Monday, March 28, 2016

விசாரிக்காமல் போகலாம் விசாரனைக்கு....

சீனப் புத்தாண்டுக்கு நான்கு நாட்கள் விடுமுறை . நான்கு நாட்கள் எப்படி பொழுதை போக்குவது என்று நினைத்து ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு ப்ளான் போட்டோம். வடிவேல் மாதிரி பிளான் போடுவதில் நாங்கள் கில்லாடி. நடைமுறைக்கு வரும் போது தான் கொஞ்சம் இடிக்கும்.பிளானில் பெருவாரியாக நிறந்திருந்த செயல் , சாப்பிட்டுவிட்டு நன்றாக தூங்கி எழுவது தான். எட்டு மணி நேரம் தொடர்ச்சியாக தூங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது போல் இருந்தது. தூக்கத்திற்கான நேரத்தையும், சாப்பாட்டிற்கான நேரத்தையும் ஒதுக்கிவிட்டு பார்த்தால் எஞ்சி இருந்தது மாலை நேரம் தான்.


ஒரு நாள் நண்பரின் வீட்டிற்கு டின்னருக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். இரவு உணவிற்குப் பின் பேச்சு மற்றும் சீட்டுக் கச்சேரியை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் அதிகாலை மூன்று மணி ஆகிவிட்டது. மறுநாள் கேரி கொண்டதைப்போல் இருந்தது. எழுந்ததே மதிய வேலையில்தான். ஏதோ ஒன்றை கிண்டி சாப்பிட்டுவிட்டு மீண்டும் வண்டி கொடை சாய்ந்தது. மாலை எழுந்து அன்றைக்கு கோவிலுக்கு சென்று வந்தோம். செய்த புண்ணியம் ஏதோ ஒன்றின் பலனாக இரவு சாப்பாடு கோவிலில் கிடைத்தது. இப்படியாக இரண்டு நாட்கள் ஓட்டி ஆகிவிட்டது.


மூன்றாம் நாள், மகன், அவனுடைய நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று விட்டான். எங்கள் இருவருக்கும் பொழுது போகவில்லை. சரி, சினிமா பார்க்க போகலாம் என்று முடிவு எடுத்தோம். இறுதிச்சுற்று படம் மிகவும் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் படித்தோம். நான் பொதுவாக விமர்சனங்களை நம்புவதில்லை. என் தோழிகள் யாராவது படம் பார்த்துவிட்டு அபிப்ராயம் சொன்னால் தான் நம்புவேன். என் தோழி சுஜா படம் பார்த்துவிட்டு,”கீதா, படம் சூப்பர், மாதவன் அதைவிட சூப்பர்”,என்றாள். நானும் ஒரு மாதவப்பிரியை--இதை நான் டைப் செய்யும் போது அருகில் ரவி இல்லை.......என் சம வயது தோழிகள் பலர் மாதவனை “eligible candidate list"ல் எப்பொழுதும் வைத்திருப்போம். சரி நாங்கள் தான் என்றால் எங்கள் பிள்ளைகளும் மாதவனுக்காக ஜொல்லுவிடும்போது கொஞ்சம் உறுத்தலாகக் இருக்கும். சரி அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். உண்மையான கலையையும் கலைஞனையும் ரசிக்க வயது வரம்பு தேவையில்லை. இறுதிச்சுற்று படத்திற்கு போகலாம் என்று பார்த்தால் டிக்கெட் கிடைக்கவில்லை.


 “கீதா, விசாரணை படம் போலாமா? என்று ரவி கேட்டார். அப்படம் பற்றி நல்ல விமர்சனங்களை கேட்டிருந்தேன். வெற்றிமாறனின், “ஆடுகளம்” எனக்கு மிகவும் பிடித்த படம். ரவி கேட்டவுடனேயே, “சரி போகலாம்” என்று கூறிவிட்டேன். “பாரு, இந்த படம் கொஞ்சம் சீரியஸான படம். அங்க வந்து தியேட்டர்ல உட்காந்துகிட்டு என்ன படம் இது?, எனக்கு பிடிக்கலை, சீரியஸா இருக்கு, போலீஸா இருக்கு, பாட்டு இல்லை, டான்ஸ் இல்லைனு என்னை அனத்தக்கூடாது, ”என்றுமுன்னெச்சரிக்கை செய்தார். “இல்ல இல்ல நான் வர்றேன். தாரை தப்பட்டை மாதிரி படம் எல்லாம் தான் என்னால் பார்க்க முடியாது. இந்த மாதிரி படம் எல்லாம் நான் பார்ப்பேன்:, என்று கூறினேன். இரண்டு பேரும் படத்திற்கு கிளம்பினோம்.


அன்று திங்கட்கிழமை. நல்ல வேலையாக நான் , நான்வெஜ் சாப்பிடும் நாளாக இருந்தது. மதிய உணவிற்கு அஞ்சப்பரிடம் சரனடைந்தோம். நன்றாக பிரியானியை ஒரு பிடி பிடித்துவிட்டு, பீடாவையும் வாங்கி குதப்பிவிட்டு உண்ட மயக்கத்திலேயே படத்திற்கு போனோம். படம் ஆரம்பிக்க முப்பது நிமிடங்கள் இருந்தது. சரி என்ன செய்யலாம் என்று நான் கேட்பதற்குள் “கீதா இன்னும் அரை மணி நேரம் இருக்கு படம் ஆரம்பிக்க. பேசாமல் காரிலேயே ஒரு பதினைந்து நிமிஷம் தூங்கிவிட்டு ஃப்ரெஷ்ஷா படம் பார்க்க போலாம் ”,என்று ரவி முடிவெடுத்தார். எனக்கும் பிரியாணியின் மப்பு தாங்கவில்லை. எங்கே படம் பார்க்கையில் தூங்கி விடுவேனோ என்ற கவலை. தினமும் மதிய வேலையில் ஒரு அரை மணிநேரம் தூங்கி வேறு பழக்கமாகிவிட்டது. அப்படி தூங்கவில்லை என்றால் ஒத்தை தலைவலி, இரட்டை தலைவலி என்று வீட்டில் இருப்பவர்களுக்கு தலைவலி கொடுப்பேன்.ஏசியை ஆன் செய்துவிட்டு இருவரும் காரிலேயே ஒரு கோழி தூக்கம் போட்டுவிட்டு பின் படம் பார்க்க சென்றோம்.


படம் ஆரம்பித்தது தான், என் கவனம் சிறிது கூட சிதறாமல் திரையையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.அந்த அளவிற்கு காட்சிகள் ஆரம்பம் முதல் கட்டி இழுத்தது. மிகவும் விருவிருப்பாக சென்றது.இடைவெளி வந்த பொழுது கூட எப்படா மீண்டும் படம் ஆரம்பிக்கும் என்ற அவசரம், தவிப்பு. தத்ரூபமான காட்சிகள். கச்சிதமான பாத்திரபடைப்புகள். ஒவ்வொரு கதாபாத்திரமும் சலித்து பொறுக்கியது போல் இருந்தது. நடிகர்கள் நடிப்பதை போன்ற உணர்வே வரவில்லை. அனைவரும் நிஜத்தில் பார்த்து பழகியவர்களாகவே தோன்றினார்கள். போலீசாக வருபவர்களின் உடல்மொழி, முகபாவனை, உடல் அமைப்பு, அனைத்தும் அற்புதம். இப்படத்திற்காகவே செதுக்கபபட்ட கதாபாத்திரங்கள். பாடல்களோ, நடனமோ ஏதும் இல்லை. இயல்பாக அன்றாடம் நாம் வாழ்வில் சந்திக்கும் நிதர்சனமான உண்மைகளே காட்சிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிண்ணனி இசை இயல்பு. வசனங்களில் தெளிவும், தெறிப்பும் இருந்தது.


 படம் முடிந்த பொழுதும் , ஆரம்பம் முதல் சுமக்கப்பட்ட சுமை மனதிலிருந்து விலகவில்லை. ஏதோ ஒரு இனம் தெரியாத வலி. படம் முடிந்த பொழுது அவரவர் எழுந்து போகாமல் ஒன்றாக ஏதோ சொல்லி வைத்ததைப்போல் கைதட்டினார்கள். படத்திற்கா, நடிப்பிற்கா, இயக்குனருக்கா, கையாளப்பட்ட கருவிற்கா, கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்திற்கா, நிஜத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தனக்கும், தன் நண்பர்களுக்கும் நேர்ந்த கொடுமையை “லாக்கப்”என்ற புத்தகத்தின் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய எழுத்தாளரின் தைரியத்திற்கா, அல்லது படத்திற்கான விருது பெரும் விழாவில் அவரை கவுரவித்ததற்கா என்று நினைத்துபார்த்தால் கைத்தட்டலுக்கான காரணம் இதில் ஏதோ ஒன்று தான் என்று தனித்து கூறமுடியவில்லை. It is a complete package.
வரிக்கு வரி எழுதப்படும் விமர்கனங்களை நான் படம் பார்க்கும் முன் படிப்பதில்லை. அப்படி படித்தால் விமர்சகரின் தாக்கம் என்னுள் படம் பார்க்கும் பொழுது ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம். அதனால் தான் படம் பற்றிய ஒரு பொதுவான கருத்தையே நான் பகிர்கிறேன்.


அயல் நாடுகளில் வாழும் என்னைப் போன்றோர், வாழும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து, எங்கே ஏதாவது சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டால் வாழ்க்கையே முடிந்து போய்விடுமோ என்ற அச்சத்தில் பிரச்சனைகளிலிருந்து தள்ளியே வாழ பழகிவிடுகிறோம். நம் நாடாக இருந்தால் அது வேறுமாதிரியாக இருக்கும் , எப்படியும் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டுவிடலாம் என்ற எண்ணத்திற்கு இப்படம் ஒரு சம்மட்டி அடி. ஜுடிஷியல் சிஸ்டம்  என்ற ஒன்றுக்கு எந்த நாடாக இருந்தாலும் அப்பாவிகள் பலி கொடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் அதிகார வர்கத்தின் கையே ஓங்கி நிற்கிறது. மனிதனின் சுயநலமே தலைதூக்குகிறது. படம் பார்த்த எல்லோர் முகத்திலும் ஒர் சோகம். இப்படம் ஒரு சமுதாய விழிப்புணர்ச்சி என்று சொல்லலாம் என்றால், இப்படி அறிந்து கொல்வதனால் நம்மால் இப்படிபட்ட கொடூரங்களை வேரறுக்க என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. விழித்துக்கொண்டால் மட்டுமே போதாது. இப்படிப்பட்ட சமூக அவலங்களை களைந்தெடுக்க ஒவ்வொரு தனிமனிதனும் மனசாட்சியுள்ள மனிதனாக வாழ்ந்தாலே முடியும். புரட்சி தேவையில்லை, மனதில் எழுச்சி வேண்டும். விசாரணை விசாரிக்காமல் சென்று பார்க்க வேண்டிய அழகான படைப்பு.

2 comments:

selvi said...

ஆஹா அருமையான பதிவு.இறுதிசுற்று விசாரணையாக ுஅனுபமும் அரமை.உங்களின் நகைச்சுவை கலந்த எழுத்து நடை எனக்கு பிடித்திருக்கிறது.

Geetha Ravichandran said...

நன்றி செல்வி அவர்களே!!