Sunday, September 25, 2016

ஒரு ரீ யூனியன் கதை!!

ஓராண்டிற்கு முன், நான், ஆரம்ப பள்ளி படித்த பள்ளியின் பெயரில் ஒரு வாட்ஸ் ஆப் அழைப்பு வந்தது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை நான் படித்த சேக்ரட் ஹார்ட் பள்ளி தோழர்களிடமிருந்து வந்த அழைப்பு அது. அதை பார்த்தவுடன் எனக்கு தலை கால் புரியவில்லை! ஒரே சந்தோஷம். உடனே அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த குழுவில் ஐக்கியமானேன்! அந்த க்ரூப்பில் என்னுடன் படித்த மாணவ மாணவிகள் மட்டுமில்லை. எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியைகளும் இருந்தார்கள்.


க்ரூப்பில் இருந்த பெருபாலானோர் ஆண்கள் தான். அதனால் ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. பல பேரின் முகமோ ,பெயரோ கூட எனக்கு ஞாபகம் இருக்கவில்லை. ஆண்களின் ஞாபக சக்தி இந்த விஷயத்தில் அபாரம். சில பெண் நண்பிகள் க்ரூப்பில் சேர்ந்த பின் என் தயக்கம் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தது. பெண்கள் யாவரும் என்னுடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்தவர்கள். ஒரே கல்லூரிக்கு எங்களில் பலர் சென்றிருந்தது ஒரு காரணம். நாள் ஆக ஆக என் பங்களிப்பு அதிகரிக்க தொடங்கியது.


என் கணவர் எப்பொழுதும் பள்ளி க்ரூப், கல்லூரி க்ரூப் என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பார். என்னடா நம்முடன் படித்த யாருமே ஒரு க்ரூப் அமைக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. அந்த ஆதங்கம் எனக்கும் நிவர்த்தியானது. என் ஃபோனும் சதா ட்ரிங், ட்ரிங் என்று சத்தம் போட ஆரம்பித்தது. நான் அதை எடுப்பதையும், பின் தானாக சிரிப்பதையும் , அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் சாட்டிங்கில் மூழ்கி இருப்பதையும் பார்த்த  என் கணவர்,”அந்த நோட்டிபிகேஷன் டொய்ங், டொய்ங்னு சதா சத்தம் போடுது. அதை கொஞ்சம் ஆஃப் பண்ணி வைக்கிறியா” என்று சொல்ல ஆரம்பித்தார்.   எப்பொழுது பார்த்தாலும் ஃபோனும் கையுமாக அவர் இருந்ததை பார்த்து எனக்கும் இப்படித்தானே இருந்திருக்கும் .  பல் வலியும், தலவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.


ஒரு நாள் கவனிக்காமல் விட்டுவிட்டால் மறுநாள் ஒரு ஐம்பது மெசேஜ்கள் அள்ளி தெளிக்கப்பட்டிருக்கும். இப்படித்தான் முகம் தெரியா என் பள்ளித் தோழர்களுடன் நான் பழக ஆரம்பித்தேன். எங்கள் நட்பும் மீண்டும் மலர தொடங்கியது. நான் எழுதும் என் கட்டுரைகளை , கவிதைகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதைப் பற்றி அவர்களும், எங்கள் மிஸ்களும் விமர்சிக்கும் பொழுது எனக்கு உலக மஹா சந்தோஷம்.


முதல் முறை ஹபீப் போன் செய்த பொழுது என்ன பேசுவதென்றே எனக்கு தெரியவில்லை. என்ன தான் கூட படித்த மாணவர்கள் என்றாலும் அவர்களை இத்துனை வருடங்களுக்குப் பின் எப்படி  அழைப்பது என்று தெரியவில்லை. அவர், இவர்,என்பதா?,அவன் இவன் என்பதா?, அவங்க இவங்க என்பதா?, நீ , வா என்பதா?, என்ற குழப்பம் வேறு. பல முறை எதுவும் சொல்லாமலேயே மொட்டையாக பேசியதுண்டு. ஆங்கில” you” பல முறை கை கொடுத்தது. தோழிகளிடம் பேசும் பொழுது அந்த தயக்கம் இல்லை. நீ, வா, போ என்று சகஜமாக வந்துவிட்டது. ஆண்களுக்கும் இப்படி தோன்றி இருந்திருக்கும். ஒரு வேளை, பெண்கள் எல்லோரும் அப்படியே அன்று பார்த்த ரோஜாவாக இருந்ததால் அவர்களுக்கு அந்த குழப்பம் வர கொஞ்சம் வாய்ப்பு குறைவு. எளிதாக நீ வா என்று அழைக்க முடிந்திருக்கும். ஆண்கள் தான் உருவத்தில் மிகவும் மாறிப்போய் இருந்தார்கள். இவர்  தான் நம் கிளாஸ் மேட்டா இல்லை இவரின் மகனா? என்ற குழப்பம் பெண்களுக்கு இருந்தது.


என் குடும்பத்தில் எல்லோருக்கும் , ”நாலாங்கிலாஸ் ப்ரெண்ட்ஸ் க்ரூப்பாம்” என்ற நக்கல் வேறு. சுகி என் வீட்டிற்கு முதன் முறை வந்த பொழுது அதை ஊர் முழுதும் தம்பட்டம் அடித்துவிட்டேன். முப்பத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து பார்த்த மாதிரி எந்த ஒரு இடைவெளியும் எனக்கு தெரியவில்லை. பல வருடங்கள்  பழகிய நட்பாகவே அந்த சந்திப்பு இருந்தது.  அந்த சந்திப்பு மனதிற்கு இதமாக இருந்தது. ஹபீப் வந்த பொழுதும் அவ்வாரே இருந்தது.


க்ரூப்பில் பலருக்கு பல பெயருண்டு. பை பாஸ் பாலா, அலெக்ஸ் நாரதர், ரெட்டை சடை அகிலா, puzzle பரமேஸ்வரி அனுராதா, ராஜேஷானந்தா இன்னும் பல. நானும் அதிலிருந்து தப்ப வில்லை. எனக்கு ஜிஜி( கெத்து கீதா) குயிலி என்ற பட்ட பெயர்கள் சூட்டினார்கள். இப்படியாக எங்கள் வாட்ஸ்சாப் கச்சேரிகள் நடந்து கொண்டிருந்த வேளையில், ஜூன் மாத பள்ளி விடுமுறை வந்தது. நான் இந்தியா வருகிறேன் என்று மட்டும் தான் கூறினேன். உடனே, நீ வருவதால் ஒரு get to together போட்டுடலாம் என்றார்கள். ஆஹா  நாம் போவதனால் எவ்வளவு ஆசையாக get to together ஏற்பாடு செய்கிறார்கள் என்ற ஆனந்தம். பெரிய கிரீடத்தை தலை மேல் வைத்தது போல் இருந்தது. ரீ யூனியன் தேதி ஜூன் பதினொன்று என்று முடிவானது. பியூலா மிஸ், அசம்தா மிஸ் இருவரும் வருவதாக கூறியது இரட்டிப்பு சந்தோஷம். எல்லோரையும் பார்க்க போகிறோமே என்ற ஆவல், எதிர்பார்ப்புடன் என் பயணம் துவங்கியது.


இந்தியா வந்த நாள் முதல் எப்படா ஜூன் பதினொன்று வரும் என்ற எதிர்பார்ப்பு. சொந்தக்காரர்கள் யார் கூப்பிட்டாலும் “இல்லை ஜூன் பதினொன்றுக்கு பிறகு வருகிறேன்”, என்று கூறினேன். ஜூன் பதினொன்றும் வந்தது. காலை முதல் மனதில் ஒரே பட்டாம் பூச்சி பட படக்கும் சத்தம். அன்று மிகவும் இளமையாக உணரத்துவங்கினேன். சாயங்காலம் நான்கு மணிக்கு எல்லோரும் லக்‌ஷ்மி ஹோட்டலில் சந்திப்பதாக ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. ஆவலுடன் ட்ரெஸ் செய்து கொண்டு கிளம்பினேன். நான்கு  நாட்களுக்கு முன்பே தலைக்கு டை அடித்து விட்டேன். எங்கே, ஏதோ ஒரு ரீ யூனியனில் கேட்டது போல்,”நீங்க எந்த க்லாஸ் டீச்சர் எங்களுக்கு? என்று யாரும் கேட்டு விடக்கூடாது என்பதால் கொஞ்சம் அலார்ட் அலமுவாகிவிட்டேன்.


 ஹோட்டல் முன் இறங்கியதும் பட பட என மனது அடித்துக்கொண்டது. எல்லோர் புகைப்படத்தையும் பார்த்திருந்தும், வாட்ஸ்சாப்பில் பேசிக் கொண்டிருந்த போதும் ஏதோ ஒரு படபடப்பு இருக்கத்தான் செய்தது. முதல் மாடியில் ஒரு ஹாலில் எல்லோரும் குழுமி இருந்தார்கள் . ரிசப்ஷனில் அதை கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்றேன். கதவை லேசாக இருமுறை தட்டி விட்டு உள்ளே எட்டிப் பார்த்தேன்! வாவ் எத்தனை முகங்கள். என்னால் நம்பவே முடியவில்லை! பியூலா மிஸ் வந்திருந்தார்கள். அவர்களைத்தான் முதலில் பார்த்தேன். பார்த்தவுடன் அப்பாடா என்ற பெருமூச்சு. ஆசிரியர் இருந்தால் ஒரு கூடுதல் பாதுகாப்பு போன்ற உணர்வு.


ஆண்கள் எல்லோரும் ஒன்றாகவும், பெண்கள் எல்லோரும் ஒன்றாகவும் அமர்ந்திருந்தார்கள். வெல்கம் ஜீஜீ என்ற சத்தம். எனக்கு வாயெல்லாம் பல். யாரை முதலில் பார்ப்பது , பேசுவது என்றே தெரியவில்லை. ஒரு நிமிடத்தில் எல்லோர் முகத்தையும் கண்கள் படம் பிடித்து மூளக்கு அனுப்பியது. அதை கிரகிக்கும் வேகம் தான் மூளைக்கு இருக்கவில்லை. ஒவ்வொருவராக பார்த்து ஹல்லோ, ஹல்லோ என்றேன். எல்லோரும் வட்டமாக நாற்காலிகளை போட்டு அமர்ந்து கொண்டோம். மீனாவும், அகிலாவும் “எங்களுக்கு சப்போர்ட் வந்தாச்சு”, என்றார்கள். என் ஐந்தடி உருவத்தை பார்த்த ஆண்கள்’ இதுக்குத்தான் இந்த பில்டப்பா?, இது நாலாங் கிலாஸ்சிற்கு பிறகு வளரவே இல்லையா?” என்று பூச்சியை பார்ப்பது போல் பார்த்துவிட்டு ஊதிவிட்டார்கள். பாலா என்னிடம் வந்து , நான் என்னவோ ஐசிஸ் தீவிரவாதி போல் , ஆயுதம்  ஏதும் வைத்திருக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு சென்றார். நான் சாட்டிங் போது பேசுவதைப் பார்த்து அவருக்கு என் மேல் அப்படி ஒரு சந்தேகம். நானும் அப்படி ஒரு பில்ட் அப் கொடுத்து இருந்தேன்.


  எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். ஈ.கவிதா வந்தவுடன் தான் கச்சேரி களை கட்டியது. கவிதாவின் வெங்கல குரலும், சிரிப்பொலியும் , வெள்ளேந்தியான பேச்சும் அந்த  ஹாலை சிரிப்பலையில் மூழ்கச் செய்தத்டு. ஜூஸ் குடித்து  விட்டு எல்லோரும் பள்ளிக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். பின் எல்லோரும் சேர்ந்து எங்கள் பள்ளிக்குச் சென்றோம்.பள்ளி நேரம் முடிந்திருந்தது. மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்குச் சென்று விட்டார்கள்.  பழைய நினைவுகள் வானவில்லாய் தோன்ற ஆரம்பித்தது. Chappel லில் சாமி கும்பிட்டது, மூயூசிக் கிலாஸில் செய்த குறும்புகள், scale சண்டை என்றெல்லாம் இனிய  நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. ஆங்காங்கே  நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்த ஆசிரியர்களுக்கு எங்களை தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் தங்களின் பள்ளியின் முன்னால் மாணவ மாணவிகள் என்று எங்களுடன் அன்புடன் பேசினார்கள்.


ஆண் வாணரங்கள் அங்கிருந்த ஜிம்மை விடவில்லை. பழைய நினைப்புடன் அதில் ஏற பலர் முயன்றனர்.சிலர் பத்திரமாக அருகிலேயே நின்று கொண்டனர். இந்த வயதில் எக்கு தப்பாக எதிலாவது ஏறி எலும்பை  முறித்துக் கொண்டால் வீட்டில் சேர்க்க மாட்டார்கள் என்ற  பயம் போலும். நான் மீனா, கவிதா,  மூவரும் ஜிம்மிற்கு முன் நின்று புகைப்படம் எடுக்க நின்ற பொழுது ஆண்களின் அத்துனை போன் கேமராக்களும் ஜொலித்தது, நாங்களும் ஜொலித்தோம். மூனு பொம்பளை பிள்ளைகளை எடுக்க பதினைந்து கேமராக்கள், ஆனால் பதினைந்து ஆண் பிள்ளைகளை எடுக்க இரண்டே இரண்டு கேமராக்கள் என்ற ஆதங்கம் வேறு அவர்களுக்கு. யாரும் யாரையும் குறிப்பாக குறை கூற முடியவில்லை. ஏனென்றால் எல்லோர் கையிலும் இருந்த கேமராக்கள் எங்களைப் பார்த்து ஜொள்ளி(லித்)த்தது.பள்ளியை நாங்கள் சுற்றி வந்ததை பார்த்த ஹாஸ்டல் சிறுவர்கள் என்னடா இந்த ஆண்டீஸ் ,அங்கில்ஸ் பன்றாங்க என்று பேசிக்கொண்டார்கள். இன்னும் இருபது முப்பது ஆண்டுகள் கழித்து அவர்களும் இதைத்தான் செய்வார்கள் என்று அவர்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஷேக் கிற்கு மட்டும் தான் ஸ்கூல் பையன் என்ற நினைப்பு மாறவே இல்லை. தன் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம் என்று முயற்சி செய்தார். ஆனால் அவரின் தொந்தி அவர் காலை வாரிவிட்டது. பள்ளி சிறுமிகள் தன்னை அங்க்கில் ஆக கூட கருதவில்லை என்று கொஞ்சம் வருத்தம் அவருக்கு. ஆனாலும் முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கையில் அவர் மனம் தளரவில்லை.


 நடந்து கொண்டே பள்ளியை சுற்றி வந்த பொழுது , நுனலும்  தன் வாயால் கெடும் என்பதைப்போல் ஈ .கவிதா,”கணபதியும் நானும் சொந்தக்காரர்கள். அவர் என் மாமா பையன்”என்று முடிக்கக் கூடவில்லை. எல்லோரும் அந்த கடைசி சில சொற்களை பிடித்துக் கொண்டு இருவரையும் கலாய்த்து தள்ளி விட்டார்கள். கவிதா தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருப்பதை கூறியும் யாரும் விடவில்லை. ஷேக் மட்டும் மனம் தளராமல் அங்கேயும் தன் விண்ணப்பத்தை சமர்பிக்க தயாரானார்.


மீனாவின் அப்பாவை பார்த்து நான், “மீனா உன் அப்பா காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கார்” என்று நாலாம் வகுப்பு படித்த பொழுது கூறினேனாம். அதை நினைவில் வைத்திருந்து அதை என்னுடன் பகிர்ந்து மீனா சிரித்தார். ஆண்கள் யாவரும் எங்கெல்லாம் நின்று அடிவாங்கினார்கள், எதற்கெல்லாம் அடி வாங்கினார்கள் என்று நினைவு கூர்ந்தனர். ஐந்தாம் வகுப்பு படித்த பொழுது பியூலா மிஸ் தன் திருமணச் செய்தியை மாணவர்களுடன் பகிர்ந்த பொழுது எப்படி மாணவர்கள் எல்லோரும் அழுதார்கள் என்று ஷேக் கூறிய (நடித்து காட்டிய )  ,பொழுது அது கவிதையாக இருந்தது. பள்ளியை நன்றாக சுற்றி பார்த்து விட்டு ஹோட்டலை நோக்கி நடக்கத் ஆரம்பித்தோம். மழைத் தூரல் எங்கள் உடலை அங்கங்கே நனைத்தது. . நினைவுகள் எங்கள் கண்களை ஆணந்த கண்ணீரால்  நிரப்பியது. வேகமாக நடந்து வந்து மீண்டும் ஹோட்டல் ஹாலில் சங்கமித்தோம்.ஹால் முழுவதும் ஒரே பேச்சு சத்தம். மீண்டும் எல்லோரும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களாக மாறினோம். ஆசிரியர்களால் எங்களை கட்டுப்படுத்த முடியவில்லை, அதற்கு அவர்களின் மனமும் இடம் கொடுக்கவில்லை. அவர்களும் எங்களுடன் ஒன்றாக கலந்து கச்சேரியை அமர்களப்படுத்தினார்கள். சுகியின் அம்மா,”Our Father prayer " பாடலுடன் அதிகார பூர்வமாக நிகழ்வை துவக்கி வைத்தார். எல்லோரும் அமைதியாக இருந்தது அந்த இரண்டு நிமிடங்கள் தான். அதன் பின் ஒருவர் ஒருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தன் குடும்பத்தைப்  பற்றியும் பகிர்ந்து கொண்டோம். சுரேஷிற்கு மகள் ஓவியா படிக்கும் வகுப்பை பற்றி சிறு குழப்பம் . நண்பர்களை ஒரு சேர பார்த்த மகிழ்வில் வந்த ஞாபக மறதி அது. சந்தடி சாக்கில் brown girl in the ring பாடல்  பாடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. முந்திரி கொட்டையாக நான் “எனக்கு பாடல் ஓர் அளவிற்கு ஞாபகம் இருக்கிறது “,என்று சொல்லி விட்டேன். உடனே எல்லோரும் “ பாடு ஜீ ஜீ”, என்று ஏற்றி விட்டார்கள்.இந்த மேடையை விட்டால் நம் குரல் வலம் தெரிந்த யாரும் இந்த ஜென்மத்தில் நமக்கு   இந்த மாதிரி ஒரு வாய்ப்பை தர மாட்டார்கள் என்பதை உணர்ந்த நான் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முடிவு செய்தேன். கர  கரத்த என் குரலோசையில் அந்த பாடலை தெரிந்த மட்டும் பாட(படிக்க) என்னுடன் சேர்ந்து எல்லோரும் பின் பாட்டு பாடினார்கள்.


 தன்னை இளமையாகக்  காட்டிக்கொள்ள மீட்டிங் ஆரம்பித்ததிலிருந்து வயிற்றை இழுத்து தம் பிடித்த ஷேக், மறந்து அவ்வப்பொழுது மூச்சு விட்ட பொழுது உண்மையான தொப்பையும் வயதும் எட்டிப் பார்த்தது! ஷேக்கின் முறை வந்த பொழுது, அவர்  தான் கட்டிய காதல் கோட்டைகளையும் அது சீட்டுக்கட்டைப் போல் சரிந்து விழுந்து நொறுங்கிய கதைகளையும் சொன்னதைக் கேட்டு எங்களில் பலர் கண்களை அகல விரித்து வாய் பிளந்து கேட்டோம். சினிமாவிற்காக கதை சொல்வதை போல் அழகாக, உணர்வு பூர்வமாக ஏத்த இரக்கத்துடன் விவரித்தார். இது நிஜமா அல்லது உடான்ஸ்ஸா என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கத்தான் செய்தது. பல திரைப் படங்களில் இருந்து சுடப்பட்ட கதைகளைப் போன்று இருந்தாலும், நிஜமோ பொய்யோ எங்களுக்கு அது கேட்பதற்கு சுவாரசியமாக  இருந்தது. ஆனாலும் தன் சோக கீதத்தை ஆணந்த கீதமாக பாட ஷேக்கால் மட்டுமே முடியும். சந்தில சிந்து பாடுவதைப் போல் இன்றும்  தன் இனியவளை தேடும் தேடல் தொடர்கிறது என்ற பிட்டையும் போட்டார். ஷேக் பேசிய பொழுது வயிறு குலுங்க சிரித்தோம். அவர் கடந்து வந்த பாதைகள் முட்களால் நிரம்பியிருந்த பொழுதும் அதில் தான் கண்ட ரோஜாக்களை அழகாக வர்ணித்தார். விளையாட்டாக மட்டுமே பேசாமல் இந்த நட்பு இனியும் பல ஆண்டு காலம் தொடர வேண்டும் என்றும் ,  ஒருவருக்கொருவர் துணையாக் இருந்து ஒன்றாக வளர வேண்டும் என்ற அழுத்தமான விதையை விதைத்தார். அதை யாவரும் தலையாட்டுதல் மூலம் ஆமோத்தோம்.


வாட்ஸ்சாப்பில் மூச்சுக்கு முன்னூறு மெசேஜ் அனுப்பும் அலெக்ஸ் நேரில் மிகவும் அமைதியாக இருந்தார். பாலா சகஜமாக ஷேக்கை கலாய்த்தது அழகாக இருந்தது. முதல் முறை என்பதால் பலர் ஒரு சில வார்த்தைகளுடன் நிறுத்திக் கொண்டனர். மெஹ்பூப் கான் மட்டும் அவரின் மனைவியையும் மகனையும் அழைத்து வந்திருந்தார். ஜட்ஜ் அய்யா அல்லவா எனவே அவருக்கு ரீ யுனியனுக்கும் சாட்சி தேவை. அவரின் மனைவியும் மகனும் அமைதியாக அமர்ந்து நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அசைவம் என்று ருசியான சாப்பாடு வேறு. சாப்பாட்டிற்கு முன் எல்லோரும் குழுவாக பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். செல்பி புள்ள மீனா கிடைத்த வாய்ப்பை கைவிடாமல் ஒன்றிரண்டு செல்பியை க்ளிக்கினார். பியூலா மிஸ் எல்லோருக்கும் தனித்தனியாக அழகாக பெயர் எழுதி அன்பளிப்பு ஒன்று கொடுத்தார்கள். எனக்கு,”You are unique "என்ற ஃப்ரிஜ் மாக்னெட். . ஆசிரியர்களிடம் வாங்கிய ஆசீர்வாதமும், அன்பளிப்பும் எங்களுக்கு அன்று கிடைத்த அதிர்ஷ்ட குலுக்கல். டாக்டர் ரவீந்திரனும் எல்லோருக்கும் சேக்ரட் ஹார்ட் ரீ யூனியன் என்று தஞ்சாவூர் தட்டில் அச்சடிக்கப்பட்ட  அழகான நினைவு பரிசை கொடுத்தார். உணவிற்கு பின் எல்லோரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது சுகியின் அம்மா பல அழகான, சுருக்கமான வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை எனக்கு கூறினார். தன் மகளாக அவர் என்னை நினைத்து என்னிடம் அப்படி பேசியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.


பிரியும் நேரம் வந்தது. இந்த ரியூனியனை அழகாக ஏற்பாடு செய்திருந்த அத்துனை நண்பர்களுக்கும் ஒரு பெரிய ஓ போட வேண்டும். சந்தோஷமான அந்த நினைவுகளுடன் நான் சுரேஷுடன்  அவரின் காரில் வீட்டில் வந்து இறங்கிக் கொண்டேன். .வந்திருந்த அத்துனை பெண்களும் தத்தம் வீடுகளுக்கு பத்திரமாக செல்வதை ஆண்கள் உறுதி செய்து கொண்டார்கள். அதற்கான ஏற்பாட்டையும் செய்தார்கள். வீடு அடைந்ததும் என் அம்மா எப்படி இருந்தது என்று மட்டுமே கேட்டார். அந்த நொடி கதை சொல்ல ஆரம்பித்த  என் வாய், மடை திறந்த வெள்ளமாய் ஒரு நான்கு  நாட்களுக்கு ஒரே ரீ யூனியன் கதையை மட்டுமே எல்லோருக்கும் சொன்னது. வீட்டில் இருந்தவர்கள் காதில் பஞ்சை வைத்துக் கொள்ளாதது தான் பாக்கி. நான் ஊர் கூரையில் நின்று கூவாதது  தான் பாக்கி!!

சிறு வயதில், பள்ளித் தோழர்களிடம்  நாம் கொண்டுள்ள உரிமையும், அவர்கள் பால் வைக்கும் எதிர்ப்பார்ப்பற்ற அன்பும் எத்துனை வருடங்கள் ஆனாலும் மாறாது என்பதை இந்த ரீயூனியன் புரிய வைத்தது. யார் பெரியவர், யார் சிறியவர்,  வென்றவர் யார், தோற்றவர் யார், பணக்காரர் யார், வசதி குறைந்தவர் யார், என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் இருக்கும் இந்த கள்ளம் கபடம் இல்லா நட்பு என்றென்றும் வாழ்க! மாறி வரும் வாழ்க்கை முறையில் அன்பின் வெளிப்பாடு எவ்வளவு அவசியம், அது நம்மை எப்படி பல வழிகளில் ஆசுவாசப்படுத்துகிறது என்பதையும் நான் உணர்ந்த தருணங்கள் அவை. வாழ்க்கையின் உச்சானிக்கு சென்றாலும், அடித்தளத்திற்கு சென்றாலும் நிதர்சனமானது அன்பு ஒன்றே! மீண்டும் இப்படி ஒரு ரீ யூனியனுக்காக மனம் ஏங்கிய படி காத்துக் கிடக்கிறது! வாழ்க நட்பு!வளர்க அன்பு!!

No comments: