Monday, July 24, 2017

ஏன்??ஏன்??

ஏன்??ஏன்??
இன்றைய சூழலில் ஆண் பெண் பேதமின்றி காயத்திரியையும், ஓவியாவையும், ஜூலியையும், இன்னும் மற்ற பிக்பாஸ் குடும்ப உறுப்பினர்களையும் அறியாதாவர்கள், தெரியாதவர்கள் மிகக்குறைவே! ஏன் இந்த நிகழ்ச்சியின் மேல் இப்படி ஒரு ஈர்ப்பு என்று நான் யோசித்தேன். நமக்கு மிகவும் நெருங்கியவர்களைப்போல் அவர்களைப்பற்றி தினமும் பேசுகிறோம், அவர்களைப் பற்றி ஆராய்கிறோம். எதனால் இது? பேசுபவர்கள் பலர் அதில் பங்கு பெறுபவர்களின் தீவிர ரசிகர்கள் எல்லாம் இல்லை. ஆனாலும் நாள் தவறாது பார்க்கிறோம். நம் வாழ்வில் இவர்களைப்போன்ற பல கதாபாத்திரங்களை நாம் சந்திக்கிறோம், சில நேரங்களில் அவர்களுடனேயே வாழ்கிறோம், அல்லது பழகுகிறோம். பார்த்தோம் , சிரித்தோம் என்று கடந்து போகும் கதாபாத்திரங்கள் அல்ல அவர்கள். நம் வாழ்வில் பங்கு பெறுபவர்களாக இருப்பார்கள். இந்நிகழ்ச்சி மீண்டும் நமக்கு அந்த நிஜ கதாபாத்திரங்களை நினைவு படுத்துவதாக அமைகிறதா?. பல தரப்பட்ட மனிதர்களை எப்படி கையாள்வது என்பதை நாம் இதன் மூலம் கற்றுக்கொள்ள விழைகிறோமா? நிஜ வாழ்க்கையில் நமக்கு காயாளத்தெரியாத சில விசித்திர கதாபாத்திரங்களை இந்நிகழ்ச்சியில் சிலர் லாவகமாக கையாள்வதை பார்த்து ஒரு வித ஆனந்தம் அடைகிறோமா? நமது ஆழ் மனதில் புதைந்து இருக்கும் புறம் பேசும் தன்மையை அது வெளிக்கொணர்கிறதா? நம் முதுகில் இருக்கும் அழுக்கை உணராது அடுத்தவர் முதுகில் இருக்கும் அழுக்கை உற்று நோக்கும் நம்முடைய அடிப்படை குணத்தினை இது வெளி கொணர்கிறதா? அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதில் நமக்கு இருக்கும் அலாதி பிரியத்தை இது எடுத்து உரைக்கிறதா? இதை பார்க்கும் பொழுது கோபமும், சந்தோஷமும் கலந்து உணர்வது அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றியா அல்லது நம் மனநிலையை பிரதிபளிக்கிறதா? அடி மனதில் கட்டுண்டு கிடக்கும் அழுக்குகளையும், வக்கிரத்தையும், பழிவாங்கும் ஊணர்வையும், சுயநலத்தையும், பாராமுகத்தையும், பச்சோந்திதனத்தையும், சந்தர்பவாததனத்தையும், பொய்மையும், ஆண்டான் அடிமைதனத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், அடிமை உணர்வையும், குழந்தைமனத்தையும், ஆசைஅபிலாஷைகளையும், பயத்தையும், தற்பெருமையையும், கர்வத்தையும், ஆணவத்தையும், அகங்காரத்தையும் , பாதுகாப்பற்ற நினைப்பையும், கட்டவிழ்த்து வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றதா?இதனை பார்ப்பதன் மூலம் நேரத்தை விரயம் செய்கிறோமா, அல்லது பாடம் கற்கிறோமா?உள்ளிருப்போரின் குணாதிசயங்கள் மாறுகிறதோ இல்லையோ வெளியில் வாழ்வோர் பலரின் குணாதிசயங்களை இது மாற்றி விடுமோ? சந்தர்ப்பத்தை ஒருவருக்கு எப்படி சாதகமாக ஆக்கிக்கொள்வது என்பதை இதனை பார்த்து அறிகிறோமா? எப்படி பட்ட கண்காணிப்பில் இருந்தாலும் சிலர் அவர்களின் அடிப்படை குணாதிசயங்களை எவருக்காகவும் எதற்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ள முற்படுகிறோமா? ஒன்று மட்டும் நிச்சயம், பெரும்பாலோருக்கு கடினமாக பேசுபவரையோ, கோபப்படுவோரையோ, சண்டை போடுவோரையோ பிடிக்கவில்லை . ஆனாலும் நிஜ வாழ்வில் பெரும்பாலானோர் அதையே செய்கிறோம், உறவுகளிடமிருந்து பிரிந்தும், சிதறியும் வாழ்கிறோம்....
மொத்ததில் பிக்பாஸ் கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பலரும் அந்த வீட்டில் மனதளவில் சிறை வாசம் செய்கிறார்கள்...... நிகழ்ச்சியின் முடிவில் அந்த வீட்டில் வாழ்ந்தவர்களுக்கு பணம் , புகழ் நிச்சயம். பார்த்தவர்களுக்கு கரண்டு பில், இண்டர்னெட் பில், , போன் பில் , என்று பல பில்களும், வீட்டில் புது பிரச்சனைகளுமே மிச்சமாகக்கூடும்......

No comments: