Saturday, June 1, 2019

தானா வந்து விழுந்தது.......

தானா வந்து விழுந்தது.......
ஒட்டு கேட்பது என்பது தவறு தான். ஆனால் தானாக காற்று வாக்கில் காதில் வந்து விழும் வார்த்தைகளை ஒட்டு கேட்பது என்று எப்படி எடுத்துக்கொள்வது? முகநூலில் தானாக கண் முன் வந்து விழும் ”feed”களை எந்த ஒரு நோக்கமும் இன்றி பார்த்து மகிழ்வதை போன்றது தான் இதுவும். இப்படித்தான் தான் பேருந்திற்காக காத்திருக்கும் பொழுது இரு நடுத்தர வயது, அதாவது என் வயது ஒத்தவர்களின் உரையாடல் என் காதுகளில் ஒட்டிக்கொண்டது. நம் வயது ஒத்தவர்களாக இருக்கிறார்களே நம்மைப் போன்று ஏதாவது ஒரு விஷயத்தைதான் பேசி ஆராய்வார்கள் என்று நினைத்து கைதொலைப்பேசியை பைக்குள் வைத்துவிட்டு அவர்கள் சம்பாஷனையில் கவனத்தை செலுத்தினேன்.
பெண்மணி 1: இத்தன வருஷம் எப்படியோ ஓட்டியாச்சு. இனி இத வச்சு ஓட்ட முடியாது போல. ரொம்ப கஷ்டம். என்ன பன்றதுனு தெரியல.
பெண்மணி 2: அது சரி, ஓட்னது தான் ஓட்டிட்ட , முடிஞ்ச அளவு சமாளிச்சு பாரு.
பெண்மணி 1: வேற வழி. ஸ்பேர் பார்ட்ஸ் ரிப்பேர்னா எதாவது புதுசா வாங்கி போட்டு மாத்தலாம். இது ”make ஏ” தப்பா இருக்கே. ”modelலே ” சரியில்ல. வாங்கும் பொழுது ஒழுங்கா யோசிக்காம சரினு சொல்லிட்டேன். அப்போ விசாரிச்சப்போ எல்லோரும் இது ரொம்ப நல்லா இருக்கும் என்று certificate கொடுத்தாங்க. நம்பி வாங்கிட்டேன். இப்போ மாத்தவும் முடியாம, வச்சு ஓட்டவும் முடியாம தவிக்கிறேன்.
பெண்மணி 2: ஆமா ஆமா, மாடலே தப்புனா நீ என்ன செய்வ. இப்போ போய் வேற மாத்துனா நல்லாவா இருக்கும்?நீயே மாத்தறதுக்கு ரெடினாலும், இந்த மாடலை வாங்க யாரு இருப்பாங்க இப்ப?
இப்படியே கொஞ்சம் நேரம் அவர்கள் உரையாடல் போய்க்கொண்டிருந்தது. அந்த சுவாரஸ்யத்தில் நான் என் பேருந்தை விட்டுவிட்டு அடுத்த பேருந்திற்காக காத்திருக்க நேர்ந்தது. அவர்கள் வீட்டு மிக்ஸியோ அல்லது க்ரைண்டரோ அல்லது வாஷிங் மெஷினோ இப்படி அவர்களுக்கு தொல்லை கொடுக்கிறது போலும். எவ்வளவு அலுத்துக்கொள்கிறார்கள் என்று தான் நான் முதலில் நினைத்தேன். இது எல்லோர் வீட்டிலும் நடப்பது தானே! போக போகத்தான் புரிந்தது அந்த தப்பான மாடல் அவர் வீட்டு பேசா மெஷின்கள் அல்ல அவரின் வாய் பேசும் கணவர் மெஷின் என்று. ஆஹா! இது உலக ப்ரச்சனை போல இருக்கிறதே! இந்த கணவர் மாடல் மெஷின் எல்லா ஊரிலும் மக்கர் தான் செய்யும் போல என்று நினைத்துக்கொண்டு, “யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுகிறதே “ என்ற நல்ல எண்ணத்தில் திளைத்து அடுத்து வந்த பேருந்தில் ஏற ஆயத்தமானேன்....... .இப்பவும் நான் சத்தியமா சொல்கிறேன் நான் ஒட்டு கேட்கவே இல்லை....இல்லை ...... இல்லை..... யுவர் ஆனர்!

No comments: