Thursday, August 24, 2017

அக்கக்கா அக்கக்கா.......

காலை மணி ஒன்பது இருக்கும். கணவர் ஆபீஸுக்கும் மகன் பள்ளிக்கும் சென்றுவிட்டார்கள். சூரியன் கூட இன்று சோம்பேறியாகவே இருந்தது. ஒன்பது மணி ஆனாலும் அது மேக போர்வைக்குள் சுகமாக பதுங்கி கொண்டிருந்தது. ரம்மியமான அந்தக் காலைப் பொழுதை ரசிக்க ஹால் ஜன்னல்களை திறந்து வைத்தப்படி சோபாவில் அமர்ந்திருந்தேன். எங்கிருந்தோ வந்த தென்றல் என் முகம் வருடியது. வீட்டில் நான் தனியாக இருப்பதால் வீடு அமைதியாக இருக்கும். அந்த அமைதி எனக்கு ஏனோ பிடிப்பதில்லை. பேச்சுக்குரல் கேட்க வேண்டி தொலைக்காட்சியை ஓடவிடுவேன். அதில்   ஏதோ ஒரு  நிகழ்ச்சி கடனே என்று ஓடிக்கொண்டிருந்தது. தினசரியை கண்கள் மேய்ந்துக் கொண்டிருக்க  கையில் சூடான டீ நிரம்பிய கோப்பை வேறு. அப்பொழுது  திடீரென்று ஒரு கூவல் எங்கிருந்தோ விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. அது அக்கக்கா குருவியின் அழைப்பு. ஏதோ ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில்  மொட்டை மாடியில் அமர்ந்தபடி அது யாருக்கோ அழைப்பு விட்டுக்கொண்டிருந்தது. ”அக்கக்கா அக்கக்கா” என்று அது விடாமல் கத்திக்கொண்டிருந்தது.

நான் சிறுமியாக இருந்தது பொழுது எங்கள் வீட்டு தென்னை மரத்தில் வந்து அமர்ந்து அக்கக்கா குருவி கத்தும். கேட்கவே பாவமாக இருக்கும்.  அந்த சத்தம் மனதை பிழியும். அந்த  ஒலியின் பின் ஒரு கதை இருப்பதாக என் அம்மா கூறியது நினைவிற்கு வந்தது. அக்கா குருவியும், தங்கை குருவியும் ஆற்றில் குளிக்க போனார்களாம். அப்பொழுது திடீரென்று வந்த வெள்ளத்தில் அக்கா குருவி அடித்து செல்லப்பட்டதாம். அன்றிலிருந்து அந்த தங்கை குருவி “அக்கக்கா, அக்கக்கா” என்று தன் அக்காவை அழைத்துக் கொண்டே இருக்கிறதாம். வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தன் அக்கா மீண்டும் தன்னிடமே உயிருடன் வந்து விடுவாள் என்று அது நினைத்து அழைத்துக் கொண்டே  இருக்கிறதாம்.  அக்கக்கா அக்கக்கா என்ற  அந்த கூவலை கேட்ட பொழுது இனம் தெரியாத ஒரு உணர்வு மனதை கவ்விக்கொண்டது. ஒரு சோக கீதம் அந்த கூவலில் எதிரொலித்தது. தன் அக்கா மேல் எவ்வளவு ஆசை இருந்திருந்தால் அது எவ்வளவு காலம் விடாமல் தொலைந்த தன் அக்காவை தேடிக்கொண்டிருக்கும்? அன்னக்கிளி படத்தில் வரும் பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வந்தது. ஏனோ என் கண்களில் நீர் கசிந்தது!

”சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்
அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்”


ஆம் அதற்கென்று அழுது புலம்ப யாருமே இருக்கவில்லை. தன் சோகத்தை அதனால் யாரிடமும் பகிர முடியவில்லை. காலை  வேளை ஆதலால் எல்லோரும் அலுவலகத்திற்கும், பிற இடங்களுக்கும் செல்வதில் மும்முரமாக இருந்தார்கள். வாகன சத்தத்திற்கு நடுவே யாருக்கும் அவளின் குரல் கேட்டதாக எனக்கு தெரியவில்லை. அவளுக்கு அவள் அக்காவை தேடிக்கொடுக்க யாரும் முன் வரவில்லை. தத்தமது வேலையை பார்க்க விறுவிறு என்று ஓடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு பாவமாக இருந்தது. தொடர்ந்து கூவியதால் அவளின் குரல் ஒரு கட்டத்தில் கரகரத்தது. ஆனாலும் அவள் தன் கூவலை நிறுத்தியபாடு இல்லை. கூவலுக்கு இடையேயான இடைவெளியை கூட்டினாலே தவிர கூவலை நிறுத்தவில்லை. சற்று நேரம் ஆன பின் மீண்டும் விடாமல் கூவினால். தன் அக்காவை தொலைத்த  இடம் விடுத்து எங்கெங்கோ தேடி அலைகிறாள் அவள் பாவம். கையில் இருந்த  டீயை நான் குடித்து முடித்து இருந்த போதும் கோப்பையை கீழே வைக்க கூட நினையாமல் அந்த கூவலில்  மூழ்கி போயிருந்தேன்.

 ஒரு முப்பது நாற்பது நிமிடங்கள் இருக்கும் அதற்கு பின் அவள் ஓய்ந்துவிட்டாள். ஒருவேளை இவ்விடம் தன் அக்கா இல்லை என்பதை உறுதி படுத்திக்கொண்டு வேறு இடம் பறந்து சென்று விட்டாள் போலும். தன் தேடுதலை அவள் விடப்போவதில்லை என்பது மட்டும் எனக்கு உறுதியாக தெரிந்தது. வாழும் காலத்தில் உறவுகளை உதாசினப்படுத்தி உதறிவிடும் மனிதர்கள் மத்தியில்  காலம் காலமாய் , ஜென்ம ஜென்மமாய் தன் அக்காவை தேடும் அக்காகுருவி எனக்கு அதிசயமாய் தோன்றியது. உண்ணாமல் உறங்காமல் இப்படி ஊர் ஊராக, நாடு நாடாக தேடி அலைகிறாளே இவள்!  என்றாவது ஒருநாள் தன் அக்காவை தேடிக் கண்டு பிடிக்கவேண்டும் என்று என் மனம் வேண்டியது. அன்று முழுதும் அக்கக்கா அக்கக்கா அக்கக்கா என்ற அந்த ஒலி என் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது, மனமும் கனத்துக்கொண்டே இருந்தது........

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நெகிழ்ச்சி...

Zahira Anver said...

அண்ணன் என்னடா
தம்பி எண்ணடா
அவசரமான உலகத்தலே - பாடல் நம்
மனதை ஆற்றிக்கொள்ள உதவிய வரிகள்