Monday, April 1, 2019

ரசனை--சூப்பர் டீலக்ஸ்

 குழந்தைகளுக்கான படம் மட்டுமே பார்த்த காலம் ஒரு காலம். படம் பார்த்து மகிழ்வதைவிட பாப்கார்னும், ஐஸ்கிரீமும் ருசிப்பதற்காகவே படம் சென்ற காலம் அது. அது கடந்து போனது. பின் எந்த படமாக இருந்தாலும் பார்க்கலாம் என்ற ஒரு காலம். சமூகத்தை நான் அறிந்து கொள்ள ஆரம்பித்த பருவம். எந்த படம் என்றாலும் அதை பார்க்க ஆவல் உண்டான காலம். அதுவும் கடந்து சென்றது. அடுத்து, நண்பர்களோடு படம் பார்க்க ஆரம்பித்த காலம். படத்தை பார்த்து ரசித்ததைவிட படம் பார்க்கும் பொழுது அரட்டை அடித்து, கிண்டல் செய்து ரசித்த காலம். பார்த்த படத்தை விட நண்பர்களுடன் அடித்த கூத்தே மனதில் ஆழப்பதிந்தது.அதுவும் கடந்து போனது. திருமணத்திற்கு பின் கணவருடன் அவர் அழைத்துச்சென்ற படத்திற்கெல்லாம் பொழுது போக்குவதற்காகவே சென்ற காலம். நன்றாக ஆடை உடுத்தி அழகாக செல்ல வேண்டும் என்று நினைத்த காலம். அதுவும் கடந்து போனது. குழந்தைகள் என்று ஆனப்பின் அவர்களுக்கு பிடித்த படங்களுக்கு போனதும், இல்லை அவர்கள் தூங்கியப்பின் வீட்டிலேயே படம் பார்த்ததும் ஒரு காலம். அதுவும் கடந்து போனது.

பிள்ளைகள் தங்கள் நண்பர்களுடன் படம் பார்க்க செல்ல ஆரம்பித்தப்பின்  மிகவும் நல்ல படமாக இருந்தால் மட்டுமே படம் பார்க்க செல்வதுண்டு. அதுவும் பல விமர்சனங்கள் படித்து விட்டு, ஒத்த ரசனை உடைய நண்பர்களிடம் கேட்டப்பின் தான் படம் பார்க்க செல்வதுண்டு. இக்கால கட்டத்தில் , (வயதாகிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்) திரை அரங்குகளில் படம் பார்க்க போகவேண்டும் என்றால் அதற்கென்று ஒரு மனநிலை தேவைபடுகிறது. வீட்டு வேளைகளெல்லாம் முடித்துவிட்டு படம் பார்க்க போக வேண்டும். திரும்பி வரும் பொழுது எந்த வேளையும் இருக்க கூடாது. நேராக வந்து படுத்துறங்க வேண்டும். வெயிலில் படம் பார்க்க செல்ல முடியாது. படம் ரொம்ப சோகமாகவோ,மொக்கையாகவோ, சண்டை காட்சிகள் நிறைந்ததாகவோ இருக்க கூடாது. இப்படி பல நிபந்தனைகள் விதித்துத்தான் படம் பார்க்க செல்வேன்.பொதுவாக தோழி சுஜா பார்த்தப்பின் தான் அவளின் அறிவுரைப்படி ஒரு படத்தை பார்ப்பதா இல்லை வேண்டாமா என்று முடிவு செய்வேன். நேற்று கணவரின் பேச்சை கேட்டு படம் சூப்பராக இருக்கும் என்று நம்பி சூப்பர் டீலக்ஸ் படம் பார்க்க சென்றேன். படம் பார்த்துவிட்டு வெளி வந்த போது நேராக கடைக்குச் சென்று ஒரு பாட்டில் டெட்டால் வாங்கி செவிகளை கழுவ வேண்டும் போல் இருந்தது.

ஒரு படம் , அதில் வரும் காட்சிகள், இடம் பெறும் வசனங்கள் எல்லாம் நம்முடைய ரசனையை மேன்படுத்துவதாக இருக்க வேண்டும். நம்மை சுற்றி நடக்கும் அவலங்களை , அசிங்கங்களை ,வக்கிரங்களையும் படம் பிடித்து முழு இரண்டரை மணி நேரமும் நம்முடைய மனதையும், மூளையையும் அழுக்கடைய செய்வது கூடாது. நாம் எதை அதிகமாக பார்க்கிறோமோ, எதைனை அதிகமாக கேட்கிறோமோ அதை நோக்கியே நம் விழிகளும், மனதும் செல்லும். அந்த ஒலியே தொடர்ந்து நம் செவிகளில் எதிரொலிக்கும். காட்சிகள் கண்முன் தோன்றும். தொடர்ந்து சாக்கடை நீரையே பார்த்துக்கொண்டும், முகர்ந்து கொண்டும் இருப்போமானால் நமக்கு தெளிந்த நல்ல  நீரின் தன்மை தெரியாமல் போய்விடும். நம்மை சுற்றி சாக்கடைகள் இல்லாமல் இல்லை, நாமும் சாக்கடைகள் இல்லாமல் வாழ முடியாது. இது நிதர்சனம். ஆனால் சாக்கடை என்பது மூடி வைக்கப்பட வேண்டிய  ஒன்று. இல்லை என்றால் அதன் நாற்றமும், அதில் இருந்து வெளிபடும் விஷவாயுவும் நம்மை நோய்வுறச்செய்யும்.

 சில அவலங்களை , அசிங்கங்களை, நிதர்சன உண்மைகளை படங்களில் கோடிட்டு காட்டினால் போதுமானது. படம் ஆரம்பித்தது முதல் வெறும் கெட்ட வார்த்தைகளே காதில் விழுகிறது. ரொம்பவும் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக திரும்ப திரும்ப அதே வார்த்தைகளை பேச வைத்திருப்பது அருவருக்கக்கூடியதாக இருந்தது. ஏற்கனவே நாம் சமுதாயத்தின் மீது  நம்பிக்கை இழந்து இச்சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படி பட்ட சூழ்நிலையில் நமக்கு நம்பிக்கை தரும் வகையில் ஒரு படம் இருக்க வேண்டும். நாம் இந்த சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கிறோம். ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக்கொள்கிறோம். அதையே நடைமுறை படுத்தப் பார்க்கிறோம். நம்மை சுற்றி நடக்கும் அவலங்களைப்பற்றி பேச சமூக ஊடகங்கள் இருக்கின்றன,பத்திரிக்கைகள் இருக்கின்றன. சினிமா படம் கோடிட்டு காட்டினால் போதும். சில விஷயங்களை இலைமறை காய்மறையாக கூறினாலே போதுமானது. அப்பட்டமாக , பச்சை, பச்சையாக உள்ளது உள்ளபடியே காண்பிக்கும் பொழுது அது நம் ரசனையை பாழடித்து விடுகிறது.

ஒரு கலைஞன் மக்களின் ரசனையை மேன்படுத்துபவனாக இருக்க வேண்டும். ஒரு நல்ல புத்தகம் எப்படி நல்ல விஷயங்களை நம் மனதில் விதைக்குமோ அப்படித்தான் ஒரு நல்ல படம் நல்ல விஷயங்களை நம் மனதில் விதைக்கும். ஒரு நல்ல சமூக கருத்தை மக்களிடம் எடுத்துக்கூற, ஒரு சமூக மாற்றத்தை மக்களிடம் ஏற்படுத்த, ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த எப்படி பட்ட ஒரு கருவியை நாம் கையாள்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஆயிரம் அசிங்கங்களைக்கொண்டு ஒரு அழகான விஷயத்தை தோற்றுவிக்க  முடியாது. அந்த ஆயிரம் அசிங்கங்கள் தான் மனதில் பதியுமே தவிற கூற வந்த அந்த ஒரு நல்ல விஷயம் நம் மனதில் பதியாது. மனித மனம் ஒரு குரங்கு தானே. அதனால் தான் தீயவை பார்க்காதே, தீயவையை பேசாதே, தீயவையை கேளாதே என்றார்கள் பெரியோர்கள். முகநூலும், இன்ஸ்டாகிராமும், யூடூபும் நமக்கு என்ன பிடிக்கும் என்று நாம் தேடும் விஷயங்களை வைத்தே நம்முடைய தேவையை கணிக்க முடியும்பொழுது நாம் நம் ரசனையை மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும். நம் ரசனைகள் மேன்பட மேன்பட நம் தனி மனித வளர்ச்சியும் மேன்படும். தனி மனித வளர்ச்சி மேன்பட நம் சமுதாயமே ஒரு மேன்பட்ட சமூகமாக, ஒரு ரிபைண்ட் சொசைட்டியாக வளரும். தொலைகாட்சியில் வரும் சீரியல்களால் சமூகம் கெடுகிறது என்று கூறும் நமக்கு, அசிங்கங்களையும், வக்கிரங்களையும், அவலங்களையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டும் இப்படிப்பட்ட திரைப்படங்களால் சமூகம் கெடாது என்று எப்படி கூறமுடியும்?

இப்படத்தின் கதையையோ, நடிகர்களின் நடிப்புத்திறனையோ நான் விமர்சிக்க போவதில்லை. அடிப்படையே ஆட்டம் கண்டபின் அதில் எல்லாம் என் கவனம் செல்லவில்லை.  நல்லவையும் தீயவையும் கலந்து ஒன்றாக கண்முன் தோன்றும் பட்சத்தில் நாம் எல்லோரும் பாலையும் தண்ணீரையும் தனித்தனியாக பிரித்தெடுக்கும் அன்னப் பறவை அல்ல.  . என்ன தான் சூப்பர் டீலக்ஸ் வாகனமாக இருந்தாலும் அதில் மூட்டைப்பூச்சிகள் அதிகம் இருந்தால் பயனம் இனிமையாக இருக்காது. அப்படித்தான் இப்படத்தில் மனித மனதின் வக்கிரங்கள் நம்மை மூட்டைபூச்சிகளாக படம் முழுதும் கடித்துக்கொண்டே இருக்கின்றது. நான் படம் பார்ப்பதே ஒரு பொழுது போக்கிற்காகத்தான். நாம் தினம் தினம் பார்க்கும் பிரச்சனைகளில் இருந்து ஒரு இரண்டரை மணி நேரம் மனம் லேசாக இருக்கவே படம் பார்க்கிறோம். அங்கே சென்று திரும்பும் பொழுது இன்னும் கனத்த மனதுடன் , கோபத்துடன், வெளிவந்தால் இதில் என்ன பொழுதுபோக்கம்சம் இருக்கிறது?இச்சமூகம் அழகானது தான். அதில் பல அழகான விஷயங்கள் தினம் தினம் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றது. அந்த அழகை நாம் தேடிச்சென்றால் நம் கண்களுக்கும், மனதிற்கும் குளிர்ச்சி நிச்சயம். நல்ல விஷயங்களில் நாட்டம் கொள்வோம். நம் ரசனையை அழகாக்குவோம். மற்றவை எல்லாவற்றையும் புறந்தள்ளுவோம்.ஒரு உயர்ந்த சிந்தைனை உடைய, உயர்ந்த ரசனை உடைய, ஒரு உயர்ந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

No comments: