Monday, July 15, 2019

பிறந்த பயன்......

பிறந்த பயன்......
வார இறுதியாய் இருக்கிறதே ஒரு நாள் சமையலுக்கு விடுமுறை கொடுத்து விடுவோம் என்று நினைத்து சனி இரவு உணவு சாப்பிட வெளியில் சென்றோம். நேரம் ஆகிவிட்டதால் எனக்கு ஒரு தோசை மட்டும் போதும் என்று ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தேன். கணவர் ஏதோ அவர் நாக்கு ருசிக்கேற்ப order செய்தார்.
என் தோசை சீக்கிரமே வந்தது. நான் சாப்பிட தொடங்கி விட்டேன். Order எடுத்த பையன் அருகில் வந்தான். அவனுக்கு ஒரு இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஆறு வயது இருக்கும். கணவரைப் பார்த்து,”அண்ணா , நீங்க ஆம்லெட் கேட்டீங்க. ஆனா வெங்காயம் இல்ல. வேற எதாச்சும் கொண்டு வரவா?” என்று கேட்டான். கணவரும், “சரி first சூப் கொண்டு வா , வேற என்ன வேணுனு அப்புறம் order செய்யறேன்,” என்றார். அதற்குள் நான் என் தோசையை சாப்பிட்டு முடித்து இருந்தேன்.
என் தட்டு காலி ஆனதை பார்த்த அந்த பையன்,”Aunty, உங்களுக்கு ஏதாவது வேணுமா?” என்றான். Aunty என்ற வார்த்தையை கேட்டவுடன் எனக்கு பக்க்க்க்க் என்று நெஞ்சுக்குள் ஒரு வித வலி தோன்றி மறைந்தது. அதனை வெளிக்காட்டாமல்,” இல்லப்பா , எனக்கு போதும்,” என்றேன். அவன் அங்கிருந்து சென்றப் பின்,” ஏங்க, நீங்க மட்டும் அண்ணன், நான் மட்டும் aunty ஆ? என்ன பாத்தா aunty மாதிரியா தெரியுது,நம்மூர்ல ஏன் பொம்பளைங்னா ஒரு வயசுக்கு அப்புறம் aunty அதுவே ஆண்கள்னா எந்த வயசானாலும் அண்ணானு கூப்பிடறாங்க?”என்று கோபமாகவே கேட்டேன். அந்த பையனிடம் என் கோபத்தை காண்பிக்க முடியாதல்லவா!
இதை கேட்ட கணவர் முகமெல்லாம் இன்ப நரம்பு பாய்ந்தோடி முகமே சிவப்பாக மாறியது. எனக்கோ கோபத்தில் முகம் சிவந்தது. அவருக்கு ஒரே சந்தோஷம். “அவன் உண்மையை தானே சொல்லி இருக்கான். நீயெல்லாம் aunty தானே? “என்றார். “அப்போ நீங்க மட்டும் ஏன் அண்ணன்?,”என்றேன். அதற்கு அவர், “ பாக்க aunty மாதிரி இருந்தா அப்படி தான் கூப்பிடுவாங்க. என்ன பாத்தா youngஆ தெரிஞ்சுருக்கு,”என்றார் .
சாப்பிட வந்த இடத்தில் எங்கள் பஞ்சாயத்தை வைத்துக்கொள்வது சரியல்ல என்று நான் அமைதியாக இருந்துவிட்டேன். பின் காரில் போகும் பொழுது இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே போனேன். ஏறக்குறைய அந்த பையனின் வயதை ஒத்த என் மகளுடைய நண்பர்கள் aunty என்று கூப்பிடும் பொழுது வராத கோபம், என் தோழிகளின் பிள்ளைகள் என்னை aunty என்று கூப்பிடும் பொழுது வராத கோபம் ஏன் இன்று இப்படி தலை விரித்தாடியது?
யாரோ ஒரு தெரியாத நபர் aunty என்று கூப்பிட்டது பிடிக்கவில்லையா? அப்படி இருக்க வாய்ப்பில்லை. நம்மூரில் பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் இல்லை. இந்த பையனும் ஊரில் இருந்து வந்தபடியால் safe ஆக aunty என்று அழைத்திருக்கலாம். ஏன் அக்கா என்று அழைக்கவில்லை? நம்மை பார்த்தால் அவ்வளவு வயதானவளாகவா தெரிகிறது? பலர் நம்மிடம் “உங்களுக்கு வயசே தெரியல.இன்னும் அப்போ பாத்த மாதிரியே இருக்கீங்கனு சொன்னதெல்லாம் பச்சை புளுகா?நமக்கு வயதாவதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? வயதாவதை கண்டு பயப்படுகிறேனா? அல்லது என் கோபத்திற்கான காரணம் இந்த காரணங்கள் எதுவுமே இல்லாமல் என்னை aunty என்று அழைத்த அந்த பையன், கணவரை அண்ணன் என்று அழைத்ததன் விழைவா? என்னை aunty என்று அழைத்து அவமதித்து விட்டதாக எண்ணமா? இல்லை, ஒரு வேளை கணவரை uncle என்று கூப்பிட்டு இருந்தால் one plus one = two ஆகி கணக்கு நேராகி இருக்குமா?
இப்படி பல கேள்விகள் மனதில் எழ அமைதியாக பயணித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் அமைதியின் காரணம் கேட்ட கணவர், “ இந்த பையனை விட இரண்டு வயது அதிகம் உள்ள என் சொந்த கார பையன் ஒருவன் எனக்கு மெயில் அனுப்பினான். அதில் என்னை தாத்தா என்று அழைத்திருந்தான். எனக்கு வந்ததே கோபம்.உன் அப்பா என்னை விட மூத்தவர். நீ எப்படி என்னை தாத்தா என்று அழைக்கலாம்? என்று அவனை கடிந்து கொண்டேன்,I didnt like when he addressed me as தாத்தா ,”என்றார். ஆஹா இப்படி ஒரு கதை இருக்கா என்று நினைத்த எனக்கு இப்பொழுது சந்தோஷத்தில் முகம் சிவந்தது. அதை கேட்டவுடன் என் பிறவி பயனை அடைந்தது போல் இருந்தது. ”தாத்தா மாதிரி இருந்தா தாத்தானு தான் கூப்பிடுவாங்க”என்று பதிலுக்கு பதில், கொடுத்து விட்டு, தாத்தாவை compare பண்ணும் பொழுது aunty பரவாயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் அடைந்து பயணத்தை இளகிய மனதுடன் தொடர்ந்தேன்....
மனதில் ,Age is just a number ..” என்று யாரோ சொன்னதும், என் நெருங்கிய தோழிகளான வித்யா, சுஜாவுடன் “நாம் இனி நம் வயதை பற்றியோ அதை நினைவு படுத்தும் எந்த ஒரு விஷயத்தை பற்றியோ பேசக்கூடாது ,”என்று செய்து கொண்ட ஒப்பந்தம் நினைவில் வந்து போனது.....பெண்களிடம் வயதை கேட்காதே, ஆணிடம் சம்பளத்தை கேட்காதே என்று கூறுவதெல்லாம் பொய். ஆண்களுக்கும் வயதைப் பற்றி கேட்டால் பிடிப்பதில்லை தான்..... வீட்டுக்கு போனவுடன் மறக்காமல் ஹென்னா கலந்து வைக்கவேண்டும் என்று எனக்கு நானே ஞாயபகப்படுத்திக் கொண்டேன்.......

Tuesday, July 9, 2019

ஜிகர்தண்டா மீன்ஸ்( means)????


Image result for jigarthanda picture

ஜிகர்தண்டா மீன்ஸ்( means)????
இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். நல்ல பிரியாணி சாப்பாடு. ஒரு கட்டு கட்டிவிட்டு, பின் இனிப்பு பரிமாறும் இடத்திற்கு சென்றேன். வித விதமான இனிப்புகள். அதில் ஒன்று ஜிகர்தண்டா. பார்த்ததுமே எச்சில் ஊறியது. ஒரு கப் ஜிகர்தண்டாவை எடுத்துக்கொண்டு அங்கேயே நின்று ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதனை முடித்துவிட்டு மீண்டும் இன்னொரு கப் சாப்பிடும் பேராசை!.
இப்பொழுதெல்லாம் ரொம்பவும் இனிப்பாக இருக்கும் பதார்த்தங்களை சாப்பிட முடிவதில்லை. வயசு கோளாறா அல்லது வயிறு கோளாறா என்று யோசிக்க வைக்கும் நிலமை. அதுவும் வெள்ளை சக்கரை உடம்புக்கு நல்லதில்லை என்று எல்லா மூலை(ளை)யிலும் கூப்பாடு வேறு. அதனாலேயே சக்கரை அளவை குறைத்து சாப்பிட்டு பழகியாகிவிட்டது.
பத்தாததற்கு எனக்கு ஒரு தோழி இருக்கிறார். அவர் மிகவும் கம்மியாக சக்கரை சாப்பிடும் வழக்கம் உடையவர். அவர் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் எனக்கு ஆசையாக இஞ்சி டீ போட்டு கொடுப்பார். இஞ்சி நிறைய போடுவார் ஆனால் சக்கரையை அளவாக, அதுவும் மிகவும் அளந்தே போடுவார். எனக்கு பத்தாது தான். ஆனால் பழகிக் கொண்டேன். நாவின் ருசி நாம் பழக்கும் பழக்கத்திற்கு உட்படும் ஒன்று தானே!! அதுவும் உடம்பிற்கு உகந்தது அல்ல என்று தெரிந்த பின் அதை குறைத்துக்கொள்ள பழகி விட்டேன். சிறு வயதில் என்னவோ எறும்பு மாதிரி சக்கரை நோக்கியே என் தேடல் இருக்கும். இப்பொழுதும் பிடிக்கும் ஆனால் திகட்டும் இனிப்புக்கள் பிடிப்பது இல்லை.
ஆனால் அன்றோ ஜிகர்தண்டாவை பார்த்தவுடன் எனக்குள் இருந்த சிறுமி விழித்துக்கொண்டு ”சாப்பிடு சாப்பிடு” என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள். அதற்கு நான் உடன் பட்டு விட்டேன். அதுவும் ருசியான பாய் வீட்டு பிரியாணிக்குப் பின் ஜிகர்தண்டா எவ்வளவு ருசியாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். ”வா , வா” என்று என்னை அழைத்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அந்த இடத்திற்கு இரு வேற்று மொழி இளைஞர்கள் வந்தார்கள். அங்கே ஜிகர்தண்டா பரிமாறிக் கொண்டிருந்தவரிடம் , “இது என்ன? என்று கேட்டார்கள். அவர் நம்மூர் மதுரைகாரர் போல். உடனே அவர்,” ஜ்ஜிகர்தண்டா” என்றார். ”ஜ்” ஐ சற்றே அழுத்தத்துடன். அந்த இளைஞர்கள் நம் வடிவேலைப்போல், “நான் ஜாக் ஆகிட்டேன்” , என்பதைப்போல் ஆச்சர்யத்துடன், பரிமாறியவரைப் பார்த்து,” வாட்? திஸ் இஸ் சிக்கன்?” என்றனர் . அதற்கு பரிமாறுபவர்,” இல்லை , இல்லை இது ஜிகர்தண்டா”, என்றார், சிறிய புன் முறுவலுடன். அருகில் இருந்த என் ஜிகர்தண்டாவை ருசித்துக்கொண்டே இந்த உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தேன். பின் அந்த இளைஞர்கள்,” ஓ, திஸ் இஸ் சிக்கன் இன் ஐஸ்?” என்றார்கள். கேட்டதோடு இல்லாமல் கப்புக்குள் தலையை விடாத குறையாக எங்கடா இதில் சிக்கன் பீஸே கானோம் என்று குணிந்து பார்த்து கண்களாலேயே ஆராய்ந்தார்கள். அய்யய்யோ கதை கெட்டுச்சு என்பதை போல் அந்த பரிமாறுபவர், “இல்லை இல்லை, திஸ் , ஐஸ், மில்க், மிக்ஸ்.ஜிகர்தண்டா. நோ சிக்கன் ஐஸ். ஒன்லி, ஐஸ், மில்க் மிக்ஸ்,” என்றார் அவருக்கு தெரிந்த அரை குறை ஆங்கிலத்தில்.
ஜிகர்தண்டாவிற்கு இப்படி ஒரு அவலம் நேர்ந்துவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு. ஜிகர்தண்டாவிற்கென்று ஒரு வரலாறே இருக்கிறது என்பது அந்த இளைஞர்களுக்கு எப்படித் தெரியப்படுத்த முடியும்.. ஜிகர்தண்டா விற்கும் கடைகளில் மொய்க்கும் ஈக்களைப்பற்றி என்ன தெரியும்! பால், நன்னாரி சிரப், பால் கோவா, வென்னிலா எஸன்ஸ், ப்ரெஷ் க்ரீம், சக்கரை,பாதாம் பிசின் எல்லாம் சேர்த்து செய்த கலவை அது என்று எப்படி விளக்குவார் அந்த பரிமாறுபவர். அப்படியே விளக்கினாலும், பாதாம் பிசின் என்றால் என்ன என்று கேட்டு தொலைத்து விட்டால்? அவர் பாடு திண்டாட்டமாகி விடாதா?
அவர் கொடுத்த விளக்கம் ஏதோ புரிந்த மாதிரியும், புரியாத மாதிரியும் இருந்த அந்த இளைஞர்கள், ஆளுக்கு ஒரு கப் ஜிகர்தண்டாவை கையில் எடுத்துக்கொண்டு, இதில் என்ன தான் இருக்கிறது பார்ப்போம் என்பதைப் போல அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள். பரிமாறியவர் கொஞ்சமாக இழுத்து மூச்சு விட்டு விட்டு, அடுத்து வந்தவர்களாவது இது என்ன என்று கேட்காமல் இருக்க வேண்டுமே என்று நினைத்தபடி தன் வேலையை செய்யத் துவங்கினார். ஜிகர்தண்டா சிக்கன் ஆன கூத்தை பார்த்து கொண்டிருந்த நான், என் ஒரு கப் ஜிகர்தண்டாவை முடித்தது கூட உணராமல் வெறும் கப்பை வாயில் வைத்து அன்னாத்தி குடிக்க முயன்று கொண்டிருந்தேன். அதனைப் பார்த்த பரிமாறுபவர்,” அக்கா, இன்னொரு கப் வேணுமா ?”என்று கேட்க, கொஞ்சமாக அசிங்கப்பட்டவளாக,”இல்லை, இல்லை, போதும் “, என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து, கேக் வைத்திருந்த இடத்தை நோக்கி போனேன்........

