Friday, July 5, 2019

பல நாள் திருடன்:

பல நாள் திருடன்:
பத்து நாட்கள் ஊருக்கு போன மனைவி வீட்டிற்கு வந்தவுடன்::
மனைவி: ஏங்க கடைக்கு போனீங்களா?
கணவர்: ஏன் கேட்கற?
மனைவி: கட்டில் மேல ரெண்டு பை இருக்கே அதான் கேட்டேன்.
கணவர்: ஓ அதுவா? ஆமாம் போனேன்.
மனைவி: என்ன வாங்கனீங்க?
கணவர்: புக் வாங்கினேன்.
மனைவி: எத்துனை புஸ்தகங்கள் ?
கணவர் ( சற்றே அதிர்ச்சி அடைந்து): ஒன்னு தான்!
மனைவி: ஒரு புக் வாங்கினதுக்கு எதுக்கு ரெண்டு பை கொடுத்தாங்க?வேற ஏதாவது வாங்கனீங்களா?
கணவர் பல்லை கடித்துக் கொண்டு: புக் வாங்கினேனு சொல்றேன்ல. வேற எதுவும் வாங்கல.
மனைவி : ஒரு புக்குக்கா ரெண்டு பை கொடுத்தாங்க? நம்ப முடியலயே! சரி என்ன புக் வாங்கனீங்க?
கணவர்: ”வேல் பாரி” புக்.
மனைவியின் கண்களில் எப்படியும் ஒரு நாள் மாட்டிக்கொள்வீர்கள் என்ற முடிவு ஒளிர்ந்தது. அவள் ஒரு மனதாக அங்கிருந்து நகர்ந்தாள்.
மூன்று நாட்கள் கழித்து வீடு சுத்தம் செய்யும் பொழுது புதிதாய் இன்னொரு புத்தகம் கண்ணில் பட்டது.
மனைவி: ஏங்க, இது என்ன புது புக் மாதிரி தெரியுது?
கணவர்: ஆமாம் புதுசு தான்.
மனைவி: எப்போ வாங்கனீங்க?
கணவர்: வேல் பாரி வாங்கனப்ப இதுவும் வாங்கினேன்.
மனைவி: அப்போ அன்னைக்கி கேட்டப்போ ஒரு புக்குதானு அதட்டி சொன்னீங்க?
கணவர்: இப்போ அதுக்கு என்ன? ரெண்டு புக் வாங்கினேன்.
மனைவி: உண்மைய சொல்லுங்க ரெண்டு புக் தானா இல்ல இன்னும் ஏதாவது இருக்கா?
இன்னும் ரெண்டு நாள் கழுச்சு இல்ல இன்னொரு புக் வாங்கினேனு சொல்லாதீங்க.
கணவர்: ஆமாம் நாலு புக் வாங்கினேன். எல்லாம் நல்ல புக். இப்போ என்ன அதுக்கு?
மனைவி: வடிவேல் மாதிரி நான் கேட்ட கேள்வியயே என்ன கேக்காதீங்க. அது எப்படி ஒன்னு ரெண்டாச்சு, ரெண்டு நாலாச்சு?
கணவர்: நாலுனு சொன்னா ,எதுக்கு இத்துன புக் வாங்கினேனு கேட்ப அதனால தான்.
மனைவி ஆரம்பித்தாள் அவளின் பக்கவாத்தியம் இல்லா தனியாவர்த்தனத்தை....
“இப்படி புஸ்தகமா வாங்கி வாங்கி எதுக்கு அடுக்கறீங்கனு தெரியல. வைக்கறதுக்கே இங்கே எடமில்ல. எடுத்து எதையும் துடைத்து வைக்க மாட்டீங்க. நானே அடுக்கி, தொடச்சு வைக்கனும்..... பத்து நாள் ஊருக்கு போய்டு வரதுக்குள்ள வீடு வீடாவா இருக்கு? வீடு முழுக்க குப்பை !( அவள் அங்கங்கே முளைத்த புது புத்தகங்களைத்தான் அப்படி கூறினாள்) இதுல பொய் வேற..... ”
இப்படியாக கச்சேரி ஒரு பத்து நிமிடங்களுக்கு தொடர்ந்தது. அவளுக்கு தெரியாது கணவர், காதுகளுக்குள் கறுப்பாய் சிரிதாய் அந்த ஹெட்போனை வைத்துக்கொண்டு வேறு பாட்டுக் கச்சேரி கேட்டுக்கொண்டிருப்பது...... அவளின் உதட்டசைவை பார்த்து , கண்ணில் இருந்த கணல் பார்த்தே தெரிந்து விட்டது இது புத்தகம் வாங்கி அதை மறைத்து பொய் சொல்லி, இப்பொழுது மாட்டிக்கொண்டதற்காக அரங்கேறிக் கொண்டிருக்கும் கச்சேரி என்று. தற்காப்புக்கலை ஒன்றும் இந்த சூழ்நிலையில் கை கொடுக்க போவதில்லை. அமைதியாய் இருப்பதே மேல் என்று முடிவு செய்து கையில் ஒரு புத்தகத்தை எடுத்து விரித்து வைத்து படிக்க ஆரம்பித்தார். மனதிற்குள் ஓர் எண்ணம் வந்து நீங்கியது. அது,” புஸ்தகத்தை வாங்கினது தான் வாங்கினேன், அந்த பாழாப்போன பைகளை மடித்து பைகளோடு பையாக வைத்திருந்தால் இப்படி மாட்டிகொண்டிருக்க வேண்டி இருந்திருக்காது,”
அவருக்கு தெரியவில்லை மனைவி புஸ்தகம் படிக்காதவளாய் இருக்கலாம் ஆனால் எப்படியும் பை எடுக்கும் பொழுது புதுப்பையை பார்த்து இருப்பாள். இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் அந்த பலநாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே இருப்பானென்று.........

No comments: