Friday, February 4, 2011

காங்ஸி க்ஃபாசாய்

காங்ஸி ஃபாசாய்!!!! என்னடா இரண்டு மாதங்களாய் தலைமறைவாய் இருந்து விட்டு இப்படி ஏதோ மறை கழண்றது போன்று உளறுகிறாள் என்று என் இனிய நண்பர்கள் பலர் கேள்விக் குறியோடு பார்ப்பது எனக்கு தெரிகிறது.   இன்று சீனப்புத்தாண்டு.  நான் சீன மொழியில் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினேன்.  நாண்கு வருடங்களாக சிங்கப்பூரில் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்ட சீன மொழி வார்த்தைகள்.

ஊரே திருவிழா கோலம் தான்.  புலி வருடத்திற்கு விடை கொடுத்து முயல் வருடத்தை வரவேற்கும் நிகழ்ச்சிகள் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.  முயல் வருடம் நல்ல பல பலன்களை கொண்டு வருகிறதாம். சீனாவில் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு மிருகத்தின் பெயர் சூட்டப்படுகிறது.  மொத்தம் பன்னிரெண்டு மிருகங்களின் பெயர்கள் சுழற்சி முறையில் வருகிறது.  அவை முறையே, எலி, எருது, புலி, முயல், ட்ராகன், பாம்பு,குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி ஆகும். நான் நாய் வருடத்தில் பிறந்தவள்.  அதற்கு என் கணவர் “அதனால் தான் நீ நாய் மாதிரி குரைக்கிறாய்” என்று கூறுவார்.  எப்படியோ குரைக்கிற நாய் கடிக்காது!!


சிகப்புத்தான் சீனர்களுக்கு மிகவுப் பிடித்த நிறம்.  அது வளத்தை, பலத்தை குறிக்கும் நிறமாம்.  அலங்கார தோரணங்கள் யாவும் சிகப்பு நிறத்திலேயே விற்கப்படுகின்றன.  வண்ண வண்ண விளக்குகள், தோரணங்கள், என எங்கு பார்த்தாலும் சிகப்பு நிறம் தான். என் குழந்தைகளின் பள்ளியில் சீன புத்தாண்டை கொண்டாடுவதற்காக மாணவர்களை சிகப்பு , வெள்ளை நிறத்தில் ஆடை உடுத்தி வர கூறி இருந்தார்கள்.  என் மகனும் சிகப்பு சட்டையும், வெள்ளை நிற காற்சட்டையும் அணிந்து சென்றான்.  ஆனால் என்ன மாலை வீடு திரும்பிய பொழுது வெள்ளை காற்சட்டை காவி நிறத்தில் இருந்தது.  நான் தான் வீட்டில் ஒரு ஆள் இருக்கிறேனே --சம்பளம் இல்லா சலவைத்தொழிலாளி!!


  இந்த வருடம் புத்தாண்டு வார இறுதியில் வருவதால் தொடர்ந்து நாண்கு நாட்கள் விடுமுறை வேறு.  எல்லோரும் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார்கள். எனக்குத்தான் எப்படி நாண்கு நாட்கள் பிள்ளைகளை வீட்டில் சமாளிப்பது என்று கண்ணை கட்டுகிறது.  அடுப்படியே திருப்பதி எனக்கு...... சீனர்கள் புத்தாண்டின் போது ரீ--யூனியன் டின்னர் என்று குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள்.  பல வகையான உணவுகளை சமைத்து உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து உண்கிறார்கள். சிலர் உணவகங்களுக்கு சென்று குடும்பத்துடன் உணவு உண்கிறார்கள்.  உணவகங்கள் எல்லாம் "fully booked". சீனாவில் எட்டு என்றால் ராசியான எண். நமக்குத்தான் எட்டு என்றால் குட்டிச்சுவர் என்று அர்த்தம்.  ஒரு ரெஸ்ராண்டில் ஒரு ரீ-யூனியன் டின்னரின் விலை 8888 சிங்கப்பூர் டாலர்.  இந்திய ரூபாயின் மதிப்புப்படி இது எவ்வளவு என்றெல்லாம் என்னால் ரூபாயில் பெருக்கி சொல்ல முடியாது.  ஏன் என்றால் நான் கணக்குல எலி. உண்மையை ஒத்துக்கொள்ளவும் மனதில் உரம் வேண்டும் இல்லையா?? சரி நீங்களாவது கூட்டி பெருக்கி கண்டு பிடித்து விட்டீர்களா??  தலை சுற்றுகிறதா?? நாம் தீபாவளிக்கு செய்வது போன்று பல வகையான பலகாரங்கள் கடைகளில் விற்கப்படுகிறது.  நம் ஊரிலும் இப்பொழுது யார் வீட்டில் பலகாரங்கள் செய்கிறார்கள்?  எல்லோரும்  கடைகளில் தான் தீபாவளிக்கு வாங்குகிறார்கள் என்று கேள்வி.  நான் மட்டும் இன்று வரையில் எனக்கு தெரிந்த ஒரு நாலு பலகாரத்தை வீட்டிலேயே செய்து என் குடும்பத்தினரையும் , நண்பர்களையும் கொடுமை படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன், விடாது கறுப்பு மாதிரி.


சீன புத்தாண்டின் போது வயதான உறவினர்களை அவர்கள் வீடுகளுக்கு சென்று நலம் விசாரிக்கின்றனர் இளைஞர்களும் , யுவதிகளும்.  அப்படி செல்லும் பொழுது தங்களின் வருங்கால துணையையும் அவர்களுக்கு அறிமுகம் செய்யும் பழக்கம் இருக்கிறதாம்.  அப்படி இல்லாதவர்கள்  நம் தமிழ் படங்களில் வருவதைப்போன்று “வாடகை காதலிகளை” அறிமுகப்படுத்துகிறார்கள்.   இதற்கு ஏஜெண்டுகளும் இப்பொழுது உண்டு.  இதுதான் கலிகாலமோ?? 


வயதானவர்கள் கூட புத்தாண்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.  வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது.  இந்த இரண்டு நாட்களுக்கு கடைகள் யாவற்றிற்கும் விடுமுறை. புத்தாண்டு சிறப்புத்தள்ளுபடியில் நணைந்த மக்களுக்கு ஒரு பிரேக். 


 நாம் பொங்களுக்கு வீடுகளை ஒட்டடை அடித்து சுத்தம் செய்து, பழயன களைந்து, பெயிண்ட் அடித்து புது பொளிவு கொடுப்பது போன்று அவர்களும் “’ஸ்ப்ரிங் க்ளீனிங்” என்று வீடு முதல் கார் வரை சுத்தம் செய்கிறார்கள்.  வசதியை பொறுத்து  சோபா, திரைச்சீலைகளை மாற்றுகிறார்கள்.  அழகான அலங்காரங்கள் வரும் விருந்தினரை வரவேற்கிறது.  வீடு முழுதும் புத்தொளி பெறுகிறது.  உறவினர் வீடுகளுக்கு வாழ்த்துக்கள் சொல்ல போகும் பொழுது  ஹாங் பா , அதாவது ஒரு சிறு சிகப்பு கவரில்  பண அன்பளிப்பும் , இரண்டு ஆரஞ்சு பழங்களும் எடுத்துச் செல்வது வழக்கம்.  வசதிக்கேற்ப வேறு பல  அன்பளிப்புக்களும் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.  உறவினர்களுக்கும், வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும், தேடித்தேடி பிடித்தமான அன்பளிப்புகளை ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே வாங்க தொடங்கி விடுகிறார்கள். இது கிருஸ்மஸ் பண்டிகையின் பொழுது நடக்கும் அன்பளிப்பை போன்று இருக்கும்.  அன்பளிப்பு கொடுப்பதும் சுகம், வாங்கிக்கொள்வதும் சுகம்தானே??--அதன் மதிப்பை எவ்வளவுக்கு பணம் என்று மதிப்பிட்டுப் பார்க்காதவரை.   புத்தாண்டு கொண்டாட்டங்களில் தங்களை மறந்து வித விதமான உணவுகளை உண்டு உடல் நலத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நாளிதழ்களில் முன்கூட்டியே கவணத்திற்கு கொண்டு வருகிறார்கள்.  நம்முடைய தீபாவளி லேகியம் பற்றி  அவர்களுக்கு தெரியாது போலும்!!  சரி இதுவரை சீனப்புத்தாண்டு பற்றி எனக்குத் தெரிந்த சில பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.  இனி முயல் வருடத்தின் பலன்களை மேலோட்டமாக பார்க்கலாமா?? அவர்களுடைய ஜோசியத்திற்கு பெயர் “ஃபெங் சுயி”.  அதன் படி முயல் வருடம்,

நம்பிக்கையான வருடம்.
குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்
எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல முடிவு உண்டு என்ற நிலை ஏற்படும்.
கலை தொழில் மேன்படும்.
பேச்சு வார்த்தையின் மூலம் பல நன்மைகள் உண்டாகும்.
மொத்தத்தில் கரடு முரடான 2010 போன்று இன்றி இந்த வருடம் அமைதியாக நகரக்கூடும்.

எது எப்படியோ, என்னை பொறுத்த வரை “நன்மையும் , தீமையும் பிறர் தர வாரா”.  நாம் செய்யும்  செயல்களே நமக்கு நடக்கும் நன்மைக்கும், தீமைக்கும் விதைவிதைக்கும்.  எனவே மனிதருள் மாணிக்கமாக நாம் இருக்க வேண்டாம், மனிதராக இருக்க முயல்வோம் என்று கூறி மீண்டும் ஒரு முறை “காங்ஸி ஃபாசாய்” என்று கூறி விடை பெறுகிறேன் வணக்கம்.