Friday, July 5, 2019

பல நாள் திருடன்:

பல நாள் திருடன்:
பத்து நாட்கள் ஊருக்கு போன மனைவி வீட்டிற்கு வந்தவுடன்::
மனைவி: ஏங்க கடைக்கு போனீங்களா?
கணவர்: ஏன் கேட்கற?
மனைவி: கட்டில் மேல ரெண்டு பை இருக்கே அதான் கேட்டேன்.
கணவர்: ஓ அதுவா? ஆமாம் போனேன்.
மனைவி: என்ன வாங்கனீங்க?
கணவர்: புக் வாங்கினேன்.
மனைவி: எத்துனை புஸ்தகங்கள் ?
கணவர் ( சற்றே அதிர்ச்சி அடைந்து): ஒன்னு தான்!
மனைவி: ஒரு புக் வாங்கினதுக்கு எதுக்கு ரெண்டு பை கொடுத்தாங்க?வேற ஏதாவது வாங்கனீங்களா?
கணவர் பல்லை கடித்துக் கொண்டு: புக் வாங்கினேனு சொல்றேன்ல. வேற எதுவும் வாங்கல.
மனைவி : ஒரு புக்குக்கா ரெண்டு பை கொடுத்தாங்க? நம்ப முடியலயே! சரி என்ன புக் வாங்கனீங்க?
கணவர்: ”வேல் பாரி” புக்.
மனைவியின் கண்களில் எப்படியும் ஒரு நாள் மாட்டிக்கொள்வீர்கள் என்ற முடிவு ஒளிர்ந்தது. அவள் ஒரு மனதாக அங்கிருந்து நகர்ந்தாள்.
மூன்று நாட்கள் கழித்து வீடு சுத்தம் செய்யும் பொழுது புதிதாய் இன்னொரு புத்தகம் கண்ணில் பட்டது.
மனைவி: ஏங்க, இது என்ன புது புக் மாதிரி தெரியுது?
கணவர்: ஆமாம் புதுசு தான்.
மனைவி: எப்போ வாங்கனீங்க?
கணவர்: வேல் பாரி வாங்கனப்ப இதுவும் வாங்கினேன்.
மனைவி: அப்போ அன்னைக்கி கேட்டப்போ ஒரு புக்குதானு அதட்டி சொன்னீங்க?
கணவர்: இப்போ அதுக்கு என்ன? ரெண்டு புக் வாங்கினேன்.
மனைவி: உண்மைய சொல்லுங்க ரெண்டு புக் தானா இல்ல இன்னும் ஏதாவது இருக்கா?
இன்னும் ரெண்டு நாள் கழுச்சு இல்ல இன்னொரு புக் வாங்கினேனு சொல்லாதீங்க.
கணவர்: ஆமாம் நாலு புக் வாங்கினேன். எல்லாம் நல்ல புக். இப்போ என்ன அதுக்கு?
மனைவி: வடிவேல் மாதிரி நான் கேட்ட கேள்வியயே என்ன கேக்காதீங்க. அது எப்படி ஒன்னு ரெண்டாச்சு, ரெண்டு நாலாச்சு?
கணவர்: நாலுனு சொன்னா ,எதுக்கு இத்துன புக் வாங்கினேனு கேட்ப அதனால தான்.
மனைவி ஆரம்பித்தாள் அவளின் பக்கவாத்தியம் இல்லா தனியாவர்த்தனத்தை....
“இப்படி புஸ்தகமா வாங்கி வாங்கி எதுக்கு அடுக்கறீங்கனு தெரியல. வைக்கறதுக்கே இங்கே எடமில்ல. எடுத்து எதையும் துடைத்து வைக்க மாட்டீங்க. நானே அடுக்கி, தொடச்சு வைக்கனும்..... பத்து நாள் ஊருக்கு போய்டு வரதுக்குள்ள வீடு வீடாவா இருக்கு? வீடு முழுக்க குப்பை !( அவள் அங்கங்கே முளைத்த புது புத்தகங்களைத்தான் அப்படி கூறினாள்) இதுல பொய் வேற..... ”
இப்படியாக கச்சேரி ஒரு பத்து நிமிடங்களுக்கு தொடர்ந்தது. அவளுக்கு தெரியாது கணவர், காதுகளுக்குள் கறுப்பாய் சிரிதாய் அந்த ஹெட்போனை வைத்துக்கொண்டு வேறு பாட்டுக் கச்சேரி கேட்டுக்கொண்டிருப்பது...... அவளின் உதட்டசைவை பார்த்து , கண்ணில் இருந்த கணல் பார்த்தே தெரிந்து விட்டது இது புத்தகம் வாங்கி அதை மறைத்து பொய் சொல்லி, இப்பொழுது மாட்டிக்கொண்டதற்காக அரங்கேறிக் கொண்டிருக்கும் கச்சேரி என்று. தற்காப்புக்கலை ஒன்றும் இந்த சூழ்நிலையில் கை கொடுக்க போவதில்லை. அமைதியாய் இருப்பதே மேல் என்று முடிவு செய்து கையில் ஒரு புத்தகத்தை எடுத்து விரித்து வைத்து படிக்க ஆரம்பித்தார். மனதிற்குள் ஓர் எண்ணம் வந்து நீங்கியது. அது,” புஸ்தகத்தை வாங்கினது தான் வாங்கினேன், அந்த பாழாப்போன பைகளை மடித்து பைகளோடு பையாக வைத்திருந்தால் இப்படி மாட்டிகொண்டிருக்க வேண்டி இருந்திருக்காது,”
அவருக்கு தெரியவில்லை மனைவி புஸ்தகம் படிக்காதவளாய் இருக்கலாம் ஆனால் எப்படியும் பை எடுக்கும் பொழுது புதுப்பையை பார்த்து இருப்பாள். இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் அந்த பலநாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே இருப்பானென்று.........

மொழிப் புயல்!

மொழிப் புயல்!
நகைச்சுவை புயல் கரையை கடந்து, மொழி புயல் அடித்து ஓய்ந்து இப்பொழுது வேறு எந்தப் புயல் எங்கு மையம் கொண்டு இருக்கிறதோ ?அடித்து ஓய்ந்த மொழி புயலை பற்றிய எனது பார்வை! இது கழுகு பார்வை அல்ல. ஒரு சிறு குருவி பார்வை !காக்கா பார்வை என்று கூட சிலர் சொல்லக்கூடும். பார்வை எதுவானாலும் நோக்கம் ஒன்றாக இருக்குமாயின் எல்லாம் நன்மைக்கே!
பன்னீர் பட்டர் மசாலாவும் நானும் தான் எங்க வீட்டு குழந்தைகளுக்கு பிடிக்கும். கீரை கடைந்தால் பிடிக்காது அதுவே பாலக் பன்னீராக இருந்தால் சாப்பிடுவார்கள்!
எங்கள் வீட்டு திருமணங்களில் இப்பொழுது எல்லாம் மெஹந்தி ஃபங்ஷன், சங்கீத் ஃபங்ஷன் , திருமண உடைகளில் லெஹங்கா வந்தாகிவிட்டது!
சினிமாவில் அழகான , ஒல்லியான,சிகப்பான , உயரமான அடுத்த மாநில கதாநாயகிகளே எங்களுக்கு பிடிக்கும்.
படங்களுக்கு LKG, NKG என்றெல்லாம் பேர். வைத்து மகிழ்வோம்!
நாக்கின் ருசி மாறிப்போனது, உடையில் மாற்றம், ரசனையில் மாற்றம்,கலாச்சாரத்தில் மாற்றம்! இதையெல்லாம் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஏற்க தெரிந்த நமக்கு ஒரு மொழியை மட்டும் கற்றுக்கொள்ள வெறுப்பு!
பிள்ளைகள் சிறுவயதில் எத்துனை மொழிகள் கற்கிறார்களோ அந்த அளவிற்கு புத்திசாலிகளாக ஆவார்கள் என்பது ஆராய்ச்சி முடிவு. ஒரு மொழியில் ஒருவர் தேர்ச்சி பெற்றவராக ஆகவேண்டும் என்றால் அவர் அந்த மொழியில் பேசி பழக வேண்டும். சில வருடங்கள் மட்டுமே படிப்பதால் அது தானாக வளர்ந்து விடாது. அது ஒரு exposure மட்டுமே! அதனை பிள்ளைகளுக்கு கொடுப்பது நம் கடமை.
சிங்கை தமிழ் வானொலியில் தினமும் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அது “நல்ல தமிழில் பேசுவோம் “என்பது. விறுப்பமுள்ளவர்கள் அழைத்து போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசவேண்டும். இது தான் ஒரு மொழியை வளரச்செய்வதற்கான முயற்சி.
ஒரு மாதம் முழுதும் சிங்கையில் தமிழ் மொழி மாதம் கொண்டாடப்படுகிறது. யுத்தமின்றி சத்தமின்றி இதுவும் நம் மொழியை வளர்பதற்கான முயற்சி!
“வளமான வரிகள் “என்று ஒரு அங்கம் வானொலியில் இடம் பெறும். அது சினிமா பாடல்களில் தரமான ,வளமான வரிகளை எடுத்துக்காட்டும். தமிழை கொண்டாடுவதற்கான முயற்சி மட்டுமில்லை இது, அடுத்த தலைமுறைக்கும் அதன் வளமையை எடுத்துக் கூறும் நிகழ்ச்சி !
இப்படி தமிழ் மொழியை எப்படி வளர்ப்பது, அதனை எப்படி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்வது என்று யோசிக்காமல், வேற்று மொழியின் வருகையால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று சர்ச்சையை கிளப்புவது தமிழின் ஆளுமையை சந்தேகிப்பதாகும். புலியையே முறத்தை கொண்டு விரட்டிய பரம்பரையில் வந்துவிட்டு இப்படி வேற்று மொழியின் வருகை நம் மொழியை அழித்துவிடும் என்று பயப்படுவது நம் மொழியை சிறுமை படுத்துவதாகும். அத்துனை மொழி பேசிய பாரதி என்ன தமிழை மறந்தவனானா?
போராட்டத்தில் நேரத்தை வீணாக்காமல் தமிழ் மொழியை மென்மேலும் எப்படி ஆக்கபூர்வமாக வளர செய்வது என்று சிந்தித்தல் நலம் பயக்கும்! நம் மூளை ஒன்றும் அவ்வளவு மோசமானது அல்ல. ஒரு மொழி மட்டும் கற்றுக்கொள்ளும் திறன் படைத்தது அல்ல. அதனால் பல மொழிகள் கற்றுக்கொள்ள முடியும்.
வேற்று மொழி கற்கும் பொழுதுதான் நம் மொழியின் வளம் நமக்கு புலன்படும். நல்ல தரமான மொழி பெயர்ப்பு எழுத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.
எனக்கு தெரிந்த வரை வேற்று மொழி பேசுபவர்கள் முக்கால்வாசி பேர் அவரவர் மொழி பேசுபவரை பார்த்துவிட்டால் அவர்கள் மொழியிலேயே தான் பேசுவார்கள். பக்கத்தில் இருப்பவர்களுக்கு புரிகிறதா இல்லையா என்ற எண்ணமே இருக்காது. ஆனால் தமிழ் பேசுபவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. நாம் பேசுவது அருகில் இருப்பவர்களுக்கு புரியவில்லை என்றால் அது கொலை குற்றம் போல் உடனே எல்லோருக்கும் புரியும் படியான ஆங்கிலத்தில் பேசதொடங்கி விடுவோம். இதனை நல்ல பழக்கம் என்பதா அல்லது மொழி மீது நமக்கில்லாதா ஈடுபாடு என்பதா? நம் மொழி மீது நமக்கு முதலில் மதிப்பு உண்டாக வேண்டும். அது பிறமொழியை சிறுமை படுத்தி வரக்கூடாது. நம் மொழியை வளபடுத்தி , எல்லோரிடமும் கொண்டு செல்வதில் இருக்கிறது! ஒருவருக்கு எத்துனை எத்துனை திறமை இருக்கிறதோ அவ்வளவு முன்னேற்றம் அவர் வாழ்வில் அடைவார். அந்த திறமைக்கு அணைபோட யாருக்கும் உரிமை இல்லை. ஊக்குவிக்கவே முயலவேண்டும் ! அம்மாவின் கண்டிப்பும் வேண்டும் ,அத்தையின் அரவணைப்பும் வேண்டும். அதுவே நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்!

