Saturday, November 19, 2016

வரப்பிரசாதம்!!

தினம் காலை சிறிது நேரம் உடற் பயிற்சி செய்வது எனக்கு வழக்கம். மிகவும் பிடித்துப் போய் ஒன்றும் நான் செய்வதில்லை. கடமையே என்று செய்வேன். இல்லையேல் எண்ணையில்லா சக்கரம் போல் எல்லா பாகமும் இருக்கமாக இருப்பது போன்ற உணர்வு. அது மட்டுமில்லாமல் இது  பல வருடங்களாக நான் செய்து வருவது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை போன்றது. இப்படி உடற்பயிற்சி செய்யும் பொழுது டிவி பார்த்துக்கொண்டே செய்வது பழக்கமாகி போனது. அப்படி செய்வதனால் உடற் பயிற்சி ஒரு பளுவாக தெரிவதில்லை.

அப்படித்தான் இரண்டு  நாட்களுக்கு முன் சன் டிவியில் “குட்டீஸ் சுட்டீஸ்” பார்த்துக்கொண்டே உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி அது. என் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால் வீட்டில் மழலையின் குரல் கேட்க வாய்ப்பே இல்லை. வீட்டில் கல கல என்று பேசும் மகள் கல்லூரிப்  படிப்பு படிக்கச் சென்று விட்டாள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனுக்கோ கைத்தொலைபேசியை கீழே வைப்பதற்கே நேரம் போதுமானதாக இருப்பதில்லை. அப்படி இருக்க மழலை குரல் கேட்கவே நான் குட்டீஸ் சுட்டீஸ் பார்ப்பேன். குழந்தைகளின் குழந்தைத்தனமான பேச்சு நம் மனதில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி படைத்தது. அந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது நான் என்னை மறந்து சிரிப்பது உண்டு.


அந்த நிகழ்ச்சியை வழி நடத்தும் அண்ணாச்சி குழந்தைகளை பல கேள்விகள் கேட்பார். அந்த மழலைகளும் அழகாக பதில் சொல்வார்கள். சில வேலைகளில் அதிகபிரசங்கிதனமான பதில்களும் வரும்.அன்று  குழந்தைகளிடம், “உங்கள் வீட்டில் உங்களை  எப்படிம்மா செல்லமாக கூப்பிடுவார்கள்?” என்று கேட்டார். குழந்தைகள் ,”கண்ணே, மணியே, செல்லம்,” என்று பல பதில்களை கூறின. ஒரு பெண் குழந்தை,”என் அப்பா என்ன ராசாத்தினு சொல்லுவார்,”என்று அழகாக கூறியது. அதற்கு அண்ணாச்சி,” சரிமா, உங்க அப்பா உன்ன ராசாத்தினு கூப்பிடுவார், உங்க அம்மா உன்ன என்னனு கூப்பிடுவாங்க?”என்று கேட்டார். அதற்கு  மனம் முழுதும் சந்தோஷமுடன் கண்கள் சுருங்க சிரித்துக்கொண்டே அக்குழந்தை,”என்ன எங்க அம்மா வரப்பிரசாதோ, வரப்பிரசாதோனு கூப்பிடுவாங்க,” என்று அழுத்தமாக கூறியது.


அந்த பதிலை கேட்ட உடனேயே நான் அசந்து போனேன், ஆச்சரியப்பட்டு போனேன்.  கேட்ட மாத்திரத்தில் நான் என் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு ஒரு நிமிடம் கண்கொட்டாமல் டிவியையே உற்றுப்பார்த்தேன். அக்குழந்தையின் அம்மாவை காண்பிப்பார்களா என்று பார்க்க ஆசையாக இருந்தது. அந்த தாயை ஃபோகஸ் செய்து காண்பித்தார்கள்.  அவர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். அண்ணாச்சி உடனே,” வரப்பிரசாதம் என்றால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள்,”பிரஷ்சியஸ்” என்ற ஆங்கில வார்த்தையை கூறினார்கள். வரப்பிரசாதம் என்ற தமிழ் வார்த்தையில் புதைந்து இருந்த அழகு, கவிதை, இசை, இன்பம் யாவும் “பிரஷ்சியஸ்” என்ற ஆங்கில வார்த்தையில் கிடைக்கவில்லை. என்ன அழகான வார்த்தை ஒரு குழந்தையை கொஞ்சுவதற்கு. இது வரை நான் யாரும் இப்படி கூப்பிட்டு கேட்டதில்லை.  அழகான வார்தை மட்டும் அல்ல அதில் அவ்வளவு அர்த்தங்கள் பொதிந்து கிடந்தது. இப்படி ஒரு அழகான வார்த்தையை தன் குழந்தையை கொஞ்ச ஒர் நாளைக்கு நூறு முறை உபயோகிக்கும்  அந்த தாயை பாராட்டுவதா, இல்லை தமிழ் மொழிக்கு மட்டுமே உரித்தான இந்த அழகியலை வர்ணிப்பதா? வார்தையிலேயே உணர்வுகளின் வெளிப்பாட்டை தமிழ் மொழியால் மட்டும் தான் அழகாகவும் ,அழுத்தமாகவும் கொண்டு  வர முடியும்


பெண் பிள்ளைகள் என்றால் கருவிலேயே கல்லறைக்கு அனுப்பும் சமூகத்தில் தனக்கு பிறந்த பெண் பிள்ளையை அப்பா “ராசாத்தி” என்றும், அம்மா காணக்கிடைக்காத , தவம் இருந்து வரம் கேட்டு கிடைக்கப்பெற்ற பிரசாதமாக,”வரப்பிரசாதம்” என்று கொஞ்சுவதை கேட்டது மனதுக்குள்   நெகிழ்வை ஏற்படுத்தியது. அம்மா தன்னை வரப்பிரசாதம் என்று கூப்பிடுவதை எவ்வளவு சுகமாக சுகிக்கிறது  அக்குழந்தை என்பது  வரப்பிரசாதம் ,வரப்பிரசாதம் என்று இரண்டு முறை அழுத்தி கூறியதிலிருந்தே தெரிந்தது.  நானே பல முறை “வரப்பிரசாதம்,வரப்பிரசாதம்” என்று கூப்பிட்டு பார்த்தேன். ஒவ்வொரு முறை உச்சரித்த பொழுதும் மனதில் ஒரு பரவசம் --தாய்மையின் வெளிப்பாடு இது தானோ!


இரண்டும்  பெண் பிள்ளைகளாக பிறந்து விட்டது என்று என் தந்தையை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள என் பாட்டி தாத்தா எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் என் தந்தை அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் அவரின் மனதில் ஓர் ஆண் மகனுக்காக ஏக்கம் இருக்கத்தான் செய்தது. அதற்காக என்னையும் என் தங்கையையும் அவர் ஒரு பொழுதும் சுமையாக பார்க்கவில்லை. அதற்காக எங்களை வாங்கி வந்த வரமாகவும் கொண்டாடவில்லை. கடவுள் தனக்கென விதித்தது என்று ஒர் சராசரி மனிதனைப்போல்  ஏற்றுக்கொண்டார்.  எந்த குறையும் இன்றி எங்களை வளர்த்தார். இரண்டுப் பெண் பிள்ளைகளுக்குப் பின் ஓர் ஆண்பிள்ளை பிறக்குமா என்று மூன்றவதாக பெண் பிள்ளை பெற்ற சிலர் என் உறவிலே உண்டு. அப்படி எதுவும் செய்யாமல் என் தந்தை,”நாம் இருவர் நமக்கிருவர்”என்று முடிவெடுத்துவிட்டார்.


என்னைப் பொறுத்த வரை பெண் பிள்ளை பெற்றவர் யாவரும் வரம் வாங்கி வந்தவர்கள், கொடுத்து வைத்தவர்கள். அதற்காக ஆண் பிள்ளை மட்டும் பெற்றவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதல்ல என் கருத்து. சில வீடுகளில்    மகனே மகளாகிறார். என் தந்தை அப்படி பட்ட ஒருவர் தான். இரண்டு தம்பிகள்,இரண்டு தங்கைகள் என்று கூடப்பிறந்தவர்களோடு பிறந்திருந்தாலும் சிறு வயதில் என்   பாட்டிக்கு தண்ணீர் தூக்கி கொடுத்ததிலிருந்து, வாசலில் சாணம் தெளித்து கூட்டுவது, வயலுக்கு சாப்பாடு எடுத்து செல்வது , பின்னாளில் தாய் தந்தையரை அன்போடு பார்த்துக்கொண்டது, அவர்களுக்கு பணிவிடை செய்தது என்று ஒரு மகளாகவே வாழ்ந்தார்.


. என் தோழி ஒருத்திக்கு மூன்றும் ஆண் பிள்ளைகள். மூன்றாவது ஆண் பிள்ளை பிறந்த பொழுது நான் பார்க்கச்சென்றிருந்தேன்.  ஆண் பிள்ளை பிறந்து விட்டால் தாம் ஏழேழு பிறவில் செய்த புண்ணியம் என்று கனவில் மிதக்கும் மூடர்களுக்கு நடுவே, என் தோழி, பிறந்த குழந்தையை தழுவிய படி,” ஏன் கீதா நான் என்னடி பாவம் செஞ்சேன். எனக்கு ஒரு பொம்பள பிள்ளையை கடவுள் கொடுக்கல?,என்று விழி ஓரங்களில் கண்ணீர் வழிய கேட்டாள். அவளை சமாதானப்படுத்த என்னிடம் ஒரு பதிலும் அப்பொழுது  இருக்கவில்லை. வண்ண வண்ண உடை உடுத்தி, நகை போட்டு அலங்கரித்து அழகு  பார்க்க மட்டுமல்ல பெண் பிள்ளைகள். பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் அழகும் ,ஆனந்தமும், கலை நயமும், குதூகலமும் கூடுதலாக தளிர் நடை  போடும் .....

பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம்  இல்லாதவருக்கு ஆணோ , பெண்ணோ பிறக்கையில் அது வரமாகவே நினைக்கிறார். முதல் குழந்தை பெண்ணாக பிறந்தவருக்கு இரண்டாம் குழந்தையும் பெண்ணாக  பிறக்கையில் சாபம் என நினைகிறார்.  உண்மை என்னவென்றால் இரண்டும் பெண்ணாக பிறந்தால் கடைசி வரை அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கும். ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள். கடைசி வரை அன்போடு இருப்பார்கள். இரண்டு சகோதரிகளுடன் பிறந்த என் தாய் அதற்குச் சான்று.  என் பெரியம்மா தன் இரு சகோதரிகளுக்கும் தாயாகவே வாழ்ந்தார். ஓர் ஆண் , ஓர் பெண் என்று வருகையில் , தனக்கென்று குடும்பம் என்று ஆனப்பின் அங்கே பல நேரங்களில் விரிசல் உருவாகிறது.


ஆணோ ,பெண்ணோ குழந்தை பேறு என்பதே ஓர் வரம். அந்த வரம் கிட்டாதவர்களுக்குத்தான் அதன் துயரம் தெரியும். பெண் பிள்ளைகளை வரப்பிரசாதமாக பார்க்காவிட்டாலும் வெறும் சாதம் என்றாவது கருதுங்கள். அவர்கள் உங்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல, அன்புப் பசியையும் போக்குவார்கள். நீங்களும் கூறிப்பாருங்கள்,”வரப்பிரசாதம், வரப்பிரசாதம்” என்று .. ஆம் இவ்வாழ்கையே நமக்கு கடவுளின் பிரசாதம்  தான். அதிலும் பெண் பிள்ளைகள் என்றால் வரப்பிரசாதம் தான்.......

பிகு: முடிவெடுத்துவிட்டேன் நான்... என் பேரப்பிள்ளைகளை எப்படி கூப்பிட வேண்டும் என்று.....1 comment:

aneetaa said...

Geetha, very very nice post. Thamizh is such a feeling evoking language.. Some words just don't have replacements in any language.