Friday, July 30, 2010

அழகு

சிறியது என்றும் அழகே!
சிறு சிறு தூரல்கள்,
பாதி இதழ் விரித்த சிறு சிறு மொட்டுக்கள்,
தாயின் பாதுகாப்பில் உணவு தேடும்
பஞ்சு பந்து போன்ற  சிறு கோழிக் குஞ்சுகள்,
பால் அருந்தி களைப்பில் உறங்கும்
சின்னஞ் சிறு குழந்தை,
பார்த்தும் பார்க்காதது போல் கடந்துபோகும்
காதலியின் உதட்டோர சிறு புன்னகை,
வாணில் கண் சிமிட்டும் சின்னச் சின்ன நட்சத்திரங்கள்,
அடர்ந்த காட்டுக்குள் நடக்கையில்
நம் கால் நணைக்கும் சிறு ஓடை,
பச்சை விரிப்பு விரித்தது போல்
சிறிதாக வளர்ந்திருக்கும் சிறு நெற்கதிர்கள்,
ரோட்டோரத்தில் சுதந்திரமாய் விளையாடும்
சிறிய காவி நிற நாய்க்குட்டி,
ஆழ்கடலில் பதுங்கியிருக்கும்
சின்ன சின்ன முத்துக்கள்,
அலையேறி கடற்கரையை
வந்தடையும் சிறு சிறு சிப்பிக்கள்,
இரண்டு வரியானாலும்
கோடி தத்துவம் கூறும்  திருக்குறள்,
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரியது போல்
அழகாய் சிறு தொட்டியில் வீற்றிருக்கும்
“போன்சாய்” ஆலமரம்,
சிறு பிள்ளை ஆனந்தமாய்
சமைத்து பழகும் சின்னச் சின்ன சொப்புச் சாமாண்கள்,
புத்தக சுமையின்றி ஒரே சீறுடையில்
பள்ளி செல்லும் பாலர் பள்ளிச் சிறார்கள்,
பேசப்பழகும் முன் குழந்தை
சொல்லும் “ங்கா” என்ற சிறு வார்த்தை,
”நீயே என் உலகமென” கண்சிமிட்டி
மனைவிடம் கணவன் சொல்லும் சிறு பொய் ,
இவையெல்லாம் கொள்ளை அழகு தான்.
ஆனால் ஒன்றுமட்டும் அழகாயிராது
சிறிதாக இருந்துவிட்டால்.
இதயம் கைப்பிடி அளவென்றாலும்
உள்ளிருக்கும் மனம்
கடலினும் பெரிதாய்
வானைவிட அகன்றதாய்,
காற்றைவிட பரந்ததாய்,
இவ்வுலகை விட விசாலமாய்
நம் யாவர்க்கும் இருக்குமானால்
வாழ்வாங்கு வாழும் நம் குலம்.

Tuesday, July 27, 2010

என் மனம் களவாண்ட “களவாணி”


வழக்கம் போல் வெள்ளி இரவு என்ன படம் பார்ப்பது என்று எங்கள் வீட்டில் வாக்குவாதம் எழுந்தது. மகளுக்கு ஹிந்தி, மகனுக்கு ஆங்கிலம், தந்தைக்கு தமிழ், இதில் எதுவாக இருந்தாலும் சரி என்று நான்...ஏனென்றால் எப்படமாயினும் பாதிப்படம் பார்ப்பது தான் என் நியதி—காரணம் பதினோறு மணிக்கு மேல் என்னால் விழித்து இருந்து படம் பார்க்க இயலாது. ஒரு வழியாக ஒரு முடிவிற்கு வருவதற்குள் மணி பத்தடித்தது. “களவாணி” என்ற படம் பார்க்கலாம் என்று வீட்டு மன்றத்தில் முடிவானது. கிடைத்த ஓட்டுக்கள் மூன்று.


அரைமனதாக என் மகள் ஒத்துக்கொண்டாள். அவளுக்கு பரீச்சயமில்லா நடிகர்,நடிகையர். கிராமத்து கதை வேறு. இதை பார்க்கவில்லை என்றால் எப்படியும் தூங்க சொல்லிவிடுவார்கள். அதற்கு ஏதோ ஒன்றைப் பார்ப்பது நல்லது என்று நினைத்தாள் போல்..ஒன்றும் இல்லாததற்கு ஒரு ஆண் பிள்ளை என்பதைப் போல். என் மகனுக்கு தமிழ் படங்கள் மீது பெரிய ஈடுபாடு இல்லை. எனவே அவன் தன் அறையில் விளையாட சென்று விட்டான். வழக்கம் போல் ஏ.சியை போட்டுக்கொண்டு ஆளுக்கொரு போர்வைக்குள் ஒளிந்துகொண்டு சோபாவில் அமர்ந்த படி படம் பார்க்க ஆரம்பித்தோம்.

முதல் மூன்று நிமிடங்கள் என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை. அதைக் கேட்ட என் மகளை என் கணவர், “பேசாமல் உட்கார்ந்து பார் புரியும்”, என்று வாயடைத்துவிட்டார். அவர் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டால் மூழ்கிவிடுவார். சரி சிறிது நேரம் பார்ப்போம், பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவோம் என்று நினைத்துக்கொண்டு நானும் பேசாமல் இருந்துவிட்டேன். பார்க்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களுக்குப்பின் படம் மிக விருவிருப்பாக நகர்ந்தது. அங்கங்கே கிராமத்து சம்பாஷணைகள் புரியவில்லை என்றாலும் கூட என் மகள் படத்தை ரசித்து பார்த்தாள். இரண்டரை மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை. ஏன் தான் படம் முடிவுற்றதோ என்ற ஒரு தவிப்பு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் முழுதாக ஒரே நாளில் பார்த்த படம். கதையை நான் இங்கு அலசப்போவது இல்லை. ஏனென்றால் படம் பார்க்காதவர்களின் சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்பவில்லை. நான் ரசித்த விஷயங்களையெ பகிர்ந்துள்ளேன். படம் எடுக்கப்பட்டது எனக்கு மிகவும் பரீட்சயமான இடங்கள் என்பதால் படம் பார்த்த பொழுது செலவு ஏதுமின்றி ஊருக்கே சென்று வந்ததைப் போல் இருந்தது. ஓலை சீவுவது, குயில் பிடிப்பது, கிண்டல் அடித்து பேசுவது போன்ற காட்சிகள் சிறு வயதில் கிராமத்திற்கு செல்லும் போது பார்த்த காட்சிகளை மீண்டும் பார்த்ததை போன்ற உணர்வு. என் மகளிடம்,”இவையெல்லாம் நாங்கள் சிறு வயதில் அனுபவித்துள்ளோம். உங்களுக்கு கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் தவிர என்ன தெரியும்?” இயற்கையை ரசிக்க உங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியுள்ளது. மனிதர்களுடன் பழகவைக்க பாடுபட வேண்டியுள்ளது.” என்று கூறினேன். அதற்கு அவள் ,”உங்கள் காலம் வேறு எங்கள் காலம் வேறு” என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டாள்.இவர்கள் எல்லாம் வளர்ந்தப் பின் நினைத்துப்பார்க்க எந்த இயற்கை வளம் இருக்கும் என்பது கேள்விக்குறியே? அப்படியே இருந்தாலும் அதை ரசிக்க இவர்களுக்கு நேரம் தான் இருக்குமோ நான் அறியேன் பராபரமே!!

நடித்தவர்கள் யாருடைய நடிப்பிலும் செயற்கைத்தனம் துளி கூட இல்லை. எதார்த்தமான வசனங்கள்,அழகானபடப்பிடிப்பு,மனதைகொள்ளை கொண்டன.  இரட்டை அர்த்தம் இல்லாத மண்ணுக்கே உரிய வசனங்கள் கேட்க இனிமையாக இருந்தது. செயற்கையான, அனாவசிய சண்டை காட்சிகள் இல்லை.நாங்கள் வழக்கமாக படம் பார்க்கும் பொழுது பாட்டு, சண்டை காட்சிகள் யாவற்றையும் “ஓட்டி” விடுவோம். ஆனால் இப்படத்தை பொருத்தமட்டில் ஒரு காட்சியை கூட அப்படி “ஓட்ட” வேண்டும் என்று தோன்றவில்லை. விறு விறு என்று கதை நகர்ந்தபடியால் “பாத்ரூம்” போனபோது கூட என் மகள் “அப்பா நிறுத்தி வையுங்கள்” என்று அன்பு கட்டளையிட்டாள்...ஒரு சில நிமிடங்கள் கூட கதையின் போக்கை தவற விட மனமில்லாமல்.

அன்றாடும் நம் கிராமங்களில் பார்க்கும் துடுக்கான, அழகான, தறுதலைத்தனமான, நாயகன். அயல் நாட்டில் தந்தை சம்பாதித்து அனுப்ப இங்கு ஒரு மைனரைப்போல், தான்தோன்றித்தனமாக குறிக்கோள் ஏதுமின்றி, ரவுடித்தனம் செய்து கொண்டு திரியும் மகனாக தன் பங்கை பாங்குடன் அளவாக செய்திருக்கிறார் நாயகன். அவருக்கு ஈடு கொடுப்பது போன்ற கள்ளம் கபடமில்லா நாயகி. நாயகனின் தாய், தந்தை, தங்கை, நாயகனின் அண்ணன் என்று எல்லா கதாபாத்திரங்களும் கணகச்சிதமாக தங்கள் பங்கை அழகாக நூல் பிடித்ததைப்போன்று செய்திருந்தனர். பெரியப்பா, சித்தப்பா, பஞ்சாயத்து தலைவர் ,என்று சிறு சிறு பாத்திரங்களும் நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது.படம் முழுதும் கிண்டலும் கேலியும் என்று நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படி பிண்ணப்பட்டிருந்தது. எங்கள் மூவரின் சிரிப்பொலி கேட்டு அவ்வப்பொழுது என் மகன் “என்ன என்ன?” என்று கேட்டுச் சென்றான். அவனின் பொறுமை அவ்வளவு தான். அவனின் ரசிகத்தன்மை வடிவேலு காமெடியை இன்னும் தாண்டவில்லை. அவன் வயது எட்டுதானே!

ஆழமான, துடுக்கான, இளமையான, எல்லா வயதினரும் ரசிக்கக்கூடிய காதல் காட்சிகள். ஆபாசம் என்பது காட்சிகளிளோ, வசனங்களிளோ சிறிதும் தலை காட்டவில்லை. தாய்--மகன் பாசம் எவ்வளவு ஆழமானது என்பதை சரண்யா-விமல் பாத்திரங்கள் ஆழமாக உணர்த்துகின்றன. சான்பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை என்று அவன் மேல் அவள் பொழியும் பாசத்திற்கு அளவுகோல் இல்லை. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. அதிகம் செலவில்லாமல் ஓர் அழகான திரைஓவியத்தை உருவாக்க முடியும் என்பதற்கு இப்படம் நல்ல ஓர் எடுத்துக்காட்டு. கௌரவக் கொலைகள் நடந்தேறும் சமூகத்தில் இறுதியில் பாசமும், காதலும் தான் வெல்கிறது. இது குடும்ப கௌரவம் என்ற குடிமியைப் பிடித்துக்கொண்டு கொலைகாரர்களாக திரிபவர்களுக்கு நல்ல பாடம். இனியாவது கௌரவம் கருதி மிருகங்களாவதை விடுவோம்.

படம் பார்த்து முடித்த பின்னரும் இரண்டு நாட்களுக்கு மண்வாசனை வீசிக்கொண்டே இருந்தது.. என்னதான் வருடக்கணக்கில் வெளிநாடுகளில் வசித்தாலும் நமக்கு பரீச்சயமான நம் வயல்களையும், மக்களையும், அவர்களின் பேச்சுவழக்கையும் கேட்கும் போது மனதில் சிலு சிலு சாரல் வீசத்தான் செய்கிறது. “We feel at home" என்பது இதுதானோ?? நம் மண்ணில் வாழும் நாள் என்று வருமோ என்ற தவிப்பும் தொற்றிக்கொண்டது. அன்று பார்த்த பசுமை இன்று இல்லை, மக்களும் மாறிவிட்டார்கள்,காலம் மாறிவிட்டது என்று ஆயிரம் சமாதானம் நமக்குள் கூறிக்கொண்டாலும், நம் ஊரை விட்டு வந்த நாமும் மாறிவிட்டோம் என்பது தான் “நிதர்சன உண்மை”.

சொந்த பந்தங்கள் சூழ வாழும் வாழ்வுக்கும், யாருமின்றி என் குடும்பம்,என் மனைவி,என் குழந்தை என்று வாழும் வாழ்க்கைக்கும் எவ்வளவு வித்தியாசம்? குடும்ப சூழல் நிறைந்த இம்மாதிரியான திரைப்படங்கள் மனதில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உரிமையுடன் உற்றார் உறவினர் அறிவுரை கூறும் காட்சிகளும், பிரச்சினை எனும் பொழுது ஊர் கூடி தோள் கொடுக்கும் காட்சிகளும் நெஞ்சை வருடுகின்றன. உடையிலும்,.நடையிலும் அனைத்து கதாபாத்திரங்களும் நம்மை நம் கிராமத்து வீடுகளுக்கே இட்டுச்செல்கின்றன. காதுக்கு இனிமையான ,மனதுக்கு மென்மையான, ரம்மியமான இசை படம் முழுதும். மொத்தத்தில் மீண்டும் பார்க்க வைத்துவிட்டது என் மனதை களவாண்ட “களவானி”. நிச்சயமாக உங்கள் மனதையும் களவாடிவிடும்.

பி.கு.: படத்தில் சரண்யா சொல்வதைப் போல் நானும்,”ஆடி போய் ஆவணி வந்தால் என் மகன் டாப்ல போய்ருவான். என்று சொல்ல அதற்கு என் மகள்” நினைப்பு பொலப்ப கெடுத்துச்சாம்” என்றாள். பெத்த மனம் பித்தல்லவோ????

Saturday, July 24, 2010

சிறப்பு குடியுரிமை

இங்கே, உண்ண உணவும் இல்லை
உடுத்த உடையும் இல்லை
படுத்துறங்க இடமும் இல்லை
தலை சாய்த்து அழ ஒரு தோளும் இல்லை
தனதென்று கூற தாய் நாடும் இல்லை
அகதிகளாய் திரிகின்றோம் தினந்தோறும்.
அங்கே, நல் ஆரூடம் சொன்ன
“பால் ஆக்டோபசுக்கோ“
சிறப்பு குடியுரிமை.

தொலைதூரம் இட்டுச் செல்லும் சிறு அடிகள்.....

நான் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கட்டுரையை தமிழில் மொழி பெயர்க்க முயன்றிருக்கிறேன். இது ஒரு கன்னி முயற்சி.... உங்கள் நல்லாதரவை நம்பி நான் களத்தில் குதித்துள்ளேன்.  

                தொலைதூரம் இட்டுச் செல்லும் சிறு அடிகள்.....


சிறு சிறு விஷயங்கள் நம்முடைய வாழ்க்கைப் பற்றிய பார்வையை எப்படி மாற்றுகின்றன என்பதைக் கண்டு நான் பலமுறை வியந்துள்ளேன். நாம் காலையில் படுக்கையை விட்டு எழும் நொடி முதல் இரவு படுக்கைக்கு செல்லும் நொடிவரை நம்மைப் பற்றி ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் நினைத்துக்கொண்டு இருக்கிறார் என்றால் நம்முடைய ஒவ்வொருநாளும் ஒளி மயமானதாக மாறிவிடாதா ?

காலையில் மிகவும் ’பிசியாக’ இருக்கும் தாய் தன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவரை அலுவலகம் அனுப்பிவிட்டு படுக்கை அறைக்கு சென்று பார்க்கும் பொழுது தன் கணவர் ஏற்கனவே படுக்கையை அழகாக தட்டிப்போட்டிருப்பதை பார்த்தால் எண்ணில் அடங்கா மகிழ்ச்சியல்லவா அடைவாள்!. வானத்தில் சிறகு விரித்து பறப்பதை போன்று உணர்ந்து தன்னுடைய காலை காப்பியை அமைதியாக உட்கார்ந்து ரசித்து ருசித்து பருகுவாள்.... பல வேலைகள் பட்டியல் போட்டு அவளுக்காக காத்திருந்தாலும். இந்த பேருதவிக்காக ( அவளைபொருத்தவரை ) மனதுக்குள் தன் கணவரை பாராட்டுகிறாள். அவனுக்கென்னவோ ஐந்து நிமிட வேலை தான். ஆனால் அவளுடைய இந்த உதவியின் பலன் நாள் முழுதும் அவளின் எல்லா செயல்களிலும் பிரதிபலிக்கிறது. அவளுக்கு புத்துணர்ச்சியைஊட்டுகிறது. தன் வேலையை பங்கிட்டுச் செய்ய கணவன் தோள் கொடுக்க
இருக்கிறான் என்ற சந்தோஷம்.

"உன் குடும்பம் உனக்கு ஏன் மிக முக்கியமானது?” என்று என் மூன்றாம் வகுப்பு பயிலும் மகனின் பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவன் எழுதியிருந்த பதில் எனக்கு வியப்பாக இருந்தது. அவன் என்ன எழுதியிருந்தான் தெரியுமா? “எங்கள் குடும்பத்தில் நாங்கள் யாவரும் ஒன்றாக உணவு உண்போம், சேர்ந்தே வெளியில் செல்வோம். ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு செய்வோம். எங்களுக்குள் பாசம் இருக்கிறது. நாங்கள் ஒன்றாக வீட்டில் சினிமா பார்போம்,” என்றெல்லாம் எழுதி இருந்தான். நாம் எவ்வித முயற்சியும் இன்றி தினமும் செய்யும் அன்றாட செயல்கள் தான் இவை. ஆனால் அந்த சிறிய உள்ளத்தைப் பொருத்தவரை இவையெல்லாம் ஒருவரை ஒருவர் இணைக்கும்
இணைப்புச் சங்கிலி (bonding chains).  இவையே அவனுக்கு வாழ்கையில் நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வையும் அளித்துள்ளது.  நம்முடைய முழு ஈடுபாடு இல்லாத சில செயல்கள் சில சமயங்களில் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

சிறு வயது முதலே என் மகளுக்கு அவள் தூங்கும் முன் நான் போர்த்திவிட்டு “குட் நைட்” சொல்ல வேண்டும்.  இப்பொழுது அவளுக்கு வயது பன்னிரெண்டு.இன்றும் தினமும், ”அம்மா போர்த்தி விட வாருங்கள்“என்பாள்.  அடுப்படி வேலையை எப்படா முடித்துவிட்டு நாமும் படுப்பது என்று இருக்கும் எனக்கு, சமயத்தில் அவளின் அழைப்பு எரிச்சலை ஏற்படுத்தும். “நீயே போர்த்திக்கொண்டு தூங்கு.  நான் வேலையாக இருக்கிறேன்....  இந்த வயசிலும்
உன்னால் தானாக போர்த்திக் கொள்ளமுடியாதா?” என்று கத்துவேன். அவளும்
முணுமுணுத்துக்கொண்டே தூங்கி விடுவாள்.  தூங்கும் அவள் முகத்தில் ஓர் அதிர்ப்தி நிழலாடும்.

நிதானமாக யோசித்தால் அவளை திருப்திப்படுத்த இரண்டேநிமிடங்கள்தான் ஆகும். என் வேலையை பாதியில் நிறுத்த மனமில்லாமல்தான் நான் அதை செய்ய மறுக்கிறேன்.நான் அலுப்பு பாராமல் செய்யும் நாட்களில் அவள், ” நான் தூங்கும்பொழுது கூட என் தாய் என்னை பார்த்துக்கொள்வாள்,” என்ற நம்பிக்கையுடன் ஆனந்தமாகவும், அமைதியாகவும் தூங்கச் செல்கிறாள். என்னைப் பொருத்தமட்டில் போர்வையை போர்த்துவது ஓர் செயல். ஆனால் அவளை பொருத்தமட்டில் ஒவ்வொரு இரவும் அம்மாவின் அன்பும்,பாசமும் தன்னை போர்த்துவதாக கருதுகிறாள்.

நான் என் நண்பர்களை அடிக்கடி தொலைபேசியில் அழைத்து பேசமாட்டேன். ஆனால் அவர்கள் பிறந்த நாளன்று தவறாமல் அழைத்து வாழ்த்துவேன். இச்சிறிய செயல் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கும் என்பது என் நம்பிக்கை. மற்றவர்களை மகிழ்விக்க ஒரு சில நிமிடங்களே போதுமானது. நம் வாழ்க்கையின் ஓர் சிறு பகுதியை இதற்கு செலவிட்டால் தவறில்லை. ஆமாம் சிறு அடிகள் நம்மை எல்லையில்லா சந்தோஷப் பாதைக்கு இட்டுச் செல்லும். 

இன்றே எடுத்து வைப்போம் சிறு அடிகளை.....

Friday, July 23, 2010

இயல்பு

மூன்று வயதில்
பொம்மை பற்றி பேசினேன்
ஏழு வயதில்
தோழியைப் பற்றி பேசினேன்
பத்து வயதில்
சினிமா பற்றி பேசினேன்
பதிமூன்று வயதில்
காதலை பற்றி
பேச ஆரம்பித்தேன்
இருபது வயதில்
திருமணம் பற்றி பேசினேன்
இருபத்தைந்தில்
குழந்தை பற்றி பேசினேன்
முப்பதில்
அழகைப் பற்றிப் பேசினேன்
நாற்பதில்
கணவனைப் பற்றி பேசினேன்
ஐம்பதில்
மருமகளைப் பற்றி பேசினேன்
அறுபதில்
பேரக்குழந்தைகளைப் பற்றி பேசினேன்
எழுபதில்
சாவைப் பற்றி பேசினேன்
பெண்ணென்றால்
பேசவே பிறந்தது போல்..

Thursday, July 22, 2010

வேலி

தாலி வேலியாம்
பெண்களுக்கு
ஒரு வேளை
இரும்பில் போட்டிருந்தால்.

இன்று தங்க தாலிக்கே
தேவையாய் இருக்கிறது
“லாக்கர்” எனும் வேலி.

காதல்...

காதல்--- உணர்வு ஒன்றுதான்
அது வரும் காலத்துக்கேற்ப
பெயர் சூட்டு விழா.
பள்ளிப் பருவத்தில் வந்தால்
“பருவக் கோளாறு”
கல்லூரிப் போகும் போது வந்தால்
“காதல்”
திருமணத்திற்குப் பின்
வாழ்கை துணையின்பால் வந்தால்
“அன்பு”
பிறர் மீது வந்தால்
“காமம்”
நாற்பதில் வந்தால்
“நேசம்”
அறுபதில் வந்தால்
“பாசம்”.

குழந்தையின் சிரிப்பில்.....

குழந்தையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்
என்றவர்கள் ஏன்
கூறவில்லை
குழந்தையின் அழுகையில்
யாரைக் காண்பது
என்று???

தன்னிலை மறந்து......

தன்னிலை மறந்து.....

வாழவும் தெரியவில்லை
சாகவும் தெரியவில்லை
புறக்கண்ணும் திறக்கவில்லை
அகக்கண்ணும் திறக்கவில்லை
போதை அரக்கனின்
பிடியில்
மயங்கி கிடக்கின்றேன்
தன்னிலை மறந்து.

சிற்றன்னை

சிற்றன்னை
என்னை வளர்க்க
என் தாய் ஒருத்தி
போதவில்லையாம்,
சப்தகன்னிகளும் கிடைக்கவில்லையாம்
எனவே அழைத்து வந்தார்
என் தந்தை
சிற்றன்னை என்றொருத்தி
வந்தவள் நன்றாக பார்த்துக்கொண்டாள்
என் தந்தையை
விரட்டி அடித்தாள்
என்னையும் என் தாயையும்.

Thursday, July 15, 2010

பெருந்தன்மை

பக்கத்து வீட்டு
மர இலைகள்
என் வீட்டு காம்பவுண்டுக்குள்
விழுந்தால்
வாறிக்கொண்டு சண்டைக்குச் செல்வேன்.

மற்ற நாடுகளில் இருந்து
என் நாட்டுக்குள் கொட்டப்படும்
கழிவுகளை வரவேற்பேன்
காரணம்
“பாரின் திங்ஸ்”
* * *