Tuesday, March 26, 2019

மகளீர் தின வாழ்த்துக்கள்

மகளீர் தின வாழ்த்துக்கள் குவிகின்றன! வாழ்க்கையெனும் சக்கரம் ஒழுங்காக ஓட மகளிர் என்ற அச்சாணி ஒவ்வொருநாளும் தேவை எனும்பொழுது இன்று மட்டும் என்ன புது கொண்டாட்டம்? எங்களை வாழ்த்த வேண்டாம். தினம் தினம் இப்படி செய்தாலே எங்களை கொண்டாடுவதாக அர்த்தம்:
1. எழுந்தவுடன் உங்கள் படுக்கையை சரி செய்யுங்கள்.
2. சவரம் செய்து (மறக்காமல் நறுக்கி கொட்டிய மீசை முடியெல்லாம் துடைத்து )குளித்து முடித்து விட்டு குளியல் அறையை விட்டு வரும்பொழுது தண்ணீர் ஊற்றி விட்டு வாருங்கள் அப்பொழுதுதான் நாங்கள் உள்ளே நிம்மதியாக அருவருப்பின்றி உங்களை திட்டாமல் உள்ளே அடியெடுத்து வைக்க முடியும். மறக்காமல் டாய்லெட்டை உபயோகபடுத்தும் ஒவ்வொரு முறையும் ஃfலஷ் செய்துவிட்டு ஒரு நிமிடம் காத்திருந்து தேவைப்பட்டால் மறுமுறை ஃfலஷ் செய்து விட்டு வரவும். தண்ணீர் செலவாகிறதே என்ற கவலை வேண்டாம்.
3. சாப்பிட்டப்பின் தட்டை கழுவும் இடத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி
போடவும். அதற்கு முன்னர் தட்டில் இருக்கும் மீச்சம் மீதியை குப்பையில் போடவும். 
4. காப்பியோ டீயோ குடித்துவிட்டு அப்படியே இருக்கும் இடத்திலேயே காயவிடாமல் கழுவும் இடத்தில் தண்ணீர் ஊற்றி போடவும்.
4. ஈற துண்டை படுக்கையில் போடாமல் காய வைக்கவும். 
5. சமைத்து வைத்திருப்பதை குறைகூறாமல் சாப்பிடவும்.
6. அழுக்கு துணியை தரையிலோ படுக்கையிலோ போடாமல் அழுக்குதுணி கூடையில் போடவும். அதுவும் நல்ல பக்கம் வெளியில் இருக்குமாறு. இல்லையேல் நாங்கள் எங்கள் கையை அந்த அழுக்கு துணியில் நுழைத்து திருப்ப வேண்டி இருக்கும். 
7.கை கழுவுமிடத்திலோ அல்லது வேறு எங்கு வாய்க் கொப்பளித்தாலும் சிறிது தண்ணீர் ஊற்றி சுத்தமாக வைத்து விட்டு வரவும். இல்லை என்றால் அடுத்து வருபவர்களுக்கு குமட்டிக் கொண்டு வரும்.
8.சாயங்காலம் வீடு வந்த பின் ஒரு ஐந்து நிமிடங்கள் எங்களுடன் செலவு செய்யுங்கள். அதற்கு மேல் எங்களுக்கே பொறுமை இருக்காது. 
9. ஒரு அறையில் இருந்து வெளிவரும் பொழுது லைட், ஃபேன் , ஏசி எல்லாவற்றையும் அனைத்துவிட்டு வரவும்.
10. பேப்பர் படித்துவிட்டு மடித்து வைக்கவும். எங்களுக்கு வேண்டுமென்றால் நாங்களே பிரித்து படித்துக்கொள்வோம்.பெறும்பாலும் எங்களுக்கு சப்பாத்தி பூரி சுடத்தான் அவற்றின் தேவை இருக்கும்.
12. நாங்கள் சீரியல் பாக்கும் பொழுது செய்தி பார்க்க வேண்டும் என்று வம்பு செய்யாதீர் . எப்படியும் பல சேனல்களிலும் ஒரே செய்தியைத்தான் விடிய விடிய கூவுவார்கள். 
13. எதை திறந்தாலும் ஒழுங்காக மூடுங்கள்.
14. எடுத்ததை எடுத்த இடத்தில் வைத்துவிடுங்கள்.
இவற்றை தினம் தினம் செய்தாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான். இவை மறந்து போகுமானால் எழுதி வைத்து தினமும் பார்த்து மனதில் பதிய வைத்து நடைமுறை படுத்தவும்.

No comments: