Saturday, June 1, 2019

பிராத்தனை!!

பிராத்தனை!!
நல்லோர் வாழ்ந்திட வேண்டும்
தீயோர் திருந்திட வேண்டும்
பகை ஒழிந்திட வேண்டும்
பழி உணர்ச்சி விலகிட வேண்டும்
லஞ்ச லாவண்யம் அகன்றிட வேண்டும்
பொய்யும் திருட்டும் மறைந்திட வேண்டும்
தண்ணீர் பெருகிட வேண்டும்
விவசாயம் தழைத்திட வேண்டும்
ஏழ்மை இல்லா நிலை வேண்டும்
கல்வி செல்வம் கிட்ட வேண்டும்
மண்ணும், காடும் காத்தல் வேண்டும்
நோய் யாவும் போக்கிட வேண்டும்
ஊர் கூடி தேர் இழுத்திட வேண்டும்
நல்லாட்சி அமைந்திட வேண்டும்
பூமி குளிர்ந்திட வேண்டும்
மக்கள் மனம் மகிழ வேண்டும்
பாதுகாப்பாய் உணர வேண்டும்
ஒற்றுமை ஓங்க வேண்டும்
யாவரும் சமம் என்ற நிலை வேண்டும்
நன்மை என்றும் மலரவேண்டும்
நிம்மதியான வாழ்வு வேண்டும்

மாற்றம்!

மாற்றம்!
குதிரை மேல் ஏறி
வேட்டைக்கு செல்லும்
மதுரை வீரன் மாதிரி
கம்பீரமாய் பவனி
வந்த மேகம்
சிறிது நேரத்தில்
சுருங்கி, சாதுவாகி
ராமருக்கு தண்ணீர்
கொண்டு செல்லும்
அணிலாய் மாறியது!
மனிதன் மட்டுமா
மிருகமாய் மாறுவான்?
மேகம் தான் தோற்றம்
மாறியதா?
அல்ல
நோக்கும் கண்களின்
பார்வை மாறியதா?

#pray for Nesamani

நேசமுடன்
மணி அடித்து
பாசமுடன்
எனை
எழுப்பிய
என் கைதொ(ல்)லை பேசியின்
தலையில் ஓங்கி
அந்த சுத்தியலால்
ஓர் அடி அடிக்க
வேண்டும் என
ஆசை இருந்தும்,
நட்டம் எனக்குத்தானே
என உணர்ந்து
ஆசையுடன் அதை
கையில் எடுத்து
அமைதியாய் இருக்கும் படி
அனைத்து வைத்தேன்....
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமாம். வெட்டியாய் பொழுதை கழித்தாலும் அதில் கூட ஊரோடு ஒன்றி வாழ வேண்டுமாம். அறியாதாராக இருப்பினும் பிறர் வாழ நினைப்பது அவருக்காக ப்ராத்திப்பதும் தான் நம் இனமாம். ப்ரச்சணைகள் கோடி நம்மை சூழ்ந்திருப்பினும், சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்று நினைத்து வாழ வேண்டுமாம்.ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்குவதும் ஓர் கலையாம்.பொய்யை நிஜமாக்கி , அதையே வம்பாக்கி மகிழ்வதும் பொழுது போக்காம். நேசமணிக்காக கூட்டு ப்ராத்தனையில் கலந்துகொ(ல்ல)ள்ள வில்லை என்றால் நாம் இரக்கமற்றவர் ஆகிவிடுமோமாம். தலைமை ஏற்கும் விழா ஓர் புறம், இங்கு தலை காக்கும் வேண்டுதல் மறுபுறம்...எந்தபுறத்தில் சேர்வதென்று அறியாமல் தன் வேலை செய்வதே நிதர்சனம்......
காலங்காத்தால இப்படி பிச்சுக்கிட்டு அலையவச்சுட்டாங்களே இந்த நேசமணி பிரியர்ஸ்....யார் இந்த நேசமணி, என்ன ஆனது இவருக்கு, எப்படி ஆனது என்று நூறு கேள்விகள் மண்டையை குடைய அலுவலகத்தில் மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்த கணவரை தொலைபேசியில் அழைத்து, என் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டது என் இன்றைய “மகிழ்ச்சி”. ஏதோ இன்றைக்கு என் ராசி நல்லதாக இருந்த படியால் கணவரிடம் வாங்கி கட்டிக்கொள்ளவில்லை. முக்கியமான விஷயங்களைக் கூட அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வரை காத்திருந்து கேட்டுப் பழகிய எனக்கு இன்று இந்த “நேசமணி” அடித்த ஒலி என் காதை கிழித்து விட்டது. என் மண்டையில் சுத்தியலால் யாரோ அடித்து கொண்டே இருந்தது போல் இருந்தது. எதற்காக இவ்வளவு அவசரமாக, வேலை வெட்டியை விட்டு விட்டு தொலைபேசியில் அழைத்து என் சந்தேகங்களை விளக்கிக் கொண்டேன் என்று எனக்கே தெரியவில்லை. ஒன்றும் இல்லா விஷயத்திற்கு தூபம் போடுவதில் எனக்கும் பங்கு இருக்கிறதா? என்னவாக இருந்தாலும் இருக்கட்டும் நேசமணி சீக்கிரமே குணமாகி பத்திரமாக வீடு திரும்பினால் தான் பலருக்கு அவர்கள் வேலை ஞாபகத்திற்கு வரும்.....நாடு சுபிட்சம் பெரும்......
#pray for Nesamani

