இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் காலை கணவரை மீன் வாங்க அனுப்பிவிட்டு மீன் குழம்பு வைக்க தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொண்டு இருந்தேன். சின்ன வெங்காயம் குழம்புக்கு வேண்டும் என்று உரித்தேன். அப்பொழுது திடீரென்று ஒரு ஞானோதயம் வந்தது. மேலே இருக்கும் வீடியோவை எடுத்தேன். ”ஓவர் வெட்டி” என்ற தலைப்பில் அதை ஒரு பத்து நண்பர்களுக்கு மேல் அனுப்பி வைத்தேன். எப்படித்தான் react செய்கிறார்கள் என்று பார்ப்போமே என்று. எவ்வளவு மொக்கை forward எல்லாம் நமக்கு வருகிறது. நாம் அடையும் இ(து)ன்பத்தை மற்றவரும் பெறட்டுமே என்ற அல்ப சந்தோஷம். என் விடியோவை பார்த்துவிட்டு ஒரு நாலு பேராவது கோபப்படுவார்கள் என்று பார்த்தால் எனக்கு ஏமாற்றமே. முக்கால்வாசிப் பேர் கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிப்பது போல் emoticon அனுப்பி இருந்தார்கள். விடியோவை ரசித்ததால் அதை அனுப்பினார்களா இல்லை, தாங்கள் ஏமாந்ததன் அடையாளமாக அனுப்பினார்களா என்று தெரியவில்லை. அவ்வளவு மொக்கையான வீடியோ என்று எனக்கே தெரியும். சிலர் சூப்பர் என்று வேறு அனுப்பி இருந்தார்கள். சிலர் அமைதியாக இருந்துவிட்டார்கள்.
சைவ நண்பர்கள்,”சட்னி செய்ய உரிக்கிறாயா?” என்று கேட்டார்கள்.அசைவ நண்பர்களோ,”மீனாட்சியா, காமாட்சியா?”என்று கேட்டார்கள். நாளை வேறு புரட்டாசி மாதம் பிறக்கிறது இல்லையா? நம் ஊரில் கறிக்கடை, மீன்கடைகள் கலைகட்டும். என்னவோ இன்று ஒரு நாள் சாப்பிடப்போகும் அசைவம் அடுத்த ஒரு மாத காலம் வரை அவர்கள் வயிற்றிலேயே தங்கிவிடப்போவது போலவும், அந்த ருசி ஒரு மாதத்திற்கு நாக்கிலேயே இருப்பது போலவும் ஒரு நினைப்பு.
ஒரு சில அப்பாவி நண்பர்கள்,”வெங்காயத்தை நீ உறிக்கும் முன்பே தண்ணீரில் போட்டு எடுத்து உறித்தால் கண்களில் கண்ணீர் வராது,”என்று tips கொடுத்தார்கள். என் அம்மா அப்படித்தான் செய்வார்கள். எனக்கு அது பிடிக்கவே பிடிக்காது. உறிக்கும் பொழுது அந்த தோல் என் விரல்களில் ஒட்டிக்கொள்வது எனக்கு பிடிக்காது. என் அம்மாவிடம்,”ஏம்மா வெங்காயத்த உரிச்சுட்டு தண்ணில கழுவலாம்ல எதுக்கு தண்ணில போட்டு உறிக்க சொல்ற,”என்று கேட்டால் அதற்கு அவர்,”அத எங்க எங்க கொட்டி அள்ளிட்டு வராங்களோ? அந்த திருவள்ளுவர் தியேட்டருக்கு பின்னாடி எல்லாம் அந்த அழுக்குள கொட்டி வச்சு இருக்கறத பாத்து இருக்கேன், கருமம். நீ நான் சொல்ற மாதிரி செய், “என்பார்கள். அந்த காலத்தில் நம் ஊர் திரையரங்குகளுக்கு பின் இருக்கும் சுவர் எதற்கு என்று உங்களுக்கே தெரியும். இன்றும் வெட்டவெளி கழிப்பிடம் என்பது நமது நாட்டின் பிறப்புரிமை மாதிரி. காய்கற்களின் சுத்தம் பற்றி நமக்கு இப்போ அந்த கவலையே இல்லை . எங்கு கொட்டி எப்படி அள்ளுகிறார்களோ நமக்கு எல்லா காய்கற்களும் makeup போட்டு தான் கடைகளில் கிடைக்கிறது. அந்த makeup நஞ்சா இருந்தாலும் இல்லையென்றாலும் கவலையில்லை. அந்த பளபள makeupற்கு நாம் மயங்கி விடுகிறோம்.
என் மகள் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த போது நான் கோழிக்கறியை கழுவுவதை பார்த்துவிட்டு,”அம்மா என் தோழிகள் எல்லாம் இப்படி கழுவவே மாட்டாங்க. அப்படியே packet la இருக்கற chicken எடுத்து சமைப்பாங்க. நான் கேட்டப்ப அந்த chicken எல்லாம் நல்லா கழுவி pack பண்ணது கழுவவேண்டிய அவசியம் இல்ல. அப்படி கழுவுனா kitchen sink எல்லாம் bacteria ஒட்டிக்கும்னு சொன்னாங்க,”என்றாள். அது என்ன logic என்று எனக்கு புரியவில்லை. எனக்கு அதை கேட்டவுடன் குமட்டிக்கொண்டு வந்துவிட்டது.”நீ சமைக்கும் போது ஒழுங்கா கழுவிட்டு சம சரியா,”என்றேன். என் அம்மா மீன் கழுவுவதை பார்த்துவிட்டு என் அப்பா,”உங்க அம்மா மீன கழுவு கழுவுனு கழுவி அதோட வாசத்தையே எடுத்துட்டு கத்திரிக்கா மாதிரி ஆக்கிடுவா,”என்பார். பாட்டி அப்படி, பேத்தி இப்படி!!
சில நண்பர்கள்,”சைனாவிலிருந்து வரும் genetically modified வெங்காயத்தை உறிக்கும் பொழுது கண்ணீரே வராது,”என்றார்கள். ஒருவர் கூட “உனக்கு வேற வேலையே இல்லையா, இப்படி வெட்டியா ஒரு வெங்காயத்த உறிக்கறத வீடியோ எடுத்து போடுறியே போடீ வெங்காயம்,”என்று என்னை திட்டவே இல்லை.
என் நெருங்கிய தோழியிடம் “சுஜா, ஒருத்தர் கூட வீடியோவை பாத்துட்டு திட்டலடி, எல்லாரும் சிரிக்கற மாதிரி emoticon அனுப்பி இருக்காங்கடி. அவ்வளவு வெட்டியாவா இருக்காங்க எல்லோரும்?” என்றேன். அதற்கு அவள்,”நீ வெட்டியா அனுப்பின வீடியோவ பாத்துட்டு ஒனக்கு பதில் அனுப்பினவங்கள வெட்டியா இருக்காங்களானு கேக்கறியே, அவங்க அனுப்பின பதில பத்தி இப்போ இவ்ளோ நேரம் discussion பண்ற நானும் நீயும் எப்படிப்பட்ட வெட்டியோ வெட்டி ராணிகள்னு ஒனக்கு புரியுதா? இப்படிதான் பல பேர் திரியராங்க. கவலப்படாத. ,”என்று நச்சென்று நடுமண்டையில் வார்த்தைகளால் கொட்டினாள்.
எப்படி உரிக்க உரிக்க வெங்காயத்தில் ஒன்னும் இல்லாமல் போகிறதோ அப்படித்தான் வேண்டாத பல விஷயங்களை கைதொலைபேசியிலும், சமூக வளைதளங்களிலும் பார்க்க பார்க்க நம் மூளைக்கும் சிந்திக்கும் திறன் இல்லாமல் போகிறது. அதோடு இல்லாமல் நாம் தேவையில்லாமல் உரித்து உரித்து போடும் நேரமும் விரயமாகிறது.......கடைசியில் நமக்கே தெரியாமல் காலாவதியான காலத்தை நினைத்து நமக்கு மிஞ்சுவது கண்ணீரே....
No comments:
Post a Comment