சிறியது என்றும் அழகே!
சிறு சிறு தூரல்கள்,
பாதி இதழ் விரித்த சிறு சிறு மொட்டுக்கள்,
தாயின் பாதுகாப்பில் உணவு தேடும்
பஞ்சு பந்து போன்ற சிறு கோழிக் குஞ்சுகள்,
பால் அருந்தி களைப்பில் உறங்கும்
சின்னஞ் சிறு குழந்தை,
பார்த்தும் பார்க்காதது போல் கடந்துபோகும்
காதலியின் உதட்டோர சிறு புன்னகை,
வாணில் கண் சிமிட்டும் சின்னச் சின்ன நட்சத்திரங்கள்,
அடர்ந்த காட்டுக்குள் நடக்கையில்
நம் கால் நணைக்கும் சிறு ஓடை,
பச்சை விரிப்பு விரித்தது போல்
சிறிதாக வளர்ந்திருக்கும் சிறு நெற்கதிர்கள்,
ரோட்டோரத்தில் சுதந்திரமாய் விளையாடும்
சிறிய காவி நிற நாய்க்குட்டி,
ஆழ்கடலில் பதுங்கியிருக்கும்
சின்ன சின்ன முத்துக்கள்,
அலையேறி கடற்கரையை
வந்தடையும் சிறு சிறு சிப்பிக்கள்,
இரண்டு வரியானாலும்
கோடி தத்துவம் கூறும் திருக்குறள்,
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரியது போல்
அழகாய் சிறு தொட்டியில் வீற்றிருக்கும்
“போன்சாய்” ஆலமரம்,
சிறு பிள்ளை ஆனந்தமாய்
சமைத்து பழகும் சின்னச் சின்ன சொப்புச் சாமாண்கள்,
புத்தக சுமையின்றி ஒரே சீறுடையில்
பள்ளி செல்லும் பாலர் பள்ளிச் சிறார்கள்,
பேசப்பழகும் முன் குழந்தை
சொல்லும் “ங்கா” என்ற சிறு வார்த்தை,
”நீயே என் உலகமென” கண்சிமிட்டி
மனைவிடம் கணவன் சொல்லும் சிறு பொய் ,
இவையெல்லாம் கொள்ளை அழகு தான்.
ஆனால் ஒன்றுமட்டும் அழகாயிராது
சிறிதாக இருந்துவிட்டால்.
இதயம் கைப்பிடி அளவென்றாலும்
உள்ளிருக்கும் மனம்
கடலினும் பெரிதாய்
வானைவிட அகன்றதாய்,
காற்றைவிட பரந்ததாய்,
இவ்வுலகை விட விசாலமாய்
நம் யாவர்க்கும் இருக்குமானால்
வாழ்வாங்கு வாழும் நம் குலம்.
2 comments:
எல்லா இடுகையும் வாசித்தேன் சகோதரி. நல்லா எழுதுறீங்க..தொடர்ந்து எழுதுங்க.
(சகோதரர் ரவின்னு ஒரு நண்பர்,நண்பரா சகோதரரான்னு கேக்காதீங்க. ரெண்டும்தான். அவரை பார்க்கும் போது நான் சொன்னதாக சொல்லுங்க, "இதுவல்லோ குடும்பம்!")
சகோதரர் ராஜாராம் அவர்களே,
உஙகள் ஆதரவுக்கு நன்றி. ரவி உங்கள் கவிதைகளை காண்பித்தார்கள். மிகவும் அழகாக இருந்தன.
Post a Comment