Saturday, October 2, 2010

எந்திரன் வைரஸ்

கொஞ்சம் காலமாகவே உலகெங்கும் எந்திரன் வைரஸ் பரவி வருகிறது. இது ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி ,கண்டங்களை கடந்து கட்டுப்படுத்த முடியாமல் பரவி வருகிறது. வயது பேதம் இன்றி சிறுவர் முதல் முதியோர் வரை இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு உண்டான மருந்து நேற்று முதல் திரையரங்குகளில் கிடைக்கின்றது. இதனால் மக்கள் முண்டியடித்துக்கொண்டு திரையரங்குகளின் வாசலிலேயே இரவு முதல் காத்து இருந்து இன்று தரிசனம் செய்தனர்.திருப்பதி மலையானை கூட இப்படி காத்திருந்து தரிசனம் செய்து இருக்க மாட்டார்கள். முதல் மருந்து டோஸே கிடைக்காமல் பலர் காத்து இருக்க , இரண்டாம் டோஸுக்கு வேறு தள்ளு முள்ளு நடைபெறுகிறது. இந்த வைரஸ் ஒரு ஒட்டுவாரொட்டியாக இருக்கிறது. உலக சுகாதார மையத்தினால் கூட இதனை கட்டுக்குள் வைக்க இயலவில்லை. பன்றிக்காய்ச்சலை விட மிக மிக வேகமாக பரவிவருகிறது. இது ஒரு புறம் இருக்க,



ஊரே திருவிழா கோலம் பூண்டுள்ளது . பால் அபிஷேகம் என்ன, அலகு குத்தி காவடியாட்டம் என்ன?? ஏதோ தீபாவளியே வந்துவிட்டது போன்று பட்டாசுகள் வெடிக்க, தாரை தப்பட்டை முழங்க, வருகிறார் , வருகிறார் என்று காத்திருந்த எந்திரன் மஹாராஜா வந்துவிட்டார் கம்பீரமாக வீர நடை போட்டு உலகெங்கும். இந்த வைரஸின் தாக்குதல் எங்கள் குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை. இதில் மிகவும் பாதிக்கப்பட்டது எங்கள் வீட்டு தலைவர்தான். நேற்று அலுவலகத்தில் இருந்து வருவதற்கே இரவு 11.30 ஆகிவிட்டது. என்னடா இது கான்பரன்ஸ் கால் 10 மணிக்கே முடிந்து விடுமே இன்னும் ஏன் வரவில்லை என்று வைத்த விழி மூடாமல் நான் காத்திருந்தேன். வீட்டுக்கு வந்தவரிடம் ஏன் இத்தனை நேரம் என்று கேட்டேன். அதற்கு முதலில், “கான்பரன்ஸ் கால் லேட் ஆகிவிட்டது” என்று கூறிவிட்டு அடுத்து முகம் முழுதும் ஆனந்தம் பொங்க “எந்திரன் செம ஹிட்.” என்றார். அஹா இப்பொழுது விளங்கிவிட்டது ஏன் தலைவர் வர இவ்வளவு நேரம் என்று. அலுவலகத்திலேயே முதல் தகவல் அறிகையை படிப்பது போன்று, முதல் விமர்சனத்தை படித்து விட்டு அதற்கு பின்னர் காத்திருந்து மற்ற விமர்சனங்களையும் படித்துவிட்டு வந்திருக்கிறார். எம்.பி.ஏ படித்தபொழுது ராத்தூக்கம் முழுத்து படித்தது போல் இருந்தது.


 ஒரு படம் பார்க்கப்போகும் முன் அது நன்றாக இருக்கிறதா இல்லையா ? குழந்தைகளுடன் பார்க்கலாமா? என்பதை மட்டுமே நான் தெரிந்து கொண்டு போவேன். விரிவான விமர்சனங்களை படித்துவிட்டு போக பிடிக்காது. அது படத்தின் சுவாரஸ்சியத்தை குறைத்துவிடும் போல் எனக்கு தோன்றும். மேலும் மற்றவரின் பார்வையில் நாமும் படத்தை பார்க்க நேரிடும். அடுத்தவர் ரசித்த, சுவைத்தவற்றை நாமும் ரசிக்கத்தோன்றும். ஒரு படம் பார்க்கப்போகும் போது எந்தவித "preconcieved notions" உடனும் எனக்கு போக பிடிக்காது. எனது பார்வையில் படத்தை பார்த்து மதிப்பிடவேண்டும் என நினைப்பேன். நான் சிறுமியாக இருந்த பொழுது எங்கள் வீட்டில் படம் பார்த்தப்பின் அதனைப் பற்றி அலசுதல் கூடாது. அப்படியே மறந்துவிட வேண்டும். அதனை பற்றி வீட்டுக்கு வந்தபின்னும் பேசினால் அப்பாவிடவிருந்து அடி விழும். காரணம் படிப்பில் கவனம் சிதறி விடுமாம். ஆனால் இப்பொழுது நாங்கள் எங்கள் வீட்டில் எங்கள் குழந்தைகளுடன் விலாவாரியாக சினிமாவை பற்றி அலசி ஆராய்கிறோம். காலம் மாறிவிட்டது. சினிமாவின் ஆதிக்கம் இங்கே கொடிகட்டி பறக்கிறது. நம்மை விட சினிமாவின் technical detailsஐ நம் குழந்தைகள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். அவர்கள் சொல்லித்தான் எனக்கு பல படங்களின் பெயர் கூட தெரியவரும்.


பொதுவாக தமிழ் படங்கள் பார்க்காத என் மகன் எந்திரன் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கின்றான். காரணம் அவனின் நண்பர்கள் யாவரும் பார்க்கப்போகிறார்களாம். ஆங்கிலத்தில் டப்பிங் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று வேறு ஒரு யோசனை அவனுக்கு. ஆனால் திரும்பும் இடம் எங்கும் இப்படத்தை பற்றியே பேசுவதால் வேறு வழியில்லாமல் பார்க்க காத்து இருக்கிறான். எங்கள் நண்பர்கள் வேறு போன் செய்து டிக்கெட் புக் செய்து விட்டீர்களா? என்றைக்கு போகிறீர்கள்? என்று சமூக சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். பட்டி தொட்டி எங்கும் இதே பேச்சுத்தான். உறவினர்களுக்கு I.S.D செய்து நலம் விசாரிக்கலாம் என்றால் முதல் கேள்வி, நன்றாக இருக்கிறீர்களா? இரண்டாம் கேள்வி,”எந்திரன் பார்த்துவிட்டீர்களா? என்பதாகும். இப்படி நாலா பக்கத்திலிருந்தும் கேள்விக்கனைகள் பாய்வதால் நாங்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை காட்சிக்கு போகலாம் என்று புக் செய்துள்ளோம். எனக்கு எந்த ஒரு புது படமும் முதல் சில நாட்களுக்கு பார்க்க பிடிக்காது. ரசிகர்கள் அடிக்கும் காது கிழிக்கும் விசில் சத்தம் , அவர்கள் போடும் ஆட்ட பாட்டத்திற்கு நடுவே ஒரு வசனமும் புரியாது. அப்படிப்பட்ட ஆரவார சூழ்நிலையில் என்னால் நிம்மதியாக படம் பார்க்க இயலாது. தலைவலி தான் மிஞ்சும். ஆனால் எந்திரனை நான் மூன்றாம் நாளே பார்க்க ஒத்துக்கொண்டதற்கு பல காரணங்கள். ஒன்று படம் பற்றிய இமாலய எதிர்பார்ப்பு, இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதா என்ற பரிதவிப்பு, படம் பார்த்த பலர் படத்தை அஹா ஒஹோ என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள்,அப்படி என்ன தான் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு, அடுத்து சூப்பர் ஸ்டார், சங்கர்,ஐஸவர்யாவின் கூட்டனி. உலக அரங்கில் தமிழ் படத்திற்கான பெரும் அங்கீகாரம். அந்த வரலாற்றில் நாமும் ஒரு அங்கமாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணம். இது என்ன பெரிய வறுமை ஒழிப்புத் திட்டமா என்று கேட்காதீர்கள். இப்படத்தை பொறுத்தவரையில் ஏதோ ஆர்வக்கோளாறினால் எத்தொகையாயினும் அத்தொகை கொடுத்து இப்படம் பார்ப்பதே எல்லோரின் குறிக்கோளாகிப்போனது.. படித்தவர், படிக்காதவர், அறிந்தவர், அறியாதவர், என்று எல்லா தரப்பும் இப்படத்திற்காக சுயநினைவில் நம் பர்ஸ்களுக்கு சூடு வைத்துக்கொள்ள முன் வந்துள்ளோம்.. என்ன செய்வது peer pressure வேறு. எந்திரன் பற்றிய மந்திரம் ஓத தெரியாவிட்டால் மனித குலத்தில் இடம் இல்லை என்று கூறிவிடுவார்களே என்று பயந்து, நானும் சீக்கிரம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து ஒத்துக்கொண்டேன். இதற்கு மறுத்தால் என் வீட்டிலேயே பூகம்பம் வெடிக்கும்..... ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கவில்லை என்ற கதையாக நானும் கும்பலோடு கோவிந்தா போட காத்திருக்கிறேன்.

4 comments:

Thekkikattan|தெகா said...

இங்கு ஜியார்ஜியாவில் 70 முறைகள் நான்கு நாட்களில் திரையிடுகிறார்கள். நான் நாட்களில் நாங்கள் போவதாக திட்டம் கிடையாது... இன்னும் சிவாஜியே பார்க்க வேண்டிய பாக்கி இருக்கிறது :)

//என்ன செய்வது peer pressure வேறு.// இது யாருக்கு வரணுங்கிறதிலதான் இருக்கு... ’களவாணி’ போன்ற படங்களை ரெண்டு தடவ பாருங்க இந்தக் கூட்டத்தை சுருட்டி பொட்டிக்குள்ளர போக விடுங்க!

Geetha Ravichandran said...

Thekkikattan--நன்றி. பசங்களுக்காக போகவேண்டிய கட்டாயம் வேறு. ஒரு நிறுவனம் செழித்து விளங்க நாம் இப்படி நமக்கு தெரியாமலேயே முட்டி மோதி ஆதரிக்கின்றோமே என்று நினைக்கையில் கஷ்டமாக இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் சிறிது வயிற்றெரிச்சலாக இருக்கிறது.

parvathapriya said...

a123நல்ல பகிர்வு கீதா ...


ஆஹா !பார்த்து விட்டீர்களா ! நாங்கள் இனிமேல் தான் பார்க்க வேண்டும்
இங்கே தமிழகமே ஏன் உலகம் முழுவதும் உள்ள திரை அரங்குகள் எல்லாமே
விழாகோலம் பூண்டது போல ஒரு பிரம்மையை (ஒரு வேளை அதுதான் உண்மையோ ) ஊடகம் ஏற்படுத்தி
தினமும் பொழுது போய் கொண்டு இருக்கிறது
இதில் பால்காவடி என்ன ;பாலபிஷேகம் என்ன ;
அழகு குத்தி, படபெட்டி நகர்வலம் என்ன
மொட்டி அடித்து நேர்த்தி கடன் செய்யும் பாங்கு என்ன( இன்னும் நிறைய என்ன என்ன எழுதலாம் !
அப்புறம் அதுவே ஒரு பதிவு போல ஆகி விடும் !)
Rs15 டிக்கெட் Rs150 ;Rs20 டிக்கெட் Rs200
Rs30 டிக்கெட் Rs300 ;ஆக ஒரு அளவான குடும்பம் சினிமா பார்க்க ரூபாய் 1200 போதுமானது !!
தெரிந்தே அனைவரும் செய்கிறோம் என்பது தான் வேதனைகுரிய விஷயம் !
டிக்கெட் நோர்மல் விலைக்கு வரும் வரைக்குமாவது
படம் பார்ப்பதை தள்ளி போட முடிவு எடுத்துள்ளேன்

Geetha Ravichandran said...

Priya--thanks. We watched the movie yesterday. Will post a review by tomoro.