எலி பந்தயம்
புது வருடம் பிறந்தாகிவிட்டது. மனதில் புத்துணர்ச்சி புரண்டோடுகிறது. நம்பிக்கையை தும்பிக்கையாய் பிடித்தாகிவிட்டது. இவ்வளவு வருடங்கள் ஓடி ஓடி என்ன கண்டோம் என்று சற்றே இளைபார மனம் முடிவு செய்து விட்டது. இனி செய்யும் யாவற்றிலும் ஒரு அமைதியை, நிதானத்தை கையாளவேண்டும் என்ற ஒரு தீர்க்கமான , தற்சமயத்திற்கான ஓர் முடிவு எடுத்து ஒரு பத்து நாள் உருண்டோடி விட்டது. ஊரிலிருந்து வந்து மெதுவாய் அன்றாட வாழ்வில் மீண்டும் பொருந்தியாகிவிட்டது என்று நினைக்கும் நேரத்தில் மனக்குரங்கு மீண்டும் மரத்தின் மேல் ஏறிவிட்டது.
என்ன நல்லா இருக்கீங்களா? என்று யாரை கேட்டாலும், யாவரும்,”எங்க பொங்கல் வேல ஆரம்பிச்சாச்சு. அத கழுவி, இத தொடச்சு, ஒட்டட அடிச்சு, பெயிண்ட் அடிச்சு, அப்பப்பா வேல ஓயவே மாட்டேங்குது. வேளைக்கு வேற யாரும் இப்பல்லாம் வரவே மாட்டேங்கறாங்க. எல்லாம் சுத்தம் பண்ணி முடிச்சு ராத்திரி படுத்தா கை கால் எல்லாம் வலியா வலிக்குது,”என்ற புலம்பல் எல்லா பக்கங்களிலிருந்தும் ஒலிக்கிறது. ஆஹா நாம் மட்டும் இப்படி ஒன்னுமே சுத்தம் செய்யாம இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு தொத்திக்கொள்ள எட்டாத திரைச்சீலையை வெளவெளலாய் தவ்வி பிடித்து கழட்டி என் பங்கிற்கு துவைத்தாகிவிட்டது. அதை திரும்பி மாட்டி விட மகனின் உதவியை நாட வேண்டிய கட்டாயம்.
வாழ்க்கையில் முதல் முதலாக திரைச்சீலையை மாட்டிய மகன்,” அம்மா இது ரொம்ப வலிக்குது,” என்றான். ”பொங்கலுக்கு எதுக்கு மா இதெல்லாம் சுத்தம் செய்யனும்,”என்றும் சலித்துக்கொண்டான். இன்னும் சில மாதங்களில் கல்லூரிக்கு போகப்போகும் அவனின் அறையை கற்பனையில் பார்த்தேன். மனதில் பகீர் என்று ஓர் நெருடல்!
புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்ள கூடாது என்ற முடிவுடன் யார் எதை சுத்தம் செய்தால் என்ன என்னால் இவ்வளவு தான் முடியும் என்ற முடிவுடன் சுத்தம் செய்வதற்கு முற்றி புள்ளி வைக்கலாம் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். அடுத்த அரை மணி நேரத்தில் எழுபது வயது அம்மா தொலைபேசியில் கூறினாள்,”இன்னையிலேந்து அடுப்படி சுத்தம் செய்யனுமா பொங்கலுக்கு.”
சாயங்காலம் வாசல் கதவை திறந்து வெளியே போகலாம் என்று கிளம்பிய போது பக்கத்து வீட்டு சீனப் பெண்மணி அவளின் செருப்பு வைக்கும் cupboardடை ,”சீனப் புத்தாண்டு வருகிறது. வீட்டை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும். அதான் தொடங்கி விட்டேன்,”என்றாள் சற்றே சலித்துக் கொண்டு.
சாயங்காலம் வாசல் கதவை திறந்து வெளியே போகலாம் என்று கிளம்பிய போது பக்கத்து வீட்டு சீனப் பெண்மணி அவளின் செருப்பு வைக்கும் cupboardடை ,”சீனப் புத்தாண்டு வருகிறது. வீட்டை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும். அதான் தொடங்கி விட்டேன்,”என்றாள் சற்றே சலித்துக் கொண்டு.
ஆஹா நாம வேண்டாம் என்றாலும் இந்த எலி பந்தயத்தில் நம்மை ஓட விடாமல் இந்த உலகம் விடாது போல இருக்கிறதே. கங்கணம் கட்டி எல்லாரும் இப்படி பழி வாங்குகிறார்களே. நாம் சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால் நாம் என்னவோ குப்பைக்கு நடுவே வசிப்பது போல் உணர்வை அல்லவா ஏற்படுத்தி விடுகிறார்கள். நாம் மிகுந்த சோம்பேரியாய் இருப்பது போன்ற உணர்வு மேலிட, அமைதியாய் இருந்த மனதில் குற்ற உணர்வை தூண்டில் போட்டு பிடித்து வேடிக்கை பார்க்க எத்தனிக்கிறார்கள். படிப்பதில் துவங்கி, வேலை, சம்பாத்தியம், நடை , உடை, பாவனை, என்று எங்கெல்லாமோ இருக்கும் இந்த எலி பந்தயம் வீட்டை சுத்தம் செய்வதில் கூட நம்மை விட்டு வைக்கவில்லையே என்று நானும் சலித்துக் கொண்டு ஒட்டடை அடிக்கும் குச்சியை தேட ஆரம்பித்தேன்.
No comments:
Post a Comment