Wednesday, June 27, 2012

இடியாப்பச் சிக்கல்

என்னடா இவள் ரொம்ப நாள் இடவெளிக்குப் பின் ஒரு சிக்கலுடன் வருகிறாளே என்று பார்க்கிறீர்களா? இது ஒன்றும் அப்படி ஒரு பெரிய குடும்ப சிக்கலோ அல்லது அரசியல் சிக்கலோ இல்லை. நேற்று இரவு நான் இடியாப்பம் செய்த கதை தான் இது.  வழக்கம் போல் இரவு உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிய்த்துக்கொண்டு இருந்தேன். இட்லியோ அல்லது தோசையோ ஊற்றலாம் என்றால் வீட்டில் மாவும் இல்லை.  மாவு இல்லாதது எனக்கு கை உடைந்ததை போன்று இருந்தது. கடையில் சென்று ரெடிமேட் மாவு வாங்கலாம் என்றால் அதற்கும் அலுப்பு.  உடை மாற்றி செல்ல வேண்டுமே.. அதற்கு வீட்டில் இருக்கும் எதையாவது வைத்து சமாளிக்கலாம் என்று முடிவு செய்தேன்.  இரவில் சாதம் என்றால் என் வீட்டில் இருப்பவர்கள் காத தூரம் ஓடி விடுவார்கள்.  உப்புமா என்றால் பிடிக்காது, சப்பாத்தி மதிய உணவிற்கு கொடுத்தாகிவிட்டது.  ராகி தோசை ஊற்றலாம் என்றால் அதுவும் இறங்காது. சரி என்று வீட்டில் பதுங்கு குழி போல் இருக்கும் ஸ்டோர் ரூமிர்குள் நோட்டம் விட்டேன். 



எனக்கே தெரியாமல் பல பல மளிகை சாமான்கள் அதற்குள் ஒளிந்து கொண்டு இருந்தது. இருப்பது தெரியாமலேயே பல சாமான்களை மேலும் மேலும் வாங்கி வைத்துள்ளேன்.  தோண்ட தோண்ட புதையல் போல பல சாமான்கள் வெளியே வந்த மயமாக இருந்தது.  சில நேரங்களில் தேடி பார்க்க அலுப்படைந்து கடைக்குச் சென்றுவாங்கி வந்த சாமான்கள், ஒரு சாமான் வாங்க போய் எப்படியும் கடைக்கு வந்தாகி விட்டது , ஒரே அடியாக இன்னும் கொஞ்சம் சாமான்களையும் வாங்கி விடலாம் என்று வாங்கிய சாமான்கள், புதிதாக செய்து பார்க்கலாம் என்று சோதனைக்காக வாங்கி வந்த சாமான்கள், (என் சமையல் அறையே எனக்கு ஒரு சோதனைக்கூடம் தான். என் எலிகள் யார் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை. ) என்று ஒரு மினி மளிகை கடையே உள்ளே இருந்தது. தோண்ட தோண்ட பல கண்ணில படாத சாமான்கள் கைக்கு கிடைத்தது.  அதில், எக்ஸ்பயரி தேதி முடிந்த சாமான்கள், பூச்சி பிடித்த சாமான்களும் அடக்கம்.  வந்தது வந்தாகிவிட்டது அப்படியே சுத்தமும் செய்து விடுவோம் என்று நினைத்து கைக்கு எட்டிய தேவை படாத சாமான்களையும், வீனாகிவிட்ட சாமான்களையும் தூக்கி எறிந்தேன். முழு அறையும் சுத்தம் செய்வது என்றால் எனக்கு ஒரு நாள் தேவைப்படும். அதற்கு இப்பொழுது நேரம் இல்லை.  மணி எட்டு அடித்தால் என் பிள்ளைகளுக்கு வயிற்றில் மணி அடித்து விடும். அதற்குள் நான் ஏதாவது செய்தாக வேண்டும்.   எப்படியோ தேடிப்பார்த்ததில் டபுள் ஹார்ஸ் (இரட்டை குதிரை) ஒரு இடியாப்ப மாவு பாக்கெட் கைக்கு கிட்டியது.  சரி இடியாப்பம், கடலக்கறி செய்து விடலாம் என்று முடிவு செய்து அதை வெளியில் எடுத்து வந்தேன்.



இது வரையில் அம்மா வீட்டில் அரைத்து கொடுத்த மாவில் தான் இடியாப்பம் செய்து இருக்கிறேன்.  முதன் முறையாக ரெடிமேட் மாவு என்பதால் அதில் எழுதியிருந்த செய்முறை படி செய்ய ஆரம்பித்தேன்.  கெமிஸ்ட்ரி லேப்  போன்று இருந்தது.  நன்றாக தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு கலந்து மாவில் ஊற்றி கிண்டினேன்.  இது வரையில் நன்றாகத்தான் போனது.. இதற்கு பின் தான் சனி பிடித்தது . என்னிடம் இருந்த இடியாப்பம் பிழியும் கட்டை உடைந்து விட்டதால் என் அம்மாவின் இரும்பு கட்டையை வாங்கி வந்திருந்தேன்.  அதில் கிண்டிய மாவை உள்ளே வைத்து பிழியத்துவங்கினேன்.  கீழ் பக்கமாக இடியாப்பமாக விழவேண்டிய மாவு கட்டையின் மேல் பக்கமாக பிதுங்கி வழிந்தது.  கட்டையை எவ்வளவு அழுத்தி பிழிந்தாலும் மாவு மேல் பக்கமாகவே வெளியே வந்தது.  அடுப்பில் வேறு இதை வேக வைக்க தண்ணீர் கொதித்துக்கொண்டு இருந்தது.  எனக்கா கோவம் கோவமாக வந்தது.  எப்படியோ முக்கி  முனகி  இரு கட்டைகளை பிழிந்து வேகவைத்தேன். 



சரி  , ஒரு வேளை நாம் மாவை ரொம்ப கெட்டியாக கிண்டி விட்டோமோ என்று சந்தேகப்பட்டு இன்னும் கொஞ்சம் வெந்நீர் ஊற்றி கிண்டினேன்.  பின் அந்த மாவை கட்டைக்குள் வைத்து பிழியத்  துவங்கினேன்.  முன்னைவிட இப்பொழுது மோசமானது என் நிலைமை. மாவு கட்டையை விட்டு வெளியே வர முற்றிலுமாக மறுத்துவிட்டது. மோட்டார் பைக் ஸ்டார்ட் செய்வதை போன்று கட்டை மேல் ஏறி நின்று மிதிக்காதது தான் பாக்கி.  எனக்கு வேறு லொடுக்கு பாண்டி கைகள். அழுத்தி பிழிய முடியாது.  ஆஹா சரியாக மாட்டிக் கொண்டுவிட்டோமே என்று நொந்து நூடில்ஸ் ஆக நின்று கொண்டிருந்தேன். நான் படும் வேதனையை என் மகள் பார்த்துவிட்டு “அம்மா நான் கொஞ்சம் ட்ரை பண்றேன்” என்று ஆபத்பாண்டவன் போல் வந்தாள். வந்து அமுக்கி பார்த்தவள் வந்த வேகத்திலேயே ஓடிவிட்டாள். “அம்மா why do you want to trouble yourself like this? why dont you just make chapathi or give us some sandwich?" என்று இன்றைய தலைமுறைக்கே உரிய வேகத்துடன் கூறினாள்.  மீண்டும் என் பல பரீட்சையை நான் துவங்கினேன்.  என் மகன் சமையல் அறை பக்கமே வரவில்லை. எதற்கு அங்கு போகவேண்டும், போனால் அம்மா “ரிஷி இதை கொஞ்சம் ட்ரை  பண்ணூ என்பாள்,  வம்பை எதற்கு விலைகொடுத்து வாங்க வேண்டும் , எப்படியும் நமக்கு பிடித்த சாப்பாடு இல்லை என்று அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.



 ஒரு கட்டத்தில், பேசாமல் இடியாப்பமாக பிழிவதற்கு பதில் கொழுக்கட்டையாக பிடித்து வைத்து விடலாமா என்று தோன்றியது. எப்படியும் மென்று முழுங்கும் பொழுது மாவாகத்தானே உள்ளே செல்லப்போகிறது.  ஆனால் என் வீராப்பு என்னை விடவில்லை.  நானா அல்லது மாவா இந்த போட்டியில் ஜெயிப்பது என்று நிணைத்து அழுத்தி பிழிந்தேன்.  அழுத்திய அழுத்தில் என் வயிற்றுக்குள் இருந்த சிறு குடல், பெருகுடல் எல்லாம் இடம் மாறி ஒரு இரண்டு இன்ச் கீழே இறங்கிவிட்டது போன்று எனக்கு தோன்றியது. எப்படியோ படாத பாடு பட்டு ஒரு வழியாக மாவையும் வீனாக்காமல் இடியாப்பமாக பிழிந்து எடுத்தேன். நூல் போன்று இல்லை என்றாலும் கொஞ்சம் தடியாக இடியாப்பம் இருந்தது. “எடுத்த சபதம் முடித்தேன் ”என்ற  ரஜினி பாட்டு தலைக்குள் ரீங்காரிக்க எனக்கு ஒரே பெறுமிதம். 



அடுப்பு மேடையை பார்த்தால் என்னவோ ஒரு இருபது பேருக்கு சமைத்ததை போன்று ஒரே மாவு. பாத்திரத்தில் எல்லாம் மாவு, என் கைகள், மேடை, பாத்திரம் கழுவும் இடம் என்று ஒரு இடம் பாக்கி இல்லாமல் ஒரே மாவு.  மறு நாள் வேலையாள் வரும்வரை நான் போட்டு வைக்க முடியாது . எல்லாம் காய்ந்து போய் விடும், என்று கையோடு கையாக எல்லா வற்றையும் சுத்தம் செய்து முடித்தேன்.  கடலக் கறியும் செய்து சாப்பாட்டு மேசை மேல் எல்லாவற்றையும் வைத்து மூடிவிட்டு சிறிது நேரம் அப்படியே சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து விட்டேன்.  தோள் பட்டை இரண்டும் ஏதோ ஒரு பத்து பத்து கிலோவை சுமப்பது போல் வலி. விரல்கள் எல்லாம் ஒரே வலி. நீட்டி மடக்க முடியவில்லை. கழுத்து கேட்கவே வேண்டாம். சுளுக்கி கொண்டது போன்று வலி.  இப்படி பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதையாகி விட்டது.  வாழ்க்கையில் இனி இடியாப்பமே செய்ய கூடாது என்று எனக்குள் சபதம் எடுத்தேன்.  இடியாப்பம் சரியாக வராததற்கு மாவு காரணமா அல்லது எனக்கு செய்யதெரியவில்லையா என்று எனக்கு விளங்கவில்லை.  ஆடத்தெரியாத நாட்டியகாரி மேடை கோணல் என்றாளாம்.  எப்படியோ இரவு உணவு ரெடியாகிவிட்டது. 




மணி எட்டு அடித்தது. என் மகளும், மகனும் சாப்பிட அமர்ந்தார்கள். தட்டில் இடியாப்பத்தை வைத்து கடலைக்கறியை ஊற்றினேன். என் மகள், “அம்மா, will this taste good?” என்று கேட்டபடியே சந்தேகத்துடன் வாயில் எடுத்து வைத்தாள். அவள் கேட்ட கேள்வியை கேட்ட என் மகன் முகம் சுளித்த படியே இடியாப்பத்தை வாயில் எடுத்து வைத்தான். ம்ம்ம்ம்ம் என்ற படி என் மகள் சாப்பிட ஆரம்பித்தாள்.  பின் சாப்பிட்டு முடித்தப்பின் “ அம்மா, it tasted really good. I never expected it to be so tasty. had a good dinner mama." என்றாள்.  எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்த என் மகன் “ mama can I have some more of the gravy? என்றான்.  என் கை வலி, கழுத்து வலி, தொள் பட்டை வலி எல்லாம் பறந்து போனது மனது சந்தோஷத்தில் மிதந்தது.  சாப்பிடுபவர்கள் சாப்பாடு நன்றாக உள்ளது என்று சொல்வதை  கேட்கும் பொழுது சமைத்த பயனை அடைந்து விட்ட மகிழ்ச்கி. அதுவும் என் மகள் நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டால் அது எனக்கு வஷிஷ்டர் வாயில் ப்ரம்ம ரிஷி பட்டம் கிடைத்ததை போன்றது.  நீங்கள் உடனே சரி என் மகள் பெரிய சமையலில் கை தேர்ந்தவள் என்று என்னவேண்டாம். அவள் ருசி பார்ப்பதில் கெட்டிக்காரி. ருசித்து உண்ட என் பிள்ளைகளுக்காகவே    கண்டிப்பாக என் இடியாப்பச் சிக்கல் தொடரும். இது தான் தாய்மையோ??




