Monday, August 30, 2010

பசி பலவிதம்

     காலை 6.30.  ட்ரிங்,ட்ரிங் என்று அலாரம் அடித்தது.  தலையில் ஒரு தட்டு தட்டி அதனை அமைதி படுத்திவிட்டு சில நிமிடங்கள் படுக்கையில் கிடந்தேன்.  அடித்து எழுப்பிய அலார கடிகாரத்தின் மேல் கோபம் கோபமாக வந்தது.  இது ஏன் தான் இப்படி சரியான நேரத்திற்கு வேலை பார்க்கிறதோ என்ற கோபம்.  பின் திறக்க மறுத்த விழிகளை கசக்கியபடி எழுந்து உட்கார்ந்தேன்.  கைகளை விரித்து பார்த்து “கடவுளே இன்று நாள் நன்றாக இருக்கட்டும்.  எல்லோரையும் நன்றாக வை”  என்று வாய்க்குள் முனுமுனுத்தபடி கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டு எழுந்தேன்.  சோம்பலாக இருந்தாலும் கடமை உணர்வுடன் என் போர்வையை மடித்து வைத்துவிட்டு பல்துலக்கச் சென்றேன்.

     பல் துலக்கி, முகம் கழுவி நான் திருப்பதியாம் என் அடுப்பறையில் நுழைந்தபொழுது மணி 6.45.  காலை டிபன் என்ன, மதியம் யாவருக்கும் லஞ்ச் பாக்ஸ் என்ன என்று யோசித்து ஒரு வழியாக சமையலை தொடங்கினேன்.  காலையில் வெங்காயம் நறுக்கி சமையல் செய்வது போன்ற கொடுமை வேறெதுவும் இல்லை.  கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி அரிந்து முடித்தேன்.  வாணலியை அடுப்பில் ஏற்றியபொழுது மணி ஏழு.  ஆஹா பிள்ளைகளை எழுப்ப வேண்டிய நேரம் ஆகிவிட்டதே என்று அடுப்பை சிம்மரில் வைத்துவிட்டு அவர்களை எழுப்பச் சென்றேன்.  “குட்டீஸ் மணி ஏழு இன்னும் ஐந்து நிமிடங்களில் எழுந்து விடுங்கள்,” என்று கூறிவிட்டு ஏசியை ஆணைத்துவிட்டு என் வேலையை தொடர சென்றேன்.


      பாதி சமையலில் திரும்பவும் அவர்கள் அறைக்குச் சென்று,”மணி 7.15 ஆகிவிட்டது.  பள்ளிக்கு கிளம்ப நேரமாகிவிடும்.  எழுந்து கிளம்புங்கள்”, என்று மீண்டும் சேவலைப் போல் கொக்கரித்துவிட்டு அடுக்களைக்குள் சென்றேன்.  ஒரு வழியாக 7.20க்கு குழந்தைகள் இருவரும் எழுந்து,  பல் துலக்கி பின் காலை கடன்களை முடித்து பள்ளிக்கு தயாரானார்கள்.  7.50க்கு சாப்பாட்டு மேசையில் இருவருக்கும் இரண்டு துண்டு ரொட்டியை தட்டில் வைத்து சாப்பிடுங்கள் என்று கூறினேன்.  எட்டு மணிக்கு என் பன்னிரண்டு வயது மகள் சாப்பிட்டு முடித்தாள்.  என் எட்டு வயது மகனோ,”அம்மா, ஏன் இவ்வளவு காலை உணவு தருகிறீர்கள்? இப்பொழுதுதானே பால் குடித்தேன்.  அதற்கு மேல் இரண்டு பிரட் சிலைஸ் வேறா? நான் எப்படி சாப்பிடுவேன்? பிரட்டில் அந்த ஓரங்களை நறுக்கி விட்டுத்தாருங்கள்.  I don't like to eat the crust." என்று வியாக்கானம் பேசிமுடித்தான்.  அவனை சாப்பிட வைப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.  என் தந்தை கூறுவது என் நினைவிற்கு வந்தது.  “அவனவன் நொய்க்கு அழுகிறான் நீங்கள் நெய்க்கு அழுகிறீர்கள்,” என்பார். 


     இரண்டு மணி நேரம் பம்பரமாக சுற்றி வேலைபார்த்ததால் எனக்கு சிறிது ஓய்வு தேவைபட்டது.  என் அறையில் “மெயில் செக்” செய்யலாம் என்று சன்னலோரமாக அமர்ந்தேன்.  மழை வருவது போல் இருந்ததால் சிறிது நேரம் அந்த மேகக்கூட்டங்களை பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தேன்.  அப்பொழுது நாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கார் நிருத்தும் இடம் அருகில் ஒரு 43 வயது மதிக்கத்தக்க ஒரு இந்திய ஆடவர் நின்று கொண்டிருந்தார்.  அவர் தோளில் ஒரு கருப்பு நிற “பேக் பேக்” தொங்கி கொண்டிருந்தது.  எண்ணெய் என்ன என்பதை பார்த்திராத அவர் தலை முடி வரண்டு காணப்பட்டது.  கரும் பச்சை நிறத்தில் சீருடை அணிந்திருந்தார்.  அவருடைய கருத்த தேகத்தை அது மேலும் கருமையாக்கி காட்டியது.  அந்த சீருடையை அவர் துவைத்து பல நாட்கள் ஆகியிருக்கும் போல் இருந்தது. தோட்ட வேலை செய்வதற்காக வந்திருக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.  ஏன் அங்கு நின்று கொண்டு அங்குமிங்குமாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை.  சுற்றி முற்றி பார்த்த அவர் யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு அவசர அவசரமாக சில அடிகள் எடுத்து வைத்தார்.


    அவர் சென்ற திசையில் என் கண்கள் சென்றது.  அங்கு புல்லில் சில ஊதுபத்திகள் கொளுத்தி வைக்கப்பட்டிருந்தது.  அதன் அருகில் இரண்டு ஆரஞ்சு பழங்களும் ஒரு ரொட்டி பாக்கெட்டும் இருந்தது.  புல்லின் மேல் திறந்தபடி கேக் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தது.  அவையாவும் பேய்களுக்காக சீனர்களால் படைக்கப்பட்ட உணவு.  ஆகஸ்ட் மாதம் பேய்கள் மாதம் என்று அவர்கள் கொண்டாடுவார்கள்.  உயிரோடு இருக்கும் பொழுது செய்கிறார்களோ இல்லையோ இறந்த பின் ஆவியாய் சுற்றும் ஆவிகளுக்கு பலவகையான உணவுகளை வைத்து படைப்பார்கள்.  பேய்கள் அந்த உணவை சாப்பிடும் என்பது அவர்களின் ஐதீகம்.  பேய்களை அப்படி குஷிபடுத்துகிறார்களாம்.  சிலர் பொய்யான காகித காசுகளை எரிப்பார்கள்.  அவை பேய்களை சென்று அடையுமாம்.  அதை வைத்து எந்த கடையில் என்ன வாங்கும் பேய்கள் என்பதனை யான் அறியேன் பராபரமே.  நான் கடவுளை தவிர யாரையும் நம்புவது கிடையாது.  காசென்றால் பேயும் பிணமும் வாய் பிளக்கும் என்பதை இதை வைத்துத்தான் கூறினார்களோ?  நம் ஊரில் வருடத்திற்கு ஒரு முறை இறந்தவர்களுக்கு ஆடி அமாவாசையில் நமக்கு பிடித்தவிற்றை சமைத்து வைத்து படைத்து பின் நாமே ஒரு கட்டு கட்டுவது வழக்கம். 

     சுற்றிலும் நோட்டமிட்ட அந்த ஆடவர் சில நொடிகள் படைக்கப்பட்ட அந்த உணவின் அருகில் நின்றார்.  நம் ஊரில் இப்படி பட்ட இடங்களை மிதிப்பதற்கோ தொடுவதற்கோ கூட பயப்படுவார்கள். எங்கே பேய்கள் நம்மை பிடித்துக் கொள்ளுமோ என்ற பயம்.   பின் மீண்டும் ஒரு முறை யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு அங்கிருந்த ரொட்டி பாக்கெட்டை கடகடவென எடுத்து தன் பேக்பேக்கில் வைத்து திணித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.  சில அடிகள் நடந்த அவருக்கு என்ன தோன்றியதோ மீண்டும் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு அந்த இடத்திற்கு மீண்டும்  சென்றார்.  ஒரு வேலை பேய்களுக்கான உணவு என்று நினைத்து எடுத்த ரொட்டியை வைத்து விட போகிறார் என்று காத்திருந்தேன்.  அங்கு சென்ற அவர் ஒரு நொடியில் அங்கு இருந்த இரு ஆரஞ்சு பழங்களையும் எடுத்து வேகமாக பையில் வைத்து திணித்தார்.  அங்கிருந்த கேக் துண்டுகள் புல்லின் மேல் இருந்தபடியால் விட்டுச்சென்றார்.  பின் யாரும் தன்னை பார்க்கவில்லை என்ற நிம்மதி ஒரு புறம் , சரி இன்றைக்கு நமக்கு ஒரு வேலை உணவு கிடைத்துவிட்டது. அந்த காசு மிச்சம் என்ற நிம்மதி ஒரு புறம் என்று ஒரு பெருமூச்சுடன்  தன்  வேலையை தொடங்க நடக்கலானார்.  அவருக்கு கடைசி வரை நான் பார்த்துக் கொண்டிருந்தது தெரியாது.


    உணவின்றி உடையின்றி இவர்கள் படும் பாடு மனதை கனக்கச்செய்தது.  பசி பத்தும் அறியாது.  பேய் உணவானால் என்ன பசிக்கு பேதமில்லை.  இப்படியெல்லாம் வெளிநாடுகளில் வந்து கஷ்டப்பட்டு தன் குடும்பத்தை காப்பாற்ற இவர்கள் படும் பாடு இவர்களின் குடும்பத்தாருக்கு எங்கே தெரியப்போகிறது. ஊருக்கு செல்லும் பொழுது கசங்காத துணிகளை அணிந்து செல்லும் இவர்கள் இங்கு கசங்கிய துணியாய் வாழ்க்கையில் போராடுவது மனதை நெருடுகிறது.  அவரை அழைத்து ஒரு வேலை உணவாவது கொடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து உடை மாற்றி  வாசலுக்கு சென்று பார்த்த பொழுது அவர் எங்கோ சென்று மறைந்திருந்தார்.  அவர் விட்டுச்சென்ற கேக் துண்டுகள், எரிந்து முடிந்த ஊதுபத்தி குச்சிகள் எல்லாம்  எடுத்து குப்பையில் போட்டபடி போய்க்கொண்டிருந்தார் மற்றொரு சீனத் தொழிலாளி.  கனத்த மனத்துடன் மீண்டும் என் வேலையை தொடர நான் வீட்டிற்குள் சென்றேன்.  ஜாம், வெண்ணெய் தடவிய பிரட்டை சாப்பிட பிடிக்காமல் சலித்துக்கொண்டு பள்ளிக்குச் சென்ற மகன் கண் முன் தோன்றினான்.  வரட்டு ரொட்டிகளை திருப்தியுடன் சாப்பிடப்போகும் அந்த ஆடவரும் கண் முன் தோன்றினார். “I don't like to eat the crust" என்று என் மகன் கூறியது மீண்டும் என் காதுகளில் ஒலித்தது.  மனதின் ஒரு ஓரத்தில் ஏனென்று தெரியாத ஒரு குற்ற உணர்வு தலை தூக்கியது.  ஆம் பசி பலவிதம் தான்.

Tuesday, August 24, 2010

பாகம் 3---வாங்கி வந்த வரம்

      பொழுது விடிந்தது.  பசி என்பது என்ன என்று நாங்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.  ஒன்பது மணி இருக்கும்.  குழந்தை நல மருத்துவர் வந்தார்.  அவரிடம் என்னால் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை.  இரத்த பரிசோதனை செய்து பார்த்துவிட்டுத்தான் எதுவாக இருந்தாலும் கூற இயலும் என்று கூறிவிட்டுச் சென்றார்.  இரத்த பரிசோதனை முடிவு மூன்று நாட்கள் கழித்துத்தான் தெரியும் என்றும் கூறினார்.  ஆயிரம் கடப்பாறைகளை கொண்டு என் தலையை தாக்குவது போல் இருந்தது.  என் மகனின் பிஞ்சு கைகளில் இருந்து இரத்தம் எடுக்க ஒரு நர்ஸ் வந்தார். அவர் வைத்திருந்த ஊசி என் மகனின் கை அளவு இருந்தது. 


மூன்று நாட்கள் என்ன என்று தெரியாமலேயே கழிந்தது.  மருத்துவர் வந்து பார்ப்பதும் போவதுமாக இருந்தது.  அன்று காலை வந்த மருத்துவர் இரத்த பரிசோதனை முடிவு வந்துவிட்டதாக கூறினார்.  கடவுளே ஒன்றும் இல்லை என்று கூறவேண்டும் என்று எல்லா கடவுள்களையும் மத வேறுபாடு இன்றி மனதுக்குள் மன்றாடினேன்.  ஆனால் மருத்துவரோ இரத்தத்தில் கிருமி இருப்பதாகவும் அதற்காக பதினைந்து நாட்களுக்கு நரம்பில் ஊசி போடவேண்டும் என்றும் கூறினார்.  இதை மட்டும் கூறியிருந்தால் கூட நான் ஓரளவிற்கு சமாதானம் ஆகியிருப்பேன்.  அதன் பின் அவர் கூறிய வார்த்தைகள் என் நெஞ்சை பிழிந்தது.  குழந்தையின் முதுகுத்தண்டில் இருந்து நீர் எடுத்து கிருமி மூளையை தாக்கி இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.  இதை கேட்ட என் மனம் சுக்கு நூறாகியது.  ஆனால் கண்ணீர் மட்டும் இம்முறை என் கண்களில் இருந்து வழியவில்லை.  நான் தான் ஜடமாகிவிட்டேனே!  கல்லாகி விட்டேனே. பின் எங்கிருந்து என் உணர்ச்சிகள் வெளியேறும்?  அன்று மதியம் வந்த நர்ஸ் முதுகுத்தண்டில் நீர் எடுக்க என் ஆசை மகனின் முகம்  அவன் பாதம் தொடுமாறு வளைத்து வைத்து ஓர் ஊசியை குத்தி நீர் எடுத்தார்.  பாவம் என் ராஜா வலி பொறுக்க மாட்டாமல் வீல் என்று கத்தினான்.  தொடர்ந்து கத்தக்கூட அவனிடம் தெம்பில்லை.  அந்த கொடூர காட்சியை பார்க்க என்னிடம் தைரியம் இருக்கவில்லை.  இம்முறை பரிசோதனை முடிவிற்காக இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.  மீண்டும் யாவரும் மெளன விருதம்.  இரண்டு நாட்கள் கழித்து வந்த முடிவில் மூளைக்கு செல்லும் இரத்தத்தில் கிருமி இல்லை என்ற நற்செய்தியை கூறினார்கள்.  இரண்டு வாரங்கள் நரம்பு ஊசி போட்டால் முற்றிலும் குணம் அடைந்து விடுவான் என்று கூறினார் மருத்துவர்.  இதை கேட்ட உடனேயே எல்லா தெய்வங்களுக்கும் என் நன்றியை மனதுக்குள் கூறினேன்.  பல நாட்களுக்கு பிறகு பசி என்ற உண்ர்ச்சியை உணர்ந்தேன். 

     வெண்டைக்காய் அளவில் இருந்த அவனின் கைகளிலும் கால்களிலும் நரம்பு கண்டு பிடித்து மருந்தை ஏற்றுவதற்குள் போதும் போதும் என்றானது.  பார்க்கவே பயமாக இருந்தது.  உடம்பெங்கும் ப்ளாஸ்திரியும் ,டியூபுமாக கோழிக்குஞ்சை போல் படுத்திருந்தான்.  கை கால்களை அவனால் அசைக்க முடியாமல் அவ்வப்பொழுது சினுங்கினான்.  கடவுள் சோதித்தாலும் கைவிட மாட்டார் என்ற என் நம்பிக்கை வீண்போகவில்லை.  என் தந்தையின் நெருங்கிய நண்பரின் மகள் வேலூரில் இருந்தார்.  அவர் எங்களுக்கு பேருதவியாக இருந்தார்.  தினமும் எங்களுக்கு உணவு சமைத்து எடுத்து வருவார் அந்த சுட்டெரிக்கும் வெய்யிலில்.  குழந்தைக்கும் எனக்கும் வேண்டியதை வாங்கி வந்து கொடுப்பார்.  கடவுள் நேராக வர இயலாவிட்டால் யார் மூலமாவது வருவாராம்.  அவர்களை நான் அப்படித்தான் பார்த்தேன்.  இரண்டு வாரங்கள் பின் குழந்த நன்றாக இருப்பதாகவும் நாங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றும் மருத்துவர் கூறினார்.  இனி பயப்படும்படி ஏதும் இல்லை என்றார்.  அன்றுதான் என் உதட்டோரத்தில் ஓர் சிறிய புன்னகை மலர்ந்தது.   ஆனாலும் என் மூளைக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என் மகனின் உடல் நிலையைப்பற்றி. மருத்துவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு தஞ்சையை நோக்கி புறப்பட்டோம். 


     தஞ்சையில் வீட்டை அடைந்ததும் தான் எனக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.  மருத்துவரின் அறிவுரைப்படி யாரையும் குழந்தையை பார்க்க நாங்கள் அனுமதிக்கவில்லை.  இடையை அதிகரிக்க செய்வதே என் தலையாய கடமை என்று மருத்துவர் கூறியிருந்ததால் இரவு பகல் பாராது பால் ஊட்ட காத்திருப்பேன்.  அவனுக்கு செலுத்தப்பட்ட மருந்து கொஞ்சமா நஞ்சமா?  எனவே அவன் தூங்கி கொண்டே இருந்தான்.  எழுப்பி எழுப்பி பால் அருந்த செய்வேன்.  குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்று பல உறவினர்களுக்கு கோபம்.  சிலருக்கு குழந்தை எப்படி இருக்கிறதோ என்ற சந்தேகம்.  நான் எதையும் பொருட்படுத்தாமல் என் குழந்தை உடனேயே என் நேரத்தை கழித்தேன்.  இப்பொழுது மூன்று மாதங்கள் பறந்தோடி விட்டது.  பகலில் தூக்கம் இரவினில் ஆட்டம் என்று அவனுடன் ஒட்டிக்கொண்டே இருக்கிறேன்.  முகம் பார்க்கிறானா?  சிரிக்கின்றானா?  நகர்கின்றானா? என்ற கேள்விக் கணைகள் நாலாபுரமிருந்தும்.  ஏற்கனவே சந்தேகத்தில் இருக்கும் எனக்கு தூபம் போடுவது போல் இந்த கேள்விக் கணைகள் தாக்கும்.  இங்கிதம் தெரியாத சிலர் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி சென்றார்கள்.   மருத்துவரை கேட்ட பொழுது பொருமை மிக அவசியம்.  மற்ற குழந்தைகள் போல் அல்ல குறை பிரசவ குழந்தைகள்.   அவை எல்லாவற்றையுமே காலம் தாழ்த்தித் தான் செய்யும்.  யார் சொல்வதையும் கேட்காதீர்கள் என்றார்.  ஆனாலும் தாய் மனசல்லவா?? என் குழந்தை எப்பொழுது என் முகம் பார்த்து “அம்மா” என்று அறிந்து என்னை அழைப்பான் என்று என் மனம் ஏங்குகின்றது.  காத்திருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் அத்திரு நாளுக்காக......        

