Monday, July 15, 2019

பிறந்த பயன்......

பிறந்த பயன்......
வார இறுதியாய் இருக்கிறதே ஒரு நாள் சமையலுக்கு விடுமுறை கொடுத்து விடுவோம் என்று நினைத்து சனி இரவு உணவு சாப்பிட வெளியில் சென்றோம். நேரம் ஆகிவிட்டதால் எனக்கு ஒரு தோசை மட்டும் போதும் என்று ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தேன். கணவர் ஏதோ அவர் நாக்கு ருசிக்கேற்ப order செய்தார்.
என் தோசை சீக்கிரமே வந்தது. நான் சாப்பிட தொடங்கி விட்டேன். Order எடுத்த பையன் அருகில் வந்தான். அவனுக்கு ஒரு இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஆறு வயது இருக்கும். கணவரைப் பார்த்து,”அண்ணா , நீங்க ஆம்லெட் கேட்டீங்க. ஆனா வெங்காயம் இல்ல. வேற எதாச்சும் கொண்டு வரவா?” என்று கேட்டான். கணவரும், “சரி first சூப் கொண்டு வா , வேற என்ன வேணுனு அப்புறம் order செய்யறேன்,” என்றார். அதற்குள் நான் என் தோசையை சாப்பிட்டு முடித்து இருந்தேன்.
என் தட்டு காலி ஆனதை பார்த்த அந்த பையன்,”Aunty, உங்களுக்கு ஏதாவது வேணுமா?” என்றான். Aunty என்ற வார்த்தையை கேட்டவுடன் எனக்கு பக்க்க்க்க் என்று நெஞ்சுக்குள் ஒரு வித வலி தோன்றி மறைந்தது. அதனை வெளிக்காட்டாமல்,” இல்லப்பா , எனக்கு போதும்,” என்றேன். அவன் அங்கிருந்து சென்றப் பின்,” ஏங்க, நீங்க மட்டும் அண்ணன், நான் மட்டும் aunty ஆ? என்ன பாத்தா aunty மாதிரியா தெரியுது,நம்மூர்ல ஏன் பொம்பளைங்னா ஒரு வயசுக்கு அப்புறம் aunty அதுவே ஆண்கள்னா எந்த வயசானாலும் அண்ணானு கூப்பிடறாங்க?”என்று கோபமாகவே கேட்டேன். அந்த பையனிடம் என் கோபத்தை காண்பிக்க முடியாதல்லவா!
இதை கேட்ட கணவர் முகமெல்லாம் இன்ப நரம்பு பாய்ந்தோடி முகமே சிவப்பாக மாறியது. எனக்கோ கோபத்தில் முகம் சிவந்தது. அவருக்கு ஒரே சந்தோஷம். “அவன் உண்மையை தானே சொல்லி இருக்கான். நீயெல்லாம் aunty தானே? “என்றார். “அப்போ நீங்க மட்டும் ஏன் அண்ணன்?,”என்றேன். அதற்கு அவர், “ பாக்க aunty மாதிரி இருந்தா அப்படி தான் கூப்பிடுவாங்க. என்ன பாத்தா youngஆ தெரிஞ்சுருக்கு,”என்றார் .
சாப்பிட வந்த இடத்தில் எங்கள் பஞ்சாயத்தை வைத்துக்கொள்வது சரியல்ல என்று நான் அமைதியாக இருந்துவிட்டேன். பின் காரில் போகும் பொழுது இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே போனேன். ஏறக்குறைய அந்த பையனின் வயதை ஒத்த என் மகளுடைய நண்பர்கள் aunty என்று கூப்பிடும் பொழுது வராத கோபம், என் தோழிகளின் பிள்ளைகள் என்னை aunty என்று கூப்பிடும் பொழுது வராத கோபம் ஏன் இன்று இப்படி தலை விரித்தாடியது?
யாரோ ஒரு தெரியாத நபர் aunty என்று கூப்பிட்டது பிடிக்கவில்லையா? அப்படி இருக்க வாய்ப்பில்லை. நம்மூரில் பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் இல்லை. இந்த பையனும் ஊரில் இருந்து வந்தபடியால் safe ஆக aunty என்று அழைத்திருக்கலாம். ஏன் அக்கா என்று அழைக்கவில்லை? நம்மை பார்த்தால் அவ்வளவு வயதானவளாகவா தெரிகிறது? பலர் நம்மிடம் “உங்களுக்கு வயசே தெரியல.இன்னும் அப்போ பாத்த மாதிரியே இருக்கீங்கனு சொன்னதெல்லாம் பச்சை புளுகா?நமக்கு வயதாவதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? வயதாவதை கண்டு பயப்படுகிறேனா? அல்லது என் கோபத்திற்கான காரணம் இந்த காரணங்கள் எதுவுமே இல்லாமல் என்னை aunty என்று அழைத்த அந்த பையன், கணவரை அண்ணன் என்று அழைத்ததன் விழைவா? என்னை aunty என்று அழைத்து அவமதித்து விட்டதாக எண்ணமா? இல்லை, ஒரு வேளை கணவரை uncle என்று கூப்பிட்டு இருந்தால் one plus one = two ஆகி கணக்கு நேராகி இருக்குமா?
இப்படி பல கேள்விகள் மனதில் எழ அமைதியாக பயணித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் அமைதியின் காரணம் கேட்ட கணவர், “ இந்த பையனை விட இரண்டு வயது அதிகம் உள்ள என் சொந்த கார பையன் ஒருவன் எனக்கு மெயில் அனுப்பினான். அதில் என்னை தாத்தா என்று அழைத்திருந்தான். எனக்கு வந்ததே கோபம்.உன் அப்பா என்னை விட மூத்தவர். நீ எப்படி என்னை தாத்தா என்று அழைக்கலாம்? என்று அவனை கடிந்து கொண்டேன்,I didnt like when he addressed me as தாத்தா ,”என்றார். ஆஹா இப்படி ஒரு கதை இருக்கா என்று நினைத்த எனக்கு இப்பொழுது சந்தோஷத்தில் முகம் சிவந்தது. அதை கேட்டவுடன் என் பிறவி பயனை அடைந்தது போல் இருந்தது. ”தாத்தா மாதிரி இருந்தா தாத்தானு தான் கூப்பிடுவாங்க”என்று பதிலுக்கு பதில், கொடுத்து விட்டு, தாத்தாவை compare பண்ணும் பொழுது aunty பரவாயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் அடைந்து பயணத்தை இளகிய மனதுடன் தொடர்ந்தேன்....
மனதில் ,Age is just a number ..” என்று யாரோ சொன்னதும், என் நெருங்கிய தோழிகளான வித்யா, சுஜாவுடன் “நாம் இனி நம் வயதை பற்றியோ அதை நினைவு படுத்தும் எந்த ஒரு விஷயத்தை பற்றியோ பேசக்கூடாது ,”என்று செய்து கொண்ட ஒப்பந்தம் நினைவில் வந்து போனது.....பெண்களிடம் வயதை கேட்காதே, ஆணிடம் சம்பளத்தை கேட்காதே என்று கூறுவதெல்லாம் பொய். ஆண்களுக்கும் வயதைப் பற்றி கேட்டால் பிடிப்பதில்லை தான்..... வீட்டுக்கு போனவுடன் மறக்காமல் ஹென்னா கலந்து வைக்கவேண்டும் என்று எனக்கு நானே ஞாயபகப்படுத்திக் கொண்டேன்.......

No comments: