Tuesday, March 31, 2015

அன்புள்ள லீ கான் யு அவர்களுக்கு.....

அன்புள்ள லீ கான் யு அவர்களுக்கு,

கடந்த ஒரு வாரமாகவே நான் நானாக இல்லை. மனதில் ஏதோ இறக்கி வைக்க முடியாத பாரம். யாரிடமும் சொல்லி அழ முடியவில்லை. ஏனென்றால் எல்லோருமே இதே வலியையும் , வேதனையையும் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் மரணப்படுக்கையில் இருந்த பொழுது கூட , எப்படியும் பிழைத்து விடுவீர்கள் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. செயற்கை சுவாசத்தில் நீங்கள் சுவாதித்துக்கொண்டு இருந்தபொழுதும் ஏதோ உயிரோடாவது இருக்கிறீர்களே என்ற நிம்மதி. அதுவும் நின்றபொழுது மனம் வலித்தாலும் உங்கள் உடலாவது எங்களுடன் இருக்கிறதே என்ற பெருமூச்சு. ஆனால் இன்று அந்த உடலும் கண்களில் இருந்து மறைந்துவிட்டது.


சொல்லி அழ வார்த்தை இல்லை, கதறி அழ கண்ணீரும் இல்லை, தழுவி அழ உங்கள் உடலும் இல்லை. ஏழு நாட்களாக மரப்பெட்டிக்குள் சூழ்நிலைக் கைதியாக இருந்த உங்களுக்கு இன்று விடுதலை.உங்கள் மேல் இரக்கப் பட்டு , அந்த காலன், உயிருடன் இருக்கும் வரை நீங்கள் ஓய்வெடுக்க போவதில்லை என்று அந்த உயிரை உங்களிடமிருந்து மீட்டுக்கொண்டானா என்று எனக்கு புரியவில்லை.நீங்கள் சாவா வரம் பெற்ற மார்க்கண்டேயனைப் போல் வாழ்வீர்கள் என்றல்லவா நாங்கள் நம்பி இருந்தோம். வானமே எல்லை என்றார்களே, நீங்கள் ஏன் அதையும் தாண்டி மறைந்துவிட்டீர்கள்?


கேளிக்கை நிகழ்ச்சிகளை தவிர வேறெதுவும் நெடுநேரம் தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்த்திராத என்னை என்ன வசியம் செய்து நாண்கு மணி நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்து உங்கள் இறுதி சடங்கை பார்க்கச் செய்தீர்கள்? கல்யாணச் சாவாகிய ஒரு தொன்னூறு வயது முதியவரின் இழப்பு எனக்குள் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கடந்த ஏழு  வருட சிங்கப்பூர் வாழ்க்கையில் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளாததை இந்த ஏழு நாட்களுக்குள் மிகுதியாக அறிந்து கொண்டேன்.உங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு பல்கலைக்கழகம் போதாது. உங்களைப்  பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள தொலைகாட்சியைப் பார்க்கிறேன், பத்திரிக்கையை படிக்கிறேன், வானொலியை கேட்கிறேன், நண்பர்களுடன் கலந்து பேசுகிறேன். எங்கெங்கெல்லாம் உங்கள் பெயர் உச்சரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் என் ஐம்புலனும் திரும்புவதை உணர்கிறேன்.  ஒரு தாயாக இருந்து உணர்கிறேன் உங்களைப் பெற்றத் தாய் எவ்வளவு பாக்கியசாலி என்று.


உங்கள் தாயின் மடி மீது தலைவைத்து உறங்க சென்றுவிட்டீர்களா? அல்லது ஆசை மனைவியின் தோல்சாய்ந்து ஓய்வெடுக்கச் சென்றுவிட்டீர்களா? பாதி தூரம் தானே எங்களுடன் நடந்து வந்தீர்கள், மீதிப்பாதியை நாங்கள் யாருடன் கைகோர்த்து கடந்து செல்வது? எங்கள் கூக்குரல் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லை என்று அந்த வருண பகவானையும் நாங்கள் துணைக்கு அழைத்து வந்தோமே. ஆனாலும் ஏன் செவி சாய்க்காமல் சென்று விட்டீர்? வேறு பிள்ளைகளை தத்து எடுக்க வேறு இடம் சென்றுவிட்டீர்களா?? சாமி இல்லா கோவிலாக உணர்கிறேன். இந்த வெற்றிடம் நிரம்ப வேண்டுமென்றால் மீண்டும் வந்து விடுங்கள், எங்களுடன் தங்கிவிடுங்கள்.

இப்படிக்கு,
உங்கள் மறு வரவிற்காக காத்துகிடக்கும்,
பல்லாயிர உள்ளங்களில் ஒர் உள்ளம்.

1 comment:

Durga Karthik. said...

Eppadi en manathil ullathai appadiye pottuteenga.Avarainpoi 6 hrs Friday night paartha piragu thaan nimathi aachu.Appadi nam anaivaraiyum azhaikum aanmaa.