Saturday, March 14, 2015

கேள்வி ஞானம்

தோழி ரம்யாவிடமிருந்து , அவரின் “அகம்” புத்தக வெளியீட்டுற்கான அழைப்பிதழ் வந்தது. சனிக்கிழமை என்பதால் நானும்,  ரவியும் போகலாம் என்று முடிவு செய்து பிள்ளைகளை வீட்டில் படிக்க சொல்லிவிட்டு(??) கிளம்பிச் சென்றோம். வெளியில் போகும் போது “டிவி பார்க்காமல், செல்போனில் விளையாடாமல் படிக்க வேண்டும் ” என்று தேய்ந்த ஒலிப்பேழையாய் சொல்வது பழக்கமாகி போனது. அவர்களுக்கும் அது செவிடன் காதில் ஊதிய சங்கை போல் ஆகிவிட்டது. 

புத்தக வெளியீட்டு விழாவில் அய்யா சொ.சொ.மீ . சுந்தரம் , அவர்களின் பேச்சு இடம்பெற்றிருந்தது. அய்யாவை முன் பின் பார்த்ததோ, அவரைப் பற்றி கேட்டதோ இல்லை. எனது அறிவீன்மைக்கு முக்கிய காரணம், நான் இலக்கியவாதியோ, படிப்பாளியோ, படைப்பாளியோ இல்லை. நான் ஒரு சராசரி இல்லத்தரசியாகவே காலம் கழித்தாகி விட்டேன். வீடு, குழந்தைகள் , குடும்பம் தான் என் உலகமாகி போனது. இது, என் அறிவை நான்  வளர்த்துக்கொள்ளாமல் மழுங்கி போனதற்காக நான் கூறும் சாக்கு. நொண்டிக் குதிரைக்கு சறுக்கினதெல்லாம் சாக்காம்!! ஒரு மாறுதலுக்காகவே ரவி என்னை அழைத்துச்சென்றார். ரவிக்கு புத்தகம் என்றால் கொள்ளை பிரியம். என் குழந்தைகளையும் எப்படியோ புத்தகப்புழுக்களாக வளர்த்துவிட்டேன். ஒரு காலத்தில் புத்தக புழுவாக இருந்த நான் இப்பொழுது வெறும் புழுவாகி போனேன். புத்தக வெளியீட்டிற்கு சென்ற பின் தான் அது எவ்வளவு ஒரு அழகான அனுபவம் என்பதை உணர்ந்தேன். அய்யாவை முதலில் என் கண் எடை போட்டது. ஒரு எழுபது வயது பெரியவர். கறுத்த தேகம் , சிரித்த முகம். வெள்ளை வேட்டிச் சட்டை.  சரி இந்த பெரியவர் தூய தமிழில் பேசப்போகிறார் என்று நினைத்து உடல் அரங்கிலும், உள்ளம் வீட்டிலுமாக அமர்ந்து இருந்தேன். அய்யா புத்தகத்தை பற்றியும், அதன் எழுத்தாளர் ரம்யாவை பற்றியும் ஒரு சிறிய உரையாற்றினார். அழகு தமிழில், புரியும் படியான தெளிவான அவரது பேச்சும், கனீர் என்ற அவரது குரலும்,  என்னை மிகவும் கவர்ந்தது. மனம் வீட்டிலிருந்து அரங்கிற்கு பறந்து வந்து அமர்ந்தது.அவரது அந்த சிறிய உரையில்  தான் எவ்வளவு ஆழமான கருத்துக்கள்.இவ்வளவு காலம் துரு பிடிக்க விட்ட என் மூளையை கசக்கி பிழிய வேண்டும் என்று தோன்றியது. அதனால், மறுநாள் அய்யா அவர்கள், டேங் ரோடு முருகன் கோவிலில் ஆற்றவிருந்த  திருச்செந்தூர் முருகனைப் பற்றிய ஆன்மீக சொற்பொழிவிற்கு போக முடிவு செய்தோம். உடனே நீங்கள் என்னை ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள் என்று அவசரமாக தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள்.

சிறு வயது முதலே கோவிலுக்கு போவது எனக்கு வழக்கம். இதை யாரும் எனக்குள் திணிக்க வில்லை. பள்ளிக்கு அருகில் இருந்த ஓம்சக்தி மடத்தில் எந்நேரம் சென்றாலும் கல்கண்டு கொடுப்பார்கள். அப்படித்தான் கோவிலுக்குள் ஈர்க்கப்பட்டேன். பல நேரங்களில் பிரசாதத்திற்காகத்தான் கோவிலுக்குப் போன அனுபவம். என்னை ஆன்மீக பாதையில் வழி நடத்தியதில், என் சிறு வயது தோழி ரங்க லக்ஷ்மிக்கு பெரும் பங்கு உண்டு. அவர்கள் வைணவர்கள். கிருஷ்னரை குழந்தையாகவே காண்பார்கள், பேசுவார்கள், உணவு ஊட்டுவார்கள், தூங்க வைப்பார்கள். நான் என்னவோ, பிறப்பு முதல் இறப்புவரை கடாவெட்டி சாமிக்கு படைக்கும் வர்க்கத்தில் வந்தவள். அறுவாளை சுவற்றில்  தொங்கவிட்டு அதற்கு மதுரைவீரன், ஐய்யனார் என்று பெயர் வைத்து வழிபடும் குடும்பத்தில் பிறந்தவள். அம்மா, அக்கம் பக்கம் உள்ளவர்களை பார்த்து முருகன், பிள்ளையார், அம்மன் என்று சில சாமி படங்களை வைத்து வழிப்பட்டார்கள். சாமிக்கென்று மாடம் இருந்ததே தவிர சாமிக்கென்று தனி அறை எல்லாம் இருந்தது இல்லை. ரங்க லக்‌ஷ்மியின் வீட்டில் சாமிக்கென்று ஒரு தனி அறை. சாமி தூங்க ஊஞ்சல். சாமிக்கு ஆடை அலங்காரங்கள், உணவு படைக்க அழகிய தாம்பூள தட்டுக்கள் என்று,  பார்க்க , பார்க்க ஆசையாக இருக்கும். பலமுறை ரங்க லக்‌ஷ்மியுடன் கோவிலுக்கு சென்றதால் தானாகவே எனக்குள் ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாயிற்று.


பிரசாதத்திற்காக கோவிலுக்கு போன காலம் போய் இப்பொழுது ஆண்டவனை தரிசிக்கவே கோவிலுக்கு போகிறேன். தேவைகளும், வேண்டுதல்களும், கோரிக்கைகளும் பெருக பெருக கோவிலுக்குச் செல்லும் நாட்களும் அதிகரித்து விட்டது. வீட்டில் யார் வருகிறார்களோ இல்லையோ எல்லோர் சார்பிலும் நான் போய்வருகிறேன்.  வயது ஆகி கொண்டிருக்கிறது என்பதன் அடையாளமாகக் கூட இது இருக்கலாம். என்னால் தீர்வு காண முடியாத பல பிரச்சனைகளை கடவுளிடம் சமர்ப்பித்து விட்டு ‘ராமா’ என்று அமர்ந்துவிடுகிறேன். எவ்வளவு குறைகூறினாலும், கோரிக்கை வைத்தாலும், கடவுள் மட்டும் ‘ஏன் புலம்புகிறாய், பிதற்றுகிறாய், அழுகிறாய் என்று கேட்கப்போவதில்லை.அழுது புலம்பினாலும் சரி, மகிழ்ச்சிக்கடலில் குளித்தாலும் சரி , திட்டி தீர்த்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு புன்னகை மட்டுமே பதில். அதனால் தான் மனிதர்களை காட்டிலும் கடவுளை நாம் நம்புகிறோம். கேள்வி ஏதும் கேட்காமல் கடவுளை நம்பத்தெறிந்த எனக்கு கண்ணப்பனார் போன்ற பக்தி நிறையவே உண்டு. ஆன்மீக கதைகளோ, பாட்டுக்களோ, சுலோகங்களோ எனக்குத் தெரியாது. நூத்தியெட்டு போற்றிகளை தவிர நீளமானவற்றை படிக்கும் பொறுமையும் இல்லை. எந்த பூசையை எந்த முறைப்படி செய்ய வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது. கோவிலுக்கு போனால் தேங்காய் உடைத்து அர்ச்சனை கூட செய்ய மாட்டேன். ஏன் தெரியுமா? தேங்காய் அழுகியிருந்தால் நல்லது அல்ல என்று சிறுவயது முதல் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை நான் நம்புகிறேனா இல்லையா என்பது இல்லை . எதற்கு தேவையில்லா சந்தேகம் என்று விளக்கு மட்டுமே ஏற்றி வைத்து கும்பிட்டுவிட்டு வந்துவிடுவேன். கஷ்டம் மிகுந்தால் கந்த சஷ்டியே துணை எனக்கு. வீட்டில் சாமிக்கு வைக்கும் பிரசாதத்தை கூட ருசி பார்த்து விட்டுத்தான் வைப்பேன். சாமி மட்டும் இனிப்பு, புளிப்பு, உப்பு கம்மியாக எப்படி உண்ண முடியும்? இப்படிப்பட்ட உறவு தான் கடவுளுக்கும் எனக்கும் உள்ள உறவு.


சரி, சொல்லவந்த விஷயத்திற்கு இனி வருவோம்.ஞாயிறு அன்று சாயங்காலம் ஏழு மணிக்கு அய்யாவின் பேச்சை கேட்க முருகன் கோவிலுக்குச் சென்றோம். முதலில் முருகனுக்கு ‘ஓ’ போட்டுவிட்டு பின் சொற்பொழிவை கேட்க போகலாம் என்று கோவிலை சுற்றினோம். ரவிக்கு அவசரம்...எங்கே அய்யாவின் பேச்சை ஆரம்பம் முதல் கேட்க முடியாதோ என்று நினைத்து அவர் மட்டும் முன்னே சென்றார். முருகனிடம் மட்டும் கோரிக்கைகளையும் , நன்றியையும் தெரிவித்துவிட்டு போனால் பின் சிவன், துர்க்கை, வினாயகர் எல்லோரும் நம்மை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களோ என்று அவர்களுக்கும் ‘ஓ’ போட்டுவிட்டு பின் அவசர அவசரமாக நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றிவிட்டு, அய்யாவின் பேச்சை கேட்கச் சென்றேன். சொற்பொழிவு ஆரம்பித்து ஒரு பத்து நிமிடங்கள் கழித்துத்தான் நான் போயிருப்பேன்.

ரவி எனக்காக இடம் பிடித்து வைத்திருந்தார். அய்யாவின் சொற்பொழிவு தொடங்கி இருந்தது.போய் அமர்ந்தது தான் எனக்கு தெரியும். அடுத்த ஒன்றறை மணி நேரம் எப்படி போனது என்றே எனக்குத் தெரியவில்லை. பொதுவாக அரைமணி நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில் அமர்வது என்பது எனக்கு கொஞ்சம் கஷ்டம். வீட்டில் கூட என் தந்தை,”ஏன் இப்படி குட்டி போட்ட பூனையைப் போல் அலைந்து கொண்டே இருக்கிறாய்? ஒரு இடத்தில் உட்கார மாட்டாயா?” என்று கேட்பார்கள். நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் நேரம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அய்யாவின் பேச்சு மழையில் நனையத்துவங்கிய எனக்குள் என்ன ஆனது என்று எனக்கு விளங்கவில்லை. திருச்செந்தூர் முருகனைப் பற்றி அவர் ஒவ்வொரு விஷயமும் சொல்ல சொல்ல அம்முருகனே என் கண்முண் தோன்றினான். ‘சொல்ல சொல்ல இனிக்குதையா ‘ என்று அய்யா சொற்பொழிவாற்ற, ‘கேட்க கேட்க இனிக்குதையா’ என்று நான் மெய்மறந்து அமர்ந்து இருந்தேன். ரவியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆன்மீகத்தில் ஈடு பாடு உடையவர் அல்ல. குளித்துவிட்டு இரண்டு நிமிடங்கள் தான் கடவுளின் முன் நிற்பார். ஆனால் அவரும் அய்யாவின் பேச்சில் மயங்கி ரசித்துக்கொண்டிருந்தார். அய்யா , முருகனைப் பற்றி கூறிய கதைகளில் லயித்தாரா அல்லது அய்யாவின் அழகிய தமிழுக்கு மயங்கி அமர்ந்து இருந்தாரா என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். ரவிக்கு இஷ்ட தெய்வம் முருகன் எனவே இரண்டுக்காகவும் தான் அவர் அமர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

சிறு வயதில் திருச்செந்தூர் சென்று இருக்கிறேன். கடலைத் தவிர வேரெதுவும் பெரிதாக நினைவில் இல்லை. ஆனால் அய்யா முருகனைப் பற்றிப் பேச பேச என்னால் என் மனக்கண் முன் திருச்செந்தூர் முருகனை கையில் பூவுடன் காணமுடிந்தது. அய்யாவின் பேச்சு ஆன்மீக சொற்பொழிவா, இல்லை கவியரங்கமா, இல்லை நாடக அரங்கேற்றமா என்று எனக்கு பாகு படுத்த தெரியவில்லை. இயல் , இசை , நாடகம் எல்லாமாக அது இருந்தது. நடித்தும் காட்டினார், பாடியும் காட்டினார், அபிநயம் பிடித்தும் காட்டினார். முருகனை பற்றி கூறுகையில் பல கிளைக்கதைகளையும் கூறினார். அருனகிரி நாதரின் பெயரை மட்டுமே கேட்டு இருந்த எனக்கு அவரின் புராணம் அன்று தான் தெரியவந்தது. எவ்வளவு கிளைக்கதைகள் கூறினாலும் கடைசியில் முருகனை சுற்றியே வலம் வந்தார்.. பாரதி முதல், கிருபானந்தவாரியார் வரை எல்லோரை பற்றியும் ஓரிரு வரிகள் கூறினார். அது , அவர்களின் மீது அவர் வைத்து இருந்த பற்றையும், மரியாதையையும் அவரின் ஞானத்தையும் விளக்கியது. பேச்சில் என்ன ஒரு கோர்வை, நகைச்சுவை உணர்வு, தமிழ் உச்சரிப்பில் தான் என்ன ஓர் அழகு, தெளிவு. நடையில் எளிமை, ஞானத்தில் ஆழம். முருகனைப்பற்றியும் அறிந்து இருந்தார், அம்பாளைப்பற்றியும் அறிந்து இருந்தார், கிருஷ்னரை பற்றியும் படித்திருந்தார். இவ்வளவு தெளிவான தமிழை பேசக்கேட்டு பல வருடங்கள் ஆகியிருந்ததால் மகுடிக்கு மயங்கிய பாம்பென நான் மயங்கி கிடந்தேன். பள்ளியில் தமிழம்மாவின் தெள்ளத்தெளிந்த தமிழும், அவர் பாடம் எடுத்த நயமும் நினைவிற்கு வந்து போயிற்று. கூடவே, தமிழம்மாவை எவ்வளவு கேலி , கிண்டல் செய்தோம் என்பதும் நினைவிற்கு வந்தது. தமிழம்மா பாடம் எடுக்கும் பொழுது உணர்ச்சி வசப்பட்டு செய்யுளை வாசித்துக்கொண்டோ அல்லது விளக்க உரையை விளக்கிக்கொண்டோ வகுப்பறையை விட்டு வெளியே போனது கூட அறியாது ஈடுபாட்டுடன் பாடம் எடுப்பார். அந்த சிறு இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு நாங்கள் உணவு உண்பதும் உண்டு. ஆனால் அய்யா பேசிய பொழுது ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் பேசினார்.அய்யாவின் பேச்சில்  பல நேரங்களில் என் கண்கள் நிரம்பின. அதற்கு காரணம், அவரின் உரையின் தாக்கமா அல்லது அந்த முருகப்பெருமானே என் கண் முன் தோன்றிய மகிழ்ச்சியா என்பதை யான் அறியேன் பராபரமே!!

சொற்பொழிவு முடிந்த பொழுதுதான் எனக்கு புரிந்தது , என் அறிவு கடுகினும் சிறியதென்று. எவ்வளவு புத்தகங்கள் அய்யா படித்திருந்தால் இப்படி பட்ட வற்றாத நதியாக அவரின் ஞானத்தை பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியும். என்னைப்போன்ற சாதாரனமானவர்களுக்கும் புரியும் படியாக மட்டுமல்லாமல் ஈர்க்கும் படியாகவும் ,  எளிமையான நடையில் எவ்வளவு அழகாக உரையாற்றினார். அறிவாளியாக மட்டும் இருப்பது பெருமை இல்லை. தம் அறிவை பிறருடன் பகிர்ந்துகொள்வதில் திறனாளியாக இருப்பதே பெருமை. பழமையும் , புதுமையும் கலந்த கலவையாய் அவரின் உரை இருந்தது. அய்யா அவர்கள் என் ஆன்மீக அறிவுக்கு தீனி போட்டார்கள், கோவில் நிர்வாகம் வயிற்றிற்கு உணவு போட்டு அனுப்பிவைத்தார்கள். மனம் அய்யாவை வாழ்த்தியது, வயிறு கோவில் நிர்வாகத்தை வாழ்த்தியது. தமிழ் நாட்டில் இருந்திருந்தால் கூட இப்படி பட்ட பாக்கியம் கிட்ட வாய்ப்பில்லை.

வீட்டிற்கு புறப்படுகையில் எனக்குள் ஒரு ஏக்கம். நமக்கு கிட்டிய இந்த வாய்ப்பும் வரப்பிரசாதமும் நம்முடைய அடுத்த சந்ததியரை எப்படி சென்றடையும்? கோவிலுக்கு மாதம் ஒரு முறை கூட வர முடியாத ஓட்டப்பந்தய வாழ்க்கையை ஓடும் இவர்களை எப்படி பிடித்து நிறுத்துவது? நம் பிள்ளைகளுக்கு எப்படி பக்தியை ஊட்டுவது? பீட்சாவும், பர்கரும் சாப்பிடும் இவர்களை பிரசாதம் கிடைக்கும் என்று சொல்லிக்கூட கோவிலுக்கு அழைத்து செல்ல முடியவில்லை. நாம் வீட்டிற்கு பத்திரமாக பக்தியோடு எடுத்துவரும் பிரசாதத்தை கூட நுனி நாக்கில் மட்டும் படும் படி நக்கிவிட்டு சென்று விடுகிறார்கள். தமிழே பேசாத இவர்கள் எப்படி இப்படி பட்ட அழகான அற்புதமான சொற்பொழிவுகளை ரசிக்க முடியும்?வாழ்க்கையில் பொறுப்பு, பருப்பு, வந்து விட்டால் அவர்களும் பக்தி மார்கம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை மட்டும் தும்பிக்கையாய் எனக்குள் இருக்கிறது. பக்தி விதையை அவர்களுக்குள் விதைத்து வைத்திருக்கிறேன். அது என்றைக்கு செடியாகி, மரமாகும் என்பதை காலம் தான்  முடிவு செய்யவேண்டும். கிருத்தவர்களும் முகமதியர்களும், தாய்ப்பாலுடனேயே பக்திபாலையும் ஊட்டிவிடுகிறார்கள் போலும். பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் , வாரம் ஒரு முறையாவது அவர்கள் தேவாலயத்திற்கும், மசூதிக்கும் தவறாமல் சென்று விடுகிறார்கள். ஆனால் என் வீட்டுப் பிள்ளைகள் பரீட்ச்சைக்குப் போகும் போது மட்டுமே சாமியை பார்க்கிறார்கள். அய்யா அவர்கள், “கடவுளைப் பற்றி பேசா நாள் எல்லாம் பிறவா நாளே” என்பாராம். பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அவர் தமிழின் பால் ஈர்க்கப்பட்டும், ஆன்மீகத்தின் பால் ஈர்க்கப்பட்டும் தமிழ் தொண்டும், ஆன்மீகத்தொண்டும் சேர்ந்தே இந்த வயதிலும் செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு  தமிழுக்கு தொண்டு செய்யும் அளவுக்கு அறிவு இல்லை. ஆன்மீகத்தை பொறுத்தவரை என் தோழிகள் பலரை கோவிலுக்கு அழைத்துச் சென்று அதை அவர்களுக்குள் ஒரு பழக்கமாகியிருக்கிறேன். 

சொற்பொழிவு கேட்கும் மட்டும் தெளிந்த நீரோடையாக இருந்த என் மனதில் ஒர் சிறு கல் வந்து விழுந்து சில எண்ண அலைகளை புரளச்செய்தது. சிந்தனை பலவுடன் வீடு வந்தடைந்த எங்களை பார்த்து என் பிள்ளைகள் கேட்ட கேள்வி, “What kept you so long ? How come you spent so much time in the temple today?"  என்ன சொல்லி புரியவைப்பது என்று அறியாமல், நான் செந்தமிழில் சுவைத்த  அர்த்தம் பொதிந்த அந்த நிகழ்வை அந்நியமொழியாம் ஆங்கிலத்தில் விளக்கி கூற பொறுமை இன்றி,”We went to attend a spiritual discourse" என்று மட்டும் கூறினேன்.   மற்ற எப்பொழுது இல்லாத ஒற்றுமை அக்கா, தம்பிடம் காண முடிந்தது அவர்கள் கூறிய, “Boring" என்ற வார்த்தையில். அவர்கள் வயது அப்படி , என் வயது இப்படி என்று நினைத்துக்கொண்டு உள்ளே சென்றேன்..... உடம்பு வீட்டுக்குள் வந்துவிட்டது மனம் என்னமோ திருச்செந்தூருக்கு பயணச்சீட்டு இல்லாமல் போய் விட்டது!!!!!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வளர்ப்பின் படியே குழந்தைகள்...