Friday, November 25, 2011

இப்போ என்ன செய்வேன்??

அன்று என் மகனுக்கு மட்டும் பள்ளி விடுமுறை.  மகள் பள்ளிக்குச் சென்று விட்டாள்.  வழக்கமாக பள்ளி இருக்கும் நாட்களில் அவனை நான் தண்ணீர் ஊற்றி எழுப்பாதது தான் பாக்கி. தொண்டை வறண்டு போகும் வரை “ரிஷி எழுந்திரி, ரிஷி எழுந்திரி, ஸ்கூலுக்கு டைம் ஆயிடுச்சு, லேட் ஆகுது” என்று தேய்ந்த ரெக்கார்டாய் கத்திக்கொண்டே இருப்பேன். அது என்னவோ செவிடன் காதில் சங்கு ஊதிய கதை தான் தினமும். இரவு சீக்கிரமாக தூங்கச் சொன்னால் அது  ஒரு குற்றச்செயல் போன்று அவனுக்குத் தோன்றும்.  அவன் தூங்கி விட்டால் அவனுக்குத் தெரியாமல் இந்த உலகில் பல விஷயங்கள் நடந்தேறி விடுமோ என்ற அச்சம் போலும்.  சீக்கிரம் தூங்கினால் தானே சீக்கிரமாக எழ முடியும்? படுக்கச் சொன்னால் அப்பொழுது தான்  அவன் தன் விளையாட்டுப் பொருக்களை   பல நாட்கள் காணாதது போல் எடுத்து வைத்து விளையாட ஆரம்பிப்பான். பின் அவற்றை நான் தான் பொறுக்கி வைக்க வேண்டும்.  ஒவ்வொரு நாள் இரவும் தான் எனக்கு, இனி எந்தப் பொருளும் புதிதாக வாங்கிக் கொடுக்கக் கூடாது என்று தோன்றும்.  ஆனால் அந்த முடிவு குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு கதை தான்.  ஒரு வழியாக விளக்குகளை அணைத்துவிட்டு தூங்க வைப்பதற்குள் எனக்கு தூக்கம் வந்து விடும். தினமும் காலையில் என் “எழுந்திரி ரிஷி சுப்ரபாதம்” ஒலித்துக்கொண்டே தான் இருக்கும் ஆனாலும்  அவன் தன் இஷ்டம் போல தான் எழுவான், கிளம்புவான்.  பஸ் வந்துவிடும் என்று நான் தான் அடித்துக்கொள்வேன். அவன் தன் பாட்டிற்கு ஆடி அசைந்து கிளம்புவான். இது தினமும் அரங்கேறும் காட்சி ஆதாலால் நான் எவ்வளவு கத்தினாலும் அவன் , (சொல்லக்கூடாது தான் ஆனால் என்ன செய்வது ? கோழி மிதித்தா குஞ்சு நொடமாகும்?) எருமை மாட்டில் மழை பெய்தது போல் தன் போக்கிற்கு போவான்.


பள்ளி நாட்களில் தான் இப்படி சீக்கிரமாக எழுந்து விட வேண்டியதாகி விடுகிறதே, விடுமுறை நாட்களில் நன்றாக தூங்கட்டும் என்று நான் நினைத்துக்கொண்டு எழுப்பாமல் விட்டுவிடுவேன்.  ஆனால் விடுமுறை நாட்களில் நான் எழுப்பாமலேயே சங்கு ஊதியது போல் ”ட்டான் ” என்று அவனாக எழுந்து விடுவான்.  அன்றும் அப்படித்தான்.  காலை 7.30க்கே எழுந்து உட்கார்ந்து கொண்டான். ஆஹா இன்று நாமும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்ற என் கனவிற்கு முற்று புள்ளி வைத்துவிட்டான்.  எழுந்த உடனேயே “அம்மா நான் என்ன செய்வேன்?” என்று கேட்டான்.  என்னுடையதும் வழக்கமான பதில் தான்.” போய் முதலில் பல் தேய்த்து விட்டு வா, காம்ளான் தருகிறேன் குடித்து விட்டு ஹோம் வொர்க் இருந்தால் எடுத்து செய் “ என்றேன்.  “இல்லை எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் படுக்க வேண்டும் போல் உள்ளது”, என்றான்.  நான் மட்டும் அந்த ஹோம் வொர்க் என்ற வார்த்தையை உபயோகிக்காமல் இருந்திருந்தால் அவன் எழுந்திருத்திருப்பான்.  ஹோம்வொர்க் என்ற வார்த்தையை கேட்ட உடன் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்ததை போல் உணர்ந்து மீண்டும் ஒரு அரை மணி நேரம் படுக்கையிலேயே உருண்டு பிரண்டு கொண்டிருந்தான்.  என் கணவர் அதட்டியதை கேட்டு பின் எழுந்து விட்டான்.  எப்படியோ என்னை தூங்காமல் செய்து விட்டான்.


 பல் துலக்கி, பால் அருந்தியப்பின் டிவி ரிமோட்டை எடுத்து ஆன் செய்து சோபாவில் செட்டில் ஆகிவிட்டான்.  ”சரி ஒரு அரை மணி நேரம் டிவி பார்த்து விட்டு அடுத்து படி என்றேன்.  சரி , இல்லை என்ற எந்த பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.  இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. என் கணவரும் இதையே தான் செய்வார். சில நேரம் டிவி பார்க்கும் பொழுது வாயில் குச்சியை விட்டு பதிலை பிடுங்க வேண்டும் போல் தோன்றும்.  தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழி.  அடுப்படியில் எனக்கு வேளை இருந்ததால் நானும் நேரத்தை கவனிக்க தவறி விட்டேன்.  ஒரு மணி நேரம் டிவி பார்த்து விட்டு பின் நான் காலை சிற்றுண்டி சாப்பிட அழைத்தமையால் மனமே இல்லாமல் டிவியை அணைத்து விட்டு சாப்பிட அமர்ந்தான். அது ஏனோ தெரியவில்லை, டிவியை போடும் பொழுது ரிமோர்ட் கண்ட்ரோல் உடனே கைக்கு கிடைத்து விடும் ஆனால் அதனை off செய்யச் சொல்லும் பொழுது மட்டும் ஒரு நாளும் உடனே கைக்கு கிடைக்காது. அதை தேடுவதை போல் ஒரு பத்து நிமிடம் பாவ்லா நடக்கும்.  என் குரல் உச்சசுருதியை அடையாமல் எந்த வேளையும் நடக்காது.  அரை மணிக்கு மேல் ஆகியும் தட்டில் வைத்திருந்த இரண்டு தோசையும் அப்படியே இருந்தது. சாப்பிடு, சாப்பிடு என்று பின் பாட்டு பாடிக்கொண்டே இருந்தேன். ஒரு மணி நேரம் அதில் கடந்தது. ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தான்.  “அம்மா இப்போ நான் என்ன செய்வேன்? என்று ஆரம்பித்தான். ” கொஞ்சம் நேரம் படிடா” என்றேன்.  நான் சொன்னதிற்காக ஒரு பத்து நிமிடம் ஏதோ பாட புத்தகங்களை உருட்டினான்.  திரும்பவும் என்னிடம் வந்து “அம்மா போர் அடிக்குது, இப்போ நான் என்ன செய்வேன்? என்றான்.  இன்று முழுதும் இந்த கேள்வியை இன்னும்   எத்துனை முறை நான் கேட்க வேண்டுமோ தெரியவில்லையே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.



 அவன் தன் நண்பனுக்கு போன் செய்து பார்த்தான்.  அவனும் வீட்டில் இல்லை.  “அம்மா ப்ளீஸ் கொஞ்ச நேரம் நான் என் விடீயோ கேம் விளையாடட்டுமா?” என்று பாவமாக கேட்டான். அப்படி கெஞ்சி உருகி கேட்கும் போது உருகாத மனமும் தான் உண்டோ? சரி என்று அரை மணி நேரம் விளையாட அனுமதித்தேன்.  அந்த அரை மணி நேரமும் முக்கால் மணி நேரமாக விரிவடைந்து முடிந்தது.  மதிய சாப்பாட்டு  நேரம் வந்து விட்டதால் இருவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தோம்.   நான் சாப்பிட்டு விட்டு எழுந்த அடுத்த அரை மணி நேரத்தில் அவனும் ஒரு வழியாக சாப்பிட்டு எழுந்தான்.  உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு அல்லவா ? எனக்கு தினமும் ஒரு அரை மணி நேரம் மதியம் சாப்பிட்ட பின் உறங்கி பழக்கமாகி விட்டதால் தூக்கம் என் கண்களை தழுவியது.  “ரிஷி வா நாம் இருவரும் கொஞ்சம் படுத்து தூங்கலாம்”, என்றேன்.  அதான் ஏற்கனவே கூறியிருகிறேனே, தூங்குவது, அதுவும் பகலில் தூங்குவது அவனை பொருத்தவரையில் ஒரு குற்றச்செயல்.  படுக்க மறுத்துவிட்டு, என்னையும் தூங்க விடாமல் “அம்மா, I am feeling bored, what do I do now,",என்று என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தான்.



 அவன் அக்காள் இருந்தால் ஏதோ இருவரும் கொஞ்சநேரம் சண்டையாவது போட்டுக்கொண்டு நேரத்தை கழிப்பார்கள்.  சிறிது நேரம் கதை புத்தகம் வாசித்தான். மீண்டும் என்னிடம் வந்து அதே, “இப்போ நான் என்ன செய்வது” என்ற கேள்வியை கேட்டான்.  இருவரும் ஏதாவது போர்ட் கேம் விளையாடலாம் என்று முடிவு செய்து சிறிது நேரம் ‘மாஸ்டர் மைண்ட்” என்ற கேம் விளையாடினோம்.  அதுவும் சிறிது நேரத்தில் அவனுக்கு போர் அடித்து விட்டது.  அதை மூட்டை கட்டி வைத்து விட்டு “போய் நன்றாக குளித்து விட்டு வா” என்றேன்.  தண்ணீரில் சிறிது நேரம் விளையாடினால் ஆவது என்னை நச்சரிக்க மாட்டான், அவனுக்கு பொழுதும் கொஞ்சம் போகும்  என்ற நினைப்பு எனக்கு.  என் தோழியிடம்  இருந்து எனக்கு போன் வந்தது.  பிறகு கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு வைத்து விட்டேன். ஏனென்றால் அவன் வீட்டில் இருக்கும் பொழுது நான் யாரிடமும் போனில் பேச முடியாது. இது தான் சாக்கு என்று உடனே டிவியை ஆன் செய்து விட்டு பார்க்க ஆரம்பித்து விடுவான். இல்லையேல் , கம்ப்யூட்டரில் கேம் விளையாட ஆரம்பித்து விடுவான்.  நானும் போனில் சுவாரஸ்சியமாக பேசிக்கொண்டிருந்தால் கவணிக்க மறந்து விடுவேன் அல்லது கண்டும் காணாதது போல் விட்டு விடுவேன். இது தான் சமயம் என்று அவனும் சந்தில் சிந்து பாடி விட்டு போய்விவான்.  எல்லா பெற்றோருக்கும் இருக்கும் வீக் பாயிண்ட்டே இது தான்.  குழந்தைகளும் இதனை நன்றாக புரிந்து கொண்டு நாம் போனில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் அவர்களுக்கு வேண்டியதை சாதித்து கொள்வார்கள்.

மாலை என் மகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பினாள்.  இப்பொழுது அவள் பங்கிற்கு அவள் டீவி முன் அமர்ந்தாள். அவள் பார்க்கும் பொழுது அவளுடன் இவனும் சேர்ந்து கொண்டு பார்க்க ஆரம்பித்தான்.  பின் மாலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, கீழே அவன் தன் நண்பர்களுடன் விளையாட போய் விட்டான்.  எனக்கு ஒரு பிரளயமே முடிந்தது போல் இருந்தது.  இனி “ I am bored , what do I do now" என்ற கேள்வியை இன்று இதற்கு மேல் கேட்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு  என் மாலை வேளைகளை நான் தொடர ஆரம்பித்தேன்.  வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பல கேள்விகள் எனக்குள் தோன்ற ஆரம்பித்தன. இந்த ஒரு நாள் விடுமுறை எனக்கு பல உண்மைகளை உணர வைத்தது. இக்கால குழந்தைகளுக்கு டிவி, விடியோ கேம், மொபைல் போன், கம்ப்யூட்டரை விட்டால் விளையாட வேறு எதிலும் நாட்டம் இல்லை. அது மட்டுமல்ல போர்ட் கேம்ஸ் விளையாட பொருமை இல்லை. நான் பத்து வயது சிறுமியாக இருந்த பொழுது என் பிறந்தநாளுக்கு என் மாமா ஒருவர் “ட்ரேட்” என்ற போர்ட் கேமை வாங்கி தந்தார். நான் அதனை பொக்கிஷமாக போற்றி விளையாடுவேன்.  விடுமுறை நாட்களில் என் பெற்றோருடன் சீட்டுக்கட்டு விளையாடுவது உண்டு.  நண்பர்களுடன் சொப்புச் சாமான், டீச்சர் விளையாட்டு, திருடன் போலீஸ் விளையாட்டு, தாயம், பல்லாங்குழி,  என்று பலவாறு விளையாடியதுண்டு.  ஆனால் இன்று என் மகனின் நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தாலும் சரி அல்லது இவன் அவர்களின் வீட்டிற்குச் சென்றாலும் சரி உடனே ஏதாவது ஒரு electronic gadgetயை வைத்துக்கொண்டு தான் விளையாட ஆசைப் படுகிறார்கள்.  அவை இல்லை என்றால் உலகமே இருண்டது போன்று அவர்களுக்கு தோன்றுகிறது.  செய்வதறியாது தவிக்கிறார்கள்.  அவற்றை வைத்தில்லாதவர்களை வேற்று கிரக மக்களை பார்ப்பதை போன்று பார்க்கிறார்கள்.  சில சமயம் ஒருத்தன் மட்டும் ஏதாவதொரு வீடியோ கேம் வைத்து இருப்பான்.  அதுவரை ஓடி விளையாடிய மற்றவர்கள் அந்த வீடியோ கேமை பார்த்தவுடன் விளையாடுவதை விட்டு விட்டு பலா பழத்தை மொய்க்கும் ஈக்கள் மாதிரி அந்த ஒருவனை சுற்றி நின்று கொண்டு தலை கவிழ்ந்து , தன் நிலை மறந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள்.  வீடியோ கேம் வைத்திருக்கும் அவன் தான் அந்த நிமிட ஹீரோ.  விளையாட வேண்டிய அவசியம்கூட இல்லை அதனை பார்த்துக்கொண்டு இருந்தாலே பிறந்த பயனை அடைந்து விட்டதாக ஆனந்தமாக காணப்படுவார்கள்.  அந்த gadgets மேல் அவர்களுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு..


பெற்றோராகிய நமக்கும் அவர்களுடன் விளையாட பொறுமை இருப்பது  இல்லை.  அப்பொழுது எல்லாம் தாத்தா, பாட்டி  அத்தை, மாமா,என்று யாராவது ஒருவர் கூட இருந்தார்கள். வேலை பளுவை பகிர்ந்து கொண்டார்கள். தனித்தனி தீவுகளாக வாழும் நமக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தை அக்கடா என்று கழிக்கத்தோன்றுகிறது. நம்மை தொந்தரவு செய்யாமல் ஏதாவது அமைதியாக செய்தால் சரி என்று நாமும் குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு விடுகிறோம். நீண்ட தூர பயணங்களின் போது முன்பெல்லாம் இயற்கையை ரசிக்க நம் பெற்றோர் கற்றுக்கொடுத்தார்கள். மரம், செடி, கொடி, இயற்கை காட்சிகள், மக்கள், என எல்லாவற்றையும் ரசித்து வழியில் கிடைத்த தின்பண்டங்களை கேட்டு வாங்கி சாப்பிட்டு சந்தோஷம் அடைந்தோம். ஆனால் இப்பொழுதோ பயணத்தின் போது நம்மை தொந்தரவு செய்யகூடாது என நினைத்து ஒரு வீடியோ கேமையோ, மொபைலையோ, அல்லது எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு சீட்டுக்கும் பின் பக்கத்திலேயே ஒரு டிவி ஸ்கீரீன் வைத்து அவரவர் விருப்பத்திற்கேற்ப படங்களை போட்டு காண்பிக்கிறோம்.  சண்டை வராமல் இருக்க அதிலும் தனித்தனி ஸ்கிரீன். யாரும் யாருடனும் பேசும் சந்தர்ப்பத்தையே ஏற்படுத்துவதில்லை.   அவர்களுடன் பேசிக்கொண்டே பயணிக்க அலுப்படைகிறோம்.  என் தந்தை பயணங்களின் போது எங்களுக்கு பல விஷயங்களை சொல்லிக்கொடுத்தது நினைவிற்கு வருகிறது. என் தந்தை எங்களுக்கு செய்ததை நான் என் குழந்தைகளுக்கு செய்ய அலுப்படைகிறேன்.  இது தான் காலக்கோலாறு என்பதா??


 ஓடும் வண்டியில் இப்படி பார்ப்பது  கண்களுக்கு எவ்வளவு கெடுதல்?இதனை நாம் உணர்ந்தாலும் அப்பொழுதிற்கு நமக்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்.  பிள்ளைகளை சந்தோஷமாக வைத்துக்கொள்கிறோம் என்ற பேரில் அவர்களின் உடல் கேட்டிற்கு நாமே வித்திடுகிறோம்.     இதனால் கண்ட பலன் என்ன தெரியுமா? அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு தெரிவதில்லை.  அவர்களுக்கென்று ஒரு உலகத்திலேயே வலம் வருகிறார்கள். அதனை விட்டு அவர்களை வெளியில் இழுத்தால் தண்ணீரில் இருந்து வெளியே எடுக்கப் பட்ட மீனாய் தவிக்கிறார்கள். மேலும், சிறு வயதிலேயே குழந்தைகள் பலர் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.  பல குழந்தைகள் உட்கார்ந்தே விளையாடுவதால் உடல் பருமனாகி அவதிக்குள்ளாகிறார்கள்.  இப்பொழுது காட்டுத்தீயாய் நம்மை சுட ஆரம்பித்திற்கும் சக்கரை வியாதிக்கு மூல காரணமே மாறிப் போன நம் வாழ்க்கை முறை தான்.  அதுவும் நம்முடைய அடுத்த தலை முறையினர் இந்த கொடிய நோய்க்கு கணக்கில்லாமல் ஆளாகி வருகிறார்கள்.    நம் வாழ்க்கை முறை மாறியதற்கு யாரை குறை கூற முடியும்? நாம் யாரையும் குறை கூறாமல் பொறுப்பை நம் மேல் சுமந்து நம்முடைய குழந்தைகளை இந்த 'gadget addiction" லிருந்து காக்கவேண்டும்.


 மாறிவரும் இந்த சூழல்களால் ஏற்படும் தீமையை உணர்ந்த  CBSE board, "integrity club"  என்ற ஒரு அமைப்பை பள்ளிகளில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.  இதன் நோக்கம் என்ன வென்றால் குழந்தைகளுக்கு, டிவி, கம்ப்யூட்டர் , தொலைபேசி இல்லா வேறு உலகை அவர்கள் முன் காட்டுவது.  வாழ்க்கை கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது, இயற்கையை ரசித்து அதனுடன் ஒன்றி வாழ்வது போன்றதை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது தான் இதன் நோக்கம். .  Moral values என்றால் என்ன , எப்படியெல்லாம் நம் வாழ்வில் அது முக்கியமானது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதும் அதன் மற்றொரு நோக்கமாக பார்க்கப்படுகிறது. .  முன்னொரு காலத்தில் எதார்த்தமாக நாம் கற்றுக்கொண்ட பல நல்ல விஷயங்களை இன்று “க்ளப்” வைத்து சொல்லிக்கொடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.  சுற்றத்தார், உறவினர்கள், நண்பர்கள், சமுதாயம் என்று எல்லா பக்கங்களிலிருந்தும் நாம் பல விஷயங்களை கிரகித்து கற்றுக்கொண்டோம். ஆனால் இன்று  நமக்குத்தான் எல்லாவற்றிற்கும் soft ware உள்ளதே. நம் குழந்தைகளுக்கு ஏதாவது கற்றுத்தர வேண்டும் என்றால் உடனே சந்தையில் கிடைக்கும் சிடியை வாங்கி கொடுத்து விடுகிறோம். நல்லது கெட்டது எதையுமே குழந்தைகளுடன் அவர்ந்து , பேசி புரிய வைக்க நமக்கு நேரம் இருப்பது இல்லை.  இல்லாவிட்டால் எதற்கெடுத்தாலும் கிளாஸிற்கு அனுப்புகிறோம்.  Dance class, art class, music class, grooming class, tuition class, coaching class  என்று எல்லாவற்றிற்கும் வகுப்புக்கள் காளானைப் போல் முளைத்துவிட்டன. பின் நாம் ஏன் வீணாக நம்மை வருத்திக்கொண்டு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது பெற்றோரிடத்தில் வேரூன்றிவிட்டது.  இதற்கெல்லாம் காசை செலவிட யோசிக்காத நாம் நம் நேரத்தை குழந்தைகளுடன் செலவழிக்க யோசிக்கின்றோம்.   கூகுளும் , யூ ட்யூபும் தான் இன்று பல குழந்தைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டியதை செய்கிறது.   இன்னும் சில காலம் கழித்து சக மனிதர்களுடன் பேசுவது எப்படி என்பதற்கும் வகுப்புக்களோ அல்லது சிடிக்களோ வந்துவிடும். 




அதுவும் வேளைக்குப்போகும் பெற்றோர்கள் தங்களால் தங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்ற காரணத்தால் குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சந்தோஷப்படவைக்கிறார்கள். அவர்களையும் அறியாமல் குழந்தைகளின் இந்த gadget addictionக்கு அவர்களே காரணமாகி  விடுகிறார்கள்.    சில பெற்றோருக்கு, ‘ என் பிள்ளை எல்லாவற்றையும் டிவி பார்த்தே கத்துக்கிட்டான்.  மொபைல் போனில் எனக்கு தெரியாத applications  கூட அவனுக்கு தெரியும். அவனே எல்லாவற்றையும் டவுன்லோட் பண்ணிவிடுவான்.  கம்ப்யூட்டரில் அவனுக்கு தெரியாத விஷயமில்லை, நான் எதுவுமே அவனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தானாகவே கத்துக்கொள்வான்,” என்ற பெருமை வேறு.  அப்படி பட்ட பெற்றோருக்கு என்னிடம் உள்ள கேள்வி என்ன தெரியுமா? “பின்  உங்களுக்கு உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் என்ன பங்கு? காசு சம்பாதித்து சேர்ப்பது தான் உங்கள் பங்கா?  இந்த முறை மாற வேண்டும். Parents should spend quality time with the children.   இதன் மூலம் தான் மனித நேயம் , உறவுகள் , பற்றி அவர்களுக்கு புரியவைக்க முடியும் . இல்லையேல் நம் குழந்தைகள், gadgets உடன் தான் வாழ்க்கையை வாழ முடியும்.   வாழ்க்கையில் அன்பு, பாசம், நேசம், புரிதல், விட்டுக்கொடுத்தல், பகிர்தல் என பல அழகான விஷயங்கள் இருக்கின்றன. நம்முடைய இந்த பண வேட்டையில் நம் குழந்தைகளை நாம் கவனிக்க மறந்து அவர்களை "consumerism' என்ற வலையில் சிக்க வைத்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குகிறோம்.  இப்படியே இந்த காலாச்சாரம் தொடருமானால் எதிர்காலத்தில் வயதான பின் ரோபோக்கள் தான் நமக்கு பிள்ளைகளாக இருக்க முடியும்.  ரத்தமும் , சதையுமான மனித உறவுகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.  நம் சந்ததியினரை மனிதர்களாக வாழ வழி நடத்துவதா இல்லை மனித ரோபோக்களாக வாழ வழி செய்வதா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.  என் தேடுதல் மீண்டும் தொடரும்......

3 comments:

Asha said...

Very good one. You beautifully captured the constant dilemma we go through as parents.

Geetha Ravichandran said...

Thank you Asha.

rishvan said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...