சுமை தாங்கி

பனிக்குடம்
உடைந்ததென்னவோ
கருவுற்றிருந்த
வானமாதேவிக்குத்தான்!
ஈன்றெடுத்தவளோ
பூமாதேவி!
அதுவும் ஒரு பிள்ளை
இரு பிள்ளை இல்லை!
ஓராயிரம் பிள்ளைகளை!
ஊரார் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானாய்
வளர்வது இதுதானோ?
அவர்களுக்குள்
என்ன ஒரு புரிதல்!
சுமக்கும் பாரம்
ஒருத்திக்கு
ஈன்றெடுக்கும் வலி
ஒருத்திக்கு!
மனிதன் சுகம் பெற
இவள் இருவரும்
சுமை தாங்கிகளாய்
ஆனார்களோ?

தானா வந்து விழுந்தது.......

தானா வந்து விழுந்தது.......
ஒட்டு கேட்பது என்பது தவறு தான். ஆனால் தானாக காற்று வாக்கில் காதில் வந்து விழும் வார்த்தைகளை ஒட்டு கேட்பது என்று எப்படி எடுத்துக்கொள்வது? முகநூலில் தானாக கண் முன் வந்து விழும் ”feed”களை எந்த ஒரு நோக்கமும் இன்றி பார்த்து மகிழ்வதை போன்றது தான் இதுவும். இப்படித்தான் தான் பேருந்திற்காக காத்திருக்கும் பொழுது இரு நடுத்தர வயது, அதாவது என் வயது ஒத்தவர்களின் உரையாடல் என் காதுகளில் ஒட்டிக்கொண்டது. நம் வயது ஒத்தவர்களாக இருக்கிறார்களே நம்மைப் போன்று ஏதாவது ஒரு விஷயத்தைதான் பேசி ஆராய்வார்கள் என்று நினைத்து கைதொலைப்பேசியை பைக்குள் வைத்துவிட்டு அவர்கள் சம்பாஷனையில் கவனத்தை செலுத்தினேன்.
பெண்மணி 1: இத்தன வருஷம் எப்படியோ ஓட்டியாச்சு. இனி இத வச்சு ஓட்ட முடியாது போல. ரொம்ப கஷ்டம். என்ன பன்றதுனு தெரியல.
பெண்மணி 2: அது சரி, ஓட்னது தான் ஓட்டிட்ட , முடிஞ்ச அளவு சமாளிச்சு பாரு.
பெண்மணி 1: வேற வழி. ஸ்பேர் பார்ட்ஸ் ரிப்பேர்னா எதாவது புதுசா வாங்கி போட்டு மாத்தலாம். இது ”make ஏ” தப்பா இருக்கே. ”modelலே ” சரியில்ல. வாங்கும் பொழுது ஒழுங்கா யோசிக்காம சரினு சொல்லிட்டேன். அப்போ விசாரிச்சப்போ எல்லோரும் இது ரொம்ப நல்லா இருக்கும் என்று certificate கொடுத்தாங்க. நம்பி வாங்கிட்டேன். இப்போ மாத்தவும் முடியாம, வச்சு ஓட்டவும் முடியாம தவிக்கிறேன்.
பெண்மணி 2: ஆமா ஆமா, மாடலே தப்புனா நீ என்ன செய்வ. இப்போ போய் வேற மாத்துனா நல்லாவா இருக்கும்?நீயே மாத்தறதுக்கு ரெடினாலும், இந்த மாடலை வாங்க யாரு இருப்பாங்க இப்ப?
இப்படியே கொஞ்சம் நேரம் அவர்கள் உரையாடல் போய்க்கொண்டிருந்தது. அந்த சுவாரஸ்யத்தில் நான் என் பேருந்தை விட்டுவிட்டு அடுத்த பேருந்திற்காக காத்திருக்க நேர்ந்தது. அவர்கள் வீட்டு மிக்ஸியோ அல்லது க்ரைண்டரோ அல்லது வாஷிங் மெஷினோ இப்படி அவர்களுக்கு தொல்லை கொடுக்கிறது போலும். எவ்வளவு அலுத்துக்கொள்கிறார்கள் என்று தான் நான் முதலில் நினைத்தேன். இது எல்லோர் வீட்டிலும் நடப்பது தானே! போக போகத்தான் புரிந்தது அந்த தப்பான மாடல் அவர் வீட்டு பேசா மெஷின்கள் அல்ல அவரின் வாய் பேசும் கணவர் மெஷின் என்று. ஆஹா! இது உலக ப்ரச்சனை போல இருக்கிறதே! இந்த கணவர் மாடல் மெஷின் எல்லா ஊரிலும் மக்கர் தான் செய்யும் போல என்று நினைத்துக்கொண்டு, “யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுகிறதே “ என்ற நல்ல எண்ணத்தில் திளைத்து அடுத்து வந்த பேருந்தில் ஏற ஆயத்தமானேன்....... .இப்பவும் நான் சத்தியமா சொல்கிறேன் நான் ஒட்டு கேட்கவே இல்லை....இல்லை ...... இல்லை..... யுவர் ஆனர்!