Saturday, February 1, 2020

எண்ணங்களை தூய்மை செய்

மனமும் எண்ணமும் இப்படி வெண்மையாகவும், பளீரென்றும் எப்பொழுது தான் மாறுமோ??துணியை வெள்ளாவியில் வைத்து வெளுக்க முடிகிறது! மனதை , எண்ணங்களை எதை கொண்டு வெளுப்பது? கறை படிந்த நினைவுகளை வெளுக்கத்தான் முடியுமா? கார் மேகத்தை வெளுக்க முடியுமா?எண்ணம் பல வண்ணமாய் இருப்பதும் ஓர் அழகு தான். சிகரம் மேல் வெண் பூவாய் பூக்கும் பனியை போல் அப்பழுக்கு இன்றி தூய்மையாய் இருப்பது பேரழகு! புகை சூழ் மனமாய் இருத்தல் மூச்சுத்தினறலே!முயற்சிப்போம் எண்ணங்களை தூய்மை செய்ய!!
“யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தேங்களா
இல்ல வெயிலுக்கு காட்டாம
வளத்தாங்கெளா?
தலகாலு புரியாம
தரமேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே !!
—ஆடுகளம்

நம்பிக்கை

நம்பிக்கை
கோவில் பூசாரி
விரல் கொண்டு
சின்ன நெற்றியில்
அழுத்தி பூசும்
விபூதியின் துகள்கள்,
கண் உள்ளே விழுமோ
என்ற பயத்தில்
இறுக கண் மூடி
மூக்கினை சுழித்து
உதடுகள் திறக்கா வண்ணம்
பற்களை கடித்து,
அசையாமல்
பூசிக்கொள்ளும்
குட்டிச் சிறுவனின்
கடவுள் நம்பிக்கை
அழகானது மட்டுமல்ல
ஆழமானதும்
எந்த எதிர் பார்ப்பும்
இல்லாததும் ஆகும்.....

துளசி செடி

பாட்டி தோட்டத்தில்
துளசி செடி வளர்த்தாள்!
தோட்டத்தை சுற்றி சுற்றி
வந்தாள்
நற்காற்றினை
சுவாசிக்க !
அம்மா தொட்டியில்
வைத்து துளசியை வளர்த்தாள்!
மாடம் ஒன்று கட்டி
அதில் துளசியை
கொலுவேற்றி
தான் வணங்கும்
அம்மனென
சுற்றி வந்தாள்!
என் வீட்டிலோ
துளசி மாடத்தின்
மாதிரி மட்டுமே!
பாட்டி சாணம் தெளித்த
மண் வாசல் முழுதும்
நம் மனம் சிக்கிக்
கொள்ளும் அளவு
சிக்கு கோலம்
போட்டாள்!
அம்மா தன் சின்ன வாசலுக்கு
சிமெண்ட் பூசி
அதில் வண்ண கோலம்
போட்டாள்!
நானோ சின்னஞ்சிறு
டைலில் அடக்கமாய்
ஒரு கோலம் போட்டேன்
அதுவும்
தோன்றும் போது மட்டுமே!!!
மக்கும் மண் அகல் விளக்கும்
இங்கு மக்கா
அலுமினிய மெழுகுதிரியாய்
உறுமாறியதே!
கால ஓட்டத்தில்
எப்படி எல்லாம்
சிக்கி தவிக்கிறோம்!

கூடல்

கூடல்
தன் இருப்பில் பொத்தி
வைத்திருந்த
அத்துனை காதலையும்
மழை காதலன்
பொழிய துவங்கி விட்டான்!
முதலில் ஆசையுடன்
பூமி காதலியை
மெது மெதுவாய்
முத்தமிட்டான்!
அவன் அழுத்தி பதித்த
முத்த சுவடுகள்
மங்கை அந்த மண்ணில்
கண்ணக்குழியாய்
பதிந்து கிடக்க,
அவள் முகம் சிவந்து
காதல் மணம் வீச
அவனுக்கோ மோகம்
தலைக்கேற
கட்டுக்கடங்கா தன்
காதலை மொத்தமாய்
சட சட என பொழிய
அத்துணை காதலையும்
அடைத்து வைக்க
முடியாதவளாய்
வெள்ளமாய்
ஓடவிட்டாள்!
காற்றாட்டு வெள்ளமென
ஓடிய காதல்
பாய்ந்த இடமெல்லாம்
பரவசமாய் ஆக்கி சென்றது....
மழைக் காதலனும்
மண் காதலியும்
கூடும் நேரம்
ஊர் எங்கும்
காதல் மணம் வீசும்....

Rishi and Mom

Rishi and Mom
Almost into his adulthood ,Rishi wanted to change his wardrobe. Wanted to buy a few clothes. Mom offered to go with him for shopping. She has been doing it for her daugther for almost three years now. She started to shop on her own only for the past three years . Though waiting outside the trial room seemed to be a trial mom loves to do it thinking that , her presence makes her daughter happy. She thought the same would be with Rishi .
Rishi: Mama, I need to buy a few clothes since I have outgrown some of them.
Mom: Rishi, I can come with you to shop.
Rishi: I don't mind you coming with me mama. But I have a few things to tell.
1.You can watch me select but cannot influence me.
2.You can suggest but cannot decide for me.
3. Lastly, just pull out your credit card and swipe.
pretty much it. Do you agree?
Mom: So it is just for the swiping you are asking me to join you.
With these terms and conditions verbally signed by mama , Rishi accepted to go with her for shopping.......
Every experience is a new experience......

காத்திருத்தல்

காத்திருத்தல்
ஒரு காலத்தில் காத்துகிடத்தல் அழகாக இருந்தது. விருந்தினரின் வருகை, பள்ளி திறப்பதற்கான காத்திருத்தல்,புது உடை வாங்க காத்திருத்தல், அதை உடுத்திக்கொள்ள காத்திருத்தல், நண்பர்களின் அழைப்பு, வாரம் ஒரு முறை வரும் தொடர் கதைகளுக்கான காத்திருப்பு,தொலைகாட்சியில் வாரம் ஒரு முறை வரும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி, இப்படி காத்திருப்பது என்பது ஒரு வித ஆச்சரியம் , சஸ்பென்ஸ் , ஆசை, எதிர்பார்ப்பு , ஆவல் என்று பலவிதமான உணர்வுகளின் கலவையாக இருந்தது.
இன்றோ எல்லாமே விரல் சொடுக்கும் நேரத்தில் விரல் நுனி கொண்டு நிவர்த்தி செய்யப்படுகிறது. காத்திருத்தலினால் இருக்கும் மதிப்பு போய் இப்பொழுது காத்திருப்பு என்பது ஒரு எரிச்சல் தரக்கூடிய நிகழ்வாகி போனது. Instant food, Instagram, என்று எல்லாமே உடனுக்குடன் நிகழ வேண்டும் என்ற எதிர் பார்ப்பே எல்லோரிடமும்.
பொறுமை ஆக இருந்தால் எருமை மேய்க்க கூட லாயக்கற்றவர்களாக ஆக்கப்பட்டு விடுவோம் போல் இருக்கிறது. குழந்தைகள் ஆசை பட்டதை எப்படியும் செய்ய வேண்டும் என்ற பெயரில் இதை நம் அடுத்த தலைமுறையினருக்கும் கடத்தி விட்டோம். பொறுமை, நிதானம், காத்திருத்தல் எல்லாம் என்ன விலை என்றாகிவிட்டது.....

அந்த ஒரு நிமிடம்

அந்த ஒரு நிமிடம்
காலையில் வீடே நிசப்தம். நான் மட்டும் வழக்கம் போல் கருமமே கண்ணாயினார் என்று எழுந்து விட்டேன். அடுக்களைக்குள் நுழைந்து வழக்கம் போல் வேலையை துவங்கினேன். அப்பொழுது தான் அந்த நிகழ்வு நடந்தது. அந்த ஒரு நிமிடம் என்னுடைய அந்த காலை பொழுதை தலை கீழாக புரட்டிப்போட்டது. என்ன செய்வது என்று ஒரு நிமிடம் தெரியாமல் பதறி போனேன். கை , கால் நடுக்க மெடுக்க ஆரம்பித்து விட்டது. அழுகை அழுகையாக வந்தது. ஆனாலும் அழக்கூடாது . எப்பேர்பட்ட சூழ்நிலையானாலும் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும் என்ற மனதிடத்துடன் செயல் பட துவங்கினேன்.
தூங்கி கொண்டு இருப்பவர்களை எழுப்பி சொல்வதா அல்லது எழுந்து வந்ததும் சொல்லலாமா என்று ஒரு வித தயக்கம். உடனே எழுப்பி சொன்னாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆபீஸ், பள்ளிக்கூடம் என்று அவர்கள் நேரத்திற்கு செல்ல வேண்டும். எது எப்படி ஆனாலும் நானே தான் சமாளித்தாக வேண்டும். ச்ச்ச, இப்படி ஆகிவிட்டதே! அந்த ஒரு நொடி நடவாமல் இருந்திருந்தால் இன்றைய பொழுது எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை. யாரை நொந்து கொள்வது என்று தெரியாமல் என்னை நானே நொந்து கொண்டேன்.
நடந்தது நடந்தாகி விட்டது அடுத்தது என்ன என்று முடிவு செய்து, அடுக்களையின் பின் பக்கம் சென்று அங்கு காய்ந்து கொண்டிருந்த கைப்பிடித் துணியை எடுத்து வந்து நனைத்து பிழிந்து, ரத்தக்களரியாய் காட்சி அளித்த மிக்ஸியை துடைக்க ஆரம்பித்தேன். ஆமாம், காலையில், தக்காளி சட்டினி அரைக்கும் அவசரத்தில் கொள் அளவிற்கு மேல் மிக்ஸி jarல் தக்காளியையும் வெங்காயத்தையும், போதாத குறைக்கு நல்ல காரமான காய்ந்த மிளகாயையும் போட்டு ஒரு சுத்து சுத்தினேன் பாருங்க.....
. என் கட்டுப்பாட்டில் இருந்து மிக்ஸி மூடி திறந்து உள்ளிருந்த கலவை என் அடுக்களை முழுதும் ஆரத்தி கரைத்து ஊற்றியது போல் தெளித்து தள்ளியது. அப்புறம் என்ன என் மிக்ஸி , சுவர், cupboard , அடுக்களை மேடை, தரை, அருகில் இருந்த microwave oven, fridge, என்று சகலமும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு ரணகளமாக ஆகிப்போனது. பட்ட காலிலே படும், சுட்ட இடத்திலேயே சுடும் என்பது போல, இதனை சமாளிக்கும் முன் அடுப்பில் இருந்த பால் பொங்கி அடுப்பு முழுதும் பாலாபிஷேகம் ஆனது. அட ராமா! நல்லா தானே எழுந்து வந்தேன். என்ன ஆச்சு எனக்கு? பரீட்சை மகன் ரிஷிக்கு தானே, நான் ஏன் இப்படி பதற்றமானேன்? அவன் இழுத்து மூடி தூங்கி கொண்டிருக்கிறானே! பரீட்சைக்கு போகுமுன் நேரத்திற்கு சாப்பாடு செய்து முடிக்க வேண்டும் என்ற அவசரமா? அந்த ஒரு நிமிடம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால்? அளவு கம்மியாக மிக்ஸியில் போட்டு இருந்தால், மூடியை அழுத்தி பிடித்திருந்தால், பால் பொங்குவதை பார்த்து இருந்தால், இப்படி பல ”இருந்தால்” மனதில் தோன்றி மறைந்தது.
இப்படித்தான் வாழ்க்கையில் பல நிமிடங்கள் ஏன் நிகழ்ந்தன என்ற எண்ணம் தோன்றுகிறது. அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், இப்படி மட்டும் நான் செய்யாமல் இருந்திருந்தால், அப்படி அவர் சொல்லாமல் இருந்திருந்தால், ..... இப்படி எத்தனையோ நிகழ்வுகளை நாம் மாற்றி அமைக்க கனவு கண்டு கொண்டிருக்கிறோம். மனதிற்கு பிடிக்காத, மனதிற்கு வலியை கொடுக்கக் கூடிய எத்தனை எத்தனையோ நிகழ்வுகளை நம் வாழ்க்கை ஏட்டிலிருந்து கிழித்தெரிய பார்க்கிறோம். அப்படி வாழ்க்கையை திருப்பிப் போடும் சக்தி மட்டும் நமக்கிருந்தால், எந்த ஒரு நிமிடமும் “அந்த ஒரு நிமிடமாய்” தழும்பை விட்டுச்செல்லாது........
இப்படி கலை பொழுது ஒரு யுத்த களமாய் காட்சி அளிக்க , எழுந்து வந்த கணவரிடமும், மகனிடமும் என் “அந்த ஒரு நிமிட” நிகழ்வை வாய் வலிக்க வர்ணித்து முடித்தேன். போகிற போக்கில் கதையை கேட்டு முடித்து விட்டு கணவர்,”Oh, you need to be careful," என்று மட்டும் சொல்லிவிட்டு, எங்கே அங்கேயே நின்று கொண்டிருந்தால் அவர் கையில் பிடிதுணியை கொடுத்து துடைக்க சொல்லிவிடுவேனோ என்று நழுவி விட்டார்.. மகனோ கொஞ்சம் கூட சலனமில்லாமல், ஒரு "Oh ok" என்று சொல்லி விட்டு அவன் வேலையை பார்க்க கிளம்பிவிட்டான். நானோ பிடிதுணியை கசக்கியபடி, அடுத்து என்ன சட்டினி அவசரமாக அரைப்பது என்று யோசித்து கொண்டே தண்ணீரில் கையை கழுவினேன்

பெண்மையை புதைக்காதீர்....

காலை மணி ஒன்பது. சாலையில் ஒரே பரபரப்பு. ஒரு பேருந்து தன் முழு உடம்பையும் வேகமாக திருப்பாமல் மெல்ல மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக தன் உடலை அங்கம் அங்கமாக திருப்பி என்னை கடந்து சென்றது. பேருந்து போக வழி விட்டு விட்டு காத்து இருக்கையில் பேருந்தினுள் அழகாய் ஒரு கவிதை.
ஒரு தந்தை ,பேருந்தின் கடைசி இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் முன்னே உள்ள இருக்கையின் கம்பியை தன் விரல் கொண்டு கவ்வி கொண்டு அமர்ந்திருந்தார். இரண்டு முழம் நீண்டு இருந்த அவர் கையில் தலை வைத்து சாய்ந்தபடி அவரின் மூன்று வயதிருக்கக்கூடிய பெண் குழந்தை அவர் மடியில் அமர்ந்து கொண்டு ஆனந்தமாய் உறங்கி கொண்டு இருந்தது. பேருந்து எப்படி போனால் என்ன, எப்படி வளைந்தால் என்ன ? என் தந்தையின் கை இருக்கிறது பக்க பலமாய் என்னை பாதுகாக்க என்ற நிம்மதியில் அந்த குழந்தை .
குழந்தை எழும் வரை அவர் கையை எடுக்க போவதில்லை அல்லது பேருந்து அவர் இறங்க வேண்டிய இடம் அடையும் வரை அவர் அசையப்போவதில்லை. தந்தையே தாயுமானார். கவிதையாய் தோன்றிய அந்த காட்சி என் மனதில் ஓவியமாய் பதிந்தது.இப்படித் தான் எல்லா குழந்தைகளும் தங்களின் தந்தையின் அரவணைப்பில் இருக்கும் வரை ஆனந்தமாய் உறங்குகிறார்கள்.....
உறக்கத்தை கலைத்து பயத்தை விதைக்காதீர்....உயிருடன் எரிக்காதீர்.....பெண்மையை புதைக்காதீர்....பெண் சுதந்திரத்தை பரிக்காதீர்....

The Scar

The Scar
As we all know about the talk of the town now, there is no need for me to dig into the details . While we all are waiting for the savages to be brutally punished we all are exchanging messages about how women should protect herself when attacked by a mob or when attacked or targetted by a single person. All these tips will definetely help to some extent. But the core problem will never be eradicated .As long as savages exist in this society there will be nonstop butchering of women's body and soul.
Assault on women, sexual harassment on women has been known since this world was created. Back then it was claimed as something done to the weaker sex. But we no longer have the title of weaker sex. Women are being empowered in various walks of life. Be it education, employment, research, sports or any field, they are trying their best to be on par with the men. I accept that women empowerment is happening world wide. Does that mean women are safe? Does being independent financially give her the safety?
Financial independence doesn't guarantee any safety for women. She can be better than any men around her in any field. But , She is always a target wherever she is. In educational institutions, work place, public place, home front, army, anywhere for that matter. She is struggling her best to break the norms and prove herself to be brave and strong. But does the society leave her to live peacefully? Talking about Women liberaism, Feminism, gender equality , etc etc are all happening as a movement. But the sexual assault on women doesnt seem to come down. It is increasing day by day , thereby creating an unsafe environment for women to move around.
There is not a single woman, right from childhood to adulthood who can say that they dont have a deep scar within them . Each one is either verbally, physically, emotionally, abused somewhere in their lifespan. The look, the words, the actions, the comments, the messages, the moves, anything would have left a scar in her soul if not in her body. She carries that scar till her death. Who is to be held responsible for this? Admiring and appreciating beauty is different from invading and abusing beauty. we all say that we live in a civilized society, educated society, refined society. But how can a society be named as civilized when there is no safety for women? Women dont ask for security. They plead for safety. It is their birth right. Leave her ALONE . Don't scar her body or soul. She can create a paradise out of this rotten world.

