Saturday, September 28, 2019

மரம் தேடி



Image may contain: plant

மரம் ஒன்றைத்
தேடித் தேடி
அலைந்தேன்
சற்றே இளைபாற!
கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை
ஒன்றுகூட காணவில்லை!
கிடைத்த செடி நிழலில்
சற்றே ஓய்வெடுத்தேன்!
கூட பறந்து வந்த காதலியை
செடி நிழலில்
கூடி வாழலாம்
என்று ஆசையாய்
அழைத்தேன்!
“யாரும் பார்க்கா வண்ணம்
உயரமான மரக்கிளையில்
இலைகள் மறைத்திடவே
கூடி மகிழ்வதே இன்பம்!
அப்படி
கொஞ்சி குலாவிடத்தான் ஆசை!
சன்னல் விளிம்பினிலே
தொங்கும் செடி நடுவே
பயந்து பயந்து
காதல் மொழி பேச
எனக்கு சற்றும் விருப்பமில்லை!
என் கனவு கூடு கட்ட
இந்த செடி போதாது !
நாம் மகிழ்ந்து உறவாட
இந்த இடம் பத்தாது”என்றாள்!
“கூடி வாழ மனம் இருந்தால்
செடி நிழலும் சொர்கமடி”என்றேன்!
“நீயும் நானும் வேண்டுமானால்
செடி நிழலில் வாழ்ந்திடலாம்!
பின்னாளில் என்
குஞ்சுகளுடன்
கொஞ்சி விளையாட,
உண்டு மகிழ்ந்திட,
இன்பமாய் தூங்கிட,
இந்த இடம் போதாது “
என்றே சொல்லி
சொர்க்கம் காண மறுத்து
பறந்தே போய் விட்டாள்!
தனியாய் தவிக்கின்றேன்
துடியாய் துடிக்கின்றேன்!
உங்கள் குடி பெருக்க
உம் மக்கள் சுகமாய் வாழ
மரம் வெட்டி
காடு அழித்து
வீடுகட்டி விட்டீர்கள்!
மரம் இன்றி எங்கள் காதல் வாழ்வதெப்படி?
எங்கள் குலம்
தழைப்பதெப்படி?
வாழத்தான் ஆசைபடுகிறோம்
வழிதான் தெரியவில்லை!!
வழியேதும் தெரிந்திருந்தால்
உடனே சொல்லுங்கள்!
பறந்து சென்ற காதலியை
அழைத்து வந்து குடிபுகுவேன்!
குடிபுகுந்த சில மாதத்தில்
குருவி குஞ்சு
பேரன் பேத்திகளை
அன்பாய் பரிசளிப்பேன்!

No comments: