Monday, August 23, 2010

பாகம் 2--வாங்கி வந்த வரம்

     ஐந்தாம் நாள் வந்தது.  ”இன்று நீ அந்த ஆஸ்பத்திரிக்குச் சென்று குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு வரலாம்” என்று என் தந்தை கூறினார்.  முதன் முதலில் என் குழந்தையை பார்க்க போகும் மகிழ்ச்சியில் எனக்கு பசியே எடுக்கவில்லை.  மனம் பட்டாம் பூச்சியென படபடத்தது.  நான் இருந்த ஆஸ்பத்திரிக்கும் என் குழந்தை இருந்த ஆஸ்பத்திரிக்கும் பத்து நிமிடங்கள் தான்.  அச்சிறிய தூரம் கூட எனக்கு கடலளவாக தெரிந்தது.   காரை நிறுத்துவதற்குள் கதவை திறந்து இறங்கினேன்.  ஓடிப்போய் என் மகனை வாரி அணைத்து கொஞ்ச வேண்டும் என்று மனம் துடித்தது.  அவன் இருந்த இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.


 கண்ணாடி கதவிற்கு பின் இருந்து பார்த்த எனக்கு கண்ணீர் பெருகியது.  பட்டுத்துணியில் போர்த்த நினைத்திருந்த என் மகன் ஒரு துணி கூட இன்றி ஒரு பூனைக்குட்டியைப் போல் கண்ணாடி பெட்டிக்குள் படுத்திருந்தான்.  ஒரு சிறு துண்டு அவன் இடுப்பிலிருந்து போர்த்தப் பட்டிருந்தது.  செவிலியர் அவனை தூக்கி வந்து என்னிடம் கொடுத்தார்கள்.  என் கைகளில் அவனை வாங்கி விட்டேனா என்ற சந்தேகம். வெறும் துணியை கையில் வைத்திருந்ததை போல் உணர்ந்தேன்.  அவ்வளவு சிறிதாக எடை குறைவாக இருந்தான்.  வாரி அணைத்து கொஞ்சக்கூட பயமாக இருந்தது.  எங்கே அவனுக்கு வலிக்குமோ என்று பயந்து மெதுவாக தூக்கினேன்.  கண் விழித்து அவன் பார்த்த பொழுது அவன் இமைகளில் கூட முடி வளராதிருப்பதை கண்டு பயந்தேன்.  எலும்பை தோல் மூடியது போன்ற உடம்பு.  தலையில் கை வைத்தால் நொலு,நொலு என்ற உணர்வு.  கை, கால்களில் விரல்கள் எல்லாம் தொல தொல என்று இருந்தது.  எப்படி அடா இக்குழந்தையை வளர்க்கப் போகிறோம் என்ற சிந்தனையுடன் பால் கொடுத்தேன்.  பின் அவனை அங்கேயே ஒப்படைத்துவிட்டு நான் இருந்த ஆஸ்பத்திரிக்கு திரும்பிச்சென்றேன்.  உடல் தான் திரும்பியது.  மனம் அங்கேயே சுற்றியது.  தனிமையில் அழுதேன்.


 ஏழாவது நாள் காலை என் தந்தை வந்து ,”இன்று மதியம் குழந்தையை வீட்டிற்கு தூக்கிச் செல்லலாம் “ என்ற நல்ல செய்தியை கூறினார்கள்.  அப்பாடா என்று இருந்தது.  நம் வீட்டிற்கு போய்விட்டால் எப்படியாவது குழந்தையை தேற்றிவிடலாம் என்ற நிணைப்பு.  தயாராக காத்திருந்தேன் அந்த நொடி பொழுதிற்காக.    மணி பதினொன்றரை இருக்கும்.  என் கைதொலைபேசி ஒலித்தது.  என் தந்தை அழைத்திருந்தார்.  குழந்தை இருந்த மருத்துவமணையில் இருந்து அழைப்பு வந்ததாகவும் உடனே குழந்தையை வேலூருக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று கூறினார்.  என் செவிகளில் விழுந்த வார்த்தைகள் மூளையை அடையும் முன் மயங்கி விழுந்தேன்.  மயக்கப் தெளிந்து எழுந்த பின்   என் தாய் நடந்தவற்றை கூறினார்கள். குழந்தைக்கு சிறுநீரில் இரத்தம் வருவதாகவும் உடனடியாக வேலூர் சி.யெம்.சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.  கடவுள் என்னை ஏன் இப்படி சோதிக்கிறார் என்று அழுது புலம்பினேன்.  போட்டு இருந்த உடையுடன் உடனே கிளம்பி குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து வாங்கிக் கொண்டு வேலுருக்கு காரில் கிளம்பினோம்.


