Sunday, December 3, 2017

கார்த்திகை தீப திருநாளாம்!


கார்த்திகை தீப திருநாளாம் இன்று! வருடா வருடம் வரும் பண்டிகை என்றாலும் இதற்கு ஒரு தனி சிறப்பு உண்டு, அழகுண்டு, மகிமை உண்டு, ஒளி உண்டு! நினைவில் பல வண்ண நினைவலைகள்! இரண்டு நாள் முன்பே அம்மா அகல் விளக்குகளை கழுவி காய வைப்பாள். அகல் விளக்கு என்றாலே அது சிகப்பு நிற செம்மண்ணினால் வடிவமைக்கப் பட்டதாகவே இருக்கும். இன்று கிடைப்பது போன்று வண்ண வண்ண விளக்குகள் அப்பொழுது கிடையாது. அவற்றிற்கு வண்ணம் பூச வேண்டும் என்று கூட தெரியாது. அலங்கரிப்பதென்றால் அதற்கு மஞ்சள் , குங்குமம் வைப்பது தான். அந்த பொறுப்பை என்னிடம் தருவாள் அம்மா. கொஞ்சம் சினுங்கி கொண்டே செய்வேன்! வீடு வாசல் சுத்தம் செய்யப்படும்.
முதல் நாள் பரணி தீபம் என்று சில அகல் விளக்குகள் ஏற்றுவாள். மறக்காமல் அடுப்பிற்கு ஒன்று, கிணற்றிற்கு ஒன்று ஏற்றுவாள்! இன்றும் என்னிடம் ”மறக்காமல் அடுப்பிற்கு ஏற்றிவிடு ”,என்று ஞாபகப்படுத்துகிறாள். இன்றுவரை அவள் வீட்டு தண்ணீர் இல்லா முன்னூற்று ஐம்பது அடி போர் போடப்பட்ட கிணற்றிற்கு விளக்கொன்று ஏற்றி வைக்கிறாள். தண்ணீர் தரும் கிணற்றை பூஜித்து தங்கச் சுரங்கமென நினைக்கிறாள். மணல் அள்ளி ஆறுகளையும், குளங்களையும் மலடாக்கிக் கொண்டிருக்கும் நம் அறிவீனம் ஒரு நொடி மூளையை தட்டிப் பார்க்கிறது. கார்த்திகை பொரி கிளறுவாள். கார்த்திகையின் போது மட்டுமே அப்பொரி கிடைக்கும். வெல்லம் போட்டு அப்பம் செய்வாள்! அந்த அப்பம் தொப்பி போல் வடிவத்தில் இருக்க வேண்டும் என்று அவ்வளவு பிரயத்தனம் செய்வாள். அது தொப்பி மாதிரி அழகாக ஒரே மாதிரியாக வந்து விட்டாள் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதனை உண்டு மகிழ்வதை விட பார்த்து மகிழ்வாள். எங்களிடம் காண்பித்து எங்களையும் மகிழச் செய்வாள். அந்த அப்பத்திற்கு கந்தர் அப்பம் என்று பெயராம். கந்தனுக்கே இவள் குல்லா போட பார்க்கிறாளோ என்று தோன்றும். தொலைக்காட்சியில் திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதை லைவ்வாக காண்பிப்பார்கள் . அதற்குப் பின் தான் வீட்டில் விளக்கேற்றுவாள். வீட்டில் தொலைகாட்சி பெட்டி இல்லாத போது சாயங்காலம் ஆறு மணிக்கு விளக்கேற்றுவோம். தொலைக்காட்சி பெட்டி வந்தப்பின் திருவண்ணாமலை தீபத்தை நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வு !
வீடு முழுதும் தீபம் ஏற்றுவோம். பெண் பிள்ளைகள் அழகால உடை உடுத்தி விளக்கு ஏற்றும் போது ஒரு தனி அழகு தான். மதில் சுவர் எங்கும் விளக்குகள் ஏற்றிவிட்டு அது காற்றில் அனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் ஓவ்வொரு அறை வாசலிலும் அகல்கள் அலங்கரிக்கும். பார்த்து பத்திரமாக நடக்க அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாள். அங்கங்கே எண்ணை கசிந்து வேறு இருக்கும். வழுக்கி விட்டுவிடுமோ என்ற பயம் அவளுக்கு. இப்பொழுதெல்லாம் டீ லைட் கேண்டில் தான் என் வீடு அகலில். அகலை கழுவ வேண்டும், எண்ணைய் ஊற்ற வேண்டும், பொட்டு வைக்க வேண்டும் என்ற கோட்பாடுகள் இல்லை. கால மாறுதல்களில் ஒதுவும் ஒன்று.
வீடு முழுவதும் விளக்கு ஏற்றி விட்டு, அதனை வீட்டிற்கு வெளியே நின்று பார்க்கும் பொழுது மனதிற்குள் பட்டாம்பூச்சி படபடக்கும். நம் வீட்டை மட்டும் அல்லாது தெரு முழுவதும் , ஒவ்வொரு வீட்டிலும் எரியும் விளக்குகள் கண்கொள்ளா காட்சி. பொதுவாக கார்த்திகை அன்று மழை தூரல் இருக்கும் , சிலு சிலு என்று காற்றும் வீசும். அந்த தூரலில் நின்று கொண்டு விளக்கு ஏற்றி மகிழ்வது ஒரு சுகம் தான். மழை தூறுமோ, விளக்கு அனைந்து விடுமோ என்ற கவலை எனக்கு இப்பொழுது இல்லை. நான் இருக்கும் எட்டாவது மாடி அடுக்கு வீட்டின் வாசலுக்கு மழை சாரல் கூட அண்டாது. நானே விளக்கேற்றி, நானே ரசித்துக் கொள்வேன். என் அம்மா அப்பத்தின் அழகை எங்களுக்கு காட்டி மகிழ்ந்தது மாதிரி இப்பொழுது நான் என் குடும்பத்திடம் நான் வரையும் கோலம், ஏற்றும் தீபம் என்று ஒவ்வொன்றாக காண்பித்து மகிழ்கிறேன். நல்ல வேளையாக வாட்ஸ் ஆப் வந்தது. கடல் கடந்து இருக்கும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் படம் எடுத்து அனுப்பி மகிழ்கிறேன். இதில் ஒரு அற்ப சந்தோஷம்.
என்ன தான் நான் அப்பம், பொரி செய்தாலும் அம்மாவின் அப்பத்திற்கும் பொரிக்கும் ஈடாகாது. அந்த பொரியில் நிறைய தேங்காயை கீறி நெய்யில் வறுத்து போட்டிருப்பாள். நினைத்தாலே தானாகவே எட்சில் ஊறும். சில நேரம் அம்மா எனக்காக கார்த்திகை பொரியை எடுத்து வைப்பாள். விடுமுறைக்கு கார்த்திகையை ஒட்டி ஊருக்குச் சென்றாள் அந்த குடுப்பினை உண்டு.தீபாவளிக்கு வாங்கிய வெடி, கம்பி மத்தாப்பு சிலவற்றை கார்த்திகை தீபத்தன்று வெடிக்க பத்திரப்படுத்தி வைப்பதுண்டு. கார்த்திகைக்கு மறுநாளும் சில அகல்களை ஏற்றுவோம். அதற்குப் பின் அந்த அகல்களை மீண்டும் கழுவி, இரண்டு மூன்று நாட்கள் காயவைத்து ஒரு சிகப்பு ப்ளாஸ்டிக் டப்பாகுள் வைத்து அடுக்கி மூடி லாப்டில் வைத்து விடுவாள். அந்த சிகப்பு டப்பா அடுத்த வருட கார்த்திகை வரும் பொழுது தான் வெளிச்சம் பார்க்கும். எனக்கு அந்த வேலை இல்லை. டீ லைட் கேண்டில் எரிந்து முடிந்த பின் எடுத்து குப்பையில் வீசி விடுகிறேன். அம்மா இன்று வரை ரீ சைக்கிள் செய்கிறாள். அதன் பொருள் தெரியாமலேயே. நானோ சுற்றுப் புறச்சூழல் பற்றி வாய் கிழிய பேசினாலும் பூமியில் மேலும் குப்பையை சேர்க்கிறேன். சோம்பேறித்தனம் என்று சொல்வதை விட வேறு இதற்கு பெயர் என்ன?
வயதானாலும் அம்மா அப்பமும், பொரியும் செய்து தன் இஷ்ட தெய்வத்திற்கு வைத்து கும்பிடுகிறாள். விளக்குகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதே தவிர அவற்றை ஏற்ற அவள் சோம்பேறித்தனம் அடைவதில்லை!. என்னால் முடிந்தவரை நானும் அம்மாவைப் போல் செய்கிறேன். என் அம்மா அகல் விளக்கு ஏற்றினாள், நான் டீ லைட் கேண்டில் ஏற்றுகுறேன்.என் மகள் சர விளக்கு, ஸ்ட்ரிங் லைட் ஏற்றி கொண்டாடுவாள். மொத்தத்தில் கார்த்திகை அன்று ஒளி பிறந்தாள் சரி!

No comments: