Wednesday, March 8, 2017

மகளிர் தினம்!!
இது ஒரு நாள் கூத்து
இல்லை எனக்கு!
ஒவ்வொரு நாளையும்
தனதாக்கி கொள்ள
நித்தம் போராடுகிறாள் அவள்!
இந்நாளை பெண்களுக்கென
அங்கீகரிக்க,பெண்மையை போற்ற
இன்று மட்டுமே
வாழ்த்துக்களும், கவிதைகளும்,
பாடல்களும், பூங்கொத்துக்களும்
ஒருவருக்கொருவர்
பரிமாறிகொள்கின்றனர்!
கருவறை முதல் கல்லறைவரை
பெண்களை அன்போடு,
அக்கறையோடு, மரியாதையோடு
நடத்துவோம் என்று
இந்த உலகமே
ஒன்றுகூடி
இன்று ஒரு நாள் மட்டும் கூவுகிறது!
சத்தியபிரமாணமும் எடுக்கிறது!
ஆம், சாத்தான்களும்
வேதம் ஓதுகின்றன!
அவர்கள் மறந்து போனார்கள்,
வாங்கவோ, விற்கவோ
ஒரு பொருள் அல்ல அவள்!
உங்கள் வசப்படுத்தி ஆட்டுவிக்க
உங்களின் செல்லப்பிராணியும் அல்ல அவள்!
கோலெடுத்து ஆடவைக்க
குரங்குமல்ல அவள்!
மென்று துப்ப
உங்கள் வாய்க்குள் சிறைப்பட்ட
வெற்றிலை பாக்கும் அல்ல அவள்!
உங்கள் ஆசைக்கும், கோபத்திற்கும்,
அதிகாரத்திற்கும் ஆன
வடிகால் அல்ல அவள்!
மூச்சில்லா, மனமில்லா,
சுய அறிவில்லா
X கிரோமோசோம்களால் ஆன
வெத்து பொட்டலம் அல்ல அவள்!
அவளுக்கென்று
தனித்துவம் உண்டு,
அவளின் மனதிற்கும், உடலுக்கும்
அவளுக்கு மட்டுமே உரிமையுண்டு!
அவளை கடவுளென
கொண்டாடவும் வேண்டாம்,
தேவதையென போற்றவும் வேண்டாம்!
அவளை அவளாக சிந்திக்க விடுங்கள்,
சிந்தித்ததை பேச வாய் திறக்கையில்
வாய்ப்பூட்டு கொண்டு பூட்டாதீர்!
அவளுக்கு தேவை
பயமில்லாமல் நடமாட
ஒரு உலகம்,
அதுமட்டும் வாய்த்துவிட்டால்
அவளே சிங்கம்!
இப்பொழுது இல்லாவிட்டாலும்
கூடியவிரைவில் அவள்
கனவு நினைவாகுமா???
வாய்க்கும் அந்நாளே
இனிய மகளிர் தினமாகும்!!

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

கனவு விரைவில் நினைவாகட்டும்
மகளிர் தின வாழ்த்துக்கள்