Saturday, September 28, 2019

காலை காட்சி:

காலை காட்சி:
நேற்றைய இரவு காட்சி "Article 15" ஹிந்தி படம் பார்த்த பாதிப்பிலிருந்து நீங்காமல் , சனிக்கிழமை என்றும் பாராமல் காலை சீக்கிரமாகவே எழுந்தாகிவிட்டது. இங்குதான் எழுந்தவுடன் வாசல் தெளிக்க வேண்டும், கோலம் போடவேண்டும், பால் காய்ச்ச வேண்டும் என்ற கோட்பாடுகள் இல்லையே! என்ன செய்வது என்று தெரியாமல் நடை பயிற்சிக்கு கிளம்பி விட்டேன். அந்த காலை பொழுதில் பார்த்த காலை காட்சிகள் சில:
காட்சி 1: ஒரு கணவன் , மனைவி, குழந்தை. குழந்தைக்கு ஒரு வயது அல்லது ஒன்றரை வயது இருக்கும். strollerரில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. மனைவி strollerஅய் தள்ளிக்கொண்டு வந்தார். கணவர், தூக்க முடியாத மாதிரி ஒரு back pack பையை முதுகில் மாட்டிக்கொண்டு வேக வேகமாக கூடவே நடந்து வந்தார். பேருந்து நிறுத்துமிடம் நோக்கி நடந்து கொண்டிருந்தனர் . கணவர் மனைவியிடம்,”அந்த stroller sideல இந்த துணிய வச்சுக்கோயேன். அதுல தான் ஒன்னும் இல்லல,” என்றார். அவர் நல்ல உயரம். அதற்கேற்ற உடல்வாகு. அவரை பார்த்தால் ஒரு backpack தூக்க தயங்குபவர் போல தெரியவில்லை. ஆனால் ஏனோ அந்த துணிகள் அவருக்கு கூடுதல் சுமையாக தோன்றியது போல. உடனே அவரின் மனைவி ,”அதெல்லாம் strollerல வைக்க முடியாது,நீங்களே பையில வச்சு தூக்கிட்டு வாங்க. இத கூடவா தூக்க முடியாது? பாப்பா stroller ல கண்டத வைக்க முடியாது!”என்று திட்ட வட்டமாக மறுத்துவிட்டார். அந்த காட்சியை பார்த்த பொழுது பரபரப்பு மிக்க இந்த வாழ்க்கையில் உழலுவதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அந்த மனைவி ,”இன்றைக்கு ஒரு நாளாவது எங்களுக்காக எதையாவது தூக்கிட்டு வா. வாரம் முழுக்க நான் தானே வீட்ட கவனிச்சுகறேன். புள்ளயதான் தூக்க மாட்ற அதோட துணிமணியனாச்சும் தூக்கி சும”என்று சப்தமில்லாமல் மனதிற்குள் முனுமுனுப்பது கேட்பது போல் இருந்தது. அவர்களை கடந்து நான் சென்ற பொழுது கண்கள் என் அனுமதி இன்றி அந்த strollerஅய் பார்த்தது. கண்டதை வைக்க முடியாத அந்த stroller ரில் மனைவியின் கர்ப்பிணி பை தொங்கி கொண்டே ஆடி ஆடி அவர்களுடன் போனது.............கணவரோ அந்த backpackகோடு விருக் விருக் என்று வேகமாக கோபத்தை அடக்கியபடி நடந்து சென்றார்.இதை எதையும் பற்றியும் புரியாத குழந்தை கையிலிருந்த கைதொலைப்பேசியில் எதையோ பார்த்துக் கொண்டு சிரித்த படி strollerரில் சென்றது.......
காட்சி 2: இரு பெண்மனிகள் தங்களின் எஜமானரின் நாய்களை நடைப்பயிற்சிக்கென அழைத்துக் கொண்டு சென்றனர். வேறு வேறு வீட்டு நாய்களாக இருக்க வேண்டும். காலை வேலையில் தங்களுக்கென நேரம் கிடைத்த சந்தோஷத்தில் இரு பெண்களும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அனேகமாக அவர்களின் உணர்வுகளின் பறிமாற்றமாக தோன்றியது. தன் குடும்பம் குட்டி யாவரையும் விட்டு விட்டு கடல் கடந்து எங்கோ ஒரு நாட்டில் பிழைப்பிற்காக வந்திருந்த இருவரும் தங்களின் சந்தோஷங்களையும், சோகங்களையும் கொட்டி தீர்க்க அந்த சந்தர்பத்தை உபயோக படுத்திக்கொண்டிருந்தனர். இருவரும் கைகளில் தத்தம் நாயின் கயிற்றை இருக பிடித்து இருந்தனர்.நாய்களுக்குள்ளும் ஒரு புரிதல் இருந்தது. அடிக்கடி சந்தித்திருக்க வேண்டும் போல் தோன்றியது. ஒன்று பெண் நாய். மற்றொன்று ஆண் நாய். இரு நாய்களும் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டன . மூக்கோடு மூக்கு வைத்து தேய்த்து கொண்டன . கால்களால் ஒருவரை ஒருவர் வருடிக்கொண்டன . அவைகளின்் காதல் சம்பாஷனை சப்தமில்லாமல் அரங்கேறிக்கொண்டு இருந்தது. திடீரென்று பெண் நாய் லொள் என்று சத்தமாக குரைத்தது. உடனே ஆண் நாய் அந்த குரைப்பின் அர்த்தம் உணர்ந்து உடனே பின் வாங்கி நகர்ந்து சென்றது.நாய்களை பிடித்திருந்த பெண்கள் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது. தத்தம் நாயை இருக பிடித்து இழுத்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர். சிறிது நேரம் இரு நாய்களும் வால்களை ஆட்டிக்கொண்டு கண்களால் சமாதானம் அடைந்து அவரவர் வழியில் சென்றன. நாய் என்றாலும் NO என்று பெண் நாய் சொன்னால் அது NO தான். அதனை ஆண் நாய் புரிந்து ஒதுங்கிக் கொண்டால் அங்கே அழகான ஒரு புரிதலும் புரிதலுக்கு பின் ஒரு உறவும் மலர வாய்ப்பிருக்கிறது.
காட்சி 3:போகும் வழி நெடுகிலும் அழகான உயரமான, பச்சை பசேலென்ற மரங்கள் இருக்கும். அவைத் தான் பல விதமான பறவைகளின் வீடுகள் . இன்று மரங்களின் கிளைகள் எல்லாம் வெட்டப்பட்டு வெறுச்சோடி இருந்தது. தாய் மரம் தனிமையில் இருப்பது போல இருந்தது. கிளைகள் சில நேரங்களில் சுமை தான் . ஆனால் தாய் மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளைகள் கீழே வாடி வதங்கி கிடந்தது மனித குழந்தைகளைப்போல்.
காட்சி 4: நடைப் பயிற்சி முடிந்து களைத்துப் போய் கொஞ்சம் நேரம் அமைதியாக அமர்ந்திருக்கலாம் என்று நீச்சல் குளத்தருகே அமர்ந்திருந்தேன். அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் காலையிலேயே புல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச ஆட்கள் வந்திடுவார்கள். கடந்த ஒரு மாதமாக இருப்பது போதும் என்று இல்லாமம் கடனுக்கு வாங்கி வெப்பத்தை கக்கும் சூரியனால் பச்சையாக இருக்க வேண்டிய புல் எல்லாம் காய்ந்த சருகாய் காட்சி அளித்தது. பச்சை நிறம் தண்ணீர் பாய்ச்சியவரின் சீருடையில் மட்டுமே இருந்தது. அவர் தண்ணீர் பாய்ச்சும் குழாயை , பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல் தன் தோளில் போட்டுக்கொண்டு தண்ணீரை அளவாகவும் அழகாகவும் பாய்ச்சிக்கொண்டிருந்தார். அவரின் முகத்தில் ஓர் கர்வம்,”இந்த புற்கள் உயிர் வாழ்வது என்னால் தான். நான் தான் இவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சுகிறேன்,”என்று. புற்களின் மேல் தூரளாக விழுந்த தண்ணீருக்கும் ஓர் கர்வம்,”நான் புற்களின் மேல் விழுவதால் தான் அவை உயிர் பிழைக்கின்றன,”என்று. அவரவர் கர்வம் அவரவர் தலையில் என்று நினைத்துக் கொண்டு என் தலையில் விழுந்த சூரிய ஒளியை இதமாக அனுபவித்த படி அமர்ந்திருந்தேன்.
காட்சி 5: நான் அமர்ந்திருந்த மேசைக்கு எதிர் திசையில் மூன்று முதியோர்கள் அமர்ந்திருந்தனர். வேற்று மொழி பேசுபவர்கள். அறுபத்தி ஐந்து வயதிலிருந்து எழுபது வயதிற்குள் இருப்பார்கள். மூவரும் நடை பயிற்சி முடித்து விட்டு அங்கு உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு எண்பது வயது கிழவி இரு பைகளை தூக்கி கொண்டு என்னை கடந்து சென்றார். நேர்த்தியாக உடை அணிந்திருந்தார். பைகள் கைப்பை அளவுதான். பெரிதான பைகள் இல்லை. தோளில் தொங்கவிட்டு இருந்தார். சற்று கூன் போட்ட படி அந்த வயதிற்கேற்ற முன் எச்சரிக்கையுடன் மெதுவாக நடந்து சென்றார். இதை கவனித்த அந்த மூன்று பெண்மணிகளின் கண்களும் ஒரு நிமிடம் அந்த கிழவி நடந்து சென்ற திசையிலேயே சென்றது. அவர்களுக்கு அந்த கிழவி பரிச்சயமானவரா அல்லது பரிச்சயம் இல்லாதவரா என்று எனக்கு தெரியாது. அவரை பார்த்து அளந்த ஒரு நிமிடத்தில் ஒரே நேரத்தில் மூன்று பேரின் உதடுகளும் ஏதோ இடைவிடாது பேசியது. யார் பேச்சை யார் கேட்கிறார்கள் என்று எனக்கு குழப்பமாகி போனது. அவர்களின் மொழி வேறு எனக்கு புரியாத ஒன்று. எனவே அவர்களின் உதடசைவை வைத்து நான் ஒன்றும் கணிக்க முடியவில்லை. அந்த கிழவியை அவர்கள் போற்றுகிறார்களா அல்லது தூற்றுகிறார்களா அல்லது சாதாரனமாக ஏதோ பேசி கொள்கிறார்களா என்று விளங்கவில்லை.அவர்கள் ஒன்றும் நம் பிக்பாஸோ அல்லது நம் தொலைக்காட்சியில் வரும் டாக் ஷோவோ பார்க்க வாய்ப்பில்லையே. பின் எப்படி இப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். ஒவ்வொருவரும் தான் பேசத்தான் ஆசை படுகிறார்கள். பிறர் பேசி தான் கேட்க யாருக்கும் ஆசை இருப்பதில்லை போல. அது எல்லா நாட்டவருக்கும் பொதுவான விஷயம் தான் போல. நடப்பவையை தான் நிழற் உலகத்தில் காண்பிக்கிறார்கள் . ஓரிரு நிமிடங்களுக்குப் பின் அந்த மூன்று வயதான பெண்மணிகளும் தங்களின் உதடுகளுக்கு பூட்டு போட்டு அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
இத்தனை காட்சிகளை பார்த்து ரசித்து விட்டு என் கையில் கட்டி இருந்த கைகடிகாரத்தை பார்த்தவுடன் தான் ஞாபகத்திற்கு வந்தது,”ஆஹா வீட்டில் இரண்டு பேர் இன்னும் சயனத்திலேயே இருப்பார்களே. நாம் போய் அக்காட்சியை களைத்து மனசாட்சி சொல்லும் சொல் கேட்டு இந்த நாளை துவங்கவேண்டுமே “என்று..
இத்துடன் காலை காட்சிகள் முடிவிற்கு வந்தது........

No comments: