Wednesday, November 3, 2010

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்....

  எல்லோரும் காலையில் பள்ளிக்கூடம், ஆபீஸ் என்று  சென்றப் பின் நான் என் அன்றாட வேலைகளை தொடங்க ஆரம்பித்தேன்.  இரவு சரியாக தூங்காததால் களைப்பு வேறு.  இருந்தும் இல் வேளைகளில் இருந்து தப்பிப்பதற்கு ஜாமீன் கிடைக்காதே.  திருமணம் என்ற குற்றத்தை ஒரே ஒரு முறை புரிந்ததற்காக இந்த தண்டனையா என்று என்னையே நொந்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தேன்.  வீட்டை கூட்டுவதற்கு முன் ஒவ்வொரு அறயாக சென்று அங்கு அலங்கோலமாக கிடக்கும் பொருட்களை முதலில் அடுக்கி வைப்பது என் வழக்கம்.  என் பெண்ணின் அறைக்கு நுழைந்த பொழுது அங்கு எதுவும் தரையில் கிடக்கவிலை.  அவளின் ஸ்டைல் என்ன தெரியுமா?  எந்த பொருளானாலும் அவள் மேசை மீது குவித்து வைத்து விடுவாள்.  அதை ஒழுங்காக அடுக்கி வாத்தால் என்ன என்று கேட்டால் “I Like it this way amma.  எனக்கு இப்படி இருந்தால் தான் எது எங்கே இருக்கிறது என்று தெரியும்”, என்று வேறு ஒரு பதில்.  அவள் அலமாரியை திறந்தால் துணிமணிகள் ஒரு சிறு எவரெஸ்ட் மலை போல் குவிந்து கிடக்கும்.  மாதம் ஒரு முறை அதை நான் அடுக்கினால் உண்டு.  மிகவும் கோபம் வந்துவிட்டால் நான் எல்லாவற்றையும் எடுத்து ஒரு நாள் தரையில் வீசுவேன்.  பின் அவளையே மடிக்கச் சொல்வேன்.  End of the day mission accomplish செய்வது அடியேனே.  பெத்த மனம் பித்து ஆயிற்றே.  இது இப்படி இருக்க, ”எனக்கு dressஏ இல்லை.   You never buy for me." என்ற குறைவேறு.  என் தந்தை சொல்வதை போல் நாண்கு துணியை மட்டுமே வைத்துக் கொண்டிருந்தால் மாற்றி மாற்றி துவைத்து மடித்து அடுக்கி அழகாக வைத்துக்கொள்ள தோன்றும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.  கேட்டதை வாங்கியும் கொடுத்து வாங்கிகட்டிக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது!!


    மகனின் அறைக்கு சென்றால் என் தலை எந்திரன் ரோபோ போல் சுற்றும்.  படுக்கையில் புத்தகம், தரையில் சாமான் என்று பொருட்கள் அறை முழுதும் இரைந்து கிடக்கும்.  ஒன்று நான் ரோபோவாக மாறவேண்டும் அல்லது உதவிக்கு நல்ல “சிட்டி ரோபோ” ஒன்று அவசியம் வேண்டும். அலங்கோலமான அறையை பார்த்தவுடனேயே கோபம் தலைக்கு ஏறும்.  ஆனால் யாரிடம் காண்பிப்பது.   மனதுக்குள் திட்டிக்கொண்டே ஒவ்வொன்றாக எடுத்து அவற்றுக்குரிய இடத்தில் அகுக்கி வைத்து விட்டு பின் மற்ற அறைகளை சுத்தம் செய்வேன்.   என்னிடம் ஒரு fridge magnet உள்ளது.  அதில் “I don't need a man to keep me happy but a maid is essential."  இவர்கள் அடிக்கும் கூத்திற்கு வேலை செய்ய யாரும் முன்வரமாட்டார்கள்.  விடுமுறை நாட்கள் இன்னும் மோசம்.  தந்தையும் இந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுவார்.  சுத்தம் செய்து செய்து என் முதுகு கேள்விக்குறியாக இருக்கும்.  மீண்டும்  திங்கள் மதியம் தான் நிமிரும்.


     ஒவ்வொரு நாளும் வீட்டை சுத்தம் செய்யும் போதுதான் எனக்கு less things more comfort என்று என் தந்தை கூறுவது ஞாபகத்திற்கு வரும்.  ஆனால் என்ன செய்வது பொருட்களை விற்கும் வியாபாரிகளுக்கு வியாபாரம் நடக்க வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில் நானும் பொருட்களை வாங்குவதை நிறுத்துவதில்லை.   அவற்றிற்கு ஒரு உபயோக காரணத்தை கண்டுபிடிக்க தவறுவதும் இல்லை.  ஏதொ உலக பொருளாதாரத்திற்கு என்னால் ஆன உதவி என்று வைத்துக்கொள்ளுங்கள். 


   ஒரு வழியாக என் வேலையை முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்து உட்காருகையில் மணி நாண்காகிவிடும்.  பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் வீட்டிற்கு வந்து விடுவார்கள்.  பின் மாலை கடன் தொடரும்.  வந்தவுடன் என் மகனின் புத்தகப்பை ஒரு புறம், சாப்பாட்டுப் பை ஒரு புறம் , uniform ஒரு புறம்  என்று பறக்கும்.  சிறு சுனாமி வந்தது போல் வீடு காட்சியளிக்கும்.  பின் என் ராக ஆலாபனையை தொடங்கினால் எல்லாம் அதன் அதன் இடத்திற்கு போகும்.  சரி வீட்டுப்பாடம் செய்ய வைக்கலாம் என்று புத்தகப்பையை திறந்தால் பென்சில் இருக்காது, இல்லை நோட்டு புத்தகங்கள் கசங்கி இருக்கும்.  அப்பாடா என்று ஆகிவிடும்.  எப்பொழுதுதான் இவனுக்கு பொறுப்பு வரப்போகிறதோ என்று வேண்டாத சாமி இல்லை.  “உன்னை திருமணம் செய்து கொள்பவள் என்ன பிள்ளை வளர்த்து வைத்து இருக்கிறார்கள் உங்கள் அம்மா. இப்படி ஒரு பொருப்பில்லாத பிள்ளையை  என் தலையில் கட்டி விட்டார்கள்.” என்று என்னை திட்டுவாள் என்றும் கூறியிருக்கிறேன்.  அதை புரிந்து கொள்ளும் வயசு இல்லை என்று தெரிந்தும் என் ஆதங்கத்தை கொட்டி தீர்ப்பேன்.  ஒரு வேலை நானே என் மாமியாரை சில சமயங்களில் இப்படித்தான் மனதில் திட்டுகிறேனோ??  நானும் பல சாம பேத வழிகளை கையாண்டு பார்த்துவிட்டேன்.  பலன் இல்லை.  அடிக்கும் மசியவில்லை.  எந்த  ராஜா எந்த பட்டிணம் போனால் என்ன நான் செய்வது தான் செய்வேன் என்று அவன் உலகில் சந்தோஷமாக விளையாடி திரிந்தான்.  சரி ஹாஸ்டலில் போட்டு ஒரு வருடம் நிமிர்த்தலாம் என்று முடிவு செய்து ஒரு நல்ல ஹாஸ்டல் பார்க்க சொல்வதற்காக என் தந்தைக்கு போன் செய்தேன்.  எனக்கும் என் தந்தைக்கும் இடையே  நடந்த உரையாடல் உங்கள் பார்வைக்கு......

நான்:   அப்பா எப்படி இருக்கீங்க?

அப்பா:  நான் நல்லா இருக்கேம்மா.  நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க. நேத்து தான் போன் பண்ண அப்புறம் என்ன இன்னைக்கு திடீற்னு காலையிலேயே போன்.  என்ன விஷயம்?

நான்:   ஒன்னுல்லை அப்பா. ரிஷி ரொம்ப விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கான்.  கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல.  நல்ல ஹாஸ்டலா பாருங்க, போட்டுட்டு நா நிம்மதியா இருக்கேன்.

அப்பா:   ஏம்மா அப்படி சொல்ற?  போகப்போக திருந்திவிடுவான்.  கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக்கொடு.

நான்:   சொல்லியும் பாத்துட்டேன், அடிச்சும் பாத்துட்டேன்.  திருந்தவே மாட்றாம்பா.  கத்தி கத்தி எனக்கு தான் B.P வந்தும் போல. 

இதை கேட்டு பதற்றமடைந்த என் தந்தை( எனக்கு B.P வந்துவிடும் என்பதால் பதற்றம் இல்லை. பேரனை அடித்து விட்டேன் என்பதற்கான பதற்றம்.):  என்னமா, அடிக்காதம்மா பாவம்.

நான்: பாவம் யாருப்பா? நான் தான் பாவம்.

அப்பா:   இல்லம்மா, அடிச்சீனா ரொம்ப feel பண்ணுவான்.  மனசுக்குள்ள வச்சுகிட்டு கஷ்டப்படுவான்.  நான் செஞ்ச தப்பை நீங்க உங்க பிள்ளைகளுக்கு செய்யாதீங்க.  நான் தான் சின்ன வயசில் உங்களை அடிச்சு வளத்தேன்.  நீங்க அப்படி செய்யாதீங்கம்மா.

நான்:   கம்பெடுத்தால் தான் சில சமயம் குரங்கு ஆடுதுப்பா.   நீங்க மட்டும் எங்களை அடிச்சீங்க.  ஏன் நாங்க மட்டும் செய்யக்கூடாதா?

அப்பா:   இல்லம்மா. நான் உங்கள அடிச்சது disciplined ஆ வளக்க.

நான்: நானும் அதுக்குத்தான் அப்பா அடிச்சேன்.

அப்பா:   NO, NO, அவன அடிகாதம்மா.  நான் அப்படி disciplinedஆ வளத்ததாலதான் இப்ப உங்க உங்க வீட்ல அதே ஒழுங்க எதிர்பார்கறீங்க.  சண்டை வருது.  என்ன செய்யறது.  ஏண்டா அப்படி அடிச்சோம்னு இப்ப நான் feel பண்றேம்மா.  இங்க எங்கிட்ட கொண்டுவந்து விடு.  நான் நல்லவிதமா பொருமையா சொல்லிக் கொடுத்து வளக்கறேன். 

நான்:   சரிப்பா நான் போனை வக்கறேன்.
போனை வைத்த பிறகு சிறுது நேரம் இந்த சம்பாஷணையை rewind செய்து பார்த்தேன். பெற்ற பிள்ளைக்கும் பேரப்பிள்ளைக்கும்  இடையே இவ்வளவு வித்தியாசமா?
பேரப்பிள்ளைகள் மீதுதான் தாத்தா பாட்டிக்கு அளவிட முடியாத கண்மூடித்தனமான பாசம்.  வரையரையற்ற இந்த பாசத்தை அருகில் இருந்து அனுபவிக்க இயலாமல் நம் குழந்தைகளும் இந்த பொருள் தேடும் உலகில் நம்மோடு சேர்ந்து அலைகிறார்கள்.


   எது எப்படியோ, என் தந்தை என்னை அடித்து வளர்த்ததற்கு பெயர் disciplining, ஆனால் நான் என் பிள்ளையை அடிப்பது தவறான் அனுகுமுறை.  இதற்குத்தான் “மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி” என்பார்களோ.  நானும் பிழைத்து இருந்தால் ஒரு நாள் பாட்டி ஆவேன்.  அப்பொழுது என் வீட்டிலும் காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும்.  காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

8 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹஹ்ஹா நீங்க வேற.. நீ மட்டும் ன்னு இழுத்து ..அப்படியாக்கும் இப்படியாக்கும்ன்னு சொல்லி சில சமயம் வாயை மூடிருவாங்க..(பொதுவா எங்க வீட்டுல இதுக்கெல்லாம் என் கணவர் தான் எங்களை திட்டுவாங்க.)

priya.r said...

நல்ல பகிர்வு கீதா
எப்படி மனதில் உள்ள எண்ணங்களையும் ,வாழ்வில் நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகளையும்
கோர்வையாகவும் அழகாகவும் எழுதுகிறீர்கள் என்று வியந்து பாராட்ட தோன்றுகிறது
அதுவும் தாத்தா பாட்டி செல்லம் பேரன் பேத்திகளுக்கு தான் போய் சேருகிறது என்பதை வர்ணித்த விதமும் அழகு
இதே நிலை தான் என் வீட்டிலும் 2 மாதங்களுக்கு முன்பு வரை இருந்தது
பின்னர் மார்க் சிஸ்டம் ஆரம்பித்ததில் இருந்து எனக்கு பாதிக்கு மேல் பளு குறைந்தது
இப்பொழுது ஸ்கூல் ,டியூஷன் விட்டு வந்ததும் டை,ஐடி கார்டு,பெல்ட்,ஸ்கூல் பாக்,uniform அது அது வைக்க வேண்டிய இடத்திற்கு போய் விடுகிறது .பென்சில் ரப்பர் மட்டும் சரியாக வீட்டுக்கு வருவதில்லை ; சண்டே மட்டும் விதி விலக்கு மாத கடைசியில் 90 % மார்க் வாங்கும் போது சிறப்பு பரிசு உண்டு ;நீங்களும் செய்து பாருங்களேன் !(இதென்ன சமையல் குறிப்பா என்று நீங்கள் கிண்டல் செய்ய கூடாது கீதா !)தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

Geetha Ravichandran said...

முத்துலெட்சுமி அவர்களே வருகைக்கு நன்றி. உங்கள் கணவர் என் தந்தை போன்று போல. நானும் சிறு வயதில் நிறைய திட்டுக்கள் வாங்கி இருக்கிறேன். என்னைப் போல் என் பிள்ளைகளும் வளர்ந்தவுடன் பொறுப்பாக இருப்பார்கள் என்ற நப்பாசை இருக்கிறது.

ப்ரியா--வருகைக்கு நன்றி . நீங்கள் சொன்னது போல் குட் மார்க்ஸ், பேட் மார்க்ஸ் எல்லாம் போட்டு சலித்து விட்டேன். ஆனால் இன்னும் முயற்சியை கைவிடவில்லை. ஃப்ரிஜ் கதவில் ச்சார்ட் உண்டு மார்க் போட. உங்கள் யாவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்.

ராம்ஜி_யாஹூ said...

அருமையான பதிவு, நன்றிகள் முதலில்.

தாத்தா விற்கு பேத்தியை பார்த்ததும் தன் மனைவியின் மறு உருவம் தான் பேத்தி என்று தோன்றுவதும், பாட்டிக்கு பேரனைப் பார்த்ததும் தன் கணவர் தான் பேரன் உருவில், என்ற எண்ணமும் இயற்கையாக தோன்றி விடுகிறது.

மேலும் ஐம்பது வயதிற்கு மேல்தான் அவர்கள் உணர்கிறார்கள்- இந்த உலக வாழ்வு அன்பால் மட்டுமே நிறைய வேண்டும் என்று. அந்த வயதில் தான் உணர்கிறார்கள் பதவி,பணம்,ஒழுக்கம், கட்டுபாடு என்பது எல்லாம் தற்காலிகம், சிறியவை. அன்பு தான் பெரியது என்று.

Geetha Ravichandran said...

Thank You Ramji. I feel grandparents shower more love on the grandchildren because they feel they are the replicas of their own children when young. சின்ன வயசில் அவர்களிடம் பெற்றோராக கண்டிப்பாக , நடக்க வேண்டிய கட்டாயம். அவர்களிடம் அப்பொழுது காண்பிக்காத அன்பினை வயதான பின் பேரக்குழந்தைகளீடம் காண்பிக்கிறார்கள். மீண்டும் தங்களின் குழந்தைகளின் குழந்தை பருவத்தை பார்ப்பது போன்று நினைவுகள்.

Anonymous said...

Really I am amazed to read you writings, You can try it out by writing a book.

Really only very few can write like this.

-Shriny

Geetha Ravichandran said...

Thank You Shriny for ur support.

Durga Karthik. said...

Nice writings.Maturity in.mind makes grandparents not to react.At the same time it is our responsibility of taking care our children so we tend to act is my husband's version.