Thursday, July 21, 2011

சாமியைத் தேடி

இந்தியா வந்ததிலிருந்து ஏதோ ஒன்றை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். என் தேடுதல் வேட்டை ஒரு தொடர் கதையாக போய்க்கொண்டு இருக்கிறது.  சிங்கப்பூரில் இருந்தவரையில் வெள்ளிக்கிழமையானால் கோவிலுக்கு தவறாமல் செல்வது என் வழக்கமாக இருந்தது.  அதுவும் எங்கள் வீட்டருகில் இருந்த சாங்கி ராமர் கோவில் எனக்கு மிகவும் பழகிய ஒரு இடம். வாரம் தவறாமல் சென்று வந்ததால் அக்கோவில் அர்ச்சகர் முதல், மேளம் வாசிப்பவர் வரை எனக்கு தெரிந்தவர்களாகிவிட்டார்கள்.  கோவிலில் அவ்வளவாக கூட்டமும் இருக்காது. அமைதியாக சாமி தரிசனம் செய்து விட்டு வருவேன். கூட்டம் அதிகமாக இல்லாததால் சாமி நம் வேண்டுதலை கவனமாக கேட்கும் என்று ஒரு அறிவீனமான நம்பிக்கை வேறு.  அது மட்டுமல்ல அங்கு கிடைக்கும் புளி சாதம், கேசரி, எலும்பிச்சை சாதம், பொங்கல் போன்ற பிரசாதத்திற்கு என் நாக்கு அடிமை.  என்ன தான் நாம் விதவிதமாக வீட்டில் சமைத்து உண்டாலும்  கோவில் பிரசாதத்திற்கென்று ஒரு தனி ருசி உண்டு. சில விசேஷ நாட்களில் இலை போட்டு பலமான அன்னதானம் வேறு உண்டு.  தவறாமல் கோவிலுக்கு நான் செல்வது பிரசாததிற்குத்தான்  என்று என் கணவரும், குழந்தைகளும் என்னை கேலி செய்வார்கள். இதில் ஒரு 20% உண்மை இருப்பதால் என்னால் மறுப்பு எதுவும் சொல்ல வேறு முடியாது. எது எப்படியோ கோவிலுக்கு செல்வது  எனக்கு மன நிம்மதியை மட்டும் தராமல் ஒரு பழக்கமாக இருந்து வந்தது.

தஞ்சையில் இருந்த வரையில் வீட்டருகில் இருந்த காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வந்தேன்.  பெங்களூர் வந்த நாள் முதலாக என் சாமி தேடும் படலம் தொடங்கியது. புது இடம் பழக  இரண்டு மாதங்கள் பிடித்தது. சாமான் அடுக்கி வைப்பதற்குள் போதும் போது என்றாகி விட்டது. இதில் நான் எங்கு கோவிலுக்கு போவது?  ஆனால் வெள்ளிக்கிழமையானால் பயித்தியம் பிடித்தது போல் தோன்றும்.  தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது போல் கால்கள் என்னை அறியாமலேயே கோவிலை தேடி போகத் தூண்டும்.  மனதில் சொல்லத் தெரியாத ஒரு தவிப்பை உணர்ந்தேன்.  வீட்டருகே ஏதேனும் கோவில் உள்ளதா என்று நண்பர்களை கேட்டேன்.  அவர்கள் காட்டிய வழியை கண்டு பிடித்து ஒரு வெள்ளிக்கிழமை ஒரு கோவிலுக்குச் சென்றேன்.  என்ன சாமி என்று பார்த்தால் எனக்கு பரிட்சயமில்லா பெயராக இருந்தது.  ச்சௌடேசுவரி அம்மன் என்று பெயர் இருந்தது.  என்னடா இது நமக்கு தெரியாத சாமியாக இருக்கிறதே ! இது அமைதியான சாமியா அல்லது ஆக்ரோஷமான சாமியா? இந்த சாமி என்  வேண்டுதளை ஏற்குமா? இதை கும்மிடுவது எப்படி? எந்த முறையில் சாமி கும்மிடுவது என்று ஒரே குழப்பமாக இருந்தது.  சரி கோவில் என்று வந்தாகிவிட்டது எந்த சாமியாக இருந்தால் என்ன நாம் மனதில் தோன்றியபடி வேண்டிவிட்டு செல்லலாம் என்று முடிவு செய்து உள்ளே சென்றேன்.  உள்ளே நுழையும் முன்பு கால் கழுவும் இடத்தில் கால்களை நனைத்து விட்டு உள்ளே செல்லலாம் என்று  அங்கு சென்றால் ஒரே அழுக்காக இருந்தது அந்த இடம்.  பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு கைகளை அங்கு பலர் கழுவியதால் சாதமாக இருந்தது.  அந்த அழுக்கு இடத்தில் கால்களை கழுவ மனமில்லாமல் சாமிக்கு ஒரு சாரி சொல்லி விட்டு படியை தொட்டுக் கும்பிட்டு விட்டு உள்ளே சென்றேன்.


10.30 -12  வெள்ளிக்கிழமை ராகு காலம் ஆதலால் கோவிலுக்குள் அடி எடுத்து வைக்க முடியாத படி பயங்கரக்கூட்டம்.  எப்படியோ முண்டி அடித்து கோவிலுக்குள் சென்று சாமிக்கருகில் நின்று விட்டேன்.  சாமி நம்ப ஊர் அம்மன் சாமியை போன்று தான் இருந்தது.  என்னை சுற்றி ஒரே கன்னடக்குரல்கள். ஆஹா மொழி தெரியாத இடத்தில் மாட்டிகொண்டுவிட்டோம் என்று ஒரு தவிப்பு. அர்ச்சகர்கள் வந்து அர்ச்சனை சீட்டுகளை வாங்கி சென்றார்கள். சரி அர்ச்சனை முடிந்து தீபாராதனை பார்த்துவிட்டு செல்லலாம் என்று அந்த கூட்ட நெரிசலில் சமாளித்து நின்று கொண்டிருந்தேன்.  என்னை சுற்றி நின்றவர்களை பார்த்தப்பின் நான் சாமி கும்பிடுவதையே மறந்து , பயந்து நின்றேன் . ஏன் என்று வியப்பாக இருக்கிறதா?? என்னை சுற்றி நின்றவர்கள் அத்துனை பேரின் கைகளிலும் ஒரு தட்டு. அந்த தட்டில் ஒரு பத்து எலுப்பிச்சை பழ விளக்குகள் எறிந்து கொண்டு இருந்தது.  அவரவர் தங்கள் தட்டை தூக்கி சாமிக்கு ஆரத்தி எடுத்தார்கள்.  நான் வேறு உயரத்தில் கத்திரிக்காய்க்கு கால் முளைத்ததைப் போன்ற தோற்றமா, பின்  என் நிலமையை யோசித்துப்பாருங்கள்? போதாதக்குறைக்கு வெள்ளிக்கிழமை என்று தலை குளித்து கூந்தலை லூசாக க்ளிப் செய்து இருந்தேன்.எப்போ யார் என் தலை முடியில் நெருப்பை பற்ற வைத்து விடுவார்களோ என்ற பயம். என் முடியை தோளுக்கும் கழுத்துக்கும் இடையில் வைத்து பிடித்துக்கொண்டு, ஒரு கையில் என் சல்வார் துப்பட்டாவை பிடித்துக்கொண்டு சாமியை பார்த்து நின்றேன்.  கண்களை மூடி சாமி கும்பிட பயமாக இருந்தது.     ஒருவரின் தட்டு தவறி விழுந்து யார் மீதாவது சிறிது தீப்பிடித்தாலும் அவ்வளவு தான். அங்கு கூடி இருந்த யாராலும் தப்பித்து வெளியே வர இயலாது.  அவ்வளவு கூட்ட நெரிசல், இட நெருக்கடி வேறு.  அந்த கூட்டத்திலும், குடும்ப கதைகளை அலச சிலர் அசரவில்லை.  இடமே இல்லாத அந்த இடத்திலும் சிலர் சுற்றி அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டே பொறுமையாக எலும்பிச்சை பழங்களை அறுத்து, சாறு பிழிந்து அதனை விளக்கு போன்று தயார் செய்து கொண்டு இருந்தனர்.    அவசர அவசரமாக சாமிக்கு ஒரு ஹாய், பாய் சொல்லிவிட்டு பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி வந்தேன். சுற்றும் வழியெல்லாம் மக்கள் அமர்ந்து கொண்டு சாமி பாட்டுகளை பாடிக்கொண்டிருந்தனர்.  சுற்றி வந்து  கீழே  விழுந்து, கும்பிடு ஒன்று போட்டுவிட்டு வெளியே வ்ந்தேன்.  வாசல் அருகில் ஒரு இலையில் சிறிதளவு பிரசாதம் கொடுத்தார்கள். வந்ததற்கு பிரசாதமாவது கிடைத்ததே என்று வாங்கிக்கொண்டு விட்டாப் போதும் என்று வேகமாக நடந்து பஸ் பிடித்து வீட்டை அடைந்தேன்.    வீட்டை அடைந்த பின் ஏதோ சாதித்தது போன்ற உணர்வு.  ஒரு பக்கம் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு சென்று வந்த மகிழ்ச்சி இன்னொரு பக்கம் இனி இப்படி கூட்டமான கோவிலுக்கு போகக்கூடாது என்று ஒரு முடிவு. ஏனென்றால் சாமியிடம் என் கோரிக்கைகளை வைக்கக் கூட என்னால் முடியவில்லை.  கூட்ட நெரிசலில் என்னை நான் காப்பாற்றிக்கொண்டு வந்தால் போது என்று ஆகிவிட்டது.    வேறு ஏதாவது கோவில் வீட்டருகே இருக்கிறதா என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று  முடிவு செய்தேன்.  கூட்டம் மிகுதியாக இருக்கும் கோவிலில் மனம் ஒன்றி சாமி கும்பிட முடியவில்லை.  சாமியை ஒரு நிமிடம் கூட அமைதியாக பார்க்க முடியாத நிலை.  அப்படி அவசரமாக கோவிலுக்கு பேருக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன??

அடுத்தடுத்து நான் வெளியே செல்ல ஆரம்பித்தவுடன் அருகில் ஏதாவது கோவில் தென்படுகிறதா என்று தேடத்தொடங்கினேன்.  அருகில் ஒரு கோவில் இருக்கிறது அதற்கு போய் வா என்று என் கணவர் சொன்னார். என்ன சாமி என்று நான் கேட்ட பொழுது முனீசுவரன் என்றார். அதற்கு நான்,” முனீசுவரன் எல்லாம் எனக்கு தெரிந்த சாமி இல்லை. நான் எனக்கு தெரிந்த சாமி கோவிலுக்குத்தான் செல்வேன்,” என்று கூறினேன்.  எனக்கு தெரிந்த சாமி எல்லாம், வினாயகர், முருகர், பெருமாள், மாரியம்மன், துர்கை, ஆஞ்சனேயர் என்று அமைதியான சாமிதான். என்ன தான் அய்யனார், வீரனார் எங்கள் குலதெய்வமானாலும், சிறு வயது முதல் முருகன், சிவன் என்று கும்பிட்டு பழக்கமாகிவிட்டது.  மேலும், அய்யனார், வீரனார் கோவில்களுக்குள் பெண் பிள்ளைகளை அனுமதிக்காத காரணத்தால் அக்கோவில்களுக்கு போய் பழக்கம் இல்லை. எனவே நான் சிவன், பெருமாள் கோவில்களை தேடி அலைந்தேன்.  கண்ணில் பட்டதெல்லாம் காவேரி அம்மா, முனீசுவரன், சௌடேசுவரி என்ற சாமி கோவில்கள்தான்.  என்ன தான் அவையும் கோவில்கள் என்றாலும் என்னால் மனமுவந்து அக்கோவில்களுக்கு போக முடியவில்லை. என் சாமியைத் தேடி நான் அலைந்தேன்.  ஒரு வழியாக என் மகனை டியூஷன் விட்டு வரும் வழியில் ஒரு முருகர் கோவிலை பார்த்தேன்.  பார்த்தவுடன் அப்பாடா என்று இருந்தது.  அப்பா வீட்டுக்கு போகும் மகிழ்ச்சி.  அன்று நேரம் ஒத்து வராததால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. சீக்கிரமே என் சாமியைத் தேடி அக்கோவிலுக்கு செல்வேன்.  காவேரி அம்மா, முனீசுவரன், சௌடேசுவரி அம்மா யாவரும் என்னை மன்னிக்க வேண்டும்.


எனக்கு எம்மதமும் சம்மதம் தான். சாமி தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதையும் நான் நம்புகிறேன் ஆனாலும் கோவிலுக்குள் செல்லும் பொழுது நான் அடையும் நிம்மதி , மகிழ்ச்சி எல்லாம் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.  பழகிய ஒன்றை நோக்கித்தான் நம் மனம் எப்பொழுதும் நடை போடும்.  வேறு வழியில்லை என்றால் புதிதாக வருவதை நாம் ஏற்றுக்கொள்வோம்.  இதனால் தான் என்னவோ நமக்கு நாம் பிறந்து , வளர்ந்த, இடம், பழகிய நண்பர்கள், என்று நினைக்கும் பொழுதே ஒரு சுகம் மனதிற்குள் ஏற்படுகிறது.   நாம் நம் ஊரில் இருக்கும் பொழுது நம் உறவினர்களை தேடுகிறோம். ஊரை விட்டு வெளியே வந்தவுடன் நம் ஊர், நம் மொழி பேசுபவர்களை தேடுகிறோம்.  நம் நாட்டை விட்டு வெளியே வந்தவுடன் நம் நாட்டினரை தேடுகிறோம்.  பின் மனிதர்களே இல்லாத இடத்திற்கு போனால் மனிதர்களை தேடுவோம். இப்படியாக ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் நமக்கு பரீட்சயமான ஒன்றையே முடிந்த வரை தேடுகிறோம். கிடைக்காத நேரத்தில் வந்ததை ஏற்றுக்கொள்கிறோம்.. இங்கு வேறு கோவிலே இல்லை என்றால் நானும் முனீசுவரனிடம் தான் தஞ்சம் அடைந்து இருப்பேன்.  ”ஒன்னுமே இல்லாதாதற்கு ஒரு ஆம்புளப்புள்ள” என்று கூறுவதைப்போன்று.








7 comments:

Sridhar said...

Enjoyed the narration.

Nithya Saravanan said...

Geetha Akka... Hope you remember me. Latha's friend Nithya who came to Boston for a short term.

You could visit Rajarajeshwari Temple in Mysore road over weekend. Also Vasanthapura temple in Kanakpura Road is peaceful. These are far away from Koramangala.

If you are looking for a temple around Koramangala, you can visit Ganesha temple in Koramangala 5th Block.

அமுதா கிருஷ்ணா said...

நெல்லையில் வாரம் மூன்று முறை வீட்டிற்கு பக்கத்தில் நெல்லையப்பர் பார்த்த எனக்கு இங்கு தாம்பரம் வந்த பின் பெரிய கோயில் எதுவும் இல்லாமல் கோயிலே போகாமல் ரொம்ப நாட்கள் இருந்தேன்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

||ஆனால் வெள்ளிக்கிழமையானால் பயித்தியம் பிடித்தது போல் தோன்றும். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது போல் கால்கள் என்னை அறியாமலேயே கோவிலை தேடி போகத் தூண்டும்.||

உள்ளப் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்,
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே..

மதப் பிடிமானம் இருப்பதை விட ஆன்மிக பிடிமானம் இருப்பது நல்லது-- better to be spiritual than religious

Balancing Act said...

Geetha, I was reading your sami thedal story. it was good experience. I like it and have experienced the same. The most interesting thing I liked about story is the following :-

வேறு வழியில்லை என்றால் புதிதாக வருவதை நாம் ஏற்றுக்கொள்வோம். இதனால் தான் என்னவோ நமக்கு நாம் பிறந்து , வளர்ந்த, இடம், பழகிய நண்பர்கள், என்று நினைக்கும் பொழுதே ஒரு சுகம் மனதிற்குள் ஏற்படுகிறது. நாம் நம் ஊரில் இருக்கும் பொழுது நம் உறவினர்களை தேடுகிறோம். ஊரை விட்டு வெளியே வந்தவுடன் நம் ஊர், நம் மொழி பேசுபவர்களை தேடுகிறோம். நம் நாட்டை விட்டு வெளியே வந்தவுடன் நம் நாட்டினரை தேடுகிறோம். பின் மனிதர்களே இல்லாத இடத்திற்கு போனால் மனிதர்களை தேடுவோம். இப்படியாக ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் நமக்கு பரீட்சயமான ஒன்றையே முடிந்த வரை தேடுகிறோம். கிடைக்காத நேரத்தில் வந்ததை ஏற்றுக்கொள்கிறோம்..


I have learnt this a while ago when I started working outside of Chennai. It is completely true. The same is more experienced when I arrive in this country (US).

One more thing to understand here - It will be good to make the unkonowns known to help ourselves. If you do anything for 21 times, it becomes part of your subconscious mind and habit. I practiced this in few things and it has worked. The same thing also helped in replacing some bad habits with good habits :) I just wanted to share this experience with you.

Durga Karthik. said...

good tip

Durga Karthik. said...

You have a wealth of Subtle feelings and a skill to express it akka.