பி.கு  :::    மணி ஒன்பது. அலுவலகத்தில் இருந்து வந்த என் கணவர் கை கால் முகம் கழுவி விட்டு சாப்பிட வந்தார்.  வழக்கம் போல் டிவி முன் அமர்ந்து கொண்டு,” என்ன டின்னர்?” என்றார். இடியாப்பம், கடலக்கறி என்றேன்.  “எனக்குத்தான் ஆப்பம் என்று முடியும் எதுவும் பிடிக்காது இல்லையா, ஆப்பம்,இடியாப்பம், ஊத்தப்பம் எல்லாம்” என்றார். பின் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டு விட்டு அமைதியாக சாப்பிட்டு முடித்தார்.  பிடித்து சாப்பிட்டாரா, அல்லது, டிவியில் லயித்த படியே சாப்பிட்டாரா, அல்லது அவருக்கு பிடித்த கடலை குழம்பு என்பதால் சாப்பிட்டாரா, அல்லது எப்படியும் இது தான் இன்றைக்கு உணவு வேறு வழியில்லை என்ற உண்மை உணர்ந்து சாப்பிடாரா  யான் அறியேன் பராபரமே?? எதற்கு அந்த ஆராய்ச்சி என்று நான் மீதமிருந்த கொஞ்சம் இடியாப்பத்தை கொட்ட மனமில்லாமல் ஒரு கிண்ணத்தில் போட்டு பிரிட்ஜில் வைத்தேன்.  மறு நாள் அதில் கொஞ்சம் போல் தேங்காய் துருவி போட்டு, சர்க்கரை ஏலக்காய் போட்டு நான் காலை உணவிற்கு சாப்பிட்டுவிடுவேன்.  அதை பிழிய நான் பட்ட கஷ்டம் கொஞ்மா நஞ்சமா???

9 comments:

ஜோதிஜி said...

கதைகளை கற்பனையோடு எழுதுவது கூட எளிது. ஆனால் அன்றாட வாழ்க்கை சம்பவங்களை அப்படியோ கோர்வையாக்குவது சற்று கடினம். அந்த கலை உங்களுக்கு வாய்த்துள்ளது. நிறைய எழுதுங்க.

இப்போது தான் ரவி முகப்பு நூலில் நான் கேட்டதற்கு இதை அனுப்பியிருந்தார்.

Geetha Ravichandran said...

@ Jothiji , Thank you for your support and encouragement. நான் மீண்டும் எழுத ஆரம்பித்ததற்கு நீங்களூம் ஒரு காரணம். இந்தியா வந்ததில் இருந்து கொஞ்சம் சோம்பேறி ஆகிவிட்டேன்.

அமுதா கிருஷ்ணா said...

வெல்கம்...என் அம்மா மாவு பிசைந்தால் ஈசியாக பிழிய வரும்.நான் இன்னும் தனியே ரிஸ்க் எடுத்தது இல்லை. ஆனால் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று தோன்றும்.

Geetha Ravichandran said...

Tks Amudha. My family members dont know the pain behind the idiappam. Even if I try tjo explain they cooly say, "who asked you to do all this? did we ask you to do? it is as simple a reaction as that.

Vetirmagal said...

ஆகா!
இடியாப்பத்தை விட பதிவு அருமைங்க!

ரெண்டு வரிகள் பிடித்தது.
உடை மாத்தி , வெளியே போகும் அலுப்பு, ஸ்டோர் ரூம் களேபரம்.

நம்பளை மாதிரிநும் ஆட்கள் இருக்கிறார்கள் ,என்று, கொஞ்சம் ஆறுதலா இருக்கு.
எப்படியும் இந்த வாரம் என் ஸ்டோரை க்ளீன் பண்ணுவதாக இப்போதே, ப்ளான் போட்டாயிற்று!
Enjoyed your post.
Thanks.
Pattu

www.gardenerat60.wordpress.com
www.dreamspaces.blogspot.in.

இராஜராஜேஸ்வரி said...

இடியாப்பச் சிக்கல்"

எப்படியோ குடும்பம் குறை சொல்லாமல் சாப்பிட்டதே அவார்டு வாங்கிய நிறைவு தந்திருக்கும் !

Ranjani Narayanan said...

//எனக்கே தெரியாமல் பல பல மளிகை சாமான்கள் அதற்குள் ஒளிந்து கொண்டு இருந்தது. இருப்பது தெரியாமலேயே பல சாமான்களை மேலும் மேலும் வாங்கி வைத்துள்ளேன். தோண்ட தோண்ட புதையல் போல பல சாமான்கள் வெளியே வந்த மயமாக இருந்தது.//

எல்லா இல்லத்தரசிகளும் செய்யும் வேலைதான் இது.

இடியாப்ப சிக்கலை மிக அழகாக எழுதி உள்ளீர்கள்.

அன்புடன்,
ரஞ்ஜனி
ranjaninarayanan.wordpress.com

Unknown said...

Ungalin eliya eluthu nadaigal nantraga ullathu...

Durga Karthikeyan said...

Very nice writings.i will suggest you to buy Baba idiappa maavu or surf my blog to get quick tiffin ideas.i will open a category for you.