Thursday, October 26, 2017

மனிதம் மடியாது......

அதிகாலை நான்கு மணி இருக்கும். வானம் ஒரே கும்மிருட்டு. முந்தின நாள் இரவு மழை பெய்து இருந்ததால் வானம் கருநிறமாகவே இருந்தது. சூரியன் எழ மனமில்லாமல் சற்றே இளைப்பாறிக்கொண்டிருந்தான். அந்த கிராமத்தில் ஒரே நிசப்தம். ஊரே உறங்கிக்கொண்டிருந்தது. தன் கடமையை ஆற்ற பால்காரர் மட்டும் ஒரு கடா கடா மிதிவண்டியில் மணியை அடித்தபடி போய்கொண்டிருந்தார். அவரின் மணிஓசையை கேட்டு பால் கறக்க மாடுகளை பால் பண்ணைக்கு ஓட்டிச்செல்ல பல வீட்டு பெண்மணிகள் எழுந்தார்கள். கால தாமதம் ஆகிவிட்டால் பின் கறந்த பால் வீனாகிவிடும். அவர் கிடைத்த பாலை வாங்கிக் கொண்டு நேரத்திற்கு கிளம்பிவிடுவார்.  ஓட்டல் ஏதும் அக் கிராமத்தில் இல்லாததால் பாலை எங்கும் விற்கக்கூட முடியாது. வீட்டில் உள்ளவர்கள் குடித்தது போக பாக்கியை உறை ஊற்றித்தான்  வைக்கவேண்டும். முடிந்தமட்டும் வீட்டுப் பெண்மணிகள் பால்காரரின் சைக்கிள் மணிச்சத்தம் கேட்ட உடன் எழுந்துவிடுவார்கள். அக்கம்பக்கத்தில் யாராவது எழ தாமதமானால் மாட்டை ஓட்டிக்கொண்டு போகும் போதே, “அக்கா பால் காரர் வந்துட்டாரு”, என்று குரல் கொடுப்பார்கள்.

அன்றும் அப்படி பால் காரர் சைக்கிள் மணிச்சத்தம் கேட்டவுடன் திறக்காத விழிகளை தேய்த்துக்கொண்டு வள்ளி எழுந்தாள். படுத்திருந்த பாய், தலையனையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு கொல்லப்புர கதவை திறந்துகொண்டு சத்தமில்லாமல் பின் பக்கம் சென்றாள். காலை எடுத்து வெளியில் வைத்தவுடனேயே காலில் சேறும் சகதியும் ஒற்றிக்கொண்டது. சிகப்பு மண் என்பதால் மழைநீரில் கொழ கொழ என்று இருந்தது. இருட்டு வேறு. பத்திரமாக காலை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து கிணற்று அடிக்குச் சென்றாள். அங்கு வாளியில் இறைத்து வைத்திருந்த தண்ணீர் கொண்டு முகம், கை, கால் கழுவி, புடவை முந்தாணியால் முகத்தை துடைத்துக்கொண்டு, ஒரு வாளியில் தண்ணீர் முகர்ந்து கொண்டு வாசல் தெளிக்க சென்றாள்.

அவளின் வீட்டு வாசல் விஸ்தாரமான வாசல். வீடு சிறியதாக இருக்குமே தவிர வாசல் மிகப்பெரியது. சிறிய, ஓடு வேயப்பட்ட வீடு தான். அதிலேயே தன் நான்கு குழந்தைகளையும் வளர்த்து பெரியவர்களாக்கி விட்டாள்.  பெண்ணை திருமணம் செய்து கொடுத்து பேரக்குழந்தையும் பார்த்துவிட்டாள். வீட்டுத்திண்ணையில் அரிசி மூட்டை, நெல்மூட்டை, உரமூட்டை என்று மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பூச்சிபட்டு வந்து மறைந்து இருந்தால் கூட யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டிற்குள் சாமானும் செட்டுமாக இருந்தாலும் வீட்டு வாசல் மட்டும் அழகாக சாணம் தெளிக்கப்பட்டு எப்பொழுதும் சுத்தமாக கூட்டப்பட்டு, கோலம் போடப்பட்டிருக்கும். சிறுவர்கள் கிரிகெட் விளையாட ஏதுவாக சுத்தமாக இருக்கும். எவ்வளவு மழை பெய்தாலும் வீட்டு வாசலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது.

வாளி நிறைய தண்ணீரை வீட்டை ஒட்டிய சந்து வழியாக எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்றாள். அதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு சுவரில் சாத்தப்பட்ட வாசல் கூட்ட என்பதற்காகவே இருக்கும்  கட்டைவிளக்குமாரை எடுத்துக் கொண்டு அதனை வலக் கையால் பிடித்துக்கொண்டு இடக்கை உள்ளங்கையில் ஒன்றிரண்டு அடி அடித்து ஒழுங்கு செய்து வாசலை கூட்ட ஆயத்தமானாள். கையில் துடைப்பத்துடன் குனிந்தவள் தான். “ஆஆஆ, “என்று அலறினாள். “கையில் வைத்து இருந்த துடைப்பத்தை தூக்கி எரிந்துவிட்டு,” பாம்பு கொத்திடுச்சு யாராவது வாங்க” என்று அலறியபடி கீழே சாய்ந்தாள். அவளை காலில் கொத்திய அந்த நல்ல பாம்பு வந்த சுவடு தெரியாமல் பக்கத்தில் இருந்த புதருக்கு  நளினமாக நெளிந்து சென்றது.


இவளின் அலறல் சத்தம் கேட்டு, மாட்டுக் கொட்டகையில் மாட்டை அவிழ்த்துக் கொண்டிருந்த  பக்கத்து வீட்டு அமுதா மாட்டை விட்டு விட்டு ஓடோடி வந்தாள். அவர்கள் வீட்டிற்கும் இவர்களுக்கும் பேச்சு வார்த்தை இல்லை. பங்காளி தான் ஆனால் ஏதோ மனஸ்தாபம். ஒரு காலத்தில் ஒன்றாக கூடி கொண்டாடியவர்கள் தான். பிள்ளைகள் பெரியவர்கள் ஆனவுடன்,உன் மகனுக்கு மட்டும் வேலை கிடைத்துவிட்டது, என் மகன் வேலை இல்லாமல் இருக்கிறான் என்பதை போன்ற ஒருவித பொறாமை  உணர்வு வள்ளியின் மனதில் . அமுதா குடும்பத்துடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். சத்தம் கேட்டு   ஓடி வந்து பார்த்த அமுதா உடனே தன் புடவை முந்தானியை கிழித்து பாம்பு கடித்த இடத்திற்கு மேல் கட்டிவிட்டு, ஓடிச்சென்று தன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தன் கணவனையும், மகனையும் எழுப்பிக் கொண்டு வந்தாள். அது வரையில் முதல் நாள் குடித்த சாராயத்தின் போதையில் உறங்கிக்கொண்டிருந்த வள்ளியின் கணவர் மெதுவாக எழுந்து வந்து செய்வதறியாது திகைத்து நின்றார்.

அக்கிராமத்தில் மருத்துவ வசதி எதுவும் கிடையாது. பக்கத்து கிராமத்திற்குத்தான் செல்லவேண்டும். உடனே ஒரு வண்டிக்கு ஏற்பாடு செய்து காரில் வள்ளியை தூக்கி போட்டுக்கொண்டு மன்னார்குடிக்கு சென்றார்கள். அங்கு முதல் உதவி செய்த அங்கிருந்த மருத்துவர்கள்,”உடனே தஞ்சாவூருக்கு பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க, இவ்வளவு தான் எங்கலால இங்க செய்ய முடியும் ,” என்று கைவிரித்துவிட்டார்கள். உடனே அங்கிருந்து தஞ்சாவூர் பெரியாஸ்பத்திரிக்கு வள்ளியை கொண்டு சென்றார்கள். அங்கு இரண்டு நாட்கள் வைத்து வைத்தியம் பார்த்தார்கள். அரசாங்க மருத்துவமணை ஆகையால் தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு இருக்கவில்லை. நல்ல வேலையாக அவர்களின் உறவினர் ஒருவர் அங்கு மருத்துவராக வேலைப்பார்த்தார். அவர் வள்ளியை பார்த்துவிட்டு,” நீங்க இனி தாமதிக்காம பிரைவட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க. இங்க இவங்களுக்கு கொடுக்கற மருந்து வீரியமில்லாத மருந்து. இந்த பாம்பு கடிக்கு இன்னும் ஸ்டார்ங்கா மருந்து தேவைப்படும். கால் வேற அழுகற மாதிரி இருக்கு.” என்று அறிவுரை வழங்கினார். அதை கேட்ட வள்ளியின் மகன்களும், கணவரும், அவளை ஒரு தனியார் மருத்துவமணையில் கொண்டு சேர்த்தார்கள். அங்கு தான் அவளின் திருமணமான மகள் அக்கெளண்டண்டாக வேலைப் பார்க்கிறாள். இதுவரை கூடவே இருந்து அமுதாவின் கணவர் ராசா எல்லா உதவிகளையும் செய்தார். வள்ளி கண்முழித்து பார்க்கும் வரை கூடவே இருந்தார்.

நான்கு நாட்களுக்குப் பிறகு கண் விழித்து பார்த்த வள்ளியின் விழி ஓரத்தில் கண்ணீர் வழிந்தது. தான் இன்று உயிரோடு இருப்பது அமுதாவின் குடும்பத்தினால் தான் என்பதை  உணர்ந்த அவள் ஏதும் பேசாமல் படுத்திருந்தாள் . மறுநாள் அவள் நலம் விசாரிக்க வந்த அமுதாவை பார்த்தவுடன் மீண்டும் அவள் கண்களில் தண்ணீர் ததும்பியது. அவளால் பேச முடியவில்லை. ஆனால் அவளின் கண்ணீர் ஆயிரம் வார்த்தைகளை , நன்றிகளை, மன்னிப்புக்களை உணர்த்தியது. அவளின் அருகில் சென்ற அமுதா அவளின் கைகளை இருக்க பிடித்துக் கொண்டு ,” அழாதக்கா, நீ பொழச்சுட்ட, கடவுள் புண்ணியத்துல உனக்கு ஒன்னும் ஆகல. கவலப்படாத சீக்கிரமா சரியாகி வீட்டுக்கு வந்துடுவ,” என்று ஆறுதல் கூறினாள். அவளின் மனதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் எஞ்சி இருக்கவில்லை. சமைத்து எடுத்து வந்திருந்த சாப்பாட்டை கொடுத்துவிட்டு சிறிது நேரம் இருந்துவிட்டு,”சரிக்கா, சாயங்காலம் பால்காரர் வந்துடுவார், நான் கிளம்பறேன். உங்க வீட்டு மாட்டையும் பால் கறக்க நான் கூட்டிட்டு போறேன். நீ நல்லா தூங்கு ,”என்று கூறிவிட்டு,வள்ளியின் கணவரிடமும், மகளிடமும்,”அம்மாவ பத்திரமா பாத்துக்குங்க. ஏதாவது வேனும்னா சொல்லி அனுப்புங்க,”என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றாள். அறையை விட்டுச் சென்ற அவளை அக்குடும்பமே நன்றியுடன் பார்த்தது. வள்ளிக்கு மறு ஜென்மம் கொடுத்த அமுதாவும் அவளின் குடும்பமும் கடவுளாக தெரிந்தார்கள்.பகையும் , வெறுப்பும் இருந்த இடம் தெரியாமல் போனது.

வீட்டுக்குச் சென்ற அமுதாவிடம் அவள் வீட்டு வாசலில் காய்ந்து கொண்டிருந்த கடலையை காக்கா கோழி கொத்தாமல் இருக்க அமர்ந்தபடியே ஒரு குச்சியை கொண்டு விரட்டிக்கொண்டிருந்த அவளின் எழுபத்தி ஐந்து மாமியார் கிழவி,” என்ன அமுதா, வள்ளிக்கு இப்போ தேவலையா, நல்லா இருக்காளா?” என்று நலன் விசாரித்தாள். ”என்னா வீராப்பா இருந்தா, இப்ப யாரு அவ உசிர காப்பாத்தினது. தான் ஆடாட்னாலும் தசை ஆடும்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. இதுக்குத்தான் எல்லாரும் ஒத்து ஒணந்து, விட்டு கொடுத்து வாழணும்னு சொல்றது. அந்த காலத்துல நாங்க ஒத்த ஓர்ப்படியா எல்லாரும் ஒத்துமையா இருப்போம். இப்போ எங்க ? நீங்கல்லாம் ஒருத்தரோட ஒருத்தர் பேசவே காசு கேக்கறீங்க. என்னமோ போங்க எல்லாரும் புள்ள குட்டியோட ஒத்துமையா நல்லா இருந்தா சரி. யாரு எதை அள்ளிக்கிட்டு போகப்போறோம்>” என்று தனியாக புலம்பியபடி காக்கா விரட்டுதலை தொடர்ந்தாள்.
வீட்டிற்குள் சாமி விளக்கு ஏற்றிய அமுதா , வள்ளி சீக்கிரமே குணமடைய அந்த மதுரைவீரனிடம் வேண்டிக்கொண்டாள்.

No comments: