Tuesday, July 27, 2010

என் மனம் களவாண்ட “களவாணி”


வழக்கம் போல் வெள்ளி இரவு என்ன படம் பார்ப்பது என்று எங்கள் வீட்டில் வாக்குவாதம் எழுந்தது. மகளுக்கு ஹிந்தி, மகனுக்கு ஆங்கிலம், தந்தைக்கு தமிழ், இதில் எதுவாக இருந்தாலும் சரி என்று நான்...ஏனென்றால் எப்படமாயினும் பாதிப்படம் பார்ப்பது தான் என் நியதி—காரணம் பதினோறு மணிக்கு மேல் என்னால் விழித்து இருந்து படம் பார்க்க இயலாது. ஒரு வழியாக ஒரு முடிவிற்கு வருவதற்குள் மணி பத்தடித்தது. “களவாணி” என்ற படம் பார்க்கலாம் என்று வீட்டு மன்றத்தில் முடிவானது. கிடைத்த ஓட்டுக்கள் மூன்று.


அரைமனதாக என் மகள் ஒத்துக்கொண்டாள். அவளுக்கு பரீச்சயமில்லா நடிகர்,நடிகையர். கிராமத்து கதை வேறு. இதை பார்க்கவில்லை என்றால் எப்படியும் தூங்க சொல்லிவிடுவார்கள். அதற்கு ஏதோ ஒன்றைப் பார்ப்பது நல்லது என்று நினைத்தாள் போல்..ஒன்றும் இல்லாததற்கு ஒரு ஆண் பிள்ளை என்பதைப் போல். என் மகனுக்கு தமிழ் படங்கள் மீது பெரிய ஈடுபாடு இல்லை. எனவே அவன் தன் அறையில் விளையாட சென்று விட்டான். வழக்கம் போல் ஏ.சியை போட்டுக்கொண்டு ஆளுக்கொரு போர்வைக்குள் ஒளிந்துகொண்டு சோபாவில் அமர்ந்த படி படம் பார்க்க ஆரம்பித்தோம்.

முதல் மூன்று நிமிடங்கள் என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை. அதைக் கேட்ட என் மகளை என் கணவர், “பேசாமல் உட்கார்ந்து பார் புரியும்”, என்று வாயடைத்துவிட்டார். அவர் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டால் மூழ்கிவிடுவார். சரி சிறிது நேரம் பார்ப்போம், பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவோம் என்று நினைத்துக்கொண்டு நானும் பேசாமல் இருந்துவிட்டேன். பார்க்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களுக்குப்பின் படம் மிக விருவிருப்பாக நகர்ந்தது. அங்கங்கே கிராமத்து சம்பாஷணைகள் புரியவில்லை என்றாலும் கூட என் மகள் படத்தை ரசித்து பார்த்தாள். இரண்டரை மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை. ஏன் தான் படம் முடிவுற்றதோ என்ற ஒரு தவிப்பு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் முழுதாக ஒரே நாளில் பார்த்த படம். கதையை நான் இங்கு அலசப்போவது இல்லை. ஏனென்றால் படம் பார்க்காதவர்களின் சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்பவில்லை. நான் ரசித்த விஷயங்களையெ பகிர்ந்துள்ளேன். படம் எடுக்கப்பட்டது எனக்கு மிகவும் பரீட்சயமான இடங்கள் என்பதால் படம் பார்த்த பொழுது செலவு ஏதுமின்றி ஊருக்கே சென்று வந்ததைப் போல் இருந்தது. ஓலை சீவுவது, குயில் பிடிப்பது, கிண்டல் அடித்து பேசுவது போன்ற காட்சிகள் சிறு வயதில் கிராமத்திற்கு செல்லும் போது பார்த்த காட்சிகளை மீண்டும் பார்த்ததை போன்ற உணர்வு. என் மகளிடம்,”இவையெல்லாம் நாங்கள் சிறு வயதில் அனுபவித்துள்ளோம். உங்களுக்கு கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் தவிர என்ன தெரியும்?” இயற்கையை ரசிக்க உங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியுள்ளது. மனிதர்களுடன் பழகவைக்க பாடுபட வேண்டியுள்ளது.” என்று கூறினேன். அதற்கு அவள் ,”உங்கள் காலம் வேறு எங்கள் காலம் வேறு” என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டாள்.இவர்கள் எல்லாம் வளர்ந்தப் பின் நினைத்துப்பார்க்க எந்த இயற்கை வளம் இருக்கும் என்பது கேள்விக்குறியே? அப்படியே இருந்தாலும் அதை ரசிக்க இவர்களுக்கு நேரம் தான் இருக்குமோ நான் அறியேன் பராபரமே!!

நடித்தவர்கள் யாருடைய நடிப்பிலும் செயற்கைத்தனம் துளி கூட இல்லை. எதார்த்தமான வசனங்கள்,அழகானபடப்பிடிப்பு,மனதைகொள்ளை கொண்டன.  இரட்டை அர்த்தம் இல்லாத மண்ணுக்கே உரிய வசனங்கள் கேட்க இனிமையாக இருந்தது. செயற்கையான, அனாவசிய சண்டை காட்சிகள் இல்லை.நாங்கள் வழக்கமாக படம் பார்க்கும் பொழுது பாட்டு, சண்டை காட்சிகள் யாவற்றையும் “ஓட்டி” விடுவோம். ஆனால் இப்படத்தை பொருத்தமட்டில் ஒரு காட்சியை கூட அப்படி “ஓட்ட” வேண்டும் என்று தோன்றவில்லை. விறு விறு என்று கதை நகர்ந்தபடியால் “பாத்ரூம்” போனபோது கூட என் மகள் “அப்பா நிறுத்தி வையுங்கள்” என்று அன்பு கட்டளையிட்டாள்...ஒரு சில நிமிடங்கள் கூட கதையின் போக்கை தவற விட மனமில்லாமல்.

அன்றாடும் நம் கிராமங்களில் பார்க்கும் துடுக்கான, அழகான, தறுதலைத்தனமான, நாயகன். அயல் நாட்டில் தந்தை சம்பாதித்து அனுப்ப இங்கு ஒரு மைனரைப்போல், தான்தோன்றித்தனமாக குறிக்கோள் ஏதுமின்றி, ரவுடித்தனம் செய்து கொண்டு திரியும் மகனாக தன் பங்கை பாங்குடன் அளவாக செய்திருக்கிறார் நாயகன். அவருக்கு ஈடு கொடுப்பது போன்ற கள்ளம் கபடமில்லா நாயகி. நாயகனின் தாய், தந்தை, தங்கை, நாயகனின் அண்ணன் என்று எல்லா கதாபாத்திரங்களும் கணகச்சிதமாக தங்கள் பங்கை அழகாக நூல் பிடித்ததைப்போன்று செய்திருந்தனர். பெரியப்பா, சித்தப்பா, பஞ்சாயத்து தலைவர் ,என்று சிறு சிறு பாத்திரங்களும் நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது.படம் முழுதும் கிண்டலும் கேலியும் என்று நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படி பிண்ணப்பட்டிருந்தது. எங்கள் மூவரின் சிரிப்பொலி கேட்டு அவ்வப்பொழுது என் மகன் “என்ன என்ன?” என்று கேட்டுச் சென்றான். அவனின் பொறுமை அவ்வளவு தான். அவனின் ரசிகத்தன்மை வடிவேலு காமெடியை இன்னும் தாண்டவில்லை. அவன் வயது எட்டுதானே!

ஆழமான, துடுக்கான, இளமையான, எல்லா வயதினரும் ரசிக்கக்கூடிய காதல் காட்சிகள். ஆபாசம் என்பது காட்சிகளிளோ, வசனங்களிளோ சிறிதும் தலை காட்டவில்லை. தாய்--மகன் பாசம் எவ்வளவு ஆழமானது என்பதை சரண்யா-விமல் பாத்திரங்கள் ஆழமாக உணர்த்துகின்றன. சான்பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை என்று அவன் மேல் அவள் பொழியும் பாசத்திற்கு அளவுகோல் இல்லை. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. அதிகம் செலவில்லாமல் ஓர் அழகான திரைஓவியத்தை உருவாக்க முடியும் என்பதற்கு இப்படம் நல்ல ஓர் எடுத்துக்காட்டு. கௌரவக் கொலைகள் நடந்தேறும் சமூகத்தில் இறுதியில் பாசமும், காதலும் தான் வெல்கிறது. இது குடும்ப கௌரவம் என்ற குடிமியைப் பிடித்துக்கொண்டு கொலைகாரர்களாக திரிபவர்களுக்கு நல்ல பாடம். இனியாவது கௌரவம் கருதி மிருகங்களாவதை விடுவோம்.

படம் பார்த்து முடித்த பின்னரும் இரண்டு நாட்களுக்கு மண்வாசனை வீசிக்கொண்டே இருந்தது.. என்னதான் வருடக்கணக்கில் வெளிநாடுகளில் வசித்தாலும் நமக்கு பரீச்சயமான நம் வயல்களையும், மக்களையும், அவர்களின் பேச்சுவழக்கையும் கேட்கும் போது மனதில் சிலு சிலு சாரல் வீசத்தான் செய்கிறது. “We feel at home" என்பது இதுதானோ?? நம் மண்ணில் வாழும் நாள் என்று வருமோ என்ற தவிப்பும் தொற்றிக்கொண்டது. அன்று பார்த்த பசுமை இன்று இல்லை, மக்களும் மாறிவிட்டார்கள்,காலம் மாறிவிட்டது என்று ஆயிரம் சமாதானம் நமக்குள் கூறிக்கொண்டாலும், நம் ஊரை விட்டு வந்த நாமும் மாறிவிட்டோம் என்பது தான் “நிதர்சன உண்மை”.

சொந்த பந்தங்கள் சூழ வாழும் வாழ்வுக்கும், யாருமின்றி என் குடும்பம்,என் மனைவி,என் குழந்தை என்று வாழும் வாழ்க்கைக்கும் எவ்வளவு வித்தியாசம்? குடும்ப சூழல் நிறைந்த இம்மாதிரியான திரைப்படங்கள் மனதில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உரிமையுடன் உற்றார் உறவினர் அறிவுரை கூறும் காட்சிகளும், பிரச்சினை எனும் பொழுது ஊர் கூடி தோள் கொடுக்கும் காட்சிகளும் நெஞ்சை வருடுகின்றன. உடையிலும்,.நடையிலும் அனைத்து கதாபாத்திரங்களும் நம்மை நம் கிராமத்து வீடுகளுக்கே இட்டுச்செல்கின்றன. காதுக்கு இனிமையான ,மனதுக்கு மென்மையான, ரம்மியமான இசை படம் முழுதும். மொத்தத்தில் மீண்டும் பார்க்க வைத்துவிட்டது என் மனதை களவாண்ட “களவானி”. நிச்சயமாக உங்கள் மனதையும் களவாடிவிடும்.

பி.கு.: படத்தில் சரண்யா சொல்வதைப் போல் நானும்,”ஆடி போய் ஆவணி வந்தால் என் மகன் டாப்ல போய்ருவான். என்று சொல்ல அதற்கு என் மகள்” நினைப்பு பொலப்ப கெடுத்துச்சாம்” என்றாள். பெத்த மனம் பித்தல்லவோ????

25 comments:

Balamurali G said...

விமர்சனம் அருமை ....!!!!!

Geetha Ravichandran said...

மிக்க நன்றி

வாலு பையன் said...

Dear Geetha Sister,
//சொந்த பந்தங்கள் சூழ வாழும் வாழ்வுக்கும், யாருமின்றி என் குடும்பம்,என் மனைவி,என் குழந்தை என்று வாழும் வாழ்க்கைக்கும் எவ்வளவு வித்தியாசம்? குடும்ப சூழல் நிறைந்த இம்மாதிரியான திரைப்படங்கள் மனதில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உரிமையுடன் உற்றார் உறவினர் அறிவுரை கூறும் காட்சிகளும், பிரச்சினை எனும் பொழுது ஊர் கூடி தோள் கொடுக்கும் காட்சிகளும் நெஞ்சை வருடுகின்றன//
What a realistic points.
Your presentation is really fantastic. BTW you made us the urge to see the film this sunday.
Keep it up
Best wishes
Valupaiyan

www.valupaiyan.tk
Valupaiyan.blogspot.com

shan143 said...

en manam kalavanda kalavaani..the way u have written i felt that i was also along with u geetha .by reading this i want to see this movie soon.

ஜோதிஜி said...

வணக்கங்க.

இப்பத்தான் ஐயாவுக்கு கோர்த்து விட மனது வந்ததே.

1. எழுத்து வடிவமைப்பு ரொம்ப சிறப்பு. படிக்க எளிதாக இருந்தது.

2. ஆங்கில தளத்தை வலையில் படிப்பது சற்று கொடுமை. அதில் உங்கள் எழுத்து வடிவமைப்பை சற்று பெரிதாக மாற்றுங்கள்.

3. முதன் முதலாக குடும்ப பார்வையின் சார்பாக ஒரு விமர்சனத்தை இப்படி படைக்கலாம் என்பதே எனக்கு புதிய விசயம்.

4. மறைக்காமல் ஒளிவு மறைவு இல்லாமல் படைக்கப்பட்டவிதம் சிறப்பு.

அதென்ன போர்வையை போர்த்திக்கிட்டு?

கிராம்த்து ஜில்லு வீட்டுக்குள்ள இருந்ததால இருக்குமோ(?)

ஐயா மூடு வந்தா எழுதுவாரு. நீங்க வீட்லதானே இருக்கீங்க. நிறைய எழுதுங்களேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான விமர்சனம்.

S Thinesh said...

I read ur husband's comment also...
I really like ur version of comment...
Please keep writing on....
Both of you...........

Geetha Ravichandran said...

நண்பர்கள் யாவருக்கும் மிக்க நன்றி.
ஜோதிஜி-- நான் கிராமத்தில் வளர்ந்தவள் இல்லை. விடுமுறைக்கு சிறுவயதில் சென்ற அனுபவம் மட்டுமே. My better-half is a pakka Vettikaadu man :)

ஜோதிஜி said...

pakka Vettikaadu man

ரவி வேர்களை மறக்காமல் இருப்பதால் தான் இந்த பாராட்டுரை உங்களிடம் இருந்து வருகிறது.

பிரியமுடன் பிரபு said...

நடித்தவர்கள் யாருடைய நடிப்பிலும் செயற்கைத்தனம் துளி கூட இல்லை. எதார்த்தமான வசனங்கள்,அழகானபடப்பிடிப்பு,மனதைகொள்ளை கொண்டன.
///

YES

நல்ல பதிவு
நானும் படம் பார்த்தேன்
நல்ல இருக்கு
குறிப்பா அந்த கிராம சுழல்
ஆனாலும் களவாணி பசங்களை நாயகனாய் தொடர்ந்து காட்டி வருவது நல்லதல்ல

ஆ.ஞானசேகரன் said...

நன்றாக ரசித்து எழுதியுள்ளது தெரிகின்றது...

Geetha Ravichandran said...

Prabhu---நன்றி. நாயகன் வயதுக்குரிய குறும்புத்தனம் செய்வதாக நான் நினைகிறேன். ஒரு சாதாரன நடுத்தர குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளே.
Ganasekaran---Thank You.

சுல்தான் said...

படம் போலவே விமர்சனமும் இயல்பாக .... அருமை.

மயில்ராவணன் said...

நல்லா எழுதியிருக்கீங்க.

Geetha Ravichandran said...

Sultan ----Thank You.
MayilRavanan-----Thank You.

பிரபல பதிவர் said...

சொர்கமே என்றாலும் அது..... :)

ஜாக்கி சேகர் said...

முதலில் இந்த படம் பார்க்கும் போது உங்கள் வீட்டு ஹோம்தியேட்டர் எதிரில் நடந்த நிகழ்வுகளை மிக அழகாக விவரித்தமைக்கும் மற்றும் பிள்ளைகளின் இன்றைய போக்கு கண்முன் நிகழ்த்தியமைக்கும்...
புருசனும் பொண்டாட்டியும் சோடி போட்டு ரொம்ப நல்லவே எழுதறிங்க...சகோதரி கீதாவுக்கு எழுத்து என்பது வரம்... அது எல்லோருக்கும் வாய்த்து விடாது... உங்கள் இருவருக்கும் அது நன்றாகவே வருகின்றது... தொடர்ந்து எழுதுங்கள்....

என்னை உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது... ஆனால் உங்கள் கணவருக்கு என்னை நன்றாக தெரியும்....

அன்புடன்
ஜாக்கிசேகர்

Geetha Ravichandran said...

ஜாக்கி சேகர்----வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. ரவி சொல்லி உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

Subha said...

என் நான்கு வயது மகன் இந்த படத்தை குறைந்தது பதினைந்து முறையாவது பார்த்திருப்பான்.வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த அவன் யாரேனும் தமிழ் பேசுவதை பார்த்தாலே பரவசம் அடைந்துவிடுவான்.தமிழ் தளிவாக பேச வராது என்றாலும் ஆத்திச்சுடியும் ,பாரதியார் பாடல்களும் மட்டும் பாட வரும் அவனுக்கு.படம் என்னதான் புரிந்ததோ , கண்களில் நீர் முட்டும் அளவிற்கு சிரிப்பான்.அருமையான படம்.அரிவாளும் கையுமாக அலையும் மதுரை படங்கள்,தாதா படங்கள் மத்தியில், சிறிதும் விரசம் அற்ற , வெட்டு குத்து காட்சிகளைக் கூட இரத்தக்களறியாக காட்டாமல் பட்டும் படாமல் காட்டிய விதம் ,நொடிக்கு நொடி வெடிச் சிரிப்பு, நம் தினப்படி வாழ்வில் நடக்கும் காட்சிகளையே மையப்படுத்தி இயல்பாக, அலட்டிகொள்ளாமல், காட்சிகளை நகர்த்திய விதம் ,அருமையான பாத்திரத் தேர்வு ,கிராம மொழி என எல்லா விதத்திலும் அருமையான படம்.நேரம் போனதே தெரியவில்லை.படம் பார்த்து முடிந்ததும் மனம் உற்சாகமாகவும் இலேசாகவும் இருந்தது .படங்களே பார்க்காத நானும் என் மகனுடன் அமர்ந்து பதினைந்து முறை பார்த்தேன்.ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியாகவே உணர்ந்தேன்.

geetha said...

Subha--Thanks

Geetha Ravichandran said...

சுபா--நீங்களே ஒரு அழகான , தெளிவான ,சிறிய விமர்சனத்தை எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...

Yes நல்ல விமர்சனம், நானும் மன்னார்குடி காரன்தான் நான் ரசித்து பார்த்த படங்களில் இதுவும் ஓன்று.

தேங்க்ஸ்

Dasarathan said...

kaLavaani-- trigger's your childhood life to express your feeling.
odivilayaadu paapa --shows you are a good mother.
Wishes Mrs Geetha ravichandran.

Geetha said...

Royal Raj---Thank you for visiting my blog.
Dasarathan---Thank you for ur support.

அமுதா கிருஷ்ணா said...

அருமையான படத்திற்கு அருமையான விமர்சனம்..