Monday, October 23, 2017

வார்த்தைக் கண்ணாடி

தீபாவளி அன்று காலை! வீட்டில் சாமி கும்பிட்டு கங்கா ஸ்நானம் எல்லாம் முடித்துவிட்டு சுட்டு வைத்திருந்த வடை, சுழியனையும் ஒரு கைப்பார்த்துவிட்டு உண்ட களைப்பில் சோபாவில் சாய்ந்திருந்த நேரம் , சரி ஊருக்கு பேசி தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லிவிடலாமே என்று முடிவு செய்தேன். ஒன்று ,இரண்டு சொந்தங்களுடன் வாழ்த்துக்களை பரிமாறி முடித்துவிட்டு சிம் கார்ட் டாப் அப் செய்வது போல் வயிற்றில் சிறிது இடம் காலியானவுடன் மீண்டும் முறுக்கு, லட்டு என்று டாப் அப் செய்து விட்டு அடுத்து யார் யாருக்கெல்லாம் போன் செய்வது என்று யோசித்து போன் செய்தேன்.

பேசிய முக்கால் வாசிப்பேர் கேட்ட கேள்வி ,”என்ன என்ன பலகாரம் செஞ்ச நீ?” என்பது தான். நானும் பதிலுக்கு நான் செய்தவற்றை கூறிவிட்டு ”நீங்கள் என்ன பலகாரம் செய்தீர்கள்?” என்று கேட்டறிந்து கொண்டேன். எல்லோருடனும் ஒன்றாக இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்தது. மகளும் வேறு ஒரு நாட்டில் படிப்பின் காரணமாக, கணவரும் வேலை நிமித்தமாக வேறு ஒரு நாட்டில். நானும் மகனும் தனியாக தீபாவளி கொண்டாடியது ஏதோ ஒரு வித ஈடுபாடில்லாமல் தான் இருந்தது. அதை மறக்கத்தான் எல்லோரிடமும் போன் செய்து பேசினேன். மகனுக்கு ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. அதுவும் எந்நாள் போன்ற ஒரு நாளாகவே இருந்தது. புது துணி உடுத்தி யாரிடம் காண்பிப்பது என்பது கூட தெரியாமல் அதனை உடுத்தாமலேயே இருந்துவிட்டேன்.

வயதான ஒரு உறவினரிடம் பேசி வாழ்த்து தெரிவிக்கலாமே என்று அவருக்கு போன் செய்தேன். போனை முதலில் எடுத்த மாமா,” என்ன கீதா தீபாவளி எல்லாம் நல்லா கொண்டாடினீங்களா? “, என்றார். நானும் பதிலுக்கு,”நானும் , ரிஷியும் நன்றாக கொண்டாடினோம்,”என்றேன். அதற்கு அவர்,”ஏன் ரவி ஊரில் இல்லையா?” என்றார். “இல்லை, வேலை நிமித்தமாக வெளியூர் சென்று இருக்கிறார், அவர் தனியாக அங்கே கொண்டாடுகிறார், நாங்கள் இங்கே தனியாக கொண்டாடுகிறோம்,”என்றேன். என் குரலில் ஒரு சுனக்கத்தை உணர்ந்த அவர்,” சரி விடு உங்களுக்காகத்தானே இப்படி அலைகிறார் ,”என்றார். ஆம் அவர் கூறியதில் உண்மை இருந்தது.

”தீபாவளி அதுவுமா எப்படி அவர் வெளியூர் போனார், நீங்க எதுக்கு அதுக்கு ஒத்துக்கிட்டீங்க?” என்று பலர் என்னை அன்று கேட்டுத்தீர்த்தார்கள். கேள்வி கேட்ட பலரிடம்,”இல்லை வேறு வழியில்லை , போக வேண்டிய கட்டாயம்,” என்றும், சிலரிடம் கொஞ்சம் ஆதங்கத்துடன்,” அது அவருக்கே தெரியவேண்டும்” என்றும் கூறினேன். தீபாவளி அதுவுமாக அவர்  ஒன்றும் ஆசையாக வெளியூர் போகவில்லை என்பது என் உள்மனதிற்கு தெரிந்தாலும் பலரது கேள்வியும், கேள்வி கேட்ட தோரணையும் எனக்கு அவர் மேல் சிறு கோபத்தை தூண்டியது. அக்கோபம் மனதுக்குள்ளேயே பூட்டப்பட்டு கிடந்தது.

அந்த மாமாவிடம் பேசிவிட்டு, அவரின் மனைவியிடம் பேசினேன். மாமாவிடம்  நான் பேசியதை அவர்கள் அருகில் இருந்து கேட்டிருப்பார்கள் போல்.  எடுத்த எடுப்பிலேயே,” கவலப்படாத கீதா, மாப்பிள்ளை நல்ல விஷயத்திற்கு தானே ஊருக்கு சென்று இருக்கிறார், கெட்ட விஷயத்திற்கு செல்லவில்லை இல்லையா?” என்றார். நான் அவர் கூறியதை பெரிது படுத்தாமல்,” இல்லை இல்லை  நான் கவலை படவில்லை. கொஞ்சம் போர் அடிக்குது தனியாக கொண்டாட அவ்வளவு தான், நீங்கள் எப்படி கொண்டாடினீர்கள்? என்ன என்ன பலகாரம் செய்தீர்கள்?, என்று கேள்விகளைக் கேட்டு அவரின் பேச்சை திசை திருப்ப முயற்சித்தேன். ஆனால் அவர் விடாமல், மீண்டும் இரு முறை ,”நீ அதல்லாம் கவலப்படாத, அவர் நல்ல விஷயத்திற்கு தானே ஊருக்கு போய் இருக்கிறார், கெட்ட விஷயத்திற்கு இல்லையே?” என்று அதே வார்த்தைகளை வீசினார். முதல் முறை கேட்ட பொழுதே எனக்கு அந்த வார்த்தைகள் இதமாக காதில் விழவில்லை. மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை கேட்ட பொழுது மனதிற்குள் சுருக் என்று இருந்தது. ஏன் இவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று நினைத்து ,”சரி நீங்கள் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடுங்கள்”, என்று கூறினேன். அதற்கும் அவர்கள்,”எங்க சந்தோஷமாக கொண்டாறது?” என்று கூறியதுடன், அவர்களின் இறந்த சொந்தங்களை அடுக்கினார்கள். இதற்கு மேல் உரையாடலை தொடர்ந்தால் என் மனம் புண்படும் என்று நினைத்து போனை வைத்துவிட்டேன்.

போனை வைத்துவிட்டேனே தவிர அவரின் வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஏதோ ஒரு பயத்தை உண்டு பண்ணியது. ஊருக்கு சென்று இருப்பவர் பத்திரமாக வரவேண்டுமே என்ற பதைபதைப்பு ஒரு புறம்.நாம் தனியாக இருக்கிறோமே என்று கூட நினையாமல் இப்படி எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுகிறார்களே என்ற சங்கடம், கோபம். அவர்கள் என் மேல் கரிசனமாக இருப்பதானால் இதே வார்த்தைகளை வேறு விதமாக கோர்த்திருக்கலாம். அவரின் வார்த்தைகள் அவரின் மனதை , அவரின் ஆழ் எண்ணங்களை பிரதிபலித்தனவா என்று எனக்கு ஒரு சந்தேகம். அவர் நினைத்திருந்தால் இதமாக, பொதுவாக பேசி இருக்கலாம். ஒருவரது வார்த்தைகள் கண்ணாடியாய் எப்படி ஒருவரது எண்ணங்களை எடுத்துக்காட்டுகின்றன!அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டேன்.

அதையே நினைத்துக்கொண்டு நான் குழம்பினால் அவரின் எண்ணம் வெற்றிப் பெற்றுவிடும். அதனை தீபாவளி பட்டாசு குப்பையென மனதில் இருந்து கூட்டி வெளியில் கொட்டிவிட்டு சாயங்காலம் நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட ஆயத்தமானேன். நானும் மகனும் தனியாக இருக்கிறோம் என்று நினைத்து எங்களுக்காக ஆசையாக பலகாரம் எடுத்துவந்த என் இனிய தோழிகளை நினைத்து ஆனந்தம் அடைந்தேன்.  அவர்கள் எடுத்துவந்த பலகாரங்களை ஆசை ஆசையாக உண்டு மகிழ்ந்தேன். தீபாவளி இனிதே முடிந்தது.

வாயில் ஊறும் உமிழ்நீர் ஆயினும் உமிழும்  முன் நாவினால் உணர்ந்துவிட்டோமானால் பிறர் நலன் கருதி  கண்ட இடங்களில் உமிழ மாட்டோம். மீறி உமிழ்ந்தால் என்றாவது ஒரு நாள் பிறரது உமிழ்நீர் மீது நம் கால் பதியும்.

2 comments:

murugan ssb said...

அறுமை

karthikmusings said...

சிந்திக்க வைத்த பதிவு.