Monday, August 23, 2010

பாகம் 2--வாங்கி வந்த வரம்

     ஐந்தாம் நாள் வந்தது.  ”இன்று நீ அந்த ஆஸ்பத்திரிக்குச் சென்று குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு வரலாம்” என்று என் தந்தை கூறினார்.  முதன் முதலில் என் குழந்தையை பார்க்க போகும் மகிழ்ச்சியில் எனக்கு பசியே எடுக்கவில்லை.  மனம் பட்டாம் பூச்சியென படபடத்தது.  நான் இருந்த ஆஸ்பத்திரிக்கும் என் குழந்தை இருந்த ஆஸ்பத்திரிக்கும் பத்து நிமிடங்கள் தான்.  அச்சிறிய தூரம் கூட எனக்கு கடலளவாக தெரிந்தது.   காரை நிறுத்துவதற்குள் கதவை திறந்து இறங்கினேன்.  ஓடிப்போய் என் மகனை வாரி அணைத்து கொஞ்ச வேண்டும் என்று மனம் துடித்தது.  அவன் இருந்த இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.


 கண்ணாடி கதவிற்கு பின் இருந்து பார்த்த எனக்கு கண்ணீர் பெருகியது.  பட்டுத்துணியில் போர்த்த நினைத்திருந்த என் மகன் ஒரு துணி கூட இன்றி ஒரு பூனைக்குட்டியைப் போல் கண்ணாடி பெட்டிக்குள் படுத்திருந்தான்.  ஒரு சிறு துண்டு அவன் இடுப்பிலிருந்து போர்த்தப் பட்டிருந்தது.  செவிலியர் அவனை தூக்கி வந்து என்னிடம் கொடுத்தார்கள்.  என் கைகளில் அவனை வாங்கி விட்டேனா என்ற சந்தேகம். வெறும் துணியை கையில் வைத்திருந்ததை போல் உணர்ந்தேன்.  அவ்வளவு சிறிதாக எடை குறைவாக இருந்தான்.  வாரி அணைத்து கொஞ்சக்கூட பயமாக இருந்தது.  எங்கே அவனுக்கு வலிக்குமோ என்று பயந்து மெதுவாக தூக்கினேன்.  கண் விழித்து அவன் பார்த்த பொழுது அவன் இமைகளில் கூட முடி வளராதிருப்பதை கண்டு பயந்தேன்.  எலும்பை தோல் மூடியது போன்ற உடம்பு.  தலையில் கை வைத்தால் நொலு,நொலு என்ற உணர்வு.  கை, கால்களில் விரல்கள் எல்லாம் தொல தொல என்று இருந்தது.  எப்படி அடா இக்குழந்தையை வளர்க்கப் போகிறோம் என்ற சிந்தனையுடன் பால் கொடுத்தேன்.  பின் அவனை அங்கேயே ஒப்படைத்துவிட்டு நான் இருந்த ஆஸ்பத்திரிக்கு திரும்பிச்சென்றேன்.  உடல் தான் திரும்பியது.  மனம் அங்கேயே சுற்றியது.  தனிமையில் அழுதேன்.


 ஏழாவது நாள் காலை என் தந்தை வந்து ,”இன்று மதியம் குழந்தையை வீட்டிற்கு தூக்கிச் செல்லலாம் “ என்ற நல்ல செய்தியை கூறினார்கள்.  அப்பாடா என்று இருந்தது.  நம் வீட்டிற்கு போய்விட்டால் எப்படியாவது குழந்தையை தேற்றிவிடலாம் என்ற நிணைப்பு.  தயாராக காத்திருந்தேன் அந்த நொடி பொழுதிற்காக.    மணி பதினொன்றரை இருக்கும்.  என் கைதொலைபேசி ஒலித்தது.  என் தந்தை அழைத்திருந்தார்.  குழந்தை இருந்த மருத்துவமணையில் இருந்து அழைப்பு வந்ததாகவும் உடனே குழந்தையை வேலூருக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று கூறினார்.  என் செவிகளில் விழுந்த வார்த்தைகள் மூளையை அடையும் முன் மயங்கி விழுந்தேன்.  மயக்கப் தெளிந்து எழுந்த பின்   என் தாய் நடந்தவற்றை கூறினார்கள். குழந்தைக்கு சிறுநீரில் இரத்தம் வருவதாகவும் உடனடியாக வேலூர் சி.யெம்.சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.  கடவுள் என்னை ஏன் இப்படி சோதிக்கிறார் என்று அழுது புலம்பினேன்.  போட்டு இருந்த உடையுடன் உடனே கிளம்பி குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து வாங்கிக் கொண்டு வேலுருக்கு காரில் கிளம்பினோம்.


  தஞ்சையில் இருந்து வேலூருக்கு செல்ல எட்டு மணி நேரம் ஆகும்.  எப்படி இந்த பச்சிளம் சிசுவை கையில் ஏந்திக் கொண்டு செல்லப்போகிறோம் என்ற பதைபதைப்பு.  மடியில் ஓர் தலையணையை வைத்து அதன் மேல் துண்டு விரித்து குழந்தையை அதில் கிடத்தி அணைத்தவாறு உட்கார்ந்து கொண்டேன்.  என் தாய்,தந்தை, என் கணவர் எல்லோருமாக புறப்பட்டோம்.  வழி எங்கும் இங்க் பில்லரில் பாலை புகட்டினோம்.  கார் கரடு முரடான சாலையில் செல்லும் போதெல்லாம் என் வயிற்றில் போடப்பட்ட தையலின் வலியை கூட உணராமல் என் செல்வத்தை பத்திரமாக அணைத்தபடி கண் இமைக்காமல் அமர்ந்திருந்தேன்.  காரில் நாங்கள் ஒருவருடன் ஒருவர் எந்த உரையாடலும் இன்றி பயணித்தோம்.  எல்லோருக்கும் மனம் முழுதும் வலி.  வாயை திறந்தால் கதறி விடுவோம் என்ற பயத்தில் மெளன விருதம் போல் வாய் மூடிச் சென்றோம்.


 வேலூர் ஆஸ்பத்திரியை நாங்கள் அடைந்த பொழுது மாலை மணி 6.45.  அவசரப்பிரிவில் சென்று எங்கள் நிலையை விளக்கினோம்.  ஆயினும் பயனில்லை.  இரவு பணி பார்க்கும் மருத்துவர் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அந்த வெராண்டாவில் அமர்ந்திருந்தோம்.  அங்கிருந்த பலதரப்பட்ட நோயாளிகளை பார்த்த பொழுது என்னையும் அறியாமல் ஒரு பயம் கவ்விக்கொண்டது.  என் மகன் குணமடைவானா என்ற கேள்விக் குறி.  அறை ஏதும் காலியாக இல்லாததால் எங்களை இரவு ஒரு மணி வரை காக்க வைத்தார்கள்.  பின் அறை ஒதுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டோம்.  டியூட்டி மருத்துவர் வந்து பார்த்துவிட்டு காலை குழந்தை நல மருத்துவர் வந்து பார்ப்பார், இப்பொழுது கூறுவதற்கு ஒன்றும் இல்லை  என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.   பயணக்களைப்பை விட  மனவேதனை மிகுதியாக இருந்ததால் எங்களால் இரவு முழுதும் கண் மூட  முடியவில்லை. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என் மகனை இரவு முழுதும் கைகளில் ஏந்திய படி   விடிவதற்காக காத்திருந்தோம்.....

மீண்டும் நாளை தொடரும் என் ஒலி..........

Friday, August 20, 2010

வாங்கி வந்த வரம்--ஒரு தாயின் ஒலி

     குழந்தை வரம் வேண்டி ஏறாத கோவில் இல்லை வணங்காத தெய்வம் இல்லை.  கிடைத்தது வரம் ஒன்பது வருடங்கள் கழித்து.  பத்து மாதங்கள் நீண்ட பயணம் என்று நினைத்தோ என்னவோ எட்டு மாதங்களிலேயே இவ்வுலகை காண பிறந்துவிட்டான் என் மகன்.  குழந்தை பிறக்கப்போகிறது என்று அறிந்த நான் என் மகனின் முகத்தை பார்க்கவில்லை.  அறுவை சிகிச்சைக்கு பின் மயக்க ஊசி போட்டு மயக்கமடைய செய்து விட்டார்கள் என்னை.  விழிக்காத கண்களை விரித்து மறுநாள் தேடினேன் என் மகனை.  காணவில்லை என்னருகில் அவனை.  குழந்தை எங்கே என்று கேட்கக்கூடத் திரணியில்லை என்னிடம்.  “எங்கு குழந்தை , என்ன குழந்தை?” என்று திக்கித்திக்கி கேட்டேன்.  வரண்ட நாக்கும் உலர்ந்த உதடுகளும் வார்த்தைகளை வெளியில் விட மறுத்தன.  அருகில் இருந்த என் தாய் “ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது” என்று கண்ணீர் மல்க கூறினாள்.  அது ஆனந்தக் கண்ணீர் என்று தான் நான் உடன் நினைத்தேன்.


    என் கதகதப்பு போதவில்லை என்று மின்சார வெளிச்ச கதகதப்பில்(இன்குபேட்டரில்) வைத்திருக்கிறார்களாம்.  மன பாரம் , பால் பாரம் தாங்காமல் தனி அறையில் நான் உறங்க, அங்கே இங்க் பில்லரில் பால் அருந்தி , ஆயிரம் சொந்தங்கள் இருந்தும் தனியாக உறங்குகிறான் என் மகன்.  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதைப் போல் ஒன்பது வருடங்கள் கழித்து எனக்கு கிடைத்த வரம் இன்னும் வந்து சேரவில்லை என் கைகளுக்கு.  பார்க்க வந்தோர் யாவரும் குழந்தை எங்கே என்று கேட்டனர்.  பெற்ற நானே என் குழந்தையை பார்க்க இயலாத அவலத்தை யாரிடம் கூறுவது என்று  கண்களை மூடிக்கொண்டு உறங்குவதாக நடித்தேன்.


    உள்ளுக்குள் குமுறினேன்.  என்ன பாவம் செய்தேனோ நான் அறியவில்லை.  நான்கு நாட்கள் ஆகியும் நான் என் குழந்தையை பார்க்கவில்லை.  என்னை பார்க்க வந்தோர் மீது வந்தது எனக்கு கோபம்.  வந்தோம், பார்த்தோம் என்றில்லாமல் என் அறையில் உட்கார்ந்து கொண்டு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிக் கொண்டிருந்தனர்---குழந்தையை பற்றியே பேசிக்கொண்டு இருந்தனர்.  “யாரும் என் அறையில் இருக்க வேண்டாம்” என்று அறுவை சிகிச்சை வலியையும் தாங்கிக்கொண்டு அடி வயிற்றில் இருந்து கத்தினேன். 

       வந்தவர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்று என்னை என் தாய் அடக்கினார்.  என் தவிப்பும் வேதனையும் யாருக்கும் புரியவில்லை.  தனிமையை நான் விரும்பினேன்.  காலை,மதியம், மாலை இரவு என்று என் கணவரும் என் தந்தையும் போய் என் மகன் இருந்த மருத்துவமனையில் அவனை கண்ணாடி தடுப்புக்கு வெளியில் இருந்து பார்த்து விட்டு வந்தார்கள்.  குழந்தை எப்படி இருக்கிறான் என்று கேட்கக்கூட எனக்கு பயம்.  நான் சென்று பார்க்கும் நாளுக்காக காத்திருந்தேன்.  இப்படியே நான்கு நாட்கள் கழிந்தது.  

 நாளை தொடரும் என் ஒலி..............

Thursday, August 19, 2010

எதிர்காலம்

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா--அன்று
தலை குணிந்து நில்லடா--இன்று
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழிப்போம் அன்று
எம் குலமே பசிப்பட்டினியில் அழிந்தாலும்
எங்களுக்கு வார இறுதியில்
‘யார் வீட்ல பார்ட்டி அட
நம்ம வீட்ல பார்ட்டி”


எம் நாட்டில் கோடையின்
தாக்கம் தாங்கவில்லை
எனவே நாங்கள் போகிறோம்
குடும்பத்துடன் கடற்கரைக்கு
மணல் வீடு கட்டி மகிழ
ஆனால் நீங்களோ குண்டடி காயத்திற்கு
மருந்தின்றி மணலை வைத்து
பூசிக்கொள்கிறீர்கள்.


தாயின் தாலாட்டில் துயில வேண்டிய
பச்சிளங் குழந்தைகள்
பீரங்கியின் ஓசையிடையே
திறந்த விழிகளுடன்.
ஆசிரியரின் போதனையை கேட்க வேண்டிய
மாணவ சிறார்கள் செவியில்
விழுவதெல்லாம்
ராணுவ அரக்கர்களின்
கட்டளைகள்,வெடிச்சத்தங்கள்.
பள்ளியின் மணி ஓசை வீட்டிற்குச் செல்ல
வெடியின் ஓசை பதுங்கு குழிக்குள் செல்ல.


யாவரும் ஒரு நாள் பூமிக்குள் போவோம் உறுதியாக
இதற்கு ஏன் இத்தனை முறை
செய்கிறீர்கள் ஒத்திகை?
நிலத்தின் மேல் வீடு கட்ட இடமில்லையோ
உங்களுக்கு?
அதனால் தான்
நிலத்தின் கீழ் நீங்கள்
வீடு கட்டுகிறீர்களா?

ஆடை விளம்பரத்திற்கு
பூனை நடை இங்கே.
மானத்தை காக்க
உடை தேடுகிறீர்கள் அங்கே.
நாங்கள் கண்டு மகிழ்கிறோம்
ஐபிஎல் போட்டியை.
அங்கு ராணுவத்திற்கும்
புலிகளுக்கும் நடக்கும் போட்டியில்
பந்தாடுகிறார்கள்
உங்கள் உயிர்களை.
அதை பார்த்து மகிழ்கிறார்கள்
உலக தலைவர்கள் யாவரும்.

பணத்தின் மேல் புரள்கிறார்கள் பலர் இங்கே
நீங்கள் பிணத்தின் ஊடே
புதைகிறீர்கள் உங்கள் உயிர்காத்திட.
உங்களை காக்க எங்களுக்கு
தெரிந்ததெல்லாம்
கடை அடைப்பு, பஸ் எரிப்பு,தீக்குளிப்பு
இதனால் என்ன பயன் உங்களுக்கு?

இத்தனை பேருக்குமா எழுதினான்
இறைவன் ஒரே விதியை?
என்னால் நம்ப முடியவில்லை
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு
விதி எழுத அவனுக்கு சோம்பல் போலும்
அவனும் எடுத்தானோ ஒரே
விதியின் நகலை பலருக்கு?
எப்படி கிடைத்தது எமனுக்கு
அத்துனை பாசக்கயிறு ஒரே சமயத்தில்?

எது கிழக்கு என்று தெரியாமலேயே
விடியலை தேடுகிறீர்கள்.
எட்டு திக்கும் பரவியும்
உங்கள் மரண ஓலங்கள்
யார் செவியிலும் விழாதது ஏன்?
சத்தமிலா ஓசையையா எழுப்புகிறீர்கள்?
அல்லது யாவரும் செவிடாகிப் போனோமா அறியேன்.
பலர் உங்கள் ஓலங்கள்
உங்கள் தேசிய கீதமென நினைத்து
எழுந்து நின்று மரியாதை மட்டுமே
செய்கிறார்கள்.
அவர்களுக்கு கூறுங்கள்
தேசமே இல்லாத உங்களுக்கு
ஏது தேசிய கீதம் என்ற ஒன்று??

உயிரற்ற சடலங்கள் மீதுதான்
ஈக்கள் மொய்க்குமென்று
யார் சொன்னது?
உங்கள் மீது அடிக்கும்
ரத்த வாடைக்கும்
உயிர் மட்டுமே ஊசலாடும்
உங்கள் உடலிலும் அவை
நடைபயிலும்.

தாயற்று, தந்தையற்று,
சேயற்று, அண்ணன்,தம்பி,
அக்காள்,தங்கை என்று
எல்லா உறவுகளையும் இழந்து
தனிக்தனி தீவுகளாக
ஒரு தீவுக்குள்ளேயே வாழும்
நீங்கள்
சேரப்போவது யாருடனோ?

தாய் காக்கவில்லை என்றால்
தாய் நாடு காக்கும் என்பர்
இரண்டும் இல்லா உங்களுக்கு
செவிலித்தாயாகப் போவது யாரோ?
வாரி அணைத்து,
ஆறுதல் கூறி
உறவொன்று அளித்து
உங்களை தழுவப்போகும்
கரங்கள் யாருடையதோ?
 கிடைக்குமா உங்களுக்கு
ஓர் தாயின் மடி?


இழக்கப்பட்ட இழப்புக்கள்
இழக்கப்பட்டவையே!
மன்னிக்க இயலுமே தவிர
மறக்க முடியாது.
எந்த மனித உரிமைப் மீறல் சட்டம்
ஈடு செய்யும் இதனை?
எதிர்காலத்திலாவது
முட்கள் இல்லா பூக்கள்
மலரட்டும் உங்கள் வாழ்வில்
என கடவுளை வேண்டுகிறேன்.
வேண்டுவதை தவிர
வேறேதும் தெரியவில்லை
இந்த பேதைக்கு.
மன்னிக்கவும் வழக்கம் போல்
என் இயலாமையை.

Thursday, August 12, 2010

அனுபவம் புதுமை

     அனுபவம் என்பது நாம் ஒவ்வொருவரும் சுயமாக அனுபவிக்க வேண்டியது. சிறு வயது முதல் நாம் அனுபவத்தின் மூலம் கற்கும் பாடமே வாழ்க்கை முழுதும் கை கொடுக்கும். நம்முடைய பெற்றோர் நமக்கு செய்த அதே தவறுகளை இன்று நாம் நம் பிள்ளைகளுக்குச் செய்கிறோம். “உனக்கு அனுபவம் பத்தாது நான் சொல்வதை கேள்” என்கிறோம். அடுத்தவர் அனுபவங்களைக் கொண்டு கற்கும் பாடங்கள் மனதில் காலந்தோறும் நிற்பதில்லை. “பட்டால் தான் புத்தி வரும்” என்பது தான் பல நேரங்களில் உண்மையாகிறது. பிறரின் அனுபவங்கள் நமக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாமே ஒழிய அதுவே நாம் பின்பற்றக்கூடிய வழியாக இருக்க முடியாது.

     நான் என் மகனின் பின்னால் இருந்துகொண்டு “படி படி” என்று கூவியபடி இருப்பேன். என் சத்தத்திற்கு பயந்து அவனும் ஓர் அளவிற்கு படித்தான். ஓர் நாள் நான் யோசித்துப்பார்த்தேன். எதற்காக நான் என் தொண்டை தண்ணீர் வற்றும் அளவிற்கு கத்த வேண்டும்? ஓரு முறை விட்டுப் பார்ப்போம், என்று நினைத்து   தலை தூக்கிய கடமை உணர்வை ஒரு தட்டு தட்டி பல்லை கடித்துக்கொண்டு இருந்து விட்டேன். ஒன்று மட்டும் கூறினேன். “இம்முறை நான் ஏதும் கூறப்போவது இல்லை. படித்தால் படி இல்லையென்றால் “மெக்டோனாடில்” வேலைக்கு சேர்ந்து விடலாம் கூடிய விரைவில். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன மதிப்பென் வாங்குவாய் என்று.” (நான் சிறுமியாக இருந்த பொழுது என் தந்தை படிக்கலைனா மாடு மேய்க்கலாம்” என்பார்.) Now we have a kind of sophisticated approach even in assigning a job for them!! அவனும் “விடுதலை,விடுதலை” என்று கத்தியவாறு சந்தோஷமாக விளையாடி திரிந்தான். பரீட்ச்சைக்குப் பின் மதிப்பென்னும் வந்தது. நான் கூறியது போல மிக குறைவான மதிப்பென்கள் எடுத்திருந்தான். கூனி குறுகிப் போனான். நான் எதுவும் கூறாமல் “அப்படியா சரி” என்றதோடு விட்டு விட்டேன். “அம்மா சாரி அம்மா. ப்ளீஸ் அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் சொல்வதை கேட்கிறேன்,” என்று என் வழிக்கு வந்தான்.   நான் கிணற்றுத் தவளையாய் கத்திய பொழுது உணராதவன் தானாக உணர்ந்தான்.


எல்லாவற்றையும் இப்படி அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என்று இருந்து விட முடியாது. அது நமக்கே விணையாக முடிந்துவிடும்.  என் நண்பரின் மகளுக்கு 15 வயது.  பெற்றோர் எதிரியாக கண்களுக்கு தெரியும் பருவம். “அடங்கு” என்பதற்கு எதிர்மறையாகவே எல்லாவற்றையும் மனது செய்யத்தூண்டும் வயது.  தகாத நண்பர்கள், செயல்கள். சொல்லி சொல்லி பார்த்துவிட்டு “எக்கேடாவது கெட்டுப்போ” என்று விட்டு விட்டார். ஆனால் அவர் மனைவி அப்படி விட்டுவிட்டால் பின்னாளில் துன்பப்படப்போவது அவள் மட்டும் அல்ல நாமும் தான் என்று கூறி கண்டிப்பாக இருந்து மகளை நல்வழிப்படுத்தினார். அடிபட்டுத் திருந்துவாள் என்று அவர்கள் விட்டு இருந்தால்  பிற்காலத்தில் எல்லாமே  கண்கெட்டப்பின் செய்யும் சூரிய நமஸ்காரமாக இருந்து இருக்கும்.


     நம் அனுபவங்களை கொண்டு எங்கு கற்க வேண்டும், பிறரது அனுபவங்களை கொண்டு எங்கெல்லாம் சுதாரித்துக்கொள்ள வேண்டும் என்பதே ஒரு தனி கலை. ஆயிரம் சமையல் நிகழ்ச்சிகள் பார்த்தாலும் நாமாக சமைக்கும் பொழுதுதான் நம் வண்டவாளம் தண்டவாளம் ஏறும். விளையாட்டு, சினிமா என்று எதுவானாலும் ஆயிரம் விமர்சனம் செய்யும் (அதிலும் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று குற்றம் மட்டுமே கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்) நாம் களத்தில் இறங்கி கோதாவில் பங்கெடுத்தால் தான் தெரியும் நாம் வீட்டிலே புலி வெளியிலே எலியா என்று. அடுத்தவர் பிரச்சினைக்கு வெளியில் இருந்து நாம் பல பல அறிவுரைகளை அள்ளி வீசலாம். But we cannot step into other's shoes. அவர்கள் நிலைமையில் இருப்பதாக கற்பனை மட்டுமே செய்ய இயலும். நாவ் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சூழ்நிலையில் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகளே ஓர் அனுபவம் தான். சந்தர்ப்ப சூழ்நிலைதான் அதை முடிவு செய்யும்.


     அனுபவங்களை பெறுவதே ஓர் அனுபவம். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர்கள் எப்பொழுதும் ஓர் வட்டத்துக்குள் வாழ கற்றுக்கொள்கிறார்கள். என் தந்தை எப்பொழுதும் கூறுவார்,” சைக்கிள்ள போக தெரியனும், பஸ்ல போக தெரியனும், கார்ல போக தெரியனும் எதுவுமே இல்லையென்றால் நடந்தும் போக கற்றுக்கொள்ள வேண்டும் “ என்று. இவை எல்லாமே அனுபவங்களே. சிலருக்கு சில விஷயங்களை அனுபவித்து பார்க்க ஆசை இருந்தாலும் பயம் மேலோங்கும். பாத் டப்பில் குளிக்கும் குழந்தைக்கு ஆற்றில் குளிக்க ஆசை. ஆற்றில்  குளிக்கும் குழந்தைக்கு பாத் டப்பில் குளிக்க ஆசை. முதலானவருக்கு வாய்ப்பு கிட்டினாலும் பயம். இரண்டாமவருக்கு வாய்ப்பு கிட்டுமா என்ற ஏக்கம்.


    நல்லதோ கெட்டதோ ஒன்றை அனுபவித்து பார்க்க துணிச்சல் தேவை. இந்த துணிச்சல் நல்ல விஷயங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும். Experience is what is left when you don't achieve what you tried to achieve என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். எத்துனை பயணக்கட்டுரைகள் படித்து மகிழ்ந்தாலும் நாமே அந்த இடங்களுக்குச் சென்று மகிழ்வதைப் போல் வராது. குற்றாலத்தில் குளித்தவர்களின் அனுபவத்தை கேட்டு அறிவதைவிட சில்லென்ற அந்த கொட்டும் அருவியில் கண் மூடி கண்ணங்களை கை வைத்து பொத்தி நாமே நணைவதே அலாதி இன்பம். வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும் ஓர் அனுபவமாக எடுத்து ரசிக்க வேண்டும். ஒரு புத்தகத்தின் விமர்சனத்தை மட்டுமே படித்து அறிந்து கொள்வதைவிட நாமே அப்புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளவேண்டும். சில விஷயங்கள் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவத்தை கொடுக்கும். புதுபுது அர்த்தங்கள் தோன்றும். ஒரே விஷயத்தை பல கோணல்களில் பார்க்கத்துண்டும். நான் முதன் முதலில் “விருமாண்டி” படம் பார்த்த பொழுது எனக்கு பிடிக்கவே இல்லை. உண்மையை சொல்லப் போனால் புரியவேயில்லை. அப்பொழுது என் அறிவு வளர்ச்சி அவ்வளவுதான். அதே படத்தை ஆறு ஏழு வருடங்கள் கழித்து பார்த்தபொழுது மிகவும் பிடித்திருந்தது. பார்வை வேறுபட்டது. அதற்காக அறிவு வெகுவாக நிரம்பி வழிந்துவிட்டது என்று கூறவில்லை. ஓரளவிற்கு வயதுக்கேற்ற அறிவு முதிர்ச்சியடைந்திருந்தது. வயது ஆக ஆக (ரொம்ப வயதானவளாக கற்பனை செய்யாதீர்கள்) சூழ்நிலைக்கேற்ப சரி தவறாகும், சில சமயங்களில் தவறுகூட சரியாகும். அனுபவங்கள் நம்மை பக்குவப்பட வைக்கின்றன.


     திருமணம் என்பது எப்படிபட்ட இடியாப்பச் சிக்கல் என்பதை நாம் அனைவரும் உணர்வோம். ஒவ்வொரு திருமணமானவரும் கூறுவது, “என் திருமண நாள் தான் என் சுதந்திரம் பறிபோன நாள் “ என்று-என் கணவரையும் சேர்த்துக்தான். எத்துனை பேர் இந்த உண்மையை கூறினாலும் நாம் ஒவ்வொருவரும் அதை அனுபவித்து பார்ப்போமே என்று துணிச்சலாக அந்த ஆழ்கடலில் குதிக்க துணிகிறோம். நாம் பெற்ற இன்பத்தை (துன்பத்தை) நம் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் , அனுபவிக்க ஆசை படுகிறோம். அப்படி துணிந்து குதிப்பதால் தான் குடும்பம், குழந்தைகள், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள், எள்ளுப்பேரப்பிள்ளைகள், கொளுந்தன், அண்ணி, மச்சினி  என்ற அழகான பிணைப்புகள் உருவாகிறது.  இந்த நேரத்தில் என் தோழி கூறுயது என் நினைவிற்கு வருகிறது. அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவள் ,”முதல் குழந்தை பிறந்து அதை வளர்க்க பாடுபட்ட போதே பிள்ளை வளர்ப்பு எவ்வளவு கடினமானது என்று தெரிந்தது. ஆனாலும் சொந்த செலவிலேயே சூன்யம் வைத்துக் கொள்வதைப்போல் இரண்டாவதையும் பெற்றுக்கொண்டு இப்பொழுது குத்துது, குடையுது என்றால் அது என் தப்புத்தானே” என்று விளையாட்டாக கூறுவாள். அவள் குழந்தைகள் அவளிடம் காட்டும் அன்பை நினைத்து இப்பொழுது ஆனந்தமாக இருக்கிறாள். இதுவும் ஒரு அனுபவமே.


     சில விஷயங்களில் நான் அனுபவப்பட்டுத்தான் திருந்துவேன் என்று பிடிவாதம் கூடாது. தண்ணி அடிப்பது (தெரு முணை அடி பம்ப் அல்ல) ,புகை பிடிப்பது உடலுக்கு கேடு என தெரிந்தும் அனுபவப்பட்டு தெரிந்து கொள்வது என்பது சுயமாக சூடு வைத்துக்கொள்வதைப் போன்ற முட்டாள்தனம். இவ்வுலகில் மரணம் ஒன்றைப் பற்றித் தான் யாரும் அனுபவித்து பிறருக்கு தன் அனுபவங்களை கூறியது கிடையாது, கூறவும் முடியாது. அதில் கூட “மனதளவில் செத்துவிட்டேன்” என்று மனதால் நொந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மரண வாயிலை எட்டிப்பார்த்தவர்கள் “மரண வேதனையை “ விவரிக்க கேட்டு இருக்கிறோம். மரணத்துக்குப் பின் யாரேனும் அப்படி கூற நேர்ந்தால் அது பேய் பிசாசுகளின் கூற்றாகிவிடும். எப்பேர்பட்ட மகானுக்கும் அந்த சக்தி இல்லை.


     நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன், ரசித்து, அனுபவித்து செய்ய வேண்டும். என் தாய் ,”உணவை ரசித்து ருசித்து அனுபவித்து சாப்பிடு. நாளைக்கு இன்று போல் உணவின் சுவை இருக்குமா அல்லது அதை உட்கார்ந்து உண்ண உனக்கு நேரம் கிடைக்குமா என்று தெரியாது” என்று கூறுவார்கள். இதில் உள்ள உண்மை அறிந்திருந்தும் நான் என் தந்தையின் ”வாழ்வதற்காக சாப்பிடனும், சாப்பிடுவதற்காக வாழக்கூடாது” கோட்பாட்டை பின்பற்றுபவள். என்ன செய்வது ஊருக்குதான் உபதேசம். எந்த ஒரு படைப்பாளியின் படைப்பாக இருந்தாலும் அது புத்தகமாயிருக்கட்டும், சினிமாவாக இருக்கட்டும், சிற்பமாக இருக்கட்டும், ஓவியமாக இருக்கட்டும், நகைசுவையாக இருக்கட்டும், சமையலாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் நம் மனதை தொடுமானால் நாம் முதலில் கூறுவது,”அனுபவித்து படைத்து இருக்கிறார்” என்று தான். அனுபவத்திற்கு அப்படி ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது.


     எத்தகைய அனுபவமாயினும் அதில் இருக்கும் அழகையும், ஆழத்தையும், சுவையையும்,சுகத்தையும், எடுத்துக்கொண்டு அதில் உள்ள சோகத்தையும், வலியையும், வேதனையையும், சோர்வையும், தூர வீசி விட முயற்சிக்க வேண்டும். சில நேரங்களில் வலியும், வேதனையும் கூட சுகமே!! அனுபவம் என்பது பாடம் புகட்ட மட்டுமெ அல்ல. It can just be a plain nice experience. அது நம் மனதுக்கு பிடித்தமானதாக, இதமளிப்பதாக, இனிமையானதாக, வானவில்லைப் போன்றதாக கூட இருக்கலாம். கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு. எனவே அனுபவங்களை அனுபவித்துப் பாருங்கள் உங்கள் வானம் விரிவடையும்.

Tuesday, August 10, 2010

உரிமை

உன்னை காதலிக்க
எனக்கு உரிமை இருப்பதைப்போல்
என் காதலை மறுக்க
உனக்கு உரிமை உண்டு
என்னை காதலிக்க
வேண்டும் என்று சொல்ல
எனக்கு உரிமை இல்லை
என்னை காதலிக்காதே
என்று சொல்ல உனக்கும்
உரிமை இல்லை.
இந்த சுதந்திரம் போதுமடி
உன் நிணைவை சாகும் வரை
என் மனதில் சுமக்க.
என் நிழலில் நீ இல்லை
உன் நினைவில் நான் இல்லை
உனக்கென்று ஓர் வாழ்க்கை
எனக்கென்று ஓர் வாழ்க்கை
நிஜவுலகில்.
நமக்கென்று ஓர் வாழ்க்கை
என் கனவுலகில்.
எத்துனை முறை கண்டாலும்
பலிக்க போவதில்லை இக்கனவு
அறிந்திருந்தும் காண்கின்றேன்
தினந்தோறும் பகல்கனவு.