நான் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கட்டுரையை தமிழில் மொழி பெயர்க்க முயன்றிருக்கிறேன். இது ஒரு கன்னி முயற்சி.... உங்கள் நல்லாதரவை நம்பி நான் களத்தில் குதித்துள்ளேன்.
தொலைதூரம் இட்டுச் செல்லும் சிறு அடிகள்.....
சிறு சிறு விஷயங்கள் நம்முடைய வாழ்க்கைப் பற்றிய பார்வையை எப்படி மாற்றுகின்றன என்பதைக் கண்டு நான் பலமுறை வியந்துள்ளேன். நாம் காலையில் படுக்கையை விட்டு எழும் நொடி முதல் இரவு படுக்கைக்கு செல்லும் நொடிவரை நம்மைப் பற்றி ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் நினைத்துக்கொண்டு இருக்கிறார் என்றால் நம்முடைய ஒவ்வொருநாளும் ஒளி மயமானதாக மாறிவிடாதா ?
காலையில் மிகவும் ’பிசியாக’ இருக்கும் தாய் தன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவரை அலுவலகம் அனுப்பிவிட்டு படுக்கை அறைக்கு சென்று பார்க்கும் பொழுது தன் கணவர் ஏற்கனவே படுக்கையை அழகாக தட்டிப்போட்டிருப்பதை பார்த்தால் எண்ணில் அடங்கா மகிழ்ச்சியல்லவா அடைவாள்!. வானத்தில் சிறகு விரித்து பறப்பதை போன்று உணர்ந்து தன்னுடைய காலை காப்பியை அமைதியாக உட்கார்ந்து ரசித்து ருசித்து பருகுவாள்.... பல வேலைகள் பட்டியல் போட்டு அவளுக்காக காத்திருந்தாலும். இந்த பேருதவிக்காக ( அவளைபொருத்தவரை ) மனதுக்குள் தன் கணவரை பாராட்டுகிறாள். அவனுக்கென்னவோ ஐந்து நிமிட வேலை தான். ஆனால் அவளுடைய இந்த உதவியின் பலன் நாள் முழுதும் அவளின் எல்லா செயல்களிலும் பிரதிபலிக்கிறது. அவளுக்கு புத்துணர்ச்சியைஊட்டுகிறது. தன் வேலையை பங்கிட்டுச் செய்ய கணவன் தோள் கொடுக்க
இருக்கிறான் என்ற சந்தோஷம்.
"உன் குடும்பம் உனக்கு ஏன் மிக முக்கியமானது?” என்று என் மூன்றாம் வகுப்பு பயிலும் மகனின் பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவன் எழுதியிருந்த பதில் எனக்கு வியப்பாக இருந்தது. அவன் என்ன எழுதியிருந்தான் தெரியுமா? “எங்கள் குடும்பத்தில் நாங்கள் யாவரும் ஒன்றாக உணவு உண்போம், சேர்ந்தே வெளியில் செல்வோம். ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு செய்வோம். எங்களுக்குள் பாசம் இருக்கிறது. நாங்கள் ஒன்றாக வீட்டில் சினிமா பார்போம்,” என்றெல்லாம் எழுதி இருந்தான். நாம் எவ்வித முயற்சியும் இன்றி தினமும் செய்யும் அன்றாட செயல்கள் தான் இவை. ஆனால் அந்த சிறிய உள்ளத்தைப் பொருத்தவரை இவையெல்லாம் ஒருவரை ஒருவர் இணைக்கும்
இணைப்புச் சங்கிலி (bonding chains). இவையே அவனுக்கு வாழ்கையில் நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வையும் அளித்துள்ளது. நம்முடைய முழு ஈடுபாடு இல்லாத சில செயல்கள் சில சமயங்களில் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
சிறு வயது முதலே என் மகளுக்கு அவள் தூங்கும் முன் நான் போர்த்திவிட்டு “குட் நைட்” சொல்ல வேண்டும். இப்பொழுது அவளுக்கு வயது பன்னிரெண்டு.இன்றும் தினமும், ”அம்மா போர்த்தி விட வாருங்கள்“என்பாள். அடுப்படி வேலையை எப்படா முடித்துவிட்டு நாமும் படுப்பது என்று இருக்கும் எனக்கு, சமயத்தில் அவளின் அழைப்பு எரிச்சலை ஏற்படுத்தும். “நீயே போர்த்திக்கொண்டு தூங்கு. நான் வேலையாக இருக்கிறேன்.... இந்த வயசிலும்
உன்னால் தானாக போர்த்திக் கொள்ளமுடியாதா?” என்று கத்துவேன். அவளும்
முணுமுணுத்துக்கொண்டே தூங்கி விடுவாள். தூங்கும் அவள் முகத்தில் ஓர் அதிர்ப்தி நிழலாடும்.
நிதானமாக யோசித்தால் அவளை திருப்திப்படுத்த இரண்டேநிமிடங்கள்தான் ஆகும். என் வேலையை பாதியில் நிறுத்த மனமில்லாமல்தான் நான் அதை செய்ய மறுக்கிறேன்.நான் அலுப்பு பாராமல் செய்யும் நாட்களில் அவள், ” நான் தூங்கும்பொழுது கூட என் தாய் என்னை பார்த்துக்கொள்வாள்,” என்ற நம்பிக்கையுடன் ஆனந்தமாகவும், அமைதியாகவும் தூங்கச் செல்கிறாள். என்னைப் பொருத்தமட்டில் போர்வையை போர்த்துவது ஓர் செயல். ஆனால் அவளை பொருத்தமட்டில் ஒவ்வொரு இரவும் அம்மாவின் அன்பும்,பாசமும் தன்னை போர்த்துவதாக கருதுகிறாள்.
நான் என் நண்பர்களை அடிக்கடி தொலைபேசியில் அழைத்து பேசமாட்டேன். ஆனால் அவர்கள் பிறந்த நாளன்று தவறாமல் அழைத்து வாழ்த்துவேன். இச்சிறிய செயல் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கும் என்பது என் நம்பிக்கை. மற்றவர்களை மகிழ்விக்க ஒரு சில நிமிடங்களே போதுமானது. நம் வாழ்க்கையின் ஓர் சிறு பகுதியை இதற்கு செலவிட்டால் தவறில்லை. ஆமாம் சிறு அடிகள் நம்மை எல்லையில்லா சந்தோஷப் பாதைக்கு இட்டுச் செல்லும்.
இன்றே எடுத்து வைப்போம் சிறு அடிகளை.....
8 comments:
அருமையான பதிவு, நல்ல எண்ணங்களை, நல்ல செயல்களை செய்ய தூண்டும் பதிவு.
பகிர்ந்தமைக்கு நன்றிகள். தொடருங்கள் மேலும்.
நல்ல எழுத்து நடை. இது மொழிபெயர்ப்பு மாதிரி தெரியவில்லை. பாராட்டுக்கள்.
நல்ல எழுத்து நடை. இது மொழிபெயர்ப்பு மாதிரி தெரியவில்லை. பாராட்டுக்கள்.
சின்ன சின்ன விசயங்கள் கூட எவ்வளவு மாற்றங்களை உண்டு பண்ணும் என்பதை அழகா சொல்லிருக்கிங்க. இது ஒரு பெரிய விசயமா என்ன அப்டின்னு அலட்சியமா நினைக்கிறது கூட நாளடைவில் பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
நல்ல நடை. தமிழில் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
கீதா கஃபே,
தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு எதிர்ல இருந்த ஒரு அருமையான உணவகம். இப்ப இல்ல.
உங்கள் அனைவரது வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
அக்கா இந்த கட்டுரை ரொம்ப நல்லா இருக்கு....
குடும்ப பிணைப்புக்கு மிகவும் அவசியமான பாசத்தின் வெளிப்பாடான சிறுசிறு செயல்களின் அவசியத்தையும் பலருக்கும் உணர்த்தும்...
thanks Roswick.
Post a Comment