Tuesday, January 22, 2019

HOARDING......

HOARDING......
வெளியூரில் உள்ள மகளிடம் கேட்டேன்-” உனக்கு என்ன பொருள் வாங்கி வைக்க வேண்டும்? “என்று.அதற்கு அவள் கூறினாள்-” Mama I don”t want anything. I have everything I need. Last week I saw a you tube video in which a Japanese lady said how to de clutter the house. So I decided I won’t hoard things hereafter and would de clutter my room." எனக்கு கேட்க ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஏன் இந்த அறிவு வர மறுக்கிறது?
Hoarding என்பது பொருட்களில் மட்டுமல்ல பல ரூபங்களில் நம்மை பேய்பிடியாய் பிடித்து ஆட்டுகின்றது. இருக்கும் புத்தகங்களை படிக்காமல் மேலும் மேலும் வாங்கி சேர்ப்பது. அதற்கு அறிவை வளர்த்துக்கொள்ளத்தானே இதனை செய்கிறேன் என்ற சப்பைக்கட்டு வேறு. பார்க்கும் சமையல் குறிப்பையெல்லாம் சேகரித்து வைத்துக்கொள்ளுதல். தெரிந்த சாம்பாரையும், ரசத்தையுமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக மனநிலைக்கு ஏற்றவாறு சமைக்கும் எனக்கு எதற்கு இத்தனை சமையல் குறிப்பு? அடுத்தது துணி பைத்தியம். அலமாரியில் இருப்பதையே ஒழுங்காக மடித்து வைத்து போட்டுக்கொள்ள நேரமும் இல்லை , போக வர இடமும் இல்லை. இதில் புது fashion என்று பார்ப்பதை எல்லாம் வாங்கி பத்திரமாக வைத்துக்கொள்வது.. மெஷின் தான் துணி துவைக்கிறது என்றாலும், அதனை காயவைத்து, மடித்து அவரவர் அலமாரியில் வைப்பதற்குள் ஒரு ராமாயணமே பாடிவிடுவேன். போட்டு பழசான துணியை விட பார்த்தே பழசான துணிதான் அதிகம். நம்மில் பலரை இந்த hoarding வலைக்குள் சிக்க வைப்பதே "SALE" என்ற வார்த்தை தான். விற்பவன் என்னவோ காசு வாங்காமல் சும்மா விற்பதைப் போல் வாங்கி வைத்து விடுகிறோம். அப்படி வாங்கும் பல பொருட்கள் வீட்டில் சும்மாவே தான் தூங்கி கொண்டிருக்கும்.
. Pinterest, Instagram, FB , whatsappல் பார்க்கும் கைவிணை பொருட்கள் செய்வது எப்படி, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி, சிகை அலங்காரங்கள் செய்வது எப்படி, முக அலங்காரம் செய்வது எப்படி, நகை டிசைன், சாமி பாடல்கள், சுலோகங்கள் என்று எதை பார்த்து பிடித்து போனாலும் அதனை சேமித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் வேறு. நூறு விஷயங்களை save செய்து வைத்து இருந்தால் அதில் ஒன்றிரண்டு விஷயங்களைக்கூட திரும்பி பார்ப்பது கிடையாது. பொருட்களில் துவங்கி, பாடல்கள், செய்திகள், நண்பர்கள், என்று பல நிலைகளில் இந்த hoarding வியாதி நம்மில் பலபேரை வாட்டி வதைக்கிறது. இப்பொழுது கைத்தொலைப்பேசி காமிரா வேறு வசதியாய் போனது. ஜாக்கெட் டிசைன் , கோலம், பிடித்த ஓவியங்கள், கோவில் சுவற்றில் பார்க்கும் சுலோகங்கள், கோவில் சாமி சிலைகள் என்று எல்லாவற்றையும் படம் பிடித்து தள்ளி விடுகிறோம். அத்தனையும் சேமிப்பு வங்கியில் இருப்பது போல் பத்திரமாக இருக்கிறது.
என் அப்பா கூறுவார், less luggage more comfort. இந்த அறிவு எனக்கு எப்பொழுதுதான் வரப்போகிறதோ? என் மகளுக்கு சீக்கிரமே வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் சந்ததியர் கட்டாயம் நம்மைப் போன்று சாமான்களைக்கட்டிக் கொண்டு வாழ்க்கையின் பாதி நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக. முன்பை விட இப்பொழுது impulsive buying குறைந்து விட்டதுதான். அதற்கு காரணம் ஞானோதயம் அல்ல சுத்தம் செய்ய முடியாத நிலை. வயதாக ஆக கொஞ்சமாக சாமான்களை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ ஆசை வருகிறது. நடைமுறையில் எப்பொழுது சாத்தியப்படுமோ ? பொருட்களை மட்டுமல்ல,
ஆசைகளையும், கோபங்களையும், வெறுப்புக்களையும், வக்கிரங்களையும், hoarding செய்வதை விட்டு ஒழிக்க பழக வேண்டிய காலம் வந்து விட்டது.
பிகு: இன்று மனசாட்சியின் குத்துதலுக்கு உட்பட்டு பல நாட்களாக காத்துக்கிடந்த பேண்ட்டை ஒரு வழியாக எடுத்து மடித்து தைத்து விட்டேன். இப்படி பல வேலைகள் வீட்டில் hoard செய்யப்பட்டு என் தீண்டலுக்காக காத்துக்கிடக்கிறது. கண்டும் காணாமல் இருப்பதை விட தினம் ஒரு சிறு முயற்சியாவது செய்ய வேண்டும் என்ற முடிவுடன் என் தையல் வேலை இன்று இனிதே முடிந்தது.

Friday, January 18, 2019

மறுப்பக்கம்

மறுப்பக்கம்
காலை வெயில் உடம்பிற்கு நல்லதாம். எல்லோரும் கூவினார்கள் கேட்கவில்லை. டாக்டர் சொன்னவுடன் வேறு வழியின்றி நேற்று காலை வீட்டு வேலையை அப்படியே போட்டுவிட்டு ,என் உப்பரிகையை விட்டு கீழே இறங்கிச் சென்றேன். வெயில் கண்களை கூசும் அளவிற்கு சுல்லென்று அடித்தது. கையில் இருந்த கைதொலைப்பேசியை தடவியபடியே அங்கும் இங்குமாக மெதுவாக நடந்து கூலியில்லாமல் வெய்யிலின் சேவையை பெற்றுக்கொண்டேன். இந்த ஞானோதயம் முன்னமே வந்து இருந்தால் வலியில் இருந்து தப்பித்துக்கொண்டு இருந்திருக்கலாம் என தோன்றியது. வலி வந்த பின் சூரிய நமஸ்காரம். எட்டாவது மாடியில் இருந்து கீழே இறங்கி வர அலுப்பு. அது மட்டுமா, சிங்கப்பூர் வெயில் காலை வெயிலாக இருந்தாலும் கொளுத்தி எடுத்துவிடும். இதற்கு பயந்தே இறங்கமாட்டேன்.
வெய்யிலில் நடந்தபடியே போவோர் வருவோரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். காலையில் எல்லோரும் அவசர அவசரமாக அலுவலகங்களுக்கு போய்க்கொண்டிருந்தார்கள். நானோ வேளை வெட்டி இல்லாதவள் போல் சூரியக்குளியல் எடுத்துக் கொண்டிருந்தேன். முடித்துவிட்டு வீடு திருப்பினால் அங்கு மலைப்போல் வேலை எனக்காக கைவிரித்து காத்துக்கிடக்கும். அருகில் இருந்த புள்வெளியில் ஒரு அழகாக சிறிய குருவி ஒன்று புற்களுக்கிடையே தன் காலை உணவை தேடிக்கொண்டிருந்தது. இப்படியும் அப்படியுமாக கொத்தி கொத்தி எதையோ சந்தோஷமாக தின்றுக்கொண்டிருந்தது.
அப்பொழுது ஒரு கருப்புவெள்ளை பூனை பதுங்கி பதுங்கி புல்லோடு புல்லாக மெதுவாக வந்து சிறிது தூரத்தில் அமர்ந்தது. நல்லா கொழு கொழு என்று இருந்தது. நம்மைப்போலவே பூனைக்கும் வெய்யில் தேவை படுகிறது போல என்று நினைத்துக்கொண்டே நான் குருவியையும், புனையையும் பார்த்துக் கொண்டே நடந்தேன். மெதுவாக அந்தப் பூனை நகரத்துவங்கியது. இதை கவனிக்காத குருவி தன் வயிற்றை நிரப்புவதில் குறியாய் இருந்தது. இந்த காட்சியை நான் கைதொலைப்பேசியில் படம் பிடிக்க முயன்றேன். என் மூளைக்கு தெரிந்தது, ”ஆஹா இந்த பூனை குருவியை பிடிக்கத்தான் இப்படி மெதுவாக நகர்கிறது என்று”. கண் இமைக்கும் நேரத்தில் தாவி அந்த குருவியை அப்பூனை கவ்வியது. அடுத்த நொடி அப்புல் தரையில் சில உதிர்ந்த இறகுகளே கிடந்தன. குருவியை கவ்விய பூனை நொடிப்பொழுதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு அடியில் சென்று எங்கோ மறைந்து போனது.
உதிர்ந்து கிடந்த இறகுகளை பார்த்த எனக்கு மனம் பட பட என அடித்துக்கொண்டது. நான் ஏன் இப்படி முட்டாள் போல் நடந்து கொண்டேன்? அப்பூனை குருவியைத்தான் பிடிக்க வருகிறது எனத்தெரிந்தும் ஏன் நான் குருவியை விரட்டாமல் அந்த நிகழ்வை படம் பிடிக்க முயன்றேன்? ஒருவேளை அந்த பூனையினால் அக் குருவியை பிடிக்க முடியாது என்ற குருட்டு நம்பிக்கையா? அல்லது என்னுள் இருந்த மனிதம் மறைந்து ஓர் உயிர் போகப்போவதை ரசிக்கும் அரக்க உணர்வு மேலோங்கியதா? இது தான் என் மறுபக்கமோ? அப்பூனையின் முயற்சி தோல்வியுரும் என்றே என் அடிமனதில் நம்பிக்கை கொண்டிருந்தேன். அதன் திறனை குறைத்து எடைப்போட்டது என் முட்டாள்தனம். என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. அந்த குருவின் உயிர் போனதற்கு நானும் ஓர் காரணம் ஆகிவிட்டேன்.என் பாவ மூட்டையில் மேலும் சுமையை அறிந்தே ஏற்றி விட்டேன்.
மனதில் குற்ற உணர்வுடனும், அநுதாபத்துடனும் கார்களுக்கு அடியில் குனிந்து பார்த்தேன். தன் காலை விருந்தை எடுத்துக்கொண்டு எங்கு போய் மறைந்ததோ அந்த பூனை? ஒரு வேளை தன் குட்டிகளுக்காக வேட்டை ஆடியதோ தெரியவில்லை. அப்படி என்றால் ஓர் தாயாக அதன் செயல் மன்னிக்கப்படலாம். ஆனான் கண் முன்னே ஓர் உயிர் போகப் போவதை தடுக்க முயலாத நான் ??? என் மனசாட்சியே என்னை மன்னிக்காத பொழுது வேறு எங்கு சென்று நான் மன்னிப்பு கேட்பது? என் தலைக்கு மேல் உயர சொர்க்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அக்குருவியின் ஆன்மாவிடம் மன்னித்து விடு என்று கேட்பதை தவிர வேறு வழி தெரியாமல் கனத்த மனதுடன் நான் எட்டாம் மாடிக்கு மின் தூக்கியில் உயர போனேன்.மனம் மட்டும் கீழே கிடந்த உதிர்ந்த சிறகுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டது.......

Wednesday, November 14, 2018

நாம கர்ணம்




சமீபத்தில் டிவி செய்தியில் ஒரு பெண்மணியிடம் கேள்வி கேட்டார்கள். அவரின் பெயர் “போதும் பொண்ணு”. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது என்னடா இப்படி ஒரு பெயர் என்று! அந்த அளவிற்கு பெண் பிள்ளை போதும் போதும் என்று அவர்கள் பெற்றோர் பெற்று தள்ளி விட்டார்களா என்ன என்று எனக்குள் கேள்வி எழுந்தது. ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்று சொல்லக்கேட்டு இருக்கிறேன். ஆனால் எனக்கு அதில் உடன் பாடு இல்லை. என்னைப் பொறுத்தவரை எத்துனை பெண் பிள்ளைகளைப் பெறுகிறார்களோ அவர்கள் அத்துனை பாக்கியம் செய்தவர்கள் .ஆறாவதாக பிறந்த மகளுக்கு அழகாக அங்கையர்கன்னி என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோரும் இருக்கிறார்கள்.
போதும் பொன்னு எனும் பெயர் ஒரு புறம் இருக்க வேறொரு நிகழ்ச்சியில் ஒரு சிறு பெண்பிள்ளைக்கு பெயர் “வரப்பிரசாதம்” என்று பெற்றோர் கூறினர். அந்த பெயரை கூறும் பொழுதே அந்த தாயின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. எவ்வளவு தவம் இருந்து அக்குழந்தையை அவர் பெற்று இப்படி பெயர் வைத்து இருப்பார் என்று தோன்றியது. எப்படி இந்த பெயரை சுருக்கி அழைப்பார்கள் என்று எனக்கு சந்தேகம் வேறு!
எனக்கு ஏன் கீதா என்று பெயர் வைத்தீர்கள் என்று பல முறை என் தாயிடம் நான் கோவித்துக் கொண்டது உண்டு. ஏனென்றால் , நான் சிறுமியாக இருந்த பொழுது மூலைக்கு ஒரு கீதா கஃபே, கீதா ஹோட்டல், கீதா டிராவல்ஸ், கீதா காப்பி கடை என்று கீதா என்ற பெயர் சிரிப்பாய் சிரிக்கும். ஒரு வகுப்பில் எப்படியும் ஒரு மூன்று கீதா என்ற பெயர் கொண்டவர்களாவது இருப்பார்கள். அவ்வளவு பிரசித்தி பெற்றப் பெயர் . இதில் எனக்கு இனிஷியல் ”த”(ஆங்கிலத்தில் D) வேறு. கூப்பிடும் பொதே ”டீ கீதா “ என்பார்கள். மரியாதை கொடிகட்டி பறக்கும். என் தாய் வழி தாத்தா தான் எனக்கு ஆசையாக பெயர் சூட்டினாராம். கீதா உபதேசத்தை மனதில் வைத்துக் கொண்டு எனக்கு கீதா என்று பெயர் சூட்டினாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு நானே “கீதாஞ்சலி “ என்று சில காலம் கூறிக்கொண்டு அலைந்தேன். சப்பானி கதையாக யாரும் என்னை அப்பெயர் கொண்டு அழைக்கவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். ஆங்கிலத்தில் அழைக்கும் போதாவது கீத்தா என்பார்கள். தமிழில் கீதா என்றால் எனக்கு அவ்வளவு கோபம் வரும். ”கீ” க்கு அழுத்தம் கொடுத்து” தா” வை அழுத்தம் இல்லாமல் கூறுவார்கள். “கீ”(சாவி) ”தா” என்று சிலர் பரிகசித்ததும் உண்டு. எப்படியோ சாகும் வரை கீதா தான் என் பெயர் என்று ஆகிவிட்டது.
சமீபத்தில் ஒரு தோழி அவரது வீட்டில் நடந்த நவராத்திரி பூஜைக்கு என்னை அழைத்திருந்தார். அவரின் பெயர் “அழகு நிலா”. பெயருக்கு ஏற்றவாறு பளீர் என்ற சிரிப்புடன் அழகாக இருப்பார். நிலாவே அழகு தான் அதற்கும் மேலே அவரின் பெற்றோர் அவருக்கு அழகு நிலா என்று பெயர் சூட்டி இருந்தார்கள். எப்படியெல்லாம் பெண் பிள்ளை பிறந்ததை கொண்டாடி இருந்தால் இப்படி ஒரு அழகான பெயரை சூட்டி இருப்பார்கள். எப்பொழுதும் தங்களின் மகள் பெளர்ணமி நிலவாய் ஜொலிக்க வேண்டும் என்று இப்படி பெயர் வைத்து இருப்பார்கள் போல.
அவர்கள் வீட்டிற்கு இன்னும் பல பேர் அன்று பூஜைக்காக வந்திருந்தார்கள். பூஜை முடிந்து போகும் போது ஒரு பெண்மணி அவரின் மகளை,”மஹாலக்‌ஷ்மி வா வீட்டுக்கு போலாம்” என்று அழைத்தார்கள். அக்குழந்தைக்கு ஒரு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். பட்டு பாவாடை உடுத்தி, அழகாக இரு பின்னல்கள் போட்டுக்கொண்டு அதில் மல்லிகை பூ வைத்துகொண்டு , கை நிறைய வளையல் அணிந்து கொண்டு, காலில் கொலுசு போட்டுக்கொண்டு ஒரு குட்டி மஹாலக்‌ஷ்மியாகவே இருந்தாள். . தாய் அழைத்ததை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் ஒரு ஐந்து முறையாவது அப்பெண்மணி அக்குழந்தையை,”மஹாலக்‌ஷ்மி, மஹாலக்‌ஷ்மி,” என்று அழைத்தார்கள். நான் உடனே அவரிடம்,”ஏங்க உங்க பொண்ண நீங்க மஹாலக்‌ஷ்மினு தான் கூப்பிடுவீங்களா? மஹா இல்லை லக்‌ஷ்மினு கூப்பிட மாட்டீங்களா,?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,”இல்லைங்க ஆசையா சாமி பேர வச்சோம் அதனால எப்ப கூப்பிட்டாலும் மஹாலக்‌ஷ்மினு தான் கூப்பிடுவோம்,”என்றார். கேட்கவே ஆசையாக இருந்தது. நம்மில் எத்துனை பேர் ஆசையாக வைத்த பெயரை முழுவதுமாக் சொல்லி அழைக்கின்றோம்? பாப்பா, புஜ்ஜி, பாப்பு, அம்மு, கன்னு, தங்கம்... இப்படி பல செல்லப் பெயர்கள் கூறியே அழைக்கின்றோம். எங்கள் அத்தைகள் இருவரையும் இன்று வரை என் தந்தை, பெரிய பாப்பா, சின்ன பாப்பா என்றே அழைப்பார்கள். மலர்கொடி, விஜயா என்ற அழகான பெயர்கள் அவர்களுக்கு உண்டு . ஆனால் கூப்பிடுவது எல்லாம் பெரிய பாப்பா ,சின்ன பாப்பா என்று தான். ஆண் பிள்ளை என்றால் தம்பி என்று கூப்பிடும் பழக்கமும் நம்மில் பலருக்கு உண்டு. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை பெயர் சொல்லி கூப்பிடுவது இல்லை. தம்பி என்றே அழைப்பார்கள்.
இப்பொழுது இன்னொரு பழக்கம் நடைமுறையில் உள்ளது. கீதா என்றால் கீத்ஸ், ராம் என்றால் ராம்ஸ், இப்படி ஒரு ”ஸ்” போட்டு அழைப்பது. அது உரிமையோடு , செல்லமாக அழைப்பது என்பதே பொருள் . நண்பர்கள் இடையே நம் இயர் பெயர் சில சமயங்களில் மறைந்தே போகிறது. என் தோழி கூறுவாள், “ என் முழு பெயரைக் கூறி என் கணவர் என்னை அழைத்தால் அவர் மிகவும் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம்,” பல வீடுகளில் இதை நாம் கேட்க முடியும். முழு பெயர் கூறி அழைக்கப்பட்டால் ஏதோ எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. மாட்டிக்கொண்டோம் என்றே அடித்து பிடித்து ஓடி வருவார்கள். ”ரிஷி கணேஷ்” என்று என் மகனை நான் கூப்பிட்டால், ”என்ன அம்மா?” என்று கேட்க மாட்டான்,”What did I do wrong?" என்றே பதறி அடித்துக் கொண்டு ஓடி வருவான். வெறும் ரிஷி ரிஷி என்று பத்து முறை கூவினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குமாதிரி தான்.
ஒரு குழந்தையை பெற்று அதற்கு ஆசை ஆசையாக சொந்த பந்தங்களைக்கூட்டி பெயர் சூட்டி மகிழ்ந்து பின்னர் அப்பெயரை கொண்டு அழைக்காமல் ,ஒன்று அப்பெயரை சுருக்கியோ அல்லது செல்லமாக கூப்பிடுகிறேன் என்று வேறு பெயரைக் கொண்டு அழைப்பதும் எவ்வளவு சரியான செயல் என்று என்னால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை. ”மஹாலக்‌ஷ்மி “ என்று வாய் நிறைய சலிப்பு இல்லாமல் இன்புற்று அழைத்த அந்த தாயை நான் வணங்குகின்றேன். எதிர்காலத்தில் என் பேரன் பேத்திகளை முழு பெயர் சொல்லியே அழைக்க வேண்டும் என்று முடிவிற்கு வந்துவிட்டேன்.