Wednesday, September 22, 2010

தாய்மை

திறக்காத கண்களை
திறக்க வைத்து
பல் துலக்கி
குளிக்க வைத்து
அவசரமாய் சீருடை மாட்டி
சுட்டு வைத்த இட்லியை
வாயில் திணித்து
முழுங்கி விடு என
ஒருவாய் தண்ணீரும் கொடுத்து
புத்தகப் பையை தோளில் மாட்டிவிட்டு
பள்ளிக்கு கையசைத்து
அனுப்பி விட்டு
மாலை வரை
காத்திருப்பேன் எப்பொழுது
நீ திரும்பி வருவாய் என.


வந்த பின்
கை,கால் கழுவ வைத்து
சாப்பிட டிபனும் கொடுத்து
”எடுத்து வா” புத்தகப் பையை என்பேன்.
பையை எடுத்து வர பத்து நிமிடம்
திறப்பதற்கோ ஐந்து நிமிடம்
பாட புத்தகத்தை எடுப்பதற்கு
மற்றுமொரு ஐந்து நிமிடம்.

வீட்டு பாடம்
செய்ய வைப்பதற்குள்
என் தலைக்குள் பெரும் சூறாவளி.
காற்றின் வேகம்
மின்சாரமாய் உடம்பெங்கும் பாய
கோபத்தில் கைகளோ
உன் உடம்பில்
தடம் பதிக்க
அழுது கொண்டே முடித்திடுவாய்
வீட்டுப் பாடம் அனைத்தையுமே.
தேம்பி தேம்பி
களைத்திடுவாய்
படித்து முடித்தப் பின்
உறங்கிடுவாய்.

புயலுக்குப் பின் அமைதியாக
நீ உறங்கிய பின்
உன் அருகில்
அமைதியாய் வந்து
உன் தலையை
என் மடியில் கிடத்தி
உன் தலை கோதி
நெற்றியில் முத்த மிடுவேன்
கண்களில் நீர் நிரம்பி
கண்ணத்தில் வழிந்தோட
உன்னை வாரி அணைத்து
தூங்கும் உன்னிடம்
காதுகளில்
மெதுவாக ஓதிடுவேன்
“சாரிடா கண்ணா” என்று.
 

Sunday, September 19, 2010

ரசிகபக்தர்கள்

இன்று நாளிதழில் நான் படித்த செய்தி என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. “எந்திரன் படம் வெற்றி பெற வேண்டும் என்று வேலூர் ரசிகர் மன்றத்தினர் முட்டி போட்டு 1350 படிகள் ஏறி சாமி தரிசனம் செய்தனர்.”
எங்கே செல்கிறது நம் இளைஞர் சமூகம்? யாரோ ஒருவரின் வெற்றிக்காக இப்படி தங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கலாமா?  ரசிகர்களாக இருக்கலாம் ஆனால் கண்மூடித்தனமான ரசிகபக்தர்களாக இருப்பதனால் இவர்களுக்கு என்ன பயன்?  யாருக்காக இப்படி செய்கிறார்களோ அவர் ஒரே வரியில் “நானா அப்படி செய்யச்சொன்னேன் ?” என்று கேட்டுவிட்டு அவர் தன் வேலையை பார்க்க போய்விடுவார்.  சுடும் வெய்யிலில் முட்டி தேய இவர்கள் தங்களை வருத்திக்கொண்டு இங்கு இவர்கள் வேண்டுதலை நிறைவேற்ற அங்கு யாருக்காக இவர்கள் வேண்டுகிறார்களோ அவர் ஏசி அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார்.   இவர்களுக்கு என்ன “அவார்டா’ கிடைக்கப்போகிறது? வேறு வேலைவெட்டி இல்லாத இவர்கள்  தங்களின் குடும்பங்களுக்காக கூட  இப்படி வேண்டிக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் நம் முன் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்க இவர்களுக்கு எது பெரிய வேண்டுதலாக இருக்கிறது பாருங்கள்.  இப்படி பட்ட இந்தியாவைத்தான் திரு.அப்துல் கலாம் அவர்கள் 2020ல் பார்க்க நம்மை கனவு காணச்சொன்னாரா? தெரியவில்லை.  வாழ்க்கையில் போராடி முன்னேர வேண்டும் என்று நினைப்பவர் எவரும் இப்படி நேரத்தை விரயம் செய்ய மாட்டார்கள்.  பொறுப்புள்ள யாரும் இப்படிப்பட்ட முட்டாள்தனமான செய்கைகளை செய்ய மாட்டார்கள்.  தங்களின் தாய் தந்தைக்காக இப்படி வேண்டிகொண்டிருப்பார்களா? நம் நாட்டை காக்க வெய்யிலிலும் குளிரிலும் போராடும் வீரர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக இப்படி வேண்டியிருப்பார்களா?  அண்டை நாட்டில் அன்றாடும் உணவுக்கும் , உயிருக்கும் போராடும் நம் இனமாம் தமிழ் இனத்திற்காக இப்படி வேண்டுகிறார்களா? உலகம் முழுதும் ஒன்றும் அறியா குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியை நிணைத்து அவர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீரேனும் வடிப்பார்களா?  இப்படி எத்தனையோ வேண்டுதல்கள் நமக்காக காத்திருக்க தேவை இல்லா ஒன்றிற்காக எதற்காக வேண்டுகிறார்கள்?  கடவுள் என்ன ஒன்றும் அறியாதவனா இதற்கெல்லாம் மயங்கிவிட??  யார் யாரை இப்படி  இங்கு ஏமாற்றப்பார்க்கிறார்கள் என்பதே தெரியவில்லை.   யாருக்கு இதனால் என்ன லாபம்?  பணக்கோடியில் புரள்பவர்கள் புரண்டுகொண்டுதான் இருக்கிறார்கள்.  தெருக்கோடியில் புரள்பவர்கள் புரண்டுகொண்டுதான் இருக்கிறார்கள்..எது எப்படி ஆயினும் முட்டி தேய்வது தான் மிச்சம்.  இவர்கள் எல்லாம் சமூகத்தின் எச்சம்.......  

Thursday, September 16, 2010

சில்லரைத்தனம்

கோவிலுக்கு போவேன்
இறைவனை அருகில்
சென்று தரிசிக்க
மடித்து வைத்த காசை
யாருக்கும் தெரியாமல்
பூசாரியின்
கையில் வைத்து
தினிப்பேன்.

கோவில் வாசலில்
ஒரு வேலை
உணவுக்கு
பிச்சை எடுக்கும்
வயதான முதியவருக்கு
சில்லரை இல்லை என்பேன்.

ஊனம்

கண் இல்லை
கால் இல்லை
வாய் பேச முடியவில்லை
நாங்கள் யார்??
ஊனமுற்றோர்.

கண் உண்டு
கால் உண்டு
திறனாய் பேச வாயும் உண்டு
இதயத்தின் உள்ளிருக்கும்
சிறியதாம் மனசாட்சி மட்டும்
இல்லா நீங்கள் யார்???

Thursday, September 9, 2010

ஜுனியர் ஜோடி நம்பர் 1

                       
                        ஓடி விளையாடு பாப்பா--நீ
                         ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
                         கூடி விளையாடு பாப்பா--ஒரு
                         குழந்தையை வையாதே பாப்பா.

                         காலை யெழுந்தவுடன் படிப்பு--பின்பு
                         கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
                         மாலை முழுதும் விளையாட்டு --என்று
                         வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா.........................

   “ஸ்ருதி, ரிஷி மணி எட்டாகுது. சாப்பிட வாங்க.  சாப்டுட்டு ஒன்பது மணிக்கெல்லாம்  படுங்க.  அப்போதான் நாளைக்கு சீக்கிரமாக எழுந்திருக்க முடியும்” என்று நான் கூப்பாடு போட்டுக் கொண்டே இருந்தேன்.  “அம்மா ப்ளீஸ் டென் மினிட்ஸ், ஃபைவ் மினிட்ஸ்” என்று சாக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  இருவரும் ஒற்றுமையாக இருக்கும் நேரம் டிவி பார்க்கும் நேரம் ஒன்று தான்.  அந்த நேரத்தில் பார்க்கையில் பாசமலர் சிவாஜி,சாவித்திரி தோற்றுவிடுவார்கள்.  மற்ற நேரங்களில் மூன்றாம் உலகப்போர் மயம் தான்.  என்ன தான் அப்படி பார்க்கிறார்கள் என்று நானும் சென்று பார்த்தேன்.  “அம்மா நீங்களும் வாங்க.  ஜூனியர் ஜோடி நம்பர் 1 பாருங்க.  எல்லோரும் எப்படி நல்லா டான்ஸ் ஆடுறாங்க தெரியுமா? என்று கூறிய என் மகள் என்னையும் அந்த “இடியட் பாக்ஸ்” முன் உட்கார வைத்தாள். கொஞ்சம் நேரம் அமைதியாக இருக்கலாம் என்று நானும் பார்க்க ஆரம்பித்தேன்.   பார்க்க நன்றாகத்தான் இருந்தது.  ஆறு வயது முதல் குழந்தைகள் பாட்டுக்கேற்ப ரசனையுடன் நடனமாடியது அழகாக இருந்தது.  மறுநாளும் அதே நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது.   இப்படியே இரண்டு வாரங்கள் தொடர்ந்து பார்த்தேன்.  யார் ஜெயிப்பார்கள் என்ற ஆர்வம் எனக்குள்ளும் தொற்றிக்கொண்டது.  ஒரு நாள் அந்த நிகழ்ச்சியைப் பற்றி யோசித்து பார்க்கையில் பல உண்மைகள் புலப்பட்டது.

    ஜூனியர் ஜோடி நம்பர் 1 என்பது சிறுவர்களுக்கான நடன போட்டி.  அதில் ஒரு சிறுவனும், சிறுமியும் ஜோடியாக நடனமாட வேண்டும்.  அவர்களின் நடனத்தை பார்த்து யார் சிறந்த ஜோடி என்று தேர்ந்தெடுக்க ஒரு நடுவர் குழு.  இதில் ஜெயிப்பவர்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள பரிசுகள்.  இதில் கலந்து கொள்பவர்களுக்கும் பரிசுகள்.  எல்லாவற்றுக்கும் மேலாக உலகம் முழுதும் அவர்களை தொலைக்காட்சியில் காண இயலும்.    நம் எல்லோருக்கும்  நம் முகம் டிவியில் தோன்றினால் மகிழ்ச்சிதானே?  கல்யாண வீட்டு வீடியோவில் கூட நாம் போஸ் கொடுப்போம்.  இப்படி இருக்கையில்  எந்த  பெற்றோருக்குத்தான் தன்  பிள்ளையை தொலைக்காட்சியில் பார்க்க ஆசையிருக்காது.   அதுவும் உலகம் முழுதும் பார்க்கப்படுவார்கள் என்றால் டபுள் மகிழ்ச்சிதானே?  முதலில் இந்த நிகழ்ச்சியின் பாசிடிவ் விஷயங்களை யோசித்தேன்.  முதலாவதாக நிகழ்ச்சியில் பங்கு பெறும்        குழந்தைகள் நன்றாக ஆட , நேர்த்தியாக ஆட கற்றுக் கொள்கிறார்கள்.  இரண்டாவது, ஒரு சிலருக்கு தன்னம்பிக்கை கூடுகிறது.  மூன்றாவது, கடினமாக உழைக்க கற்றுக் கொள்கிறார்கள்.  சக போட்டியாளருடன் சகஜமாக பழகும் வாய்ப்பு கிட்டுகிறது.  மனதை கஷ்டப்படுத்தும் விமர்சனங்களை கூட பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டது போல நடிக்க கற்றுக்கொள்கிறார்கள்.

     இந்நிகழ்ச்சியினால் என்ன என்ன பாதிப்புக்குள்ளாகிறார்கள் இக்குழந்தைகள் என்பதையும் நான் எண்ணிப்பார்க்க தவறவில்லை.  கெமிஸ்டரி, பிசிக்ஸ் என்றால் என்ன என்று தெரியாத வயதில் இவர்களிடம் நடுவர்கள், “ உங்கள் ஜோடி கெமிஸ்டரி நன்றாக உள்ளது” , என்று கூறுகிறார்கள்.  அதன் அர்த்தம் புரிகிறதா இக்குழந்தைகளுக்கு என்று எனக்கு புரியவில்லை.  புரியாமல் இருப்பதே மேல் என்று நான் நினைக்கிறேன்.  ஆனால் எல்லாம் புரிந்தது போல் தலை ஆட்டுவார்கள் இந்த பொம்மலாட்ட குழந்தைகள்.  “ஆட்டுவிப்பார் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா?  பால்ய திருமணம் ஒழிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் பால்ய ஜோடிகள் திரையில் எப்படி அங்கீகரிக்கப்படுகிறது??  இதை காணும் பார்வையாளர்கள் கை தட்டி மகிழ்கிறார்கள்.  இப்படி பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கலாமா?

     ஆடுவது காதல் பாடல்களுக்கு .  அதற்கு நடுவர்களாக அரியாசனத்தில் வீற்று இருப்பவர்கள்,” உங்கள் எக்ஸ்ப்ரெஷன் சூப்பர்”, என்பார்கள்.  ஆறு வயதுக்கும் , பத்து வயதுக்கும் எப்படி காதல் பற்றி உணர்வுகளை புரிந்து அரிந்து, முகத்தில் உணர்ச்சிகளை  கொண்டு வர முடியும்?  ஆனால் இந்நிகழ்ச்சியில் இவை நடக்கிறது.   அவர்கள் அந்த உணர்வுகளை உணர்ந்து வெளிகொணர வைக்கப்படுகிறார்கள்.   டிவி, சினிமா , இன்டர் நெட் என்று பார்ப்பதால்தான் இந்நாட்களில் பல குழந்தைகள் சிறு வயதிலேயே வயதுக்கு வந்துவிடுகிறார்கள் என்பது மருத்துவ ரீதியாக நீரூபிக்கப்பட்டிருக்கிறது.   Puberty is advanced to younger age these days due to over exposure.  பிஞ்சிலேயே பழுத்து விடுகிறார்கள்.  இப்படி இருக்கும் காலகட்டத்தில் நடன நிகழ்ச்சி என்ற பெயரில் குழந்தைகளை காதல் பாட்டுகளுக்கு உணர்ச்சி பொங்க ஆட வைப்பது என்னைப் பொருத்த வரையில் கண்டிக்கத்தக்கது.  இதற்காக choreography என்ற பெயரில் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் நடன அசைவுகளும் அபத்தம். Some of the dance movements are so obscene. எப்படித்தான் தங்கள் குழந்தைகளை இப்படி கெடுக்க பெற்றோருக்கு மனம் வருகிறதோ தெரியவில்லை.  குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள். உங்கள் நிறைவேறாத ஆசைகளை அவர்கள் மூலம் தீர்த்துக்கொள்ளப் பார்க்காதீர்கள்.  அவர்களுக்கும் ஆசைகள் உண்டு.  அவர்களுடைய உலகம் கள்ளம் கபடமற்றது அதில் சேற்றை வாரி இரைத்து அசிங்கப்படுத்தாதீர்கள். The children loose their childhood innocence with such exposure.

    சிறு வயதில் இப்படி போட்டிகளில் கலந்து கொண்டு அவர்கள் பணம் சம்பாதிக்கும் கருவி ஆகிவிடுகிறார்கள்.  இதுவும் ஒரு வகையில் குழந்தை தொழில் தான்(child labour) .   இதற்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.  சிறு வயதிலேயே பணம் சம்பாதிக்க வழி தெரிந்துவிடுவதால் அவர்களுக்கு படிப்பின் மீது கவனம் குறையும் வாய்ப்புள்ளது.  பெற்றோர்கள் தங்களுக்கு பெருமை சேர வேண்டும் என்ற காரணத்திற்காக பலிகடாவாக குழந்தைகளை பயன் படுத்துகிறார்கள்.  அவர்கள் வெறும் நிகழ்காலத்தை யோசிக்கிறார்கள்.  எதிர்காலத்தை மறந்து விடுகிறார்கள்.  போட்டி, போட்டி, போட்டி, ஜெயிக்க வேண்டும், ஜெயிக்க வேண்டும், என்ற மந்திரமே ஓதப்படுகிறது.  இப்படி போட்டி சூழலிலேயே வளர்ந்தால் பிற்காலத்தில் எல்லாமே ஒரு போட்டியாகத்தான் பார்ப்பார்கள்.  எதிலும் , எல்லாவற்றிலும் ஜெயித்தாக வேண்டும் என்று போதிப்பது பெரும்பாலும்  நம் நாட்டில்தான்.  இதனால் தான் நம் சமுதாயமே ஒரு போட்டி மனப்பான்மை உடைய சமுதாயமாக இருக்கிறது. எதிலும் நம்மால் எளிதில் திருப்தி அடைய முடிவதில்லை.

     பிராக்டீஸ் (practice) என்ற பெயரில் அச்சிறு மொட்டுக்கள் கசக்கப்படுகிறார்கள்.  பெற்றோர்கள் அவர்களின் உடல்வலியை உணர்வதாக தெரியவில்லை. ஒரு நிமிடம் அக்குழந்தைகளின் வலியை உணர்ந்தால் இப்படி அவர்களை இரவு ,பகல் பாராது வாட்டி வதைக்க மாட்டார்கள்.  படிப்பு ஒரு புறம், டான்ஸ் ஒரு புறம் என்று அவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சல்.  உடலளவிலும் பாதிப்படைகிறார்கள்.   இதில் நான் இன்னொன்றும் கவனித்து இருக்கிறேன்.  நிகழ்ச்சியில் பங்கு   பெறும் குழந்தகளைவிட அவர்களின் பெற்றோர் மிகுந்த டென்ஷனகாக காணப்படுகிறார்கள்.  சிலர் கை பிசைந்து கொண்டே இருப்பார்கள்.   எளிதாக உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறார்கள்.   எல்லா ரியாலிட்டி ஷோவிலும் இது தான் நடக்கிறது. 

     சூப்பர் சிங்கர் ஜுனியர் என்றொரு நிகழ்ச்சி முன்பு நடந்தது.  அது ஒரு பாட்டு பாடும் போட்டி. அதில் ஐந்து வயது சிறுவனை அவனைவிட பெரிய குழந்தகளுடன் போட்டி போடச் செய்து அழகு பார்க்கிறார்கள்.  Ofcourse he is a child prodigy.  ஆனால் நரம்பு தெரிக்க அந்த குழந்தை கஷ்டமான பாடல்களை தேர்வு செய்து கஷ்டப்பட்டு பாடும் பொழுது கோபத்தில் என் நரம்பும் தெரிக்கும்.  என் கோபமெல்லாம் பெற்றோர் மீது தான்.  அந்த பாலகன் பாடும் பொழுது தன் தந்தையை பார்த்துக்கொண்டே பாடுவான்.  “அப்பா நான் ஒழுங்காக பாடுகிறேனா? தப்பு செய்திருந்தால் மன்னிக்கவும்” என்று பயம் கலந்த அவன் பார்வை ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.  அவன் பாடும் பொழுது அவன் தந்தை கயிற்றின் மேல் நடப்பவரை போல் முழி பிதுங்கி அமர்ந்திருப்பார்.   பெற்றோரை திருப்திபடுத்த வேண்டுமே என்ற கட்டாயத்திற்கு குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள்.  இதற்காக முகம் சுழிக்காமல் மிக மிக கடினமாக உழைக்கிறார்கள்.  பெற்றோரின் கோபதாபங்களையும் இவர்கள் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. 

     பள்ளிகளும் தங்கள் பள்ளிக்கு இப்படிபட்ட நிகழ்ச்சிகள் மூலம் பெயர் கிடைக்கிறது என்ற காரணத்தினால் attendance பற்றி கவலைபடாமல், படிப்பை பற்றி கவலைப்படாமல் இக்குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறார்கள்.  தொலைகாட்சி நிறுவனங்களும் வருமானம் என்ற நோக்கிலேயே இம்மாதிரியான நிகழ்ச்சிகளை அள்ளி வீசுகிறார்கள்.  அவர்களை கேட்டால் “பார்த்து ரசிக்க ஆட்கள் இருக்கும் பொழுது ரசிகர்களின் ரசனைக்கேற்ப படைப்பது தான் எங்கள் வேலை” என்று தங்கள் தரப்பு நியாயத்தை மனசாட்சியை விற்று கூறுகிறார்கள்.

     பள்ளிகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  குழந்தைகள் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.  ஆனால் அங்கு எல்லோர் முன்னிலையிலும் அவர்கள் விமர்சிக்கப்படுவதில்லை.  உலகெங்கும் தொலைகாட்சியில் பல கோடி மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் அக்குழந்தைகளை ஆட விட்டு நிறை குறைகளை எல்லோர் முன்புப் விவாதிப்பது, விமர்சிப்பது ஆலோசனை கூறுவது என்பது அக்குழந்தைகளை உயிரோடு தோளுரிப்பு செய்வது போன்றது.  பெரியவர்களான நாமே நம்மை யாரேனும் குறை கூறிவிட்டால் சட்டென்று ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இல்லாமல் இருக்கிறோம் . எல்லோர் முன்பும் இப்படி கூறிவிட்டார்களே என்று எத்தனை குழந்தைகள் அழுகின்றன, தலை குணிந்து நிற்கின்றனர்.  இதனை ஏன் பெற்றோர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?  குழந்தைகளுக்கு அவமானம் என்றால் அது அவர்களுக்கும் தானே?  மனரீதியில் அவர்கள் பாதிப்புள்ளாகிறார்கள்.  சிலர் தங்கள் தன்னம்பிக்கையை இழக்கலாம்.

       படிக்க வேண்டிய வயதில் இப்படி ஆடல் பாடல் என்று கவனத்தை சிதற விடுகிறார்கள்.  நடனத்திற்காக பாடல்களை மனப்பாடம் செய்யும் நேரம் பாடங்களை படிக்கலாம்.  வாழ்க்கையில் கலை, விளையாட்டு எல்லாம் தேவைதான்.  ஆனால் படிப்பை பணயம் வைத்து சிறு வயதில் மற்றவற்றில் போட்டி போடுவது எவ்வளவு தூரம் பயனுள்ளதாக இருக்கு?.  கண்ணை விற்று ஓவியம் வாங்குவதற்கு சமம்.    திறமைகளை வெளிக்கொணர இவையெல்லாம் ஒரு பாதை தான்.  ஆனால் இதுவே வாழ்க்கைபாதை ஆகி விடமுடியாது.  படிப்புக்கும் இம்மாதிரியான நிகழ்ச்சிக்கும் சரிசமமாக நேரம் ஒதுக்கவும் முடியாது.  They cannot do justice to their studies.  அவர்களின் கவனம் முழுதும் ஆடல் பாடலில் லயித்துவிடும்..  அப்படியே அவர்களில் சிலர் இரண்டிலும் சிறந்து விளங்கினால் அதற்காக அவர்கள் எவ்வளவு பாடு பட வேண்டும்.  இப்படி ஜெயித்து வருவதினால் எதிர்காலத்தில் என்ன பயன்??

     எல்லாமே உலகமயமாகி போன இக்காலத்தில் கல்வி அறிவு மிக மிக முக்கியம்.  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.  குழந்தைகளை நேர்வழியில் இட்டுச்செல்வது பெற்றோரின் கடமை.  எத்தனையோ பேர் சிறு வயதில் புகழின் உச்சியில் இருந்துவிட்டு பின் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள்.   இப்படி பட்ட நிகழ்ச்சிகள் மூலம் சிறு வயதில் limelight க்கு வருவதினால் நிஜ வாழ்க்கையின் அழகினை, நிதர்சனத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.   சிறு வயதில் புகழ் பெறுவதால் அதை அவர்களுக்கு கையாள தெரிவதில்லை.  குருவி தலையில் பனங்காயை வைத்தது போன்று ஆகிவிடுகிறது.  தாங்கள் உபயோகப்படுத்தப்படுகிறோம் என்பதை அவர்கள் உணரும் வயதும் இல்லை.

                        ”தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
                       முந்தி இருப்பச் செயல்”
                      
என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.   ”ஒரு தந்தை தன் மகனுக்கு செய்யும் பெரிய உதவி யாதெனில், அவனைக் கற்றோர் அவையில் முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலேயாகும்”.  நாம் நம் குழந்தைகளை குழந்தை பருவத்தை அனுபவிக்க விடவேண்டும்.  அவர்களை மனித நேயம் மிக்க மனிதர்களாக வளர உதவ வேண்டும்.  இதுவே நம் கடமை. 

     இப்படியாக பலவாறு யோசித்து நான் இனி இந்நிகழ்ச்சியை பார்ப்பதில்லை என்று முடிவு செய்தேன்.  குழந்தைகள் தங்களை வருத்திக்கொண்டு நம்மை சந்தோஷப்படுத்துவதை என்னால் ஏற்கமுடியவில்லை.எனவே இப்படிபட்ட நிகழ்ச்சிகளுக்கு நம் ஆதரவை கொடுக்காமல் இருப்பதே நம்முடைய எதிர்கால சந்ததியருக்கு நாம் செய்யும் நற்செயல்.  மலரட்டும் இம்மொட்டுக்கள் அப்பழுக்கில்லா மலர்களாக.........  பாரதியின் பாட்டுக்கேற்ப அவர்கள் குழந்தைபருவத்தை சந்தோஷமாக கழிக்கட்டும்.