Friday, January 26, 2018

முன்பு பின்பு......


முன்பு பின்பு......


கோலம் போடுவது என்றுமே என்னை வசீகரித்த ஒன்று. எந்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதனை நான் விடுவதில்லை. என் கைவண்ணத்தை காட்டிவிடுவேன். நான் ஒன்றும் கோலம் போடுவதில் கைத்தேர்ந்தவள் இல்லை. அது என்னவோ இனிய பழைய நினைவுகளை எனக்கு ஞாயபகப்படுத்தும். இந்த புதுவருடமும் பிறந்த போதும் நான் என் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டேன். அது எப்படி புது வருடம் என் கோலம் இல்லாமல் விடிய முடியும்?வீட்டில் உள்ளவர்கள் எழுந்திருக்கும் முன் வாசலில் வரைந்துவிட்டேன். வீட்டின் முன் இருக்கும் அந்த இடம் மிகச்சிறியது. ஆனாலும் எனக்கு பேராசை. இடத்தை அடைத்து கோலம் போடுவேன். வீட்டிற்குள் வருவதோ, வீட்டில் இருந்து வெளி செல்வதோ கொஞ்சம் கஷ்டம் தான். கொஞ்சம் பரதநாட்டியம் எல்லாம் ஆடியபடிதான் கவனமாக பார்த்து செல்ல வேண்டும். வீட்டில் இருந்தவர்களுக்கு இது பழகிப் போன ஒன்று. என்ன சொன்னாலும் நான் திருந்த மாட்டேன் என்று கணவர் விட்டுவிட்டார்.இந்த முறையும் அப்படித்தான். எப்படியோ ஒரு நாள் தாக்கு பிடித்துவிட்டது என் கோலம் அலங்கோலம் ஆகாமல். மறுநாள் காலை என் மகன் ரிஷி பள்ளிக்குச் செல்ல கதவை திறந்த பொழுது என் கோலத்தின் மீது செய்தித்தாள் கிடந்ததைப் பார்த்தேன். உடனே அதனை மெதுவாக எடுத்தேன். ஆனாலும் என் கோலத்தின் மேக்கப் கலைந்துவிட்டிருந்தது. யாரோ ஹோலி பண்டிகை விளையாடியது போல் எல்லா கலரும் ஒன்றாகி விட்டிருந்தது. நொடியில் எனக்கு அந்த பேப்பர்கார பையன் மீது கோபம் கோபமாக வந்தது. என் முகம் மாறுவதைப்பார்த்த என் மகன்,” அம்மா நீங்க கொஞ்சம் சின்னதா இந்த கோலத்தை போட்டு இருக்கலாம். பெருசா இருக்கறதால தான் அது மத்தவங்களுக்கு ஈசியா டார்கெட் ஆகுது,” {Mama why dont you try drawing a little smalller. Since it is big it becomes an easy target for everyone}என்று பொறுமையாக கூறிவிட்டு கவனமாக மிஞ்சி இருந்த கோலம் சிதைந்துவிடாதபடி மெதுவாக தாண்டி பள்ளிக்குச் சென்றுவிட்டான். சோகமாக இருந்த நானும் சில நொடியில் சமாதானம் ஆகிவிட்டேன்.
ரிஷி மாதிரி வார்த்தைகளை அழகாய் மாலையாய் கோர்க்க எனக்கு மட்டும் தெரியுமானால் என் வீட்டில் பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
ஒருவரது எண்ணங்களை, கருத்துக்களை அடுத்தவருக்கு எடுத்து செல்வது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அதனை எப்படி எடுத்துச் சொல்கிறோம் என்பது. வார்த்தைகள் உறவை முறிக்கவும் செய்யும், உறவை வளர்க்கவும் செய்யும்.......

No comments: