Saturday, February 1, 2020

நிசப்தம்!!

நிசப்தம்!!
நான் வேண்டி விரும்பி
கேட்ட நிசப்தம்
இதோ என்னைச் சுற்றி இருக்கிறது.
நான் ஏங்கிய அந்த நிசப்தம்
சில நாட்கள் எனக்கு
பிடிக்காமல் போகிறது.
இந்நாள் அந்நாட்களில் அடங்கும்!
ஆம், எனக்கு இந்த நிசப்தம்
வெறுப்பை அளிக்கிறது.
எனக்குள் கேட்கும் சப்தத்தை தவிர
வேறு சப்தங்கள் ,ஒலிகள்
கேட்க வேண்டும் போல் உள்ளது.
அந்த எரிச்சலூட்டும் சப்தங்களை
எனக்குள் கேட்க வைக்கும்
என் மூளையின் மின் இனைப்புகளை
கத்தரித்துவிட வேண்டும் போல் உள்ளது.
என்னைச் சுற்றி கேட்கும் சப்தம்
எனக்குள் கேட்கும் இரைச்சலை
ஆதிக்கம் செய்ய வேண்டும்.
நூறு மடங்கு அதிகமாக கேட்க வேண்டும்.
எனக்குள் கேட்கும் சப்தம் என்னை
மிரளச் செய்கிறது.
சாலையின் நடுவில் நின்று கொண்டு
அந்த வாகனங்களின் இடைவிடாத
ஒலியை கேட்க தூண்டுகிறது.
இந்த நிசப்தம் எனக்குள் கேட்கும்
இரைச்சலை நுட்பமாக கேட்க வைக்கிறது.
அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
என் இருப்பு மீதே எனக்கு சந்தேகம் வரச்செய்கிறது.
அறுவை சிகிச்சை அறைக்கு
வெளியே நிலவும் நிசப்தமும்,
பரீட்சை முடிவிற்கு முன் நிலவும் நிசப்தமும்
ஒரு வித நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
என்னை சுற்றி இருக்கும் இந்த நிசப்தம்
எனக்குள் ஒருவித பயத்தை உருவாக்குகிறது.
கடவுளுக்கு முன் அவன் பாதங்களையும், முகத்தையும் பார்த்துக்கொண்டு
நிற்கும் போது சூழும்
நிசப்தம் நம்பிக்கை ஊட்டுவதாகவும்
பாதுகாப்பளிப்பதாகவும் தோன்றுகிறது.
ஊடலுக்கு பின் சுற்றும்
நிசப்தம் போன்றது இல்லை இது.
ஊடலுக்குப் பின் ஒரு தென்றலின் மெல்லிசை
கண்டிப்பாக கேட்கும்.
இந்த நிசப்தம் எனக்குள் ஒலிக்கும்
சப்தங்களை கேட்க என்னை வற்புறுத்துகிறது.
என் தூக்கத்தை களவாண்ட
இந்த நிசப்தத்தை நான் வெறுக்கின்றேன்.
என்னை வெளியில் அமைதியானவளாகவும்
எனக்குள் ஓர் ஆழிப்பேரலையை உண்டாக்கும்
இந்த நிசப்ததை நான் அடியோடு வெறுக்கிறேன்!

No comments: