Tuesday, August 24, 2010

பாகம் 3---வாங்கி வந்த வரம்

      பொழுது விடிந்தது.  பசி என்பது என்ன என்று நாங்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.  ஒன்பது மணி இருக்கும்.  குழந்தை நல மருத்துவர் வந்தார்.  அவரிடம் என்னால் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை.  இரத்த பரிசோதனை செய்து பார்த்துவிட்டுத்தான் எதுவாக இருந்தாலும் கூற இயலும் என்று கூறிவிட்டுச் சென்றார்.  இரத்த பரிசோதனை முடிவு மூன்று நாட்கள் கழித்துத்தான் தெரியும் என்றும் கூறினார்.  ஆயிரம் கடப்பாறைகளை கொண்டு என் தலையை தாக்குவது போல் இருந்தது.  என் மகனின் பிஞ்சு கைகளில் இருந்து இரத்தம் எடுக்க ஒரு நர்ஸ் வந்தார். அவர் வைத்திருந்த ஊசி என் மகனின் கை அளவு இருந்தது. 


மூன்று நாட்கள் என்ன என்று தெரியாமலேயே கழிந்தது.  மருத்துவர் வந்து பார்ப்பதும் போவதுமாக இருந்தது.  அன்று காலை வந்த மருத்துவர் இரத்த பரிசோதனை முடிவு வந்துவிட்டதாக கூறினார்.  கடவுளே ஒன்றும் இல்லை என்று கூறவேண்டும் என்று எல்லா கடவுள்களையும் மத வேறுபாடு இன்றி மனதுக்குள் மன்றாடினேன்.  ஆனால் மருத்துவரோ இரத்தத்தில் கிருமி இருப்பதாகவும் அதற்காக பதினைந்து நாட்களுக்கு நரம்பில் ஊசி போடவேண்டும் என்றும் கூறினார்.  இதை மட்டும் கூறியிருந்தால் கூட நான் ஓரளவிற்கு சமாதானம் ஆகியிருப்பேன்.  அதன் பின் அவர் கூறிய வார்த்தைகள் என் நெஞ்சை பிழிந்தது.  குழந்தையின் முதுகுத்தண்டில் இருந்து நீர் எடுத்து கிருமி மூளையை தாக்கி இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.  இதை கேட்ட என் மனம் சுக்கு நூறாகியது.  ஆனால் கண்ணீர் மட்டும் இம்முறை என் கண்களில் இருந்து வழியவில்லை.  நான் தான் ஜடமாகிவிட்டேனே!  கல்லாகி விட்டேனே. பின் எங்கிருந்து என் உணர்ச்சிகள் வெளியேறும்?  அன்று மதியம் வந்த நர்ஸ் முதுகுத்தண்டில் நீர் எடுக்க என் ஆசை மகனின் முகம்  அவன் பாதம் தொடுமாறு வளைத்து வைத்து ஓர் ஊசியை குத்தி நீர் எடுத்தார்.  பாவம் என் ராஜா வலி பொறுக்க மாட்டாமல் வீல் என்று கத்தினான்.  தொடர்ந்து கத்தக்கூட அவனிடம் தெம்பில்லை.  அந்த கொடூர காட்சியை பார்க்க என்னிடம் தைரியம் இருக்கவில்லை.  இம்முறை பரிசோதனை முடிவிற்காக இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.  மீண்டும் யாவரும் மெளன விருதம்.  இரண்டு நாட்கள் கழித்து வந்த முடிவில் மூளைக்கு செல்லும் இரத்தத்தில் கிருமி இல்லை என்ற நற்செய்தியை கூறினார்கள்.  இரண்டு வாரங்கள் நரம்பு ஊசி போட்டால் முற்றிலும் குணம் அடைந்து விடுவான் என்று கூறினார் மருத்துவர்.  இதை கேட்ட உடனேயே எல்லா தெய்வங்களுக்கும் என் நன்றியை மனதுக்குள் கூறினேன்.  பல நாட்களுக்கு பிறகு பசி என்ற உண்ர்ச்சியை உணர்ந்தேன். 

     வெண்டைக்காய் அளவில் இருந்த அவனின் கைகளிலும் கால்களிலும் நரம்பு கண்டு பிடித்து மருந்தை ஏற்றுவதற்குள் போதும் போதும் என்றானது.  பார்க்கவே பயமாக இருந்தது.  உடம்பெங்கும் ப்ளாஸ்திரியும் ,டியூபுமாக கோழிக்குஞ்சை போல் படுத்திருந்தான்.  கை கால்களை அவனால் அசைக்க முடியாமல் அவ்வப்பொழுது சினுங்கினான்.  கடவுள் சோதித்தாலும் கைவிட மாட்டார் என்ற என் நம்பிக்கை வீண்போகவில்லை.  என் தந்தையின் நெருங்கிய நண்பரின் மகள் வேலூரில் இருந்தார்.  அவர் எங்களுக்கு பேருதவியாக இருந்தார்.  தினமும் எங்களுக்கு உணவு சமைத்து எடுத்து வருவார் அந்த சுட்டெரிக்கும் வெய்யிலில்.  குழந்தைக்கும் எனக்கும் வேண்டியதை வாங்கி வந்து கொடுப்பார்.  கடவுள் நேராக வர இயலாவிட்டால் யார் மூலமாவது வருவாராம்.  அவர்களை நான் அப்படித்தான் பார்த்தேன்.  இரண்டு வாரங்கள் பின் குழந்த நன்றாக இருப்பதாகவும் நாங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றும் மருத்துவர் கூறினார்.  இனி பயப்படும்படி ஏதும் இல்லை என்றார்.  அன்றுதான் என் உதட்டோரத்தில் ஓர் சிறிய புன்னகை மலர்ந்தது.   ஆனாலும் என் மூளைக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என் மகனின் உடல் நிலையைப்பற்றி. மருத்துவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு தஞ்சையை நோக்கி புறப்பட்டோம். 


     தஞ்சையில் வீட்டை அடைந்ததும் தான் எனக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.  மருத்துவரின் அறிவுரைப்படி யாரையும் குழந்தையை பார்க்க நாங்கள் அனுமதிக்கவில்லை.  இடையை அதிகரிக்க செய்வதே என் தலையாய கடமை என்று மருத்துவர் கூறியிருந்ததால் இரவு பகல் பாராது பால் ஊட்ட காத்திருப்பேன்.  அவனுக்கு செலுத்தப்பட்ட மருந்து கொஞ்சமா நஞ்சமா?  எனவே அவன் தூங்கி கொண்டே இருந்தான்.  எழுப்பி எழுப்பி பால் அருந்த செய்வேன்.  குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்று பல உறவினர்களுக்கு கோபம்.  சிலருக்கு குழந்தை எப்படி இருக்கிறதோ என்ற சந்தேகம்.  நான் எதையும் பொருட்படுத்தாமல் என் குழந்தை உடனேயே என் நேரத்தை கழித்தேன்.  இப்பொழுது மூன்று மாதங்கள் பறந்தோடி விட்டது.  பகலில் தூக்கம் இரவினில் ஆட்டம் என்று அவனுடன் ஒட்டிக்கொண்டே இருக்கிறேன்.  முகம் பார்க்கிறானா?  சிரிக்கின்றானா?  நகர்கின்றானா? என்ற கேள்விக் கணைகள் நாலாபுரமிருந்தும்.  ஏற்கனவே சந்தேகத்தில் இருக்கும் எனக்கு தூபம் போடுவது போல் இந்த கேள்விக் கணைகள் தாக்கும்.  இங்கிதம் தெரியாத சிலர் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி சென்றார்கள்.   மருத்துவரை கேட்ட பொழுது பொருமை மிக அவசியம்.  மற்ற குழந்தைகள் போல் அல்ல குறை பிரசவ குழந்தைகள்.   அவை எல்லாவற்றையுமே காலம் தாழ்த்தித் தான் செய்யும்.  யார் சொல்வதையும் கேட்காதீர்கள் என்றார்.  ஆனாலும் தாய் மனசல்லவா?? என் குழந்தை எப்பொழுது என் முகம் பார்த்து “அம்மா” என்று அறிந்து என்னை அழைப்பான் என்று என் மனம் ஏங்குகின்றது.  காத்திருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் அத்திரு நாளுக்காக......        

4 comments:

அப்பாதுரை said...

/வைத்திருந்த ஊசி என் மகனின் கை அளவு/

வரியே தைக்கிறது.

இது அனுபவமா? புனைவா? புனைவானால் நெஞ்சைச் சுடுகிறது. அனுபவமானால் கண்களை நனைக்கிறது. ஆறே மாதங்களில் இதெல்லாம் மறந்து விடும், பாருங்கள். ஆறு வருடம் போனால் இப்படிப் பிறந்தவனா இவன் என்று மூக்கின் மேல் விரல் வைப்பீர்கள்.

Geetha Ravichandran said...

அப்பாதுரை-----இது உண்மை அனுபவம். ஆனால் எனக்கு நேர்ந்தது அல்ல. என் குடும்பத்தில் நடந்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. இது போன்று ஊக்கமான வார்த்தைகள் தெம்பை தருகின்றது.

priya.r said...

நல்ல உருக்கமான பகிர்வு
என்னவோ ஏதோ என்ற பதைபதைப்பு
தாயுடன் சேர்ந்து படிக்கும் எங்களுக்கும்
இருந்தது
கடவுள் அருளால் முடிவு சுபமாய் அமைந்தது

Geetha Ravichandran said...

ப்ரியா---நன்றி. இவை எல்லாம் பாதிக்கப்பட்டவர் தொலைபேசியில் சொல்லக்கேட்டு நான் தெரிந்து கொண்டது. நேரில் பார்க்க நேர்ந்திருந்தால் இன்னும் பாதிப்படைந்திருப்பேன்.