எலி பந்தயம்

எலி பந்தயம்
புது வருடம் பிறந்தாகிவிட்டது. மனதில் புத்துணர்ச்சி புரண்டோடுகிறது. நம்பிக்கையை தும்பிக்கையாய் பிடித்தாகிவிட்டது. இவ்வளவு வருடங்கள் ஓடி ஓடி என்ன கண்டோம் என்று சற்றே இளைபார மனம் முடிவு செய்து விட்டது. இனி செய்யும் யாவற்றிலும் ஒரு அமைதியை, நிதானத்தை கையாளவேண்டும் என்ற ஒரு தீர்க்கமான , தற்சமயத்திற்கான ஓர் முடிவு எடுத்து ஒரு பத்து நாள் உருண்டோடி விட்டது. ஊரிலிருந்து வந்து மெதுவாய் அன்றாட வாழ்வில் மீண்டும் பொருந்தியாகிவிட்டது என்று நினைக்கும் நேரத்தில் மனக்குரங்கு மீண்டும் மரத்தின் மேல் ஏறிவிட்டது.
என்ன நல்லா இருக்கீங்களா? என்று யாரை கேட்டாலும், யாவரும்,”எங்க பொங்கல் வேல ஆரம்பிச்சாச்சு. அத கழுவி, இத தொடச்சு, ஒட்டட அடிச்சு, பெயிண்ட் அடிச்சு, அப்பப்பா வேல ஓயவே மாட்டேங்குது. வேளைக்கு வேற யாரும் இப்பல்லாம் வரவே மாட்டேங்கறாங்க. எல்லாம் சுத்தம் பண்ணி முடிச்சு ராத்திரி படுத்தா கை கால் எல்லாம் வலியா வலிக்குது,”என்ற புலம்பல் எல்லா பக்கங்களிலிருந்தும் ஒலிக்கிறது. ஆஹா நாம் மட்டும் இப்படி ஒன்னுமே சுத்தம் செய்யாம இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு தொத்திக்கொள்ள எட்டாத திரைச்சீலையை வெளவெளலாய் தவ்வி பிடித்து கழட்டி என் பங்கிற்கு துவைத்தாகிவிட்டது. அதை திரும்பி மாட்டி விட மகனின் உதவியை நாட வேண்டிய கட்டாயம்.
வாழ்க்கையில் முதல் முதலாக திரைச்சீலையை மாட்டிய மகன்,” அம்மா இது ரொம்ப வலிக்குது,” என்றான். ”பொங்கலுக்கு எதுக்கு மா இதெல்லாம் சுத்தம் செய்யனும்,”என்றும் சலித்துக்கொண்டான். இன்னும் சில மாதங்களில் கல்லூரிக்கு போகப்போகும் அவனின் அறையை கற்பனையில் பார்த்தேன். மனதில் பகீர் என்று ஓர் நெருடல்!
புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்ள கூடாது என்ற முடிவுடன் யார் எதை சுத்தம் செய்தால் என்ன என்னால் இவ்வளவு தான் முடியும் என்ற முடிவுடன் சுத்தம் செய்வதற்கு முற்றி புள்ளி வைக்கலாம் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். அடுத்த அரை மணி நேரத்தில் எழுபது வயது அம்மா தொலைபேசியில் கூறினாள்,”இன்னையிலேந்து அடுப்படி சுத்தம் செய்யனுமா பொங்கலுக்கு.”
சாயங்காலம் வாசல் கதவை திறந்து வெளியே போகலாம் என்று கிளம்பிய போது பக்கத்து வீட்டு சீனப் பெண்மணி அவளின் செருப்பு வைக்கும் cupboardடை ,”சீனப் புத்தாண்டு வருகிறது. வீட்டை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும். அதான் தொடங்கி விட்டேன்,”என்றாள் சற்றே சலித்துக் கொண்டு.
ஆஹா நாம வேண்டாம் என்றாலும் இந்த எலி பந்தயத்தில் நம்மை ஓட விடாமல் இந்த உலகம் விடாது போல இருக்கிறதே. கங்கணம் கட்டி எல்லாரும் இப்படி பழி வாங்குகிறார்களே. நாம் சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால் நாம் என்னவோ குப்பைக்கு நடுவே வசிப்பது போல் உணர்வை அல்லவா ஏற்படுத்தி விடுகிறார்கள். நாம் மிகுந்த சோம்பேரியாய் இருப்பது போன்ற உணர்வு மேலிட, அமைதியாய் இருந்த மனதில் குற்ற உணர்வை தூண்டில் போட்டு பிடித்து வேடிக்கை பார்க்க எத்தனிக்கிறார்கள். படிப்பதில் துவங்கி, வேலை, சம்பாத்தியம், நடை , உடை, பாவனை, என்று எங்கெல்லாமோ இருக்கும் இந்த எலி பந்தயம் வீட்டை சுத்தம் செய்வதில் கூட நம்மை விட்டு வைக்கவில்லையே என்று நானும் சலித்துக் கொண்டு ஒட்டடை அடிக்கும் குச்சியை தேட ஆரம்பித்தேன்.

நீங்கா நினைவுகள்.....

நீங்கா நினைவுகள்.....
பால் நல்லா பொங்குச்சா?
பொங்கல் கூவியாச்சா?
மாடெல்லாம் தண்ணி காம்பிச்சு கூட்டி வந்தாச்சா?
வாசல் கூட்டி, மொழுகியாச்சா?
கோலம் போட்டாச்சா?
இப்படி பல கேள்விகளின் ஒலி....
வண்ணம் பூசிய கொம்புகள் கொண்ட மாடுகள்....
காகித மாலை அணிந்த மாடுகள்......
குட்டி கூடையுடன் அத்தைகள், சித்தப்பாக்களுடன் புல் அருக்க சென்று , அருக்க தெரியாமல் எல்லோர் கூடையிலும் இருந்து ஒரு பிடி எடுத்து என் கூடையில் போட்டு என்னை மகிழ்வித்த நாட்கள்....
செங்கல் மாவு கொண்டு, காவி கொண்டு வாசல் நிறைய சிக்கு கோலம் போட்ட அத்தைகளின் கை வண்ணத்தை கண்டு வாய் பிளந்த நாட்கள்........
கள்ளி வட்டம் என்றால் என்ன என்று தெரியாமல் ”உன் மூஞ்சியில் கள்ளி வட்டம் போட” என்ற சொற்றொடரை ஊருக்கு போகும் போது கேட்ட போது, மாட்டு பொங்கல் அன்று சாணியை வட்டமாக வைத்து நடுவில் கள்ளியை ஒடித்து வைப்பது தான் கள்ளி வட்டம் என்று அறிந்து கொண்ட நாட்கள்.....
உலக்கை ஒன்று வாசலில் கிடக்க குளித்து விட்டு வரும் மாடுகள் அதனை தாண்ட வேண்டும் என்ற பட படக்கும் எதிர் பார்ப்புடன் வேடிக்கை பார்த்த நாட்கள்......
தெருவில் இருந்த அத்துணை வீட்டிற்கும் ஒரு தட்டையும் குச்சியையும் எடுத்துக் கொண்டு ”பொங்கல் கூவ” என்று எல்லோருடனும் ஓடிய நாட்கள்....
“தட்ட நெளிச்சு கொண்டுட்டு வந்திராத” என்று அப்பாயி சத்தம் போட்ட நாட்கள்.......
இருட்டான மாட்டு கொட்டகையில் சித்தப்பா சாம்பிராணி போட்டு, மாடுகளுக்கு சூடம் காட்டி, பொங்கல் கூவிய நாட்கள்...
பயந்து கொண்டும், கொஞ்சம் அசிங்கப்பட்டு கொண்டும் மாட்டு காலில் விழுந்து கும்பிட்ட நாட்கள்......
சொந்தங்கள் யார் வந்தாலும் அள்ள அள்ள குறையாத , மீன், கறி, கோழி என்று வித விதமாய் சாப்பாடு பரிமாறப் பட்ட நாட்கள்......
கன்னுக்குட்டிக்கு பொட்டு வைத்து, மாலை போட்டு கொஞ்சிய நாட்கள்.....
வீட்டு வாசலில் கோடு வெட்டி மாட்டுக்கு பொங்கல் வைத்த நாட்கள்.... விறகை எரிக்க தெரியாமல் தினற யாராவது வந்து ஊதி உதவ, கண்ணை கசக்கிக் கொண்டே பொங்கல் வைத்த நாட்கள்.....
தாத்தாக்கள், சித்தப்பாக்கள் ”பொங்க காசு” என்று ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுத்த நாட்கள்.....
வடையும், பணியாரமும் வயிறு முட்ட எல்லோர் வீட்டிலும் ருசி பார்த்த நாட்கள்....
கரும்பை கடித்து போகும் வழியெல்லாம் சக்கையை துப்பிக் கொண்டே போன நாட்கள்...
வடைக்கும் , பணியாரத்திற்கும் சித்திக்கள் மாவு அரைக்கும் பொழுது நானும் ஆட்டு கல்லை சுத்துகிறேன் என்று நாலு சுத்து சுத்திவிட்டு விளையாட ஓடிய நாட்கள்.....
மறுநாள்,கானும்பொங்கல் அன்று கோவிலுக்கு போன நாட்கள்......
கோவிலில் ராட்டிணம் ஆடிய நாட்கள்....ராட்டிணம் சுற்றும் அந்த பையனை ஸ்பெஷலாக எனக்காக மட்டும் வேகமாக சுத்த சொல்லி சித்தப்பாக்கள் மிரட்டிய நாட்கள்..
மாவிளக்குக்கு நடுவில் திரிபோட்டு விளக்கு எறிய, அதன் அருகில் வெல்லம், பலாப்பழம், தேங்காய் கலந்த கலவை இருந்த நாட்கள்......
கோவில் கடையில் மிட்டாய் கைகடிகாரம் கட்டிக் கொண்டு, கடை கடையாய் சுற்றி , விசிலும், வளையலும் வாங்கிய நாட்கள்....
இனிப்பு சேவு வாங்கி ருசித்த நாட்கள்.....
கோவில் நாடகம் பார்க்க வண்டியில் ஏறிக்கொண்டு அத்தைகளுடனும், சித்தப்பாக்களுடனும் போன நாட்கள்...
நாடகம் ஆரம்பிக்கும் முன்னறே தூங்கி போன நாட்கள்.....
பொங்கல் முடிந்து மீண்டும் ஊருக்கு சோகமான முகத்துடன் கிளம்பிய நாட்கள்....
இத்துனையும் நினைவுகளில் மட்டும் தங்கி கிடந்து ஒவ்வொரு வருடமும் பொங்கல் வரும் பொழுது மனதில் சந்தோஷத்தையும், ஏக்கத்தையும், கலந்து ஒரு வித கலவையான உணர்வை தவறாமல் தந்து கொண்டே இருக்கிறது......
இவ்வளவு சந்தோஷங்களிலும் ஒன்றாய் கூடி மகிழ்ந்த உறவுகளில், மறைந்த சொந்தங்கள் சில, மறந்த சொந்தங்கள் சில, விலகிய சொந்தங்கள் சில , விலக்கப்பட்ட சொந்தங்கள் சில....காலம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. புதிதாய் சொந்தங்களும் பிறக்கத்தான் செய்கிறது. வருவது வரட்டும், போவது போகட்டும் என்று இருந்தாலும் இந்த நினைவுகள் மட்டும் நீங்காமலே உயிருடன் கலந்து விட்டது...... அடுத்த வருட பொங்கல் வரை இந்த நினைவுகள் உறங்கும்... மீண்டும் எழும்......

ஒரே சாரம் !!

ஒரே சாரம் !!
தோழி சுஜாவுடன் ஆன ஒரு காரசார உரையாடலில் சிலைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது நான் ஒரு குறிப்பிட்ட கலை நுணுக்கத்தை கூறி ,உடனே “ எனக்கு அந்த மாதிரி கண்கள் இருந்தால் பிடிக்கவே பிடிக்காது “, என்று கடினமாக கூறினேன். அதற்கு அவள் நிதானமாக” ஆமாம் எனக்கும் அந்த மாதிரி கண்கள் இருக்கும் சிலைகளை ரசிக்க தோனாது”, என்று அழகாக கவிதையாய் கூறினாள்.
ஒரு நிமிடம் நாங்கள் பேசி வந்த சாரத்தை விட்டு விலகி அவளின் வார்த்தைகளை யோசிக்க ஆரம்பித்தேன். இரண்டு பேருக்குமே ஒரு விஷயம் பிடிக்கவில்லை . ஆனால் அவள் அதையே எவ்வளவு அழகாக வெளிப்படுத்தினாள்! நான் எப்படி கடினமாக என் நிலையை வெளிப்படுத்தினேன்! எந்த ஒரு விஷயத்தையும் நாம் ரசிக்கும் போது எப்படி எல்லாம் சிரத்தை எடுத்து அதனை மெருகூட்டி நம் ரசனையை வெளிப்படுத்துகிறோமோ அதே சிரத்தையை உபயோகப்படுத்தி நமக்கு பிடிக்காத , உடன் பாடு இல்லாத விஷயத்தை கூட அழகாக இல்லாவிட்டாலும் அசிங்கமாக , பிறர் மனம் நோகாமல் அழுத்தமாக ஆணித்தரமாக வெளிப்படுத்தலாம் அல்லவா? மாற்றம் என்பது நாம் மனது வைத்து ஏற்படுத்திக் கொள்வது தானே ?
சாரம் ஒன்று தான் ! விகிதாசாரம் தான் வெவ்வேறாகி போனது!

KD (எ) கருப்புதுரை

KD (எ) கருப்புதுரை
வாழ்க்கையில் சில விஷயங்கள் பிடித்துப்போக காரணம் அது நம் மனதுக்கு இனிதாக அமைவதாலும், மனதிற்கு ஒரு வித அமைதியான மகிழ்வை தருவதாலும் ஏற்படுகிறது. KD (எ) கருப்புதுரை படம் எனக்கு பிடித்துப் போக காரணமும் அதுவே. இளமையான கதாநாயகனோ, அல்லது அழகான கதாநாயகியோ அல்லது கண் கவரும் நடனக் காட்சிகளோ, சில பல முடிச்சுக்களுடன், திருப்பங்களுடன் கூடிய கதையோ ஏதும் இல்லை. ஆனாலும் படம் பிடித்துப் போனது. நண்பர்கள் சிலரின் பரிந்துரைத்த படியால் படம் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு படம் பிடித்துப்போன காரணங்களை பட்டியல் இட்டு எனக்கு நானே பார்த்தேன்.
1. பச்சை பசேல் என்ற வயல் பகுதி.
2. கிராம சூழ்நிலை.
3. வயதான கருப்புத்துரை அவரின் நடிப்பு. இறந்து போன என் தாத்தாவை எங்கேயோ நியாபகப்படுத்தினார்.
4. சிறுவன் குட்டியாக நடித்து இருக்கும் சுட்டிப் பயல் நாகவிஷால்.
5. தாத்தாவிற்கும் சிறுவனுக்கும் இருக்கும் அழகான எதிர் பார்ப்பில்லா உறவு.
6. வயதான பின் பார்த்துக்கொள்ளும் காதலர்களிடையே இருக்கும் பாசம், நேசம். காதலின் பரினாம வளர்ச்சி.
7.அழகிய அந்த ஓடைகளும், ஆறுகளும்.
8. இந்த உலகில் பாசம் வைக்க வயது ஒரு தடை இல்லை என்ற கோட்பாடு.
9. எல்லா சொந்தங்களும் பந்தங்களும் வெறுத்தாலும் யாரும் இந்த உலகில் தனியாக விடப்படுவதில்லை என்ற நிலை.
10. அடுத்தவர் மீது அக்கறை உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை.
11. சாக்குத் துணி கொண்டு கட்டப்பட்டு இருக்கும் அந்த கூடார வீடு. சிறு வயதில் மழைகாலத்தில் குடைகள் கொண்டும், போர்வை கொண்டும் இது போல் கூடாரம் அமைத்து விளையாடிய நினைவுகள் வந்து போனது.மகிழ்ச்சியாக வாழ மாட மாளிகை வேண்டாம். சிறு கூடாரத்திலும் மகிழ்ச்சி உலாவரும். பாசம் வைக்க, நேசம் வைக்க துணை ஒன்று இருந்தால்.
12. ரம்மியமான இசை.
13. தாத்தாவின் bucket list ...என்னுடைய bucket list என்ன என்று நினைத்து பார்க்க வைத்தது. ஓடிக் கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில் நம் ஆசைகளை நினைத்துப் பார்க்க கூட நேரம் கிடைப்பதில்லை நமக்கு.
14. தாத்தா , சிறுவன் இடையே நடக்கும் உரையாடல், விளையாட்டுகள், நக்கல், கேலி. இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் தாத்தா பாட்டியிடம் பேசுவதே அரிதாகி போய் விட்டது. அவரவர் பிள்ளை வளர்ப்பையே சுமையாக கருதும் இக்காலகட்டத்தில் பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவோ, விளையாடவோ இனிவரும் சந்ததியருக்கு தோன்றுமா என்பதே கேள்விக்குறி. எல்லோரும் My time, My space என்பதை நோக்கி போய்கொண்டிருக்கிறோம்.
15.எல்லாவற்றையும் விட பிரியாணியின் வாசம் திரையை தாண்டி மூக்கை துளைத்தது. இந்தியாவின் தேசிய உணவு பிரியாணி தான். இதில் சந்தேகமே வேண்டாம்.
வாழ்தல் என்பது முக்கியம். ஆனால் அனுபவித்து வாழ்தல் என்பது அதைவிட முக்கியம். சிறு சிறு சந்தோஷங்களே வாழ்க்கையின் சுவாரசியமும் ஆணிவேரும் ஆகும். அனுபவித்து பார்க்க வேண்டிய படம்.

நிசப்தம்!!

நிசப்தம்!!
நான் வேண்டி விரும்பி
கேட்ட நிசப்தம்
இதோ என்னைச் சுற்றி இருக்கிறது.
நான் ஏங்கிய அந்த நிசப்தம்
சில நாட்கள் எனக்கு
பிடிக்காமல் போகிறது.
இந்நாள் அந்நாட்களில் அடங்கும்!
ஆம், எனக்கு இந்த நிசப்தம்
வெறுப்பை அளிக்கிறது.
எனக்குள் கேட்கும் சப்தத்தை தவிர
வேறு சப்தங்கள் ,ஒலிகள்
கேட்க வேண்டும் போல் உள்ளது.
அந்த எரிச்சலூட்டும் சப்தங்களை
எனக்குள் கேட்க வைக்கும்
என் மூளையின் மின் இனைப்புகளை
கத்தரித்துவிட வேண்டும் போல் உள்ளது.
என்னைச் சுற்றி கேட்கும் சப்தம்
எனக்குள் கேட்கும் இரைச்சலை
ஆதிக்கம் செய்ய வேண்டும்.
நூறு மடங்கு அதிகமாக கேட்க வேண்டும்.
எனக்குள் கேட்கும் சப்தம் என்னை
மிரளச் செய்கிறது.
சாலையின் நடுவில் நின்று கொண்டு
அந்த வாகனங்களின் இடைவிடாத
ஒலியை கேட்க தூண்டுகிறது.
இந்த நிசப்தம் எனக்குள் கேட்கும்
இரைச்சலை நுட்பமாக கேட்க வைக்கிறது.
அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
என் இருப்பு மீதே எனக்கு சந்தேகம் வரச்செய்கிறது.
அறுவை சிகிச்சை அறைக்கு
வெளியே நிலவும் நிசப்தமும்,
பரீட்சை முடிவிற்கு முன் நிலவும் நிசப்தமும்
ஒரு வித நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
என்னை சுற்றி இருக்கும் இந்த நிசப்தம்
எனக்குள் ஒருவித பயத்தை உருவாக்குகிறது.
கடவுளுக்கு முன் அவன் பாதங்களையும், முகத்தையும் பார்த்துக்கொண்டு
நிற்கும் போது சூழும்
நிசப்தம் நம்பிக்கை ஊட்டுவதாகவும்
பாதுகாப்பளிப்பதாகவும் தோன்றுகிறது.
ஊடலுக்கு பின் சுற்றும்
நிசப்தம் போன்றது இல்லை இது.
ஊடலுக்குப் பின் ஒரு தென்றலின் மெல்லிசை
கண்டிப்பாக கேட்கும்.
இந்த நிசப்தம் எனக்குள் ஒலிக்கும்
சப்தங்களை கேட்க என்னை வற்புறுத்துகிறது.
என் தூக்கத்தை களவாண்ட
இந்த நிசப்தத்தை நான் வெறுக்கின்றேன்.
என்னை வெளியில் அமைதியானவளாகவும்
எனக்குள் ஓர் ஆழிப்பேரலையை உண்டாக்கும்
இந்த நிசப்ததை நான் அடியோடு வெறுக்கிறேன்!

Silence

Silence
The silence which I prayed for
is here around me.
Somedays I hate the same silence
which I longed for .
This is one of those days.
Yes I hate this silence around me.
I wish to here noise and sound
other than that I hear within me.
I want to cut the wires in my brain
to stop them from making those
annoying sounds.
I want the sound around me to
overpower the noise within me.
I dread this silence around me.
It makes me to run into the middle of the road
And just stand and listen to the noises
those running cars and buses make
without any break.
This silence makes me
listen to my inner voice beyond tolerance.
This silence creates a doubt about my existence.
The silence outside an operation theatre
the silence before an exam result
holds a ray of hope.
This silence around me creates a fear within me.
This silence isn't like the one I experience
while I stand before the God staring at his face and feet.
There is some consolation and reassurance there.
This is not like the silence after a fight with your loved one.
For it is sure after that there will be music around.
This silence forces me to hear to the voices within me.
Yes I hate this silence .
which has stolen my sleep.
Yes I hate this silence
which is making me more silent outside
and creating a tsunami inside .

Sunday, January 26, 2020

Girl talk




Image result for drawing of two girls talking over the phone.
Girl talk
நேற்று அடித்த வெயிலுக்கு தலை வலி வந்தது தான் மிச்சம். தொலைப் பேசியில் அழைத்த தோழி சுஜாவிடம் என் ஒற்றை தலைவலியை பற்றி புலம்பி தள்ளிவிட்டு அப்படியே பேச்சை தொடர்ந்தோம். குளிர் காலம் முடிந்து முதல் வெயிலில் வெளியில் போனதால் தான் தலைவலி வந்தது என்று அவள் ஆராய்ந்து கூறினாள். சுஜா எது சொன்னாலும் அது சரியாகவே இருக்கும். கணவர் சொல்வதை கூட சில நேரங்களில் கேட்காமல் இருப்பேன் ஆனால் சுஜா சொன்னால் அது சுந்தரேசுவரர் வாக்கு. தட்டவே தட்ட மாட்டேன்.
தலை வலி தலைப்பிலிருந்து அப்படியே , முதல் வெயில், முதல் பூ, முதல் பனி, என்று சகல விதமான ”முதல் ”களையும் முத்து முத்தாய் கோர்த்து பார்த்துவிட்டு வாழ்க்கையின் பின் நோக்கி பயனித்தோம். எப்படி நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்கில் காலையில் எழுந்தவுடனே தொலைபேசியில் பேசினோம் என்று நினைத்து பார்த்தோம். என்ன பேசினோம் என்று நினைத்தால் ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை. எல்லாமே sweet nothings் தான். ஒரு முறை cross talkல் ஒரு காதல் ஜோடி பேசுவதை கேட்க நேர்ந்தது. அந்த பெண் “என் தோழிகள் உங்க பேர கேட்டாங்க. நான் எப்படி சொன்னேன் தெரியுமா?” என்று ஒரு வித வெக்கத்துடன் கேட்க, அதற்கு அந்த ஆண், “ என்ன சொன்ன என்ன சொன்ன?” என்று ஆண்களுக்கே உரித்தான அவசரத்துடன் வினவினான். அதற்கு அவள்,” நான் சொன்னேன்,,அவர் பேர் ABCD ல வர்ற K வும் 1 2 3 ல வர்ற sevenம் சேர்ந்தது என்றேன்,” என்று கூறினாள். நான் இடையில் புகுந்து”ஆஹா அவர் பேர் கேசவனா?” என்று கேட்டுவிட்டேன். உடனே இரண்டு பேரும் சுதாரித்துக் கொண்டு,”அச்சோ யாரோ ஒட்டு கேக்கறாங்க வச்சுடுவோம்.”என்று அலறி அடித்துக் கொண்டு போனை வைத்து விட்டார்கள். Cross talk கேட்பதும், ஊடே நாம் பேசுவதும் ஜாலியாக இருக்கும்.
காதல் ஜோடியை பற்றிய செய்தி ஞாபகத்திற்கு வந்ததும், எப்படி கடைக்கு போய் வித விதமாக greeting card வாங்கி சேகரிப்போம் என்பதை பற்றி பேசினோம். பின்னர், பொங்கல், தீபாவளி என்றால் எவ்வளவு அழகழகான வாழ்த்து அட்டைகள் கிடைக்கும் என்று நினைத்துப் பார்த்தோம். இப்பொழுது Whatsappல் வரும் வாழ்த்துச் செய்திகளையும் கொஞ்சம் திட்டி தீர்த்தோம். திடீரென்று பாடல்களை பற்றி அலச ஆரம்பித்தோம்.சித் ஸ்ரீராமின், “வேறெதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும்” பாடல் வரிகளை சேர்ந்தே ரசித்தோம்.
ஒரு காலத்தில் பாட்டு புத்தகம் வாங்கி பாடல்களை மனப்பாடம் செய்தது நினைவிற்கு வந்தது. அப்பொழுது எல்லாம் அப்பா கூறுவார்,”இந்த பாழாப்போன பாட்டு புக்க வாங்கி மனப்பாடம் பன்றதுக்கு பாட புத்தகத்தில இருக்கற பாடத்த மனப்பாடம் செஞ்சாலாவது உருப்பட வழி இருக்கு.ரேடியோக்குள்ள காத வச்சு கேட்டு ஒன்னுத்துக்கும் உருப்பட போவதில்ல,” என்று திட்டுவார். என்ன திட்டினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு தான். இப்பொழுது இருக்கும் என் பிள்ளைகள் காதில் எந்நேரமும் ஒரு வண்டை மாட்டிக்கொண்டு அலைவதை பார்க்கும் பொழுதெல்லாம் என் அப்பாவிற்கு கோபம் ஜிவ்வ்வ்வ் என்று தலைக்கேறும் . ஆனால் “எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன ”என்று கோவத்தை அடக்கிக் கொண்டு போய்விடுகிறார்.
பாட்டு பற்றிய தலைப்பு முடிந்ததும் யாராவது தலையை உருட்டும் நேரம் வந்தது. மூன்று தலைமுறை பின்னோக்கி நீளம் தாண்டி சுஜாவின் கொள்ளு பாட்டி , தாத்தாவின் தலைகளை கொஞ்சம் உருட்டி விளையாடினோம். அந்த கால கதைகள் சுவையாகத்தான் இருந்திருக்கின்றது. பழங்கதைகள் கூறினால் இக்கால குழந்தைகள், soooo boring” என்று கூறுவது போல் இல்லை. சுவாரசியமான கதையாக இருந்தது. கொள்ளு பாட்டி கதையில் இருந்து தாவி குதித்து நயந்தாராவின் அழகு எப்படி மெருகு ஏறிக்கொண்டே போகிறது என்று நயந்தாராவின் தலையை உருட்டி விட்டு. கொஞ்சமாக சோர்ந்து போனோம்.
அதிலிருந்து எப்படி நாங்கள் அரை சதம் அடிக்க போகும் நாள் நெருங்குகிறது , அதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் என்ன என்ன மாற்றங்கள் உணர முடிகிறது என்று அங்குமிங்குமாய் சின்ன சின்ன அலசல்கள் செய்தோம். என்ன தான் வயதென்பது ஒரு எண் என்று சொல்லிக்கொண்டாலும், வயதாவதை பற்றி நினைக்கையில் கொஞ்சம் சோர்வாகத் தான் போய்விடுகிறது. இன்னும் இருக்கும் கடமைகளும், பொறுப்புக்களும் கண் முன்னே நர்தனம் ஆட ஆரம்பிக்கிறது.
சாப்பாட்டு நேரம் வந்து விட்டது. வாயும் வலித்தது, பசியில் வயிறும் வலித்தது. இன்றைக்கு இது போதும் என்று முடிவு செய்து, சாப்பிட்டு விட்டு ஒரு face pack போட்டுக்கொண்டு நயந்தாரா அளவிற்கு அழகாக முடியாவிட்டாலும், ஒரு நாக்காயி, மூக்காயி அளவிற்காவது அழகாக முயற்சிப்போம் என்று, சாவும் தருவாயில் இருந்த தொலைபேசியை உயிர்ப்பிக்க அதில் wire சொருகி விட்டு chargeல் போட்டுவிட்டு அவரவர் வேலையை தொடர ஆரம்பித்தோம். ......வாயாலயே பயணம் செய்த களைப்பு மிகுதியாகிய படியால் கண்களை உறக்கம் கவ்விக்கொண்டது.கச்சேரி நாளை தொடரும்......
பிகு” நான் Girl talk என்று ஏதோ எழுதுவதை பார்த்த ரிஷி, தமிழ் படிக்க தெரியாததால் நான் என்ன எழுதுகிறேன் என்று தெரியாமல் அது என்ன என்று கேட்டான். நானும் பதிலுக்கு ”நானும் சுஜா auntyம் நேற்று பேசியதை சும்மா எழுதுகிறேன் என்றேன். அதற்கு அவன், ”ஓ இன்றைக்கு உனக்கு சுஜா aunty தான் மாட்டினாங்களா mince செய்ய ?” என்று கேட்டு விட்டு ”அப்பாடா நான் தப்பிச்சேன்” என்று கூறி விட்டு நகர்ந்து விட்டான்.......பய புள்ள இப்போ எல்லாம் சுதாரிச்சுருச்சு. வயசு ஆகுதில்ல.........