தண்ணீர்

மூன்று வாரங்களாக அருவியாய், மழையாய்,ஆறாய்,ஓடையாய்,கடலாய்,ஆலங்கட்டியாய்,குளமாய்,ஏரியாய், எல்லாமுமாய் தண்ணீரின் அவதாரங்களை கண் குளிர பார்த்தாகிவிட்டது. ஒரு நிமிடம் கூட திகட்டவில்லை, சலிக்கவில்லை! அவற்றின் போக்கு “என் வழி தனி வழி” என்பதாக இருந்தது! அதன் வழியில் யாரும் குறிக்கிடவில்லை. அதுவும் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை. பார்த்த நொடியாவும் மனதில் சந்தோஷம் கரை புரண்ட போதிலும் எங்கோ ஒரு மூலையில் “ இத்தண்ணிக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? எம்மண்ணில் ஓடி விளையாட ஏன் மறுத்து எங்கோ இப்படி தன்னிச்சையாய் ஓடிக்கொண்டிருக்கிறது? வா வா என்று விழிமேல் வழிவைத்து காத்திருக்கும் எம்மக்களை எப்பொழுது சென்றடைய போகிறது என்ற ஒருவித சொல்லத்தெரியாத தவிப்பு இருக்கத்தான் செய்தது.....என்று தணியும் எம் தண்ணீர் தாகம்??

பழசும் புதுசும்

பழசும் புதுசும்
புதிய துடைப்பம் வாங்கி வந்தவுடன் கூட்டிப்பார்த்த பொழுது தான் தெரிந்தது இத்துனை நாள் தேய்ந்து போன பழைய துடைப்பத்தை வைத்துக்கொண்டு எப்படி கூட்டி பெருக்கினேன் என்று! அப்பொழுதெல்லாம் அம்மா கூறுவாள், “ நீ இந்த சந்திரமதி கூட்டல் கூட்டுவதற்கு பதில் கூட்டாமலே இருக்கலாம், “ என்று. அப்படித்தான் நானும் இவ்வளவு நாட்களாக பழைய துடைப்பத்தை வைத்துக்கொண்டு நானும் கூட்டுகிறேன் என்று பேருக்காக, மேலாக கூட்டி இருக்கிறேன். புது துடைப்பம் வந்தவுடன் நம் வீட்டிலா இவ்வளவு குப்பை என்றுஆச்சரியப்படுமளவிற்கு இருந்தது. . வாழ்க்கையிலும் அப்படித்தான்! பழசே சிறந்தது என்று நாம் கிணற்றுத்தவளையாய் இருந்து விட கூடாது. புதுமையை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கு எப்பொழுதும் இருத்தல் அவசியம். பழம் பெருமை பேசிக்கொண்டு அதையே பிடித்து தொங்கி கொண்டிருந்தால் நமக்கே தெரியாமல் நிறைய குப்பைகளை நம் வீட்டிலும், நாட்டிலும், மனதிலும் , வாழ்விலும் , நாம் சேர்த்துக் கொண்டே தான் இருப்போம். பழசை மறக்கக்கூடாதுதான் அதற்காக அதுவே உகந்தது என்று வாழ்க்கையில் பிடிவாதமாக இருக்கக்கூடாது. பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் முன்னேற்றத்தை நோக்கி மனித குலம் பயனிப்பதற்கான வழி. புதியதை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது. அதனை தேவைக்கேற்ப பயன் படுத்தவும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். பயன் படுத்தாத புதியதும் ஒரு நாள் இத்துப்போன பழையதாகிவிடும். பழைய பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு இன்றைய கால நிலையை தீர்மானிக்க முடியாது. இன்றைய சூழ்நிலைக்கு தகுந்த புது பஞ்சாங்கமே இன்றைய நிலவரத்தை எடுத்துக் கூறும். பழையது ஒரு வழிகாட்டியே. அதுவே வழியாகாது! வாழ்விலும் சரி, அரசியலிலும் சரி, அறிவியலிலும் சரி, அறிவாற்றலிலும் சரி, கொள்கையிலும் சரி, கோட்பாடுகளிலும் சரி, உறவிலும் சரி, கல்வியிலும் சரி, வாழ்வின் எல்லா திசைகளிலும் புதுமையை இன்முகத்தோடு வரவேற்போம். பழமையை போற்றுவோம், புதியதை கொண்டாடுவோம்!
பிகு:எதை எதையோ கிறுக்கும் போதெல்லாம் படிக்காத கணவர் இந்த பதிவை உடனே படித்து விட்டு, “ இப்போ என் பர்ஸ்க்கு என்ன வேட்டு வைக்க இந்த பீடிகை போடுற? உன் வார்ட்ரோப் எதாவது மாத்த போறியா? என்று கேட்டு வைத்தார். ”நல்லதுக்கே காலம் இல்லை,” என்று ரொம்ப நல்லவளாக நடித்துவிட்டு நகர்ந்து விட்டேன். குறவனுக்கு தெரியுமாம் குறத்தி போடும் வேஷம்......