Tuesday, November 22, 2016

நிழல் பேசுகிறது!!

நிஜத்துடன் ஜனனம்
நிஜத்துடன் மரணம்...
கருவறை நான் கண்டதில்லை,
கல்லறை எனக்கு புதிதில்லை!

உன் உயரம் உன் மரபணுவில்,
நான் வளர்வதும், தேய்வதும்,
வாழ்வதும், வீழ்வதும்
ஒளியின் வழியில்!
வண்ணமிகு ஆடை நீ அணிந்தபோதும்
என் உடை என்றுமே கருமைதான் !

நீ ஒருவன் தான் என்றாலும்
சில நேரங்களில் உனக்காக நான்
இரட்டைப் பிறவி எடுக்கின்றேன்!
உன் முன்னும், பின்னும்
உனக்கு காவலாய் வருகின்றேன்!

தீண்டாமை நான் அறிந்ததில்லை,,
பேதம் நான் பார்த்ததில்லை!
உயிரற்ற பொருளுக்கும் என்றும்
நான் துணையாவேன்!

நீ செய்யும் யாவையும்
மெளனமாய் செய்கின்றேன்!
அடக்கி  எனை நீ ஆண்டாலும்
விடுதலை நான் வேண்டவில்லை!!
ஒளி படைத்த என் உருவம்
ஒலியின்றி தான் வாழும்!!
நீ சுமக்கும் பாவ , புண்ணியம்
நான் சுமந்து மரிப்பதில்லை!

எனக்கும் உண்டு ஓர் ஆசை!
உருவம் கொண்ட எனக்கு
வேண்டும் ஓர் மனது!
அது மட்டும் கிட்டிவிட்டால்
நீ வேறு , நான் வேறு!
நானும் நிஜமாக மாறிவிடுவேன்,
நானாக வாழ்ந்து விடுவேன்!!


1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் புத்தக வெளியீட்டு விழாவினைக் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது சகோதரியாரே.தங்களின் நூலினைப் படித்துவிட்டேன் .அருமை
வாழ்த்துக்கள்