Tuesday, February 20, 2018

காத்துக்கிடக்கிறேன் .........

காத்துக்கிடக்கிறேன் .........

மாலை ஐந்து மணி! இதமான வெயில்.மழைத்தூரல் சத்தம் கேட்டு சன்னல் வழி எட்டிப்பார்க்கிறேன். சூரியனின் கதிர்களுக்கிடையே மழைதூரல் மின்மினிப் பூச்சியாய் விழுகிறது. வானத்தை பார்க்கிறேன். ஒரு பக்கம் நீல வானம் , ஒரு புறம் கருவானம். நீலநிற கண்ணனா, கார்மேக வண்ணனா என்று பரந்து விரிந்து கிடக்கிறது.

என்னுள் இருக்கும் குழந்தை எதையோ தேடுகிறது. நான் சுமந்து பெற்ற என் பிள்ளை,”எதை தேடுகிறாய் அம்மா?”என்கிறது. “வானவில்லை தேடுகிறேன்”, என்கிறது என்னுள் இருக்கும் குழந்தை. ” மழைக்குப்பின் வெயில் வந்தால் தான் வானவில் தோன்றும் அம்மா,”என்கிறான் என் மகன். எனக்கு அவ்வளவு அவசரம். ஆக்கப்பொறுத்த மனதிற்கு ஆரப்பொறுக்கவில்லை கதை. சிறுவயதில். அம்மா காண்பித்த வானவில் இன்று மீண்டும் வருமா என்ற ஏக்கம். தேடித்தேடி பல வர்ண வண்ணஜாலத்தை தெருவெல்லாம் ஓடி ஓடி பார்த்த ஞாபகம். போகும் இடம் எல்லாம் கண்ணில் படும். நான் அதனை துரத்தினேனா இல்லை வானவில் என்னை துரத்தியதா என்று பல நாள் சந்தேகம் வந்ததுண்டு. வில்லாய் வளைந்து அந்த வானத்தில் பரவிகிடந்ததை பார்த்த அந்த பூரிப்பு இன்றும் மனதில் பரவிக்கிடக்கிறது.

சிறுவயதில் படம் வரையச்சொன்னால் கட்டாயம் ஒரு வீடு அதன் அருகில் ஒரு தென்னை மரம் அதன் பின் ஒர் மலையும் அதன் மேல் ஒரு வானவில்லும் மின்னும். வானவில்லிற்கு சாயம் பூசுவதென்றால் அப்படி ஒரு ஆனந்தம்.கெமிஸ்டரி வகுப்பில் சொல்லிக்கொடுக்கப்பட்ட வானவில் பற்றிய எதுவும் ஞாபகத்தில் இல்லை VIBGYOR தவிர. ஆனால் அம்மா காண்பித்த வானவில்லும் , அவள் கூறிய கதைகளும் இன்றும் நினைவில்.

உயர்ந்த கட்டிடங்கள் சூழ்ந்த இன்றைய சூழலில் வானவில் தோன்றினாலும் அதன் இருமுனையும் ஒரு சேர காண்பது முடியாது. தமிழ் படப்பாடல்களிலும், ஸ்கிரீன் சேவரிலும் மட்டுமே அழகாய் , முழுதாய் தோன்றுகிறது. வானவில்லின் மேல் இருந்த ஈர்ப்பில், பெண்பிள்ளைக்கு, வானவில் ஹேர்பேண்ட், வானவில் லாலிபாப், வானவில் ட்ரெஸ் ,வானவில் ஸ்டிக்கர், எல்லாம் வாங்கி கொடுத்து அழகு பார்த்ததும் உண்டு. அவள் தூங்கும் பொழுது வானவில் கனவில் தோன்றவேண்டும் என்று வாழ்த்தியதும் உண்டு. அவள் வருவாளா? அவள் வருவாளா? வண்ண வண்ண ஆடை உடுத்தி மீண்டும் அவள் வருவாளா என்று காத்துக்கிடக்கிறேன் மழையும் வெய்யிலும் சேரும் நாளெல்லாம்......

No comments: