Saturday, February 1, 2020

நீங்கா நினைவுகள்.....

நீங்கா நினைவுகள்.....
பால் நல்லா பொங்குச்சா?
பொங்கல் கூவியாச்சா?
மாடெல்லாம் தண்ணி காம்பிச்சு கூட்டி வந்தாச்சா?
வாசல் கூட்டி, மொழுகியாச்சா?
கோலம் போட்டாச்சா?
இப்படி பல கேள்விகளின் ஒலி....
வண்ணம் பூசிய கொம்புகள் கொண்ட மாடுகள்....
காகித மாலை அணிந்த மாடுகள்......
குட்டி கூடையுடன் அத்தைகள், சித்தப்பாக்களுடன் புல் அருக்க சென்று , அருக்க தெரியாமல் எல்லோர் கூடையிலும் இருந்து ஒரு பிடி எடுத்து என் கூடையில் போட்டு என்னை மகிழ்வித்த நாட்கள்....
செங்கல் மாவு கொண்டு, காவி கொண்டு வாசல் நிறைய சிக்கு கோலம் போட்ட அத்தைகளின் கை வண்ணத்தை கண்டு வாய் பிளந்த நாட்கள்........
கள்ளி வட்டம் என்றால் என்ன என்று தெரியாமல் ”உன் மூஞ்சியில் கள்ளி வட்டம் போட” என்ற சொற்றொடரை ஊருக்கு போகும் போது கேட்ட போது, மாட்டு பொங்கல் அன்று சாணியை வட்டமாக வைத்து நடுவில் கள்ளியை ஒடித்து வைப்பது தான் கள்ளி வட்டம் என்று அறிந்து கொண்ட நாட்கள்.....
உலக்கை ஒன்று வாசலில் கிடக்க குளித்து விட்டு வரும் மாடுகள் அதனை தாண்ட வேண்டும் என்ற பட படக்கும் எதிர் பார்ப்புடன் வேடிக்கை பார்த்த நாட்கள்......
தெருவில் இருந்த அத்துணை வீட்டிற்கும் ஒரு தட்டையும் குச்சியையும் எடுத்துக் கொண்டு ”பொங்கல் கூவ” என்று எல்லோருடனும் ஓடிய நாட்கள்....
“தட்ட நெளிச்சு கொண்டுட்டு வந்திராத” என்று அப்பாயி சத்தம் போட்ட நாட்கள்.......
இருட்டான மாட்டு கொட்டகையில் சித்தப்பா சாம்பிராணி போட்டு, மாடுகளுக்கு சூடம் காட்டி, பொங்கல் கூவிய நாட்கள்...
பயந்து கொண்டும், கொஞ்சம் அசிங்கப்பட்டு கொண்டும் மாட்டு காலில் விழுந்து கும்பிட்ட நாட்கள்......
சொந்தங்கள் யார் வந்தாலும் அள்ள அள்ள குறையாத , மீன், கறி, கோழி என்று வித விதமாய் சாப்பாடு பரிமாறப் பட்ட நாட்கள்......
கன்னுக்குட்டிக்கு பொட்டு வைத்து, மாலை போட்டு கொஞ்சிய நாட்கள்.....
வீட்டு வாசலில் கோடு வெட்டி மாட்டுக்கு பொங்கல் வைத்த நாட்கள்.... விறகை எரிக்க தெரியாமல் தினற யாராவது வந்து ஊதி உதவ, கண்ணை கசக்கிக் கொண்டே பொங்கல் வைத்த நாட்கள்.....
தாத்தாக்கள், சித்தப்பாக்கள் ”பொங்க காசு” என்று ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுத்த நாட்கள்.....
வடையும், பணியாரமும் வயிறு முட்ட எல்லோர் வீட்டிலும் ருசி பார்த்த நாட்கள்....
கரும்பை கடித்து போகும் வழியெல்லாம் சக்கையை துப்பிக் கொண்டே போன நாட்கள்...
வடைக்கும் , பணியாரத்திற்கும் சித்திக்கள் மாவு அரைக்கும் பொழுது நானும் ஆட்டு கல்லை சுத்துகிறேன் என்று நாலு சுத்து சுத்திவிட்டு விளையாட ஓடிய நாட்கள்.....
மறுநாள்,கானும்பொங்கல் அன்று கோவிலுக்கு போன நாட்கள்......
கோவிலில் ராட்டிணம் ஆடிய நாட்கள்....ராட்டிணம் சுற்றும் அந்த பையனை ஸ்பெஷலாக எனக்காக மட்டும் வேகமாக சுத்த சொல்லி சித்தப்பாக்கள் மிரட்டிய நாட்கள்..
மாவிளக்குக்கு நடுவில் திரிபோட்டு விளக்கு எறிய, அதன் அருகில் வெல்லம், பலாப்பழம், தேங்காய் கலந்த கலவை இருந்த நாட்கள்......
கோவில் கடையில் மிட்டாய் கைகடிகாரம் கட்டிக் கொண்டு, கடை கடையாய் சுற்றி , விசிலும், வளையலும் வாங்கிய நாட்கள்....
இனிப்பு சேவு வாங்கி ருசித்த நாட்கள்.....
கோவில் நாடகம் பார்க்க வண்டியில் ஏறிக்கொண்டு அத்தைகளுடனும், சித்தப்பாக்களுடனும் போன நாட்கள்...
நாடகம் ஆரம்பிக்கும் முன்னறே தூங்கி போன நாட்கள்.....
பொங்கல் முடிந்து மீண்டும் ஊருக்கு சோகமான முகத்துடன் கிளம்பிய நாட்கள்....
இத்துனையும் நினைவுகளில் மட்டும் தங்கி கிடந்து ஒவ்வொரு வருடமும் பொங்கல் வரும் பொழுது மனதில் சந்தோஷத்தையும், ஏக்கத்தையும், கலந்து ஒரு வித கலவையான உணர்வை தவறாமல் தந்து கொண்டே இருக்கிறது......
இவ்வளவு சந்தோஷங்களிலும் ஒன்றாய் கூடி மகிழ்ந்த உறவுகளில், மறைந்த சொந்தங்கள் சில, மறந்த சொந்தங்கள் சில, விலகிய சொந்தங்கள் சில , விலக்கப்பட்ட சொந்தங்கள் சில....காலம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. புதிதாய் சொந்தங்களும் பிறக்கத்தான் செய்கிறது. வருவது வரட்டும், போவது போகட்டும் என்று இருந்தாலும் இந்த நினைவுகள் மட்டும் நீங்காமலே உயிருடன் கலந்து விட்டது...... அடுத்த வருட பொங்கல் வரை இந்த நினைவுகள் உறங்கும்... மீண்டும் எழும்......

No comments: