Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, September 22, 2010

தாய்மை

திறக்காத கண்களை
திறக்க வைத்து
பல் துலக்கி
குளிக்க வைத்து
அவசரமாய் சீருடை மாட்டி
சுட்டு வைத்த இட்லியை
வாயில் திணித்து
முழுங்கி விடு என
ஒருவாய் தண்ணீரும் கொடுத்து
புத்தகப் பையை தோளில் மாட்டிவிட்டு
பள்ளிக்கு கையசைத்து
அனுப்பி விட்டு
மாலை வரை
காத்திருப்பேன் எப்பொழுது
நீ திரும்பி வருவாய் என.


வந்த பின்
கை,கால் கழுவ வைத்து
சாப்பிட டிபனும் கொடுத்து
”எடுத்து வா” புத்தகப் பையை என்பேன்.
பையை எடுத்து வர பத்து நிமிடம்
திறப்பதற்கோ ஐந்து நிமிடம்
பாட புத்தகத்தை எடுப்பதற்கு
மற்றுமொரு ஐந்து நிமிடம்.

வீட்டு பாடம்
செய்ய வைப்பதற்குள்
என் தலைக்குள் பெரும் சூறாவளி.
காற்றின் வேகம்
மின்சாரமாய் உடம்பெங்கும் பாய
கோபத்தில் கைகளோ
உன் உடம்பில்
தடம் பதிக்க
அழுது கொண்டே முடித்திடுவாய்
வீட்டுப் பாடம் அனைத்தையுமே.
தேம்பி தேம்பி
களைத்திடுவாய்
படித்து முடித்தப் பின்
உறங்கிடுவாய்.

புயலுக்குப் பின் அமைதியாக
நீ உறங்கிய பின்
உன் அருகில்
அமைதியாய் வந்து
உன் தலையை
என் மடியில் கிடத்தி
உன் தலை கோதி
நெற்றியில் முத்த மிடுவேன்
கண்களில் நீர் நிரம்பி
கண்ணத்தில் வழிந்தோட
உன்னை வாரி அணைத்து
தூங்கும் உன்னிடம்
காதுகளில்
மெதுவாக ஓதிடுவேன்
“சாரிடா கண்ணா” என்று.
 

Thursday, September 16, 2010

சில்லரைத்தனம்

கோவிலுக்கு போவேன்
இறைவனை அருகில்
சென்று தரிசிக்க
மடித்து வைத்த காசை
யாருக்கும் தெரியாமல்
பூசாரியின்
கையில் வைத்து
தினிப்பேன்.

கோவில் வாசலில்
ஒரு வேலை
உணவுக்கு
பிச்சை எடுக்கும்
வயதான முதியவருக்கு
சில்லரை இல்லை என்பேன்.

ஊனம்

கண் இல்லை
கால் இல்லை
வாய் பேச முடியவில்லை
நாங்கள் யார்??
ஊனமுற்றோர்.

கண் உண்டு
கால் உண்டு
திறனாய் பேச வாயும் உண்டு
இதயத்தின் உள்ளிருக்கும்
சிறியதாம் மனசாட்சி மட்டும்
இல்லா நீங்கள் யார்???

Friday, July 30, 2010

அழகு

சிறியது என்றும் அழகே!
சிறு சிறு தூரல்கள்,
பாதி இதழ் விரித்த சிறு சிறு மொட்டுக்கள்,
தாயின் பாதுகாப்பில் உணவு தேடும்
பஞ்சு பந்து போன்ற  சிறு கோழிக் குஞ்சுகள்,
பால் அருந்தி களைப்பில் உறங்கும்
சின்னஞ் சிறு குழந்தை,
பார்த்தும் பார்க்காதது போல் கடந்துபோகும்
காதலியின் உதட்டோர சிறு புன்னகை,
வாணில் கண் சிமிட்டும் சின்னச் சின்ன நட்சத்திரங்கள்,
அடர்ந்த காட்டுக்குள் நடக்கையில்
நம் கால் நணைக்கும் சிறு ஓடை,
பச்சை விரிப்பு விரித்தது போல்
சிறிதாக வளர்ந்திருக்கும் சிறு நெற்கதிர்கள்,
ரோட்டோரத்தில் சுதந்திரமாய் விளையாடும்
சிறிய காவி நிற நாய்க்குட்டி,
ஆழ்கடலில் பதுங்கியிருக்கும்
சின்ன சின்ன முத்துக்கள்,
அலையேறி கடற்கரையை
வந்தடையும் சிறு சிறு சிப்பிக்கள்,
இரண்டு வரியானாலும்
கோடி தத்துவம் கூறும்  திருக்குறள்,
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரியது போல்
அழகாய் சிறு தொட்டியில் வீற்றிருக்கும்
“போன்சாய்” ஆலமரம்,
சிறு பிள்ளை ஆனந்தமாய்
சமைத்து பழகும் சின்னச் சின்ன சொப்புச் சாமாண்கள்,
புத்தக சுமையின்றி ஒரே சீறுடையில்
பள்ளி செல்லும் பாலர் பள்ளிச் சிறார்கள்,
பேசப்பழகும் முன் குழந்தை
சொல்லும் “ங்கா” என்ற சிறு வார்த்தை,
”நீயே என் உலகமென” கண்சிமிட்டி
மனைவிடம் கணவன் சொல்லும் சிறு பொய் ,
இவையெல்லாம் கொள்ளை அழகு தான்.
ஆனால் ஒன்றுமட்டும் அழகாயிராது
சிறிதாக இருந்துவிட்டால்.
இதயம் கைப்பிடி அளவென்றாலும்
உள்ளிருக்கும் மனம்
கடலினும் பெரிதாய்
வானைவிட அகன்றதாய்,
காற்றைவிட பரந்ததாய்,
இவ்வுலகை விட விசாலமாய்
நம் யாவர்க்கும் இருக்குமானால்
வாழ்வாங்கு வாழும் நம் குலம்.