Wednesday, July 26, 2017

எனக்குள் ஓவியா......

உலக நடப்பை தெரிந்து கொள்ள முக நூலில் சிறிது நேரம் உட்புகுந்தேன். மூன்று நான்கு நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இன்று வானம் கொஞ்சம் இரக்கப்பட்டு சூரியனை மறைத்துக்கொண்டது. கொஞ்சம் போல் இருட்டியது போல் காணப்பட்டது. எந்நேரம் வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்று தோன்றியது. அதனால் அவ்வப்போது சன்னல் வழியே வெளியில் பார்த்துக் கொண்டே கண்களை முகநூலில் ஓடவிட்டுக் கொண்டு இருந்தேன். ஆஹா மழைத் தூரல் போல் தெரிகிறதே என்று நினைத்து முடிக்கக்கூட இல்லை சட சட என்று மழை பெய்ய ஆரம்பித்தது. ஓடி போய் சன்னல்களை சாத்த எழுந்தேன்.
சன்னலை இழுத்து சாத்தும் பொழுது மழைத்தண்ணீர் கைகளில் பட்டது. மழை துளி பட்ட அந்த மறு நொடி சட்டென ஓவியாவின் முகம் கண் முன் வந்து போனது. அவள் மழையில் ஒரு புள்ளி மானென துள்ளி ஆடியது ஞாபகத்திற்கு வந்தது. வெளியில் நீட்டிய கைகளை உள் இழுக்க மனம் இன்று அப்படியே மழையை ரசித்தேன். விரல்களை நனைத்த மழைத்துளிகள் என் கைவளையையும் நனைத்து பின் கீழே சொட்டு சொட்டாக சொட்டியது. விரல்களை குவித்து மழை நீரை சேகரிக்க முயன்று தோற்றேன். ஆனாலும் கைகளில் இருந்த அந்த ஈரத்தை கொண்டு முகம் வருடினேன். ஆஹா என்ன ஒரு சுகம். முகம் மட்டும் நனைவதே இவ்வளவு சுகம் என்றால், முழுவதுமாக நனைந்தால் எவ்வளவு சுகம். இதனால் தான் அந்த புள்ளி மான் முழுவதுமாக மழையில் ஆடியதோ? எனக்கும் ஆசை முழுவதுமாக மழையில் நனைய ஆனால் எட்டாவது மாடியில் இருந்து கைகளை மட்டுமே நனைக்க முடியும் .தலையும் நனையட்டும் என்று நான் நீட்டினால் தரையில் போய் சிதறு தேங்காயாய் விழுவேன் என்று என் சிற்றறிவு ஞாபகப்படுத்தியது. நீட்டிய கைகளை சில மணித்துளிகள் நனையவிட்டபடி வெளியில் பார்த்தேன். கீழே அழகிய சில தென்னை மரங்கள் காற்றில் தலை அசைத்து என்னுடன் சேர்ந்து மழையை ரசித்துக்கொண்டிருந்தது.
மண் வாசம் தேடி போலீஸ் நாய் போல் என் மூக்கு மோப்பம் பிடித்தது. ஆனால் டைல்ஸ் போட்டு வழுவழுப்பாக பள பள என மின்னிய தரையில் எங்கிருந்து மண் வாசனை மேல் எழும்பி வரும்?. என் மண்ணின் வாசனை கற்பனையில் என் நாசி தழுவி சென்றது. மேல் இருந்து பார்க்கையில் நீச்சல் குளத்தில் விழும் மழை நீரை பிரித்து பார்க்க முடியவில்லை. தெளிந்த மழைநீரும் நீலமாய் நிறம் மாறிப்போனது. மழை பெய்கையில் கடற்கரையில் இருக்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நெடுநாள் ஆசை ஒன்று உண்டு. நடுகடலுக்குள் போக வேண்டும் என்ற ஆசையும் உண்டு. மழையை ரசித்தபடி நின்ற எனக்கு அப்புறம் தான் மற்ற அறை சன்னல்களை மூட மறந்தது நினைவிற்கு வந்தது. மனம் இல்லாமல் கைகளை உள்ளிழுத்து சன்னலை சாற்றி விட்டு அடுத்த அறைக்குச் சென்றேன். கடைசியாக ஹால் சன்னலை சாத்த போனபோது தான் பார்த்தேன் சன்னல் அருகே இருந்த சோபா மழைநீரில் நனைந்து இருப்பதை..... அவசர அவசரமாக அந்த சன்னல்களையும் சாத்திவிட்டு சோபா காய மின்விசிறியை சுழலவிட்டேன். என் கைகளில் ஈரம் காயவில்லை. துடைக்க மனம் வரவில்லை. மீண்டும் வந்து முகநூலைப் பார்க்கலாம் என்று வந்து அமர்ந்தேன் . திரும்பி சன்னலை பார்க்கையில் மழை நின்று விட்டிருந்தது. தனக்குள் சேகரித்து வைத்திருந்த நீரையெல்லாம் ஒரு சில நிமிடத்தில் கொட்டி தீர்த்த சோர்வில் அந்த மேகம் மீண்டும் நீர் சேகரிக்க வேறு இடம் நோக்கி நகர்ந்து விட்டது......
வாழ்க்கை பந்தயத்தில் வேகமாக ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு நம்முடைய சின்ன சின்ன ஆசைகளை , ரசிப்புத்தன்மையை வெளிக்கொண்டு வர யாராவது ஒருவர் கோடிட்டு செய்து காட்டி ஞாபகப்படுத்த வேண்டி இருக்கிறது. அந்த உந்து சக்தியாக நமக்கு ஓவியாக்கள் தேவைபடுகிறார்கள். சின்ன சின்ன விஷயங்களை ரசிக்க மறந்ததால் தான் என்னவோ வாழ்க்கையில் நமக்கு சலிப்பும் ஏமாற்றமும் சீக்கிரமே வந்து விடுகிறது. வாழ்க்கையில் சிறு சிறு விஷயங்களை சில நிமிடங்கள் ரசிக்க கற்றுக்கொண்டுவிட்டால் நாம் ஒவ்வொருவரும் ஓவியாவே....

1 comment:

karthikmusings said...

ரசனைக்குரிய பதிவு தோழி