மகன் வேண்டா வெறுப்பாக முகம் சுழித்தான். நான் அதை கூட கண்டு கொள்ளவில்லை. சாப்பாட்டு மேசையில் சாப்பிடுவதை விடுத்து தொலைகாட்சி முன் அமர்ந்து  மூன்று வேலை உணவும் உண்ணப்பட்டது.


மனதில் ஒரு அமைதி இன்மை. நடக்கும் நாடகங்களை பார்க்கும் பொழுது இனம் தெரியாத கோபம், வெறுப்பு, ஆத்திரம். மக்களை இவ்வளவு முட்டாள்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்களே என்ற பரிதவிப்பு. இதற்கு யார் தான் முற்றுப்புள்ளி வைக்க போகிறார்கள் என்ற ஏக்கம். எப்பொழுதும் ஒருவித தலை பாரம், மனதும் சேர்த்துத்தான். வாட்ஸ் ஆப்  மட்டும் இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் மனம் சஞ்சலப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. மாறி மாறி வந்த தொலைபேசி அழைப்புகள் எனக்குள் இருந்த கோபத்தை இன்னும் சூடேற்றிக் கொண்டிருந்தது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியும்? என் கையாலாகாதனத்தின் மேல் , என் மேல் எனக்கே கோபம் வந்தது. வேடிக்கை பார்க்கத்தானே முடிகிறது !


இப்படி தொலைகாட்சியை வைத்த கண் எடுக்காமல் பார்ப்பதால் என்ன பயன்? தொலைபேசியில் ஆதங்கத்தை பகிர்தலால் என்ன பயன்? வாயில் வரக்கூடாத வார்த்தைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் தான் மிச்சம். இரண்டு வாரங்கள் முடிந்த பின்னும் நாடகங்கள் முடிந்த பாடில்லை. இப்படியே போனால் நம் பொழப்பு என்னாவது என்று பயமாய் உள்ளது. இதற்கெல்லாம் யாரை குற்றம் சொல்வது? தொல்லை தரும் தொலைகாட்சி செய்திகளையா? செய்தித்தாள்களையா? வாட்ஸ் ஆப் செய்திகளையா?  அவர்களின் வேலை செய்திகளை பரப்புவது மற்றும் வியாபார நோக்கம். ஆனால் நான் ஏன் என்னை மறந்து அதில் லயித்து போயிருந்தேன். என்னுடைய இந்த லயிப்புத்தான் அவர்களின் மூலதனம். அவர்களின் வியாபார பசிக்கு நான் இரையாகிறேன். இரவு நேரங்களில் சரியான தூக்கம் கூட இல்லை. எங்கே நாம் தூங்கும் நேரம் நமக்கு தெரியாமல் ஏதாவது நடந்து விடுமோ என்ற நினைப்பு. அதற்கு ஏற்றாற்போல் ப்ரேக்கிங் நியூஸ் என்று நொடிக்கு முன்னூறு தரம் செய்திகளை வாரி வழங்கி கொண்டிருந்தார்கள்.இந்த அரசியல் சதுரங்கத்தில் நாம் பகடைக்காயாய் ஆகிறோம் என்று அறிந்திருந்தும் என்னால் அந்த சிலந்தி வலையில் இருந்து மீளமுடியவில்லை. அவர்களின் வியாபார உத்தியின் வெற்றி இது தான். யாருடன் நான் எவ்வளவு நேரம் பேசினாலும் சரி, விடாமல் சுடச் சுடச் செய்திகளை தெரிந்து வைத்துக்கொண்டிருந்தாலும் சரி அதனால் எனக்கென்று ஒரு ஆதாயமும் இருக்கவில்லை. நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தவர்கள் அவர்களின் நடிப்பை தொடர்ந்து கொண்டு தான் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். இதில் நஷ்டம் எனக்குத்தான். என் வீட்டு உலையில் நான் தான் அரிசியை கழுவி போடவேண்டும் . யாரும் எனக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. என்ன ,ஊருடன் ஒத்து வாழ் என்பதை போல் எல்லோருக்கும் தெரிந்த ,அறிந்த செய்திகள் எனக்கும் தெரியும் என்ற ஒரு உப்பு சப்பு இல்லாத நிம்மதி. அதை நிம்மதி என்றும் சொல்ல மாட்டேன். ஏனென்றால் இந்த இரண்டு வாரங்களாக சரியான சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை. செய்திகளை கேட்டும், பார்த்தும், அதனைப்பற்றி பேசியும் மன உளச்சல் மட்டும் இல்லை உடல் அசதியும் தொற்றிக்கொண்டது. வழக்கமாக நான் பார்க்கும் தொலைகாட்சி சீரியல்களை கூட நான் பார்க்கவில்லை. என் இரவு நேர நடைப்பயிற்சி தடைப்பட்டது. கடைக்குக் கூட போகவில்லை(தேவை இல்லா சாமான் வீடு வந்து சேரவில்லை என்ற ஒரு நல்ல விஷயம் இது). பேசி பேசி வாய் , தாடை வலித்தது. கேட்டு கேட்டு காது வலித்தது.  இப்படியே போனால் நான் பித்து பிடித்து அலைய வேண்டியது தான் என்று ஒரு முடிவிற்கு வந்தேன்.நேற்றுடன் எல்லாம் முடியும் என்று எதிர் பார்த்தேன் . ஆனால் மீண்டும் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை உணர்ந்து இன்று முதல் என் வேலைகளை வழக்கம் போல் தொரடலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். என்ன நாளை வேறு எதாவது ஒரு அதிர்ச்சி செய்தி தாக்காமல் இருந்தால் சரி...... மனித மனம் குரங்கு தானே ?? அது என்ன செய்யும் ? வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால்  மெல்லத்தான் தோன்றுகிறது.அதெல்லாம் சரி நான் இப்படி என்னை மறந்து இந்த நிகழ்வுகளை கவனிப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். என் சமூகத்தின் மேல் இருக்கும் அக்கறையா? அரசியல்வாதிகளின் மேல் இருக்கும் வெறுப்பா, அதிர்ப்தியா? என் மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்குமா என்ற எதிர்ப்பார்ப்பா? ஊழல்வாதிகள் ஒழிந்துவிடுவார்கள் என்ற கனவா? மக்கள் புரட்சி வெடிக்காதா என்ற எண்ணமா? நல்லதோர் சமூக மாற்றம் தோண்றுமா என்ற தேடலா? எம்மக்களை வழிநடத்த புதியதோர் தலைவன் ஒருவனை தேவதூதன் அனுப்பி வைப்பான் என்ற சிந்தனையா? அதிகாரவர்க்கத்தின் மேல் உள்ள பொறாமையா? நியாய தர்மம் எப்படியும் நிலை நாட்டப்பட வேண்டும் என்ற பிராத்தனையா? இன்னும் எவ்வளவு தூரம் நம்மை முட்டாள்களாக்கி வேடிக்கை பார்க்கப்போகிறார்கள் என்ற பொறுமையா? இல்லை எல்லாவற்றிற்கும் மேல் வேலை வெட்டி இல்லாமல் நான் இருப்பதாலா? ஆக்கபூர்வமாக செயல் பட அறியாததாலா? இத்துனை கேள்விகளுடன் நான் எனக்கே ஒரு சுய பரீட்ச்சை வைத்துக்கொண்டு இருக்கிறேன். புதியதோர் உலகம் ஒன்று தோன்றும் என்ற என் நம்பிக்கை மட்டும் என்னுள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு தான் இருக்கிறது.... எந்த ராஜா எந்த பட்டணம் போனால் எனக்கென்ன?????கூட்டி கழித்து பார்த்தால் என்னால நீ கெட்ட உன்னால நான் கெட்டேன் கதை தான்........

கழுகுகள்

பிணம் 
தின்னும்
கழுகுகள்
பறக்கும்
ஊரிலே தான்
பணம்
தின்னும்
கழுகுகளும்
உலா வருகின்றன......
பிணமோ
பணமோ,
தின்ன
எது கிடைத்தாலும்
கழுகுகளுக்கு
கொண்டாட்டம் தான்.....

யார் சொன்னது

வானமே எல்லை 
என்று யார் 
சொன்னது?
அதையும் தாண்டி
மனிதன் 
கால் பதியா
பல புனித
கிரகங்கள் இருக்கத்தான்
செய்கிறது..

ஆசை

ஆதாயம் இல்லா 
அரசியல்,
தன் நலம் இல்லா
தலைவன்,
சுயம் மறவா
தொண்டன்,
மனசாட்சி
வழி நடக்கும்
மக்கள்<
இவை மட்டும்
வாய்த்துவிட்டால்
பூமியில்
எம் நாடே
சொர்க்கமாகும்!!

காதலும் கடந்து போனது.....

அன்பர் தின
வாழ்த்துக்கள் இல்லை,
வாழ்த்து மடல்களும் இல்லை,
காதல் பாடல்கள் பகிர்தல் இல்லை,
இனிப்புக்கள் வழங்கப்படவில்லை,
வீதிகளில்ரோஜாக்கள் பூக்கவில்லை,
தெருவெங்கும் பூங்கொத்துக்கள் தொங்கவில்லை,
காதல் பற்றி போற்றி கொண்டாடவில்லை,
பூங்காக்களில் காதலர்களின் கூட்டம் இல்லை,
இத்தினம் எம் பண்பாடு இல்லை என்று
ஒரு கூட்டம் எழவில்லை,
வாழ்க்கையில் சுவாரசியம் மாறிக்கொண்டு தான் உள்ளது
பொது ஜனம் எதை சுவாசிக்கிறதோ
அதையே யாவரும் சுவாசிக்கிறோம்!
சில சமயம் நாம் நிர்பந்தமாக
ஊடகங்களினால் சில
அசுத்த காற்றை சுவாசிக்க வைக்கப்படுகிறோம்!
இன்று அரசியலே நம் எல்லோரின் சுவாசம் ஆனது,
காதலும் கடந்து போனது.......

Monday, February 6, 2017

நல்ல காலம்

சலங்கை பூஜையில்
ஆரம்பித்து
ருத்ரதாண்டவத்தில் 
முடிந்தது!
திருஷ்டியும்
சுத்தி போட்டாகிவிட்டது!
இனியாகிலும்
தோஷங்கள் நீங்கி
பிரதோஷ காலம்
வந்திடுமா????

வாழ்வு

வக்கிரமும் அக்கிரமும்
வாழ்வென்றால் வாழ்வதெப்படி????
சூதும் வாதும் 
சூழுமானால்
சுவாசிப்பதெப்படி??
வாழ்க்கை சக்கரமும்
உருளத்தான் செய்யும்
அதில் நாமும்
ஓயாமல்
உழலத்தான் செய்வோம்!!

தேச துரோகிகள்

கள்ள நோட்டு
அடித்தவனும்
கறுப்புப் பணம்
பதுக்கியவனும்
நாட்டை காட்டிக் 
கொடுத்தவனும்
மட்டுமல்ல,
கன்னி மாதாவாம்
எம் பஞ்ச பூதங்களையும்
கதற கதற
கற்பழித்தவனும்
தேசதுரோகிகளே!

Orange ball

Snow covered land,
Tall brown naked trees,
engulfed in the yellow rays
unwinding themselves
stretching their arms to the fullest!
The orange ball peeping
in between the twigs,
searching for a space to squeeze
itself through
to roll on the snow
and have a ball of its life.....
....

அழைப்பு

என் ஆழத்தில் 
புதைந்து 
அமைதியாய்
உறங்கிக் கொள் 
என்றது கடல்,
என் சுழற்சியால்
சுகமாய் போர்த்திக் கொள்
என்றது மேகம்,
என் உயரத்தின் பின்
ஒளிந்து ஓய்வெடு
என்றது மலை..
நாளை புதிதாய்
பால சூரியனாய்
மீண்டும் பிறக்க
இவ்வுலகம்
ஒளியால் ஒளிர,
எவ்விடம் மறைய
சிறப்பிடம்?
என யோசித்தான்
சூரிய தேவன்........

Invitation

Come,Sleep
deep inside my silence 
invited the sea,
Unfurl me as 
your blanket 
said the whirling clouds,
I can be your door
to shut you behind me
while you rest a while ,
called the mountains!
To rest and rejuvenate
before the rebirth the next day,
which will be the best place??
broods the Sun.....

Tuesday, January 31, 2017

அக்னி குஞ்சுகளே!!

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”
-----பாரதியார்
பொது நலம் என்று வந்துவிட்டால்
சுயநலம் கடலடி என்று நிரூபித்துவிட்டான் தமிழன்!
பொது நலத்திற்காக கடல் நுரையென பொங்கி விட்டான்!
இலக்கு ஒன்றாக இருக்குமானால் குறி என்றும் தப்பாது! இலக்கு பலவாயின் எய்தவனே குறியாவான்!
உணர்வீர் இதனை இத்தருணம்!
உணர்வு பூர்வ எழுச்சி உணர்ச்சி பூர்வமானதாக மாறினால்
எழுச்சியில் தாழ்ச்சியே ஏற்படும்!
வார்த்தையில் கண்ணியம், செய்கையில் கட்டுப்பாடும் அவசியம்!
வசை பாடுவதால் அது இசையென ஆகாது!
பொங்கும் பால் வரம்புக்குள் இருக்கும் வரை பயன்படும்
கீழே சிந்தினால் யாருக்கும் பயனில்லை!
எய்தவன் அங்கிருக்க அம்பை குறை கூறி பயன் என்ன என்று யாரும் போக மாட்டார்கள். குத்திய அம்பை எடுத்து முறித்து போடவே முயற்சிப்பர்.
உங்களின் இலக்கை நோக்கி செல்லுங்கள் , யாருடைய இலக்கிற்கும் ஆளாகாதீர்கள்.
வாக்கினிலே சுத்தம் வேண்டும்!
செய்கைதனில் உயர்ச்சி வேண்டும்!
மனிதர்களை மதித்தல் வேண்டும்!
வயதிற்கான மரியாதை வேண்டும்!
சின்னப்பிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது என்றாக்கி விடாதீர்கள்!
ஒவ்வொரு அடியாக எடுத்து வையுங்கள். இது உங்களின் முதல் அடி . முதல் படி கால் பதியாமல் கடைசி படி அடைதல் முடியாது. முதல் அடி ஆணித்தரமானதாக இருக்க வேண்டும். அதில் தடுமாற்றம் ஏற்பட்டால் மீண்டும் தரையில் விழுந்து விடுவோம்.
பொறுமை காத்து இருங்கள். அவர்களுக்கும் கால அவகாசம் கொடுங்கள். நிச்சயம் நன்மை உண்டாகும்!

தமிழண்டா!!

சட்டிக்குள் இருக்கும் நண்டுகள் அல்ல தமிழன், 
ஒரு பருக்கை ஆனாலும் தன் இனத்தை
கூவி அழைத்து பகிர்ந்துண்ணும் 
 காகைகள் என்பதனை
உலகிற்கு பறைசாற்றியாகிவிட்டது. 
விருந்தும் மருந்தும் நாண்கு நாட்களுக்குத்தான்!
உண்டது விருந்தோ மருந்தோ,
அதன் பயனை சிறிது காலம்
காத்திருந்துதான் உணரவேண்டும்.
இன்று முளைத்த காளானாகி போகாமல்,
ஆலம் விழுதுகளாய் படர்ந்து
தாய் மரத்திற்கு பளு சேருங்கள்.
இன்று விதைத்த விதையை
இன்றே அறுவடை செய்ய நினைத்தால்
அதில் மிஞ்சுவது பதரே !
காத்திருந்து அறுவடை செய்யும்
நெல்லே வீடு வந்து சேரும்.
அதுவே விளைநெல்லாய் மாறும்!
தேவை இங்கு குருதி சிந்தா உறுதி!
எரி நட்சத்திரம் அல்ல நீங்கள் !
நீங்கள்வழிகாட்டும் துருவ நட்சத்திரம்!
 அப்பனுக்கு சுப்பனாக இருந்தது சரிதான்
சுப்பனும் அப்பனாவான் என்பதை மறவாதீர்!
அனுபவம் தவிர்த சிறந்த ஆசான் இவ்வுலகில் இல்லை,
அவ்வாசான் கைப்பற்றி பொருள் உணர்ந்து,
நிலை உணர்ந்து
தன் நிலை மறவாமல்
அடுத்த அடி எடுத்து வையுங்கள்!
தாய் திருநாட்டை சிதறாமல் காத்திடுங்கள்!!

Friday, January 20, 2017

வீரத்தமிழா!!

அறம் வழி என ஆனப் பின்
உயிரே போயினும்
தரம் தாழாதே
தடம் மாறாதே 
மறத்தமிழா!
பரமே வரினும்
அறமே வரம் என
கரம் குவித்து கேள் வீரத்தமிழா!!
நீ நடத்துவது
மெளனப் போராட்டம் ஆயினும்
புவிதோறும் ஒலிக்கும்
உன் வீர முழக்கம்.......
கை கொண்டு
கண், காது, வாய் மூடி
நிற்கும் அற்பனுக்கும்
சீக்கிரமே புரிந்துவிடும்
உன் ஒலி மழைத்துளி அல்ல
கடல் அலையின் ஓயா ஒலியென.....
உன் லட்சியமும், பாதைகளும்
ஒன்றெனவே இருக்கட்டும்
ஒற்றுமை தான் வானளாவ ஓங்கட்டும்......
அறம் மட்டுமே ஆயுதமென
சூளுரைதான் எடுத்துவிடு...
சீக்கிரமே உன் யாகம்
பலித்துவிடும்...
இரவும் தான்
விடிந்துவிடும்......
அதுவரையில் அமைதியாய்
போராடு என் வீரத்தமிழா....

Friday, January 13, 2017

பொங்கல் நினைவலைகள்..........

இதோ வந்துவிட்டது பொங்கல்.... என் மனம் பின் நோக்கி பயணம் செய்ய தொடங்கி விட்டது........

ஜனவரி மாதம் வந்தாலே மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பது பொங்கல் திருநாளைத்தான். அதுவும் மாட்டுப் பொங்கல் என்றால் மனதில் அலாதி சந்தோஷம்.  டவுனில் வளர்க்கப்பட்ட நாங்கள் கிராமத்திற்கு போவது என்பது வருடம் ஒருமுறை வரும்  பொங்கலுக்குத்தான். சொந்த பந்தங்களை பார்க்கக் கிடைப்பதும் அப்பொழுதுதான்.


 மாட்டுப்  பொங்கல் என்றால் என் மனதில் ஒரு தனி மகிழ்ச்சி. ஏனென்றால் அன்றைக்கு மாட்டுக்கு பொங்கல் வைப்பது என் வேலை. நான் வைக்கும் பொங்கலை மாடு மட்டும் தான் சாப்பிட முடியும் என்பது ஒரு புறம் இருந்தாலும், நமக்கென்று நம்மை நம்பி ஒரு பெரிய வேலையை ஒப்படைத்து விட்டார்களே என்ற இருமாப்பு. பொங்கல் செய்வது என்பது நானாக இருந்தாலும் அடுப்பை பற்ற வைத்து எரிய வைத்து கொடுப்பதெல்லாம் என் சித்தப்பா பிள்ளைகள்தான். டவுனில்  இருந்து   வருவதாலும் வீட்டிற்கு முதல்  பேத்தி என்பதாலும் எனக்கு தனி கவனிப்பு. நமக்கென்று ஒரு பானை கிடைத்து விட்டது என்று நானும் விடாமல் கிண்டி கொண்டே இருப்பேன், பொங்கல் கூழாகும் வரை . புகையில் நின்று பழக்கம் இல்லாததால் கண்கள் எரியும். ஆனாலும் கண்களை கசக்கியபடி விடாமல் கிண்டுவேன்.


மாடுகள் குளிக்கும் அதே குளத்தில் கரையில் நின்று குளித்த காலமும் உண்டு. இன்று வீட்டில் இருக்கும் நாண்கு பேருக்கும் தனித் தனி குளியல் அறை... சித்தப்பாக்கள், அண்ணன்கள், தம்பிகள் என்று எல்லோருடனும் மாட்டுக்கு புல் அறுக்க போன அனுபவமும் உண்டு. எங்கே நான் கையை அறுத்துக் கொள்வேனோ என்று எப்பொழுதும் என் அம்மா பயப்படுவாள். எனவே எனக்கு மட்டும் ஒரு சிறு கூடை,சிறு அறுவாள் . நான் ஒன்றும் புல் அறுத்தது கிடையாது. . எல்லோருடனும் சென்று விட்டு அவர்கள் வீடு வரும் பொழுது ஒவ்வொருவர் கூடையிலிருந்தும் ஒரு பிடி புல் எடுத்து என் கூடையில் நிரப்பிக்கொண்டு பந்தாவாக வீடு வந்து சேருவேன்.செங்கல் உடைத்து, பொடியாக்கி கோலம்  என்ற பெயரில் கிறுக்கல்கள்  பல வரைந்த  நாட்களை எப்படி மறக்க இயலும்.  நான் போட்ட கோலம் யாவும் ஒன்று நட்சத்திரமாக இருக்கும் இல்லையேல் ஏதாவது ஒரு நேர் கோடு, அறுகோனம், முக்கோனமாகவே இருக்கும். ஊரில் உள்ள அத்தைகள் யாவரும் ,சானம் தெளித்து கூட்டிய  பெரிய வாசல் முழுதும் சிக்குக் கோலம் போடுவதை  வாய் பிளந்து  குத்துக்கால் போட்டு உட்கார்ந்து பார்ப்பேன். பின் என் பங்கிற்கு Happy Maatu Pongal என்று எழுதுவேன். வீட்டு சாமி கும்பிடுவதற்காக பனியாரம், வடை செய்ய எங்கள்  ஆத்தா ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டும் பொழுது  அவருக்கு உதவுவது போல்   சிறிது நேரம் ஆட்டம் போடுவேன். குளவியை சுற்றுவது  என் வேலை. அதுவும் பத்து நிமிடங்கள் தான். அதற்குள் யாராவது விளையாட கூப்பிடுவார்கள். ஓடி விடுவேன். அன்று ஒரு நாள் மட்டும் யார் வீட்டில் வேண்டுமானாலும் சாப்பிடலாம் .


ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் பொழுதும்  தெருவில் ஏதாவது இரு  குடும்பங்களுக்குள் பேச்சு வார்த்தை இருக்காது. போன வருடம் எதிரியாக இருந்தவர்கள் இந்த வருடம் நட்பாகி இருப்பார்கள். இது எழுதப்படாத நியதி. ஆனால் எல்லோர் வீட்டு குழந்தைகளும் ஒன்றாக விளையாடுவார்கள். . மாடுகளை  குளிப்பாட்டி, பொட்டு வைத்து, மாலையிட்டு அழகு படுத்துவதே ஒரு கலைதான். எனக்கு எப்படியும் ஒரு கன்றுக்குட்டியோ அல்லது ஆட்டுக்குட்டியோ காத்து இருக்கும் பொட்டு வைத்து  பூ வைக்க. சாமி குப்பிடுவதற்காக கொட்டு கொட்டுவதற்கு ஒரு தட்டையும் குச்சியையும் மதியம் முதலே ஏற்பாடு செய்வோம். “பழைய தட்டை எடுத்துட்டு போ புதுசை நெளிச்சு கொண்டாராத”, என்று என் ஆத்தா கத்திக்கொண்டே இருப்பார். அது எதுவும் காதில் ஏறாது. ஒவ்வொரு வீடாக சென்று சாமி கும்பிடும் போது மாடுகள் மிரளுமளவிற்கு சத்தமாக எல்லோரும் சேர்ந்து கொட்டு கொட்டுவோம்.”பொங்கலோ பொங்கல், மாட்டுப் பொங்கல் “ என்று கத்துவோம். இன்று  நினைக்கையிலும் அந்த சத்தம் காதில் ஒலிக்கிறது. பொதுவாக இருட்டிய பின் தான் சாமி கும்பிடுவார்கள். வீட்டை விட்டு தள்ளி இருக்கும் மாட்டுக் கொட்டகை இருட்டாக இருக்கும். அங்கு சென்று சாம்பிராணி போட்டு, சூடம் ஏற்றி மாட்டுக் காலில் விழுந்து கும்மிட சொல்வார்கள். பயந்த  படியே அதை ஒவ்வொரு வருடமும் தயக்கத்துடன் செய்வேன். எங்கே மாடு முட்டிவிடுமோ என்ற அச்சம்.


அன்று வீட்டில் உள்ள ஆண்கள் எல்லோரும் மஃபில் மிதப்பார்கள். ஒரே பாச மழையாக பொழிவார்கள். ஊர்வன, பரப்பன, நடப்பன என எல்லா வகையான சாப்பாடும் இலை நிறைய பரிமாறப்பட்டிருக்கும். என் தந்தையை பார்க்க அவரின் நண்பர் குழாம் அன்று வருவார்கள். யார் வந்தாலும் சாப்பிட்டு செல்வது தான் வழக்கம். மறு நாள் கன்னிப் பொங்கலுக்கு கோவிலுக்கு செல்ல மாட்டுப் பொங்கல் அன்றே சிறுவர்களுக்கு பெரியவர்கள் காசு கொடுப்பார்கள். அன்று செமையாக கல்லாக் கட்டும். அன்று கிடைக்கும் அந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு முப்பத்திரண்டு பல்லையும் காட்டுவோம். மகிழ்ச்சி கடலில் மிதப்போம். இன்று பிள்ளைகளுக்கு கிரெடிட் கார்டையே கொடுத்தாலும் பத்துவது இல்லை. இரவு குடும்பத்தில் உள்ள எல்லோரையும் உட்கார வைத்து என் தாத்தா திருஷ்டி சுத்தி போடுவார். நெல் அளக்கும் மரக்காவில் உப்பு , மிளகாய் போட்டு எறிய விட்டு சுற்றுவார்கள். நெடியேரும் அந்த காரம். ஆனாலும் எல்லோரும் அமைதியாக இருமிக்கொண்டே அமர்ந்திருப்போம்.


இரவு கோவிலில் நாடகம் நடக்கும். பெரும்பாலும் வள்ளித்திருமணம் நாடகம் தான்  நடக்கும்.  நாடகத்தை பார்க்க மாட்டு வண்டி  பூட்டி என் சித்தப்பா கூட்டிச் செல்வார். வண்டியில்  ஏறுவது முதலாவது  நான் தான். போர்வை ஒன்றை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். நாடகம்  ஆரம்பிக்கும் முன் வண்டியிலேயே முதலாவதாக தூங்குவதும் நானாகத்தான் இருப்பேன். ஆனாலும் வருடா வருடம்  வண்டி ஏறி நாடகம் பார்க்கச் செல்வேன். விடியற்காலை நாடகம் முடிந்தவுடன் வீடு வந்து சேர்வோம். அந்த நாட்களை நினைக்கையில் ,வெட்ட  வெளியில் , பனி விழும் இரவில், அந்த மாட்டு வண்டியில் தூங்கிய தூக்கத்தின் மயக்கம் இன்றும் என் கண்களை தழுவுகின்றன.


மறு நாள் கன்னிப் பொங்கலுக்கு கோவிலில்  திருவிழா நடக்கும்.  எல்லோரும் ஒன்றாக புத்தாடை அணிந்து கிளம்புவோம். எங்கள் அத்தைகள் இருவரும் அவரவர் குடும்பத்துடன் அன்று என் பாட்டி வீட்டிற்கு வருவார்கள். எல்லா பிள்ளைகளுமாக சேர்ந்து ஒரே ஆட்டம் பாட்டமாக இருக்கும்.  கோவிலில் இனிப்பு சேவு, பஞ்சு மிட்டாய் எல்லாம் வாங்கி சாப்பிட்டுவிட்டு சாமிக்கு ஒரு சலாம் வைத்துவிட்டு , பின் சாமிக்கு படைக்கப்படும்  மாவிலக்கையும் பலாச்சுளையுடன் தேங்காய் வெல்லம் கலந்த கலவையும் சாப்பிட்டு விட்டு அடுத்தது கோவில் கடையில் என்ன என்ன வாங்கலாம் என்று கண்கள் அலையும். .சாமி கும்பிடப்போகும் பொழுது கோவில் பூசாரி விபூதியை எடுத்து நெற்றி நிறைய பூசி விட்டு , பின் தலையிலும் கொஞ்சம் தெளித்து , வாயிலும் கொஞ்சத்தை போடுவார். இன்று போல் விபூதி பூசும் பொழுது கண்களை கைகளைக் கொண்டு குடை பிடிக்க யாருக்கும் அன்று தெரிந்திருக்கவில்லை. என் பிள்ளைகளுக்கு இன்றும் விபூதி பூசினால் கண்களை மறைத்து ஊதிவிடவேண்டும் கண்களுக்குள் அத்துகள்கள் செல்லாதவாறு. அது மட்டுமல்ல ஒரு சிரு கோடு தான் பூச வேண்டும் . கோவிலில்   சிறு ராட்டிணம்  ஒன்று இருக்கும் . அதில் ஏறாமல் வருவதில்லை. அந்த ராட்டிணத்தை சுற்றி விட ஆள் இருப்பார்கள். வேகமாக சுற்றச்சொல்லி கத்துவேன். கீழே நிற்கும் என் சித்தப்பாக்களும் ராட்டிணம் சுற்றும் ஆளுடன் சேர்ந்து வேகமாக சுற்றுவார்கள். ராட்டிணம் நிற்கையில் கொண்டாட்டங்களும் நிற்கும்.


எல்லாக் கொண்டாட்டங்களும் முடிந்து  அவரவர் ஊருக்கு பயணம் தொடரும். மனதிற்குள் அடுத்த வருட பொங்கலுக்கான காத்திருப்பு தொடங்கும்.

இன்றும் பொங்கல், மாட்டுப் பொங்கல் வருகிறது. அன்று போல் இன்று இல்லை....

உறவுகள் பல தூரம்   போய்விட்டன. நினைவுகள்  மட்டுமே மிஞ்சி நிற்கின்றன. அந்த நினைவுகளை மனதில் சுமந்தபடி நான் ஒவ்வொரு வருடமும் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே வீட்டு சாமியை கும்பிடுகிறேன். எனக்காவது நினைத்து பார்க்க நினைவலைகள் உள்ளன. என் பிள்ளைகளுக்கு அதுவும் இல்லை. ஆண்டி, அங்கிள்களே அவர்களின் உலகம் ஆகிப்போனது........

சரி சரி நான் போய் நாளைக்கு பொங்கலுக்கான வேலையை பார்க்கிறேன்..... இப்படியே பழசை அசை போட்டுக்கொண்டிருந்தால் விடிந்துவிடும்.....

Friday, January 6, 2017

பொய்யான உறவு

நான் வாழ்ந்த போது
நீ வந்திருந்தால்
வாசல் வரை வந்து
வரவேற்றிருப்பேன்
நான் இறந்தபின் வந்துவிட்டாயே !!

என் வாழ்வில்
பங்கு பெற ஆசையில்லா
உனக்கு, என் சாவில்
பங்கு கொள்வதில்
என்ன பயன்?
ஊருக்கு பயந்தா,
உறவுக்கு பயந்தா,
வந்தாய்?

உயிர் இருந்தபொழுது
பாசமாக அணைக்காத நீ
உயிர் நீத்த என் கூட்டை
அணைத்து
எந்த பாவத்திற்கு
பரிகாரம் தேடுகிறாய்??

மூச்சிருக்கும் போது
நம் உறவே உதிர்ந்தபின்
இன்று மூச்சடங்கிய நான்
நீ போடும் இந்த
ஒற்றை மாலைக்கா
எழப்போகிறேன்??

நீ விடும் கண்ணீர்
உனக்கு வேண்டுமானால்
பாவ மன்னிப்பாய் இருக்கலாம்
எனக்கு அது
வெறும் உப்புக் கரைச்சலே!!
மனம் மக்கி
வருடங்கள் பல மடிந்தன!
உடல் மட்டுமே
இப்பொழுது பாக்கி!!!

நம் இரத்த பந்த உறவே
பொய்யாகி போன நிலையில்
எந்த பந்தத்தை புதுப்பிக்க
இன்று வந்தாய்??

சாவு வீட்டில்
புதிப்பிக்கப்படும் உறவுகள் மேல்
எனக்கு நம்பிக்கை இல்லை
ஏனெனில் அந்த உணர்வுகளில்
மெய்யில்லை!!
என்னைப் போலவே
நம் உறவும் மடிந்ததாகவே
இருக்கட்டும்!!