  தஞ்சையில் இருந்து வேலூருக்கு செல்ல எட்டு மணி நேரம் ஆகும்.  எப்படி இந்த பச்சிளம் சிசுவை கையில் ஏந்திக் கொண்டு செல்லப்போகிறோம் என்ற பதைபதைப்பு.  மடியில் ஓர் தலையணையை வைத்து அதன் மேல் துண்டு விரித்து குழந்தையை அதில் கிடத்தி அணைத்தவாறு உட்கார்ந்து கொண்டேன்.  என் தாய்,தந்தை, என் கணவர் எல்லோருமாக புறப்பட்டோம்.  வழி எங்கும் இங்க் பில்லரில் பாலை புகட்டினோம்.  கார் கரடு முரடான சாலையில் செல்லும் போதெல்லாம் என் வயிற்றில் போடப்பட்ட தையலின் வலியை கூட உணராமல் என் செல்வத்தை பத்திரமாக அணைத்தபடி கண் இமைக்காமல் அமர்ந்திருந்தேன்.  காரில் நாங்கள் ஒருவருடன் ஒருவர் எந்த உரையாடலும் இன்றி பயணித்தோம்.  எல்லோருக்கும் மனம் முழுதும் வலி.  வாயை திறந்தால் கதறி விடுவோம் என்ற பயத்தில் மெளன விருதம் போல் வாய் மூடிச் சென்றோம்.


 வேலூர் ஆஸ்பத்திரியை நாங்கள் அடைந்த பொழுது மாலை மணி 6.45.  அவசரப்பிரிவில் சென்று எங்கள் நிலையை விளக்கினோம்.  ஆயினும் பயனில்லை.  இரவு பணி பார்க்கும் மருத்துவர் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அந்த வெராண்டாவில் அமர்ந்திருந்தோம்.  அங்கிருந்த பலதரப்பட்ட நோயாளிகளை பார்த்த பொழுது என்னையும் அறியாமல் ஒரு பயம் கவ்விக்கொண்டது.  என் மகன் குணமடைவானா என்ற கேள்விக் குறி.  அறை ஏதும் காலியாக இல்லாததால் எங்களை இரவு ஒரு மணி வரை காக்க வைத்தார்கள்.  பின் அறை ஒதுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டோம்.  டியூட்டி மருத்துவர் வந்து பார்த்துவிட்டு காலை குழந்தை நல மருத்துவர் வந்து பார்ப்பார், இப்பொழுது கூறுவதற்கு ஒன்றும் இல்லை  என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.   பயணக்களைப்பை விட  மனவேதனை மிகுதியாக இருந்ததால் எங்களால் இரவு முழுதும் கண் மூட  முடியவில்லை. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என் மகனை இரவு முழுதும் கைகளில் ஏந்திய படி   விடிவதற்காக காத்திருந்தோம்.....

மீண்டும் நாளை தொடரும் என் ஒலி..........

2 comments:

அப்பாதுரை said...

முள் மேல் நிற்க வைத்திருக்கிறீர்கள்..

Geetha Ravichandran said...

அப்பாதுரை---வருகைக்கு மிக்க நன்றி.