Friday, November 11, 2011

எங்கே போகிறோம்--ஒரு தேடல்

என் இனிய தமிழ் மக்களே!! நீண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் யாவரையும் சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இவ்வளவு நாட்கள் எழுதாமல் மீண்டும் எழுத நிணைத்தால், நம்மால் முடியுமா என்ற சந்தேகம் மனதில் அரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் கையில் கல்லை எடுத்துவிட்டேன். விழுந்தால் மாங்காய் இல்லையேல் கல் தானே!! யாரும் அடிபடாமல் பார்த்துக்கொண்டால் போச்சு என்ற துணிச்சலோடு கலத்தில் குதித்து விட்டேன்.  இந்தியா இடம் பெயர்ந்ததிலிருந்து என்னை பல விஷயங்கள் யோசிக்க வைத்துள்ளன.  என்னடா இவளுக்கு இப்பொழுதுதான் மூளை வேலை செய்கிறதா என்ற எண்ணம் பலருக்கு தோண்றலாம்.  இத்தனை வருடங்களாக  வேற்று மண்ணில் பார்த்த பல விஷயங்கள் நம் சொந்த மண்ணில் நடக்கும் பொழுது சில வியப்பளிக்கின்றன பல கவலைப்பட வைக்கின்றன.  இதனை யோசித்துத்தான் நான் “எங்கே போகிறோம்” என்ற தலைப்பில் சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள(ல்ல) பிரியப்படுகிறேன். வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம்.........


செவ்வாய் கிழமை மாலை பள்ளி முடிந்து என் பிள்ளைகள் இருவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார்கள். நானும் “ஆஹா காலை முதல் மாலை வரை நம்மை பார்க்காமல் இப்பொழுது பார்த்தவுடன் இவர்களுக்கு என்ன ஒரு சந்தோஷம் என்று என்னை நானே நினைத்து பெருமை பட்டுக்கொண்டேன். வழக்கமான, “ஸ்கூல் எப்படி இருந்தது? என்ற கேள்வியை கேட்டேன். “அம்மா ஸ்கூல் as usual was good,  எங்கள் நண்பர்கள் எங்களை அவர்களின் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்து இருக்கிறார்கள் என்றார்கள்.  ஓ இது தான் இவர்களின் சந்தோஷத்திற்கான காரணமா என்று தெரிந்தப்பின் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு வேளையை தொடர்ந்தேன்.  பெருமூச்சுக்குத்தான் எத்தனை சக்தி.  கவலையாய் இருந்த்தாலும் சரி, பொறாமையானாலும் சரி, நிறைவானாலும் சரி,துக்கமானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி,ஆத்திரமானாலும் சரி, ஆதங்கமானாலும் சரி,அரவணைப்பானாலும் சரி,  எதுவானாலும் ஒரு பெருமூச்சிலேயே வெளிப்படுத்த முடியும். மூச்சுக்குத்தான் எத்துனை சக்தி.  அதனால் தான் மூச்சுப்பயிற்சி செய்யச்சொல்கிறார்களோ?? ஒரு செய்கையில் எத்துனை விதமான வெளிப்பாடுகள்!!! சரி தடம் மாறிப்போகும் முன் வந்த வேளையை கவனிப்போம்.



என் மகளின் வகுப்பில் படிக்கும் சக மாணவன் தன்  பிறந்த நாளை வெள்ளியன்று மாலை தன் வீட்டில் கொண்டாடுவதற்காக அழைத்து இருந்தான்.  மாலை என்பதால் நான் அனுமதி மறுத்தேன். எனக்கும் என் மகளுக்கும் இரண்டாம் போர் மூளும் அபாயம் தெரிந்தது.  இரவு நேரத்தில் பரீட்ச்சியமில்லா ஒருவரின் வீட்டிற்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. அவர்களே கொண்டுவந்து வீட்டில் விடுவதாக கூறினாள். ஆனாலும் நான் மசியவில்லை.  உடனே என் கணவருக்கு போன் செய்து அனுமதி கேட்டாள்.  அப்பா எப்படியும் சரி என்பார் என்ற அவளின் நம்பிக்கை வீண்போகவில்லை.  என்ன, ஏது என்று கேட்காமல் சரி என்ற பதில் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் திரும்பவும் என்னை தொந்தரவு செய்தாள். சாமியே வரம் கொடுத்தப்பின் பூசாரியின் சொல் எடுபடுமா??  விழாவிற்கு செல்வோர் யாவரும் சிகப்பு, கறுப்பு உடையில் செல்ல வேண்டுமாம். என்ன கொடுமைடா சாமி இது என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன்.


அடுத்து என்ன பரிசு அளிப்பது என்ற கேள்வி? கடைக்கு சென்று பரிசு வாங்க நேரம் இல்லாததால் ஒரு கவரில் பணத்தை வைத்து கொடுத்துவிடு என்றேன்.  அடுத்த கேள்வி, “ எவ்வளவு ?” நீங்களே சொல்லுங்களேன். நாமெல்லாம் பிறந்த நாள் என்றால் ஒரு 50 அல்லது 100 ரூபாய் கொடுப்போம். அதுவெல்லாம் இப்போழுது செல்லுபடி ஆகுமா?? 500 ரூபாய்க்கு குறைந்து எதுவும் ஒரு "decent money" ஆக தெரிவது இல்லை. விலைவாசி ஏறுமுகமாகவே இருக்கும் பொழுது ஐநூறு இப்பொழுது ஐம்பதாக தெரிவதில் வியப்பென்ன இருக்கிறது? குறைந்து வரும் ரூபாயின் மதிப்பை குறை சொல்வதா அல்லது பணத்தின் மதிப்பை அரியாமல் வளரும் நம் குழந்தகளை நினைத்து கவலைப்படுவதா?? ஒரு மாதத்தில் குறைந்தது 1,500 ரூபாய் ஆவது பிறந்தநாள் பரிசுக்காக எடுத்து வைக்க வேண்டும்.  இரு பிள்ளைகள் ஆயிற்றே. அவளுடைய நண்பர்கள், அவனுடைய நண்பர்கள் என்று தனித் தனி பிரிவு. இதில் அவள் friendக்கு மட்டும் இவ்வளவு என் friendக்கு மட்டும் ஏன் குறைவாக கொடுக்கவேண்டும் என்ற பாகுபாடு சண்டைகள். கடைசியில் தலையை பிய்த்துக்கொள்வது என்னவோ நான் தான். அப்பா தான், ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று அலுவலகமே தன்உலகம் என்று சந்தோஷமாக இருக்கிறாரே!!


அன்பளிப்பு என்பது நம் அன்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாயில்.  அது ஐம்பது ரூபாயாக இருந்தாலும் சரி, ஐயாயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி அது அன்பை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். நானும் செய்கிறேன் என்று கடமைக்காக இருத்தல் கூடாது.  விலை உயர்ந்த அன்பளிப்புத்தான் உண்மையான அன்பின் வெளிப்பாடாக இப்பொழுது கருதப்படுகிறது.  பொருளை வாங்கி பாக்கும் முன் விலைப்பட்டியல் பார்க்கப்படுகிறது.  வாங்கியவரின் மதிப்பு அதை வைத்து மதிப்பிடப்படுகிறது.  விலைப்பட்டியல் தான் கொடுப்பவரின் மதிப்பை மதிப்பிட உதவும் தராசு. கொடுத்தவரின் உள் நோக்கம் பார்க்கப்படுவதில்லை.  சில விலை உயர்ந்த பரிசுகள்  தான் உண்மையாகவே அன்புடன் கொடுக்கப்படுகிறது. பல பெருமைக்காகவும், கடமைக்காகவுமே கொடுக்கப்படுகிறது. சமயத்தில் “இது ஒரு giftனு பேக் பண்ணி கொடுக்கிறாங்க பாரு “ என்ற ஏலனப்பேச்சுக்களும் அடிபடும்.    என் நண்பர்கள் எனக்கு அளித்த key chain, greeting cards, ஆகிய பரிசுப்பொருட்கள் இப்பொழுதும் என் பொக்கிஷங்கள். We should always appreciate the time and effort a person puts in to get the gift. புகழா விட்டால் கூட பராவாயில்லை இகழக்கூடாது.


 விஜய் டிவியின் நீயா நானாவில் எப்படியெல்லாம் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள் இன்றைய தலைமுறையினர் என்ற விவாதத்தில், ஒருவர் “நான் ஹெலிகாப்டரில் கொண்டாடினேன்,”என்றார். ஆஹா இது எல்லாம் காசுக்கு வந்த கேடா என்று நிணைத்துக்கொண்டேன். மறுபக்கம், “முடி உள்ள சீமாட்டி வாரி முடிஞ்சுக்கறா” என்றும் என்னை சமாதானம் செய்துகொண்டேன். இந்த பிறந்தநாள் விழாவின் பொழுது “return gift" என்ற மேலை நாட்டு கலாச்சாரம்  இப்பொழுது நம்மை தொற்றிக்கொண்டுவிட்டது. உலகமயமாதலின் வெளிப்பாடு.  அது ஒன்றும் தவறான செயல் அல்ல. நல்ல விஷயங்கள் எங்கு நடந்தாலும் அதை பின்பற்றுவதில் தவறொன்றும் இல்லை.  விழாவிற்கு வரும் குழந்தைகள் வீட்டுக்கு போகும் பொழுது சந்தோஷமாக செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர்களின் கையில் ஏதாவது ஒன்றை கொடுத்து அனுப்புவது பழக்கமாகி விட்டது.   அப்படி கொடுக்கப்படும் பொருள் ஒரு சிறு பொருளாக இருந்து வந்தது.

ஏதோ சிறு பொருளாக இருந்த அந்த "return gift"யை இப்பொழுது எல்லாம் சிலர் 300 , 400 ரூபாய்க்கு வாங்கி கொடுக்கிறார்கள். இவ்வளவுக்கு செய்வதை பெருந்தன்மையாக எடுத்துக்கொள்வதா அல்லது அவர்களின் அந்தஸ்தின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்வதா என்று எனக்கு புரியவில்லை. மேலும் பிறந்தநாளுக்காக நாம் கொடுக்கும் பரிசின் மதிப்பிற்கே நமக்கு திரும்பி செய்வது “கணக்கை முடித்து விட்டேன் (returned your gift)” என்பதை போன்று உள்ளது. சில சமயங்களில் “அச்சோ நாம் பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளைக்கு ரொம்பவும் குறைத்து செய்து விட்டோமோ, அவர்கள் இவ்வளவு காஸ்ட்லியான return gift கொடுத்து இருக்கிறார்களே ?” என்ற கேள்வி எழுகிறது, மன சங்கடத்துடன் , குற்ற உணர்வுடன், வர வேண்டி இருக்கிறது. குழந்தைகளைப் பொருத்தவரை ஒரு பையில் சில சாக்லேட்கள், சிறு சிறு பொருட்கள் கொடுத்தாலே சந்தோஷம் அடைவார்கள். எத்தனை பேருக்கு புரிகிறது இந்த உண்மை. புரிந்தாலும் அதை நாம் ஒத்துக்கொள்ள மறுக்கிறோம்





பல நேரங்களில் நம் குழந்தைகள் யார் வீட்டிற்காவது சென்று வரும்பொழுது நாம் அவர்களைஉலுக்கி“போய்ட்டு வர்றேன் ஆண்டின்னு  சொல்லு,” என்று தூண்ட வேண்டும். ஆனால் பிறந்தநாள் விழாவிற்கு வரும் குழந்தைகள் மட்டும்  விழா முடிந்து போகும் பொழுது “ஆண்டி நான் போய்ட்டு வருகிறேன்” என்று தேடித்தேடி கூறுவார்கள். அது ஏன் தெரியுமா? அந்த “return gift"க்காகத்தான்.  என்ன தான் நாம் அவர்களுக்கு எத்தனை பொருள் வாங்கித்தந்தாலும் அந்த “return gift" தரும் சந்தோஷம் அலாதி தான். என் மகன் பொதுவாக யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டான். வீட்டிற்கு வருபவர்களிடம் நான் சொல்லி சொல்லி ஒரு ஹாய் சொல்லுவான். ஆனால் பிறந்த நாள் விழாவென்றால் தேடிப்போய் “Hi aunty, bye aunty” என்று சகல மரியாதையும் தெரிந்த பிள்ளையாக உலா வருவான்.  அப்படி ஒரு ஈர்ப்பு அந்த “return gift"க்கு.  குழந்தைகள் அந்த பையை வாங்கிய உடன் பிரித்து தலையை கவிழ்த்து உள்ளே என்ன இருக்கிறது என்று துலாவுவதே ஒரு அழகான காட்சி தான். இதில் , “உனக்கு என்ன, எனக்கு இது கிடைத்திருக்கிறது” என்ற ஆராய்ச்சிகளும், பண்ட மாற்றமும் வேறு அரங்கேறும்.  பெற்றோராகிய நாம் தான் “பேசாமல் இரு, வீட்டிற்கு சென்று பிரித்துக்கொள்ளலாம்” என்று அவர்களை அடக்கப் பார்ப்போம்.  அவர்களின் innocenceக்கு முற்றுப்புள்ளி வைப்பது நாம் தான்.





பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்றாலே சில பெற்றோருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பிக்கிறது.  எங்கே கொண்டாடுவது, எப்படி கொண்டாடுவது? எங்கே சென்று “return gift" வாங்குவது என்ற பல கேள்விகள்.  ஆசையாக வாங்கினால் பராவாயில்லை , சிலர் return gift என்ன  வாங்குவது என்பதிலேயே மிகவும் stress ஆகி விடுகிறார்கள்.  இப்படி அலுத்துக்கொண்டு செய்வதில் என்ன பயன் என்பது எனக்கு புரியவில்லை. இதில் நம் குழந்தைகள் வேறு “ என்  பிறந்த நாள்  எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் தெரியுமா ?? என் நண்பர்களைப்போன்று, laser tagல் கொண்டாட வேண்டும்,party zoneல், game zoneல், skateing ringல் என்று ஒரு பட்டியலே வைத்துக்கொண்டு அந்த வருட பிறந்நாள் முடிந்த மறுநாளில் இருந்து அடுத்த வருட பிறந்த நாளுக்காக plan செய்ய ஆரம்பிப்பார்கள்.  வருடா வருடம் வரும் பிறந்த நாளுக்கா இத்தனை கலேபரம் என்று எண்ணத்தோன்றுகிறது.  கடுகளவானாலும் அதை சந்தோஷத்துடன் செய்தால் செய்பவருக்கும் மன நிறைவு, அது சென்று அடைபவருக்கும் மன நிறைவு. காசே தான் கடவுளடா என்ற போக்கில் போகும் இந்த உலகில் நாம் எங்கே போகிறோம் என்ற கேள்வியுடன் இன்று விடை பெறுகிறேன். மீண்டும் தொடருவேன் ”எங்கே போகிறோம்” என்ற என் தேடலை............

5 comments:

Diwan said...

wow...elaborated nicely abt todays happenings...cant even imagne about our future....awaiting for ur next posts....congrats

Geetha Ravichandran said...

thank you Diva.

sugan said...

very nicely said about todays happening,which is completly truth geetha.

sugan said...

very nicely said about todays happening ,which is completly truth geetha.

s,n,kulothungan said...

veesiyadhav oru kal;vizhundhatho pala maangai