Friday, September 14, 2018

ஆசை 1


Image result for pottery making pics

ஆசை 1
பிள்ளையார் சதுர்த்தியும் வந்து போய்விட்டது. பிள்ளையாருக்கு வீடு தோறும் இன்னும் இரண்டு நாட்களுக்கு ராஜ உபசாரம் நடக்கும். பிறகு அவரையும் கரைத்து விடுவார்கள். கரையாதவர்கள் மனிதர்கள் தான்--மனதளவில் .
களிமண் பிள்ளையாரை பார்க்கும் பொழுது என் நீண்ட நாள் ஆசை ஞாபகத்திற்கு வந்தது. சிறு வயதில் கிராமத்திற்கு போகும் பொழுது குளத்தில் இருந்து களிமண்ணை எடுத்து வந்து சட்டி , பாணை செய்து விளையாடியதுண்டு. களிமண்ணிலேயே தோசை கல், இட்லி தட்டு, டம்ளர், என்று செய்து காயவைத்து அழகு பார்ப்போம். இட்லி தட்டில் வைக்க களிமண் இட்லி கூட செய்வோம். அப்பொழுதிலிருந்தே எனக்கு குயவர்கள் வீட்டிற்கு சென்று பானை செய்யவேண்டும் என்று ஒரு ஆசை.
பானை செய்வதை விட அந்த மண்ணில் முழங்காலுக்கு கீழ்வரை மூழ்குமளவிற்கு மிதித்து பார்க்க ஆசை. அந்த மண்னை இரண்டு கை கொண்டும் குழைய குழைய பிசைய ஆசை. முழங்கை அளவிற்கு பூசிய களிமண்ணை மறுகை கொண்டு வழித்து போட ஆசை. இப்பொழுது தான் எங்கு பார்த்தாலும் களிமண் face pack, களிமண் soap, களிமண் paste, என்று விற்க கிளம்பிவிட்டார்களே. அதுமட்டுமா அடுப்பு கரித்துண்டுக்கும் அதே மெளசு. charcoal face pack, charcoal paste என்று விற்கிறார்கள். அழகிய ஓவியம் கூட இப்பொழுது charcoal painting, drawing என்று வந்துவிட்டது.
அது மட்டுமா பத்து விரல்களை அந்த குயவரின் சக்கரத்தில் பதித்து பானை வடிவமைக்கவும் ஆசை. நம் கைகளை வைத்து அழுத்தி பிடிக்கும் பொழுது அந்த சக்கரம் அழகாக சுத்துவதை பார்ப்பதில் ஓர் ஈர்ப்பு. பிள்ளையார் பிடிக்க அது குரங்கானது போல் ஆனாலும் பரவாயில்லை. இதை என்றாவது ஒரு நாள் என் வாழ்நாளில் செய்து பார்த்தே ஆகவேண்டும். முன்பெல்லாம் வடிவம் இழந்த பானைகளை மீண்டும் அழகிய பானை வடிவம் வரும் வரை வடிவமைப்பார்கள். இப்பொழுது அப்படி இல்லை. எந்த வடிவம் ஆனாலும் அதற்கு அழகாக வண்ணம் பூசி கார் விற்பனைக்கூடத்தில் இடுப்பை நெளித்துக்கொண்டு நிற்கும் பெண்ணைப்போல் அழகாக நிற்கவைத்து விடுகிறார்கள். எனவே எனக்கு அழகான பானைதான் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கூடிய விரைவில் என் ஆசையை தீர்த்துக்கொள்வேன்.
இந்த கால பிள்ளைகளுக்கு இப்படி எல்லாம் ஆசை இருப்பதாக தெரியவில்லை. இல்லை நாம் தான் அதை எல்லாம் அவர்களுக்கு காண்பித்து கொடுப்பது இல்லையா? எல்லோர் கைகளிலும் தான்
கைத்தொலைபேசி தவழ்கிறதே. அவர்கள் இரண்டு கட்டைவிரல்களை மட்டுமே பயன்படுத்தி விளையாடுகிறார்கள். மண்னை பிசைந்து விளையாடி செலவில்லாமல் நம் motor skills வளர்த்துக் கொண்டோம். இன்றோ motor skill development என்பதற்காக பிரத்தியேக விளையாட்டுப் பொருட்களையும், அதற்கான தேர்ச்சி மையங்களுக்கும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு அலைகிறோம். மீண்டும் மீண்டு வருமா அக்கால விளையாட்டுகளும், அந்த குழந்தை பருவமும்???

No comments: