Tuesday, January 31, 2017

அக்னி குஞ்சுகளே!!

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”
-----பாரதியார்
பொது நலம் என்று வந்துவிட்டால்
சுயநலம் கடலடி என்று நிரூபித்துவிட்டான் தமிழன்!
பொது நலத்திற்காக கடல் நுரையென பொங்கி விட்டான்!
இலக்கு ஒன்றாக இருக்குமானால் குறி என்றும் தப்பாது! இலக்கு பலவாயின் எய்தவனே குறியாவான்!
உணர்வீர் இதனை இத்தருணம்!
உணர்வு பூர்வ எழுச்சி உணர்ச்சி பூர்வமானதாக மாறினால்
எழுச்சியில் தாழ்ச்சியே ஏற்படும்!
வார்த்தையில் கண்ணியம், செய்கையில் கட்டுப்பாடும் அவசியம்!
வசை பாடுவதால் அது இசையென ஆகாது!
பொங்கும் பால் வரம்புக்குள் இருக்கும் வரை பயன்படும்
கீழே சிந்தினால் யாருக்கும் பயனில்லை!
எய்தவன் அங்கிருக்க அம்பை குறை கூறி பயன் என்ன என்று யாரும் போக மாட்டார்கள். குத்திய அம்பை எடுத்து முறித்து போடவே முயற்சிப்பர்.
உங்களின் இலக்கை நோக்கி செல்லுங்கள் , யாருடைய இலக்கிற்கும் ஆளாகாதீர்கள்.
வாக்கினிலே சுத்தம் வேண்டும்!
செய்கைதனில் உயர்ச்சி வேண்டும்!
மனிதர்களை மதித்தல் வேண்டும்!
வயதிற்கான மரியாதை வேண்டும்!
சின்னப்பிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது என்றாக்கி விடாதீர்கள்!
ஒவ்வொரு அடியாக எடுத்து வையுங்கள். இது உங்களின் முதல் அடி . முதல் படி கால் பதியாமல் கடைசி படி அடைதல் முடியாது. முதல் அடி ஆணித்தரமானதாக இருக்க வேண்டும். அதில் தடுமாற்றம் ஏற்பட்டால் மீண்டும் தரையில் விழுந்து விடுவோம்.
பொறுமை காத்து இருங்கள். அவர்களுக்கும் கால அவகாசம் கொடுங்கள். நிச்சயம் நன்மை உண